Author: பதாகை

பித்து

ரா. ராமசுப்பிரமணியன்

I

அவன் சொன்ன வாசகத்தில் இருந்து ” ஆரோஹணம்…. சிங்கம்…. அலங்காரம்…. திரிசூலம்…. ” என்பது தான் என் மனதில் நின்றது. இதை வைத்து தான் அந்த பிம்பத்தை அமைக்க வேண்டும் என்று உத்தேசித்தேன். தூரிகையை முக்கியும் அமிழ்த்தியும் பார்த்து விட்டேன். வந்து அமரவில்லை. வீட்டு முற்றத்தில் முன்தினம் பெய்த கடும் மழை தேங்கி இருந்தது. உடன் வந்திருந்த கண்ணன் இருந்த சுதேசமித்திரனை எடுத்து திண்ணைக்கு போய்விட்டார். எதிரில் இருந்த காரை சுவரில் இருந்த பிறையின் கீழ் தான் அவன் அமர்ந்திருந்தான். கோட்டும் பஞ்சகச்சமும் உடுத்தி, ஒரு காலை குத்திட்டு, அதில் கையை ஊன்றி தலையில் முண்டாசுடன் வீர பாண்டிய மீசையும் தாடியுமாய் கண் மூடி இருந்தான். பக்கத்தில் இருந்த தாம்பாளத்தில் இருந்து அவன் தாம்பூலத்தை தரித்து இருந்ததை பார்க்கும் போது கண்ணன் சொன்னது தான் ஞாபகம் வந்தது.

“ஆர்யா…. இவன் முன்ன மாதிரி கிடையாது. இப்போதெல்லாம் சிவமூலிகை பழக்கம் எல்லாம் ஆரம்பிச்சாசு”.

அந்த பிம்பத்தையே வரைந்து காட்டிவிடலாமா என்று கூட யோசனை வந்தது.

திருவல்லிக்கேணியில் இருந்து ரயில் வண்டியில் ஏறி பாண்டிச்சேரிக்கு கிளம்பினேன். அங்கு இருந்த ஆங்கிலேய ஆரக்ஷணர்கள் இருவர் எதிரில் வந்து அமர்ந்தனர். என்னையே துருவி துருவி நோட்டமிட்டனர்.

“சாமி, எங்க போறீங்க”

” நான் பாண்டிச்சேரிக்கு போறேன்”

” அங்க யார பார்க்க போறீங்க? ”

“கலவை சங்கர செட்டியாரை”

” ஓஹோ …. என்ன விஷயம் ”

” ஒரு வணிகம் சம்மந்தமா பார்க்க தான் ”

என்னையே மேலும் கீழும் நோட்டமிட்ட இன்னொருத்தன்,

” நீங்க சுதேசி இல்லையே”

” நான் சுதேசியோ விதேசியோ அல்ல. சாதாரண மனிதன். கொஞ்சம் உத்தரவு கொடுக்கரேளா ?”

“சாமி…. பத்திரம்…. அங்க தேசவிரோத கும்பல் ஒன்னு இருக்குது. சரியான கூட்டு களவாணிகள் . எல்லாரையும் கத்தியை காட்டி மெரட்டி காசு பறிக்கும் கும்பல் அது. சில துரைமார்களை எல்லாம் கொன்னுர்க்காங்க. முக்கியமா பாரதிங்க்றவன் பொல்லாதவன். எதாவது விஷயம் தெரிந்தா வரும்போது சொல்லுங்க. நல்ல சன்மானம் கிடைக்கும்”

சரியென்று தலை ஆட்டினேன் .

வீட்டுதிண்ணையில் எனக்காக காத்திருந்தவன் வண்டியை விட்டு இறங்கியவுடனேயே ட்ரங்கு பெட்டியை வாங்கிக் கொண்டு கையை பிடித்து நேராய் பூஜை பெட்டகத்தை தான் காட்டினான்.

ஒரு தத்தாத்ரேயர், சுப்ரமணியர்,துர்க்கை விக்ரகங்கள் இருந்தன .

“நான் கண்டுகொண்டு விட்டேன் ஆர்யா…. நமக்கு ஒரு புதிய தெய்வம் தேவை. அவளின் ரூபம் கூட இதோ பராசக்தியின் ரூபம் தான். அவளை பற்றி தான் இனி நான் பாடப் போகிறேன். பழம்பெரும் பாரத பூமி புத்துயிர் பெற அவளே நமக்கு தேவை. ”

சம்ப்ருதாயத்துக்கு மட்டும் ஒரு கும்பிடு போட்டேன். இப்போதெல்லாம் என்னுள் இறைமறுப்பு பொதிந்து விதைந்து விளைந்து கொண்டு இருக்கிறது. சக்தி உபாசனை செய்ய தொடங்கி விட்டதாக சொல்லி இருந்தான் . இவ்வளவு தீவிரம் என்று எதிர் பார்க்கவில்லை.

எதிரில் வந்து அமர்ந்த கண்ணன் ,

” நீங்க தான் ஆர்யாவா ?”

“ஆமாம் ”

” பாரதி உங்களையே தான் அடிக்கடி சொல்லுவான். அத்யந்த நண்பன் என்று . உங்கள் முழு பெயர் ?”

“சின்ஹகுளத்திபட்டி யதிராஜ சுரேந்தரநாத் ஆர்யா ”

” ஒ… தெலுங்காளா நீங்க….”

“ஆமாம்….. பூர்வீகம் எல்லாம் தெலுங்கு தான். ஆனால் நான் சென்னையில் தான் வளர்ந்தேன்”

“ஒ அப்படியா… அடுத்தாப்ல இருக்கற தெரு முக்குல வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு. நெறைய கச்சேரி எல்லாம் ஜோரா நடக்கும். தெலுங்கு கச்சேரி கூட கேட்டிருக்கேன். அன்னமாச்சாரியார், பத்ராசல ராமதாசர் கிருதி எல்லாம் கூட தெரியும். நான் பாடி நீங்க கேட்டதிலேயே ”

“இல்லை”

“பாடவா”

“பாடுங்கோ….”

கொஞ்சம் சுருதி பிடித்தார்…..

” பிரம்மமொக்கட்டே பர பிரம்மமொக்கட்டே பர ” என்று இழுத்துப் பாடினார். சுருதி சுத்தம் இல்லை என்றாலும் தெலுங்கு சாஹித்தியம் அக்ஷர சுத்தமாக இருந்தது”

II

காலையில் இவன் கிளம்பும் பௌசிலியே தெரியும் பத்திரிகை காரியாலயத்துக்கு அவ்வளவு சீக்கிரம் போகபோவதில்லை என்று. ஈஸ்வர தர்மராஜர் தெருவில் இருந்து நேராய் வேதபுரீஸ்வரர் கோயில் வாசலுக்கு வந்து ராஜ கோபுரத்தையே மேலும் கீழும் பார்த்து விட்டு “நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய ” என்று துதி பாடி ஒரு நாழிகை கைகூப்பி கண்மூடி இருந்தான். இவனுடன் சேர்ந்தது தான் சேர்ந்தேன் . நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும் . என்னை சீண்டி பார்ப்பதில் அவனுக்கு கொள்ளை பிரியம்.

” பாரதி நாம வங்காளத்தார் ஆஷ்ராமதுக்குன்னா போறோம்ன்னு நினைச்சேன்”

” இவன் என் நண்பன் சுரேந்திரநாத் ஆர்யா தங்கி இருக்கும் வீடு ஓய். நீர் நேற்று கூட பார்த்திருப்பீரே. ”

என் பெயர் கண்ணன். குவளை கண்ணன் என்று தான் என்னை அழைப்பார்கள். இவன் எழுதிய கவிதைகளை படித்து விட்டு பாண்டிச்சேரியில் இந்தியா பத்திரிக்கையில் உபகாரம் செய்ய ஆள் வேண்டும் என்று இங்கு வந்து இப்போது இவனிடம் மாட்டிக் கொண்டு விட்டேன்.

இந்தியா பத்திரிக்கைக்கு மேற்காய் செல்லவேண்டும். கிழக்காய் இவன் கூட்டிக்கொண்டு போகும்போதே தெரியும். வங்கத்தில் ஒரு பிரிட்டிஷ் துரையை கொன்னுட்டு இங்கே தஞ்சம் புகுந்துருக்காருன்னு கேள்விபட்டேன் . எப்படியும் வா.வே.சு அய்யர் வந்து விடுவார். கச்சேரியும் ஆரம்பித்துவிடும் . அரவிந்தர் வேதம், வேதாந்தம், யோக சூத்திரம் என்று பேசிக்கொண்டு ஒரு ஸ்லோகத்துக்கு ஒரு மணி நேர வியாக்யானம் சொல்லுவார். நடுவில் சாக்த போதனை வேறு நடக்கும். அங்கே போகுவதற்கே எனக்கு பிடிக்காது. அவர்கள் பேசுவது புரியாது. சம்பாஷனை எல்லாம் இந்துஸ்தானத்தில் தான். எனக்கு தேவநாகிரி லிபியை மட்டும் எழுத்துக் கூட்டி அக்ஷரங்களை வாசிக்க தெரியும். நான் கண்டது எல்லாம் நாலாயிரம் தான். அய்யர் உலக இலக்கியம்ன்னு ஆங்கிலத்தில் உரையும் சொல்லுவார். எப்போதாவது கம்பராமாயணம் பற்றி பேசினால் தான் உண்டு.

III

பூஜை பெட்டகம் திறந்தே இருந்தது. ஓரமாய் இருந்த காமாக்ஷி விளக்கில் ஒரு ஜோதி தெரிந்தது. குழந்தை பறித்து தொடுத்து வைத்திருந்த பவழமல்லி மாலையை தரித்த தத்தாத்ரேயர் விக்ரஹம் பொலிந்து நின்று இருந்தார். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற பேரூழியம் செய்யும் மூவர் ஓருருவம் கொண்டு திகழும் அழகிய தத்துவ பிம்பம். ஆனால் புராணம் சொல்லும் கதை மட்டும் எனக்கு உவப்பானதில்லை. அருகில் வேலேந்திய செந்திலாண்டவரும் சிறிய துர்க்கை விக்ரஹமும் ஒரு வாளும் தென்பட்டது . அந்த வாளை பார்க்கும் போதெல்லாம் அய்யர் குயில்தோப்பில் நடத்தி இருந்த களரிபயத்து பயிற்சியில் கேடயமும் வாளும் தாங்கி போர் தொழில் பழகிய எழுச்சி என்னுள் பரவும் .

முன்தினம் பெய்த அடைமழையில், கேட்ட இடி சத்தமும், தரையில் ஒளிரிய மின்னலையும், வீட்டின் கதவுகள் ஓங்கி அடிப்பதையும், வீட்டின் படியில் ஏறிய மழை நீரையும் பார்த்தபடி நான் எங்கேயோ தொலைத்த உற்சாகம் மீண்டது.

காற்றடிக்குது ….. கடலும் குமுறுது ….. தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொலைத்தடிக்குது….. நான் கண்விழித்தேன்……..

அந்த உற்சாகம் காலையில் சூர்ய வந்தனம் செய்த போது ஓங்கி பெருத்தது. ஆனால் கண்ணனின் பதறிய முகம் கண்டு மீண்டும் தொலைத்தேன்.

“பாரதி…… குழந்தைக்கு ஜுரமோ ஜுரம். நம்ம கஷாயம்லாம் ஒத்து வரலை. இங்க எதோ லோபித்தால்ன்னு சொல்றா. பிரெஞ்சு வைதியசாலையாம். இங்க்லீஷ் மருத்துவருக்கு சொல்லி இருக்கு”

நார்கட்டிலில் படுத்திருந்த தங்கம்மாளுக்கு நெற்றி அனலாய் தொதித்ததை என் புறங்கை விரல்கள் உணர்ந்தன.

செல்லமாள் அடுக்களைக்கு போயும் வந்த படி முந்தானையால் முகத்தை துடைத்த படி முனகிக் கொண்டு இருந்தாள். கிணத்தடியில் குளிக்க செல்லும் போது தான் என் லௌகீக கர்மா பற்றிய சிந்தனை வந்தது. குயில் தோப்பில் கூடியிருந்த சகாக்களுடன் பத்திரிக்கைக்கு வந்த ஊதிய பணத்தை மாங்காய் வாங்கி பந்தாடியது, அவள் கைமாற்றாக வாங்கி வந்திருந்த அரிசி பருப்புக்களை ஓர் கவித்துவ வீரியத்தில் முற்றத்தில் வீசியது , எதை பற்றியும் கவலை இல்லாமால் சித்தானந்தா கோவிலில் த்யானித்து பிரம்மத்தில் லயித்தது எல்லாம் பிழை என்று பட்டது. ஆனால் அவளுடைய குறை இது எல்லாம் கிடையாது. கனகலிங்கத்துக்கு உபவீதம் அணிவித்தது தான்.

” நமஸ்தே அஸ்து மகா மாயே ஸ்ரீபீடே ஸ்வரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ”

எப்பொழுதும் காலையில் நான் எழுதிய துதி பாடல்களோ , வேத மந்திரங்களோ, உபநிஷத்களின் சாந்தி மந்திரங்களோ என் நாவில் துலங்கும். இன்று ஏனோ இப்படியாக ஒரு ஸ்தோத்திரம். திடீர் என்று இடி சத்தம் கேட்டது. வீட்டின் கல் தளத்தில் மெல்லிய ஒரு அதிர்வு . மேலே இருந்த மண் ஓடுகள் திடீர் என்று பிரிந்து. வானத்தில் இருந்து பொன்மழை வந்து கொட்ட ஆரம்பித்தது. இப்போதைக்கு மட்டும் கலவை சங்கர செட்டியாரிடம் வாங்கிய கைமாற்று பணத்தை கொடுத்து விடலாம் என்று கொஞ்சம் எடுத்து கோட்டில் வைத்துக் கொண்டேன்.

IV

” சுப்பையா…… ஓய் …. சுப்பையா….”

கண்முடி தாம்பூலம் தரித்து தடித்திருந்த நாக்கில் அரி நெல்லியை வைத்து கடித்துக் கொண்டு வந்தான்.

நான் வரைந்த படத்தை மறுபடியும் மறுபடியும் உற்று பார்த்து என்னை ஆர தழுவினான்.

ஓரமாய் கட்டிலில் நான் விரித்து இருந்த வெள்ளை அட்டையை மீண்டும் பார்த்தேன். அவன் வீட்டிற்கு வந்திருந்த போது அதை தான் அவனிடம் காட்டினேன். அந்த படத்தில் ஒரு பெண்ணும் எண்ணற்ற குழந்தைகளும் இருந்தனர் . குழந்தைகள் எல்லாம் ஒரு வெள்ளை துண்டை இடிப்பிலும், ருத்ராக்ஷ கொட்டையை கழுத்திலும் , தலையை சவரம் செய்து கையில் ஒரு தட்டத்துடன் சோணித்து இருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் ஒரு பெண் கசங்கிய கருஞ்சேலையில், தலையில் இருந்த கிரீடம் சரிந்து காதில் லோலாக்குகளில் இருந்த கற்கள் விழுந்து கழுத்தில் உள்ள ஆரத்தில் இருந்த பதக்கமெல்லாம் போய் வெற்று கயிறுடன் இருந்தாள் . அந்த ஓவியத்துக்கு பாரத தாய் என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்போது தான் அவன் அந்த வாசகம் சொன்னான்.

” அவள் சிங்கத்தின் மேல் ஆரோஹரித்து இருப்பாள். கையில் திரிசூலம் ஏந்திருப்பாள். இப்போது அன்னியர்க்கு அடிமை பட்டிருந்ததால் கங்கையும் இமயமும் எங்கே போயிற்று…. அவளை அலங்கார பூஷிதையாக பராசக்தியாக என்முன் வரைந்து காட்டு ……” என்று எதிரில் முக்காலியில் போய் அமர்ந்தபடி பாதத்தால் தரையில் தாளம் போட்டுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தான். விடுக்கென்று சவரில் போய் சாய்ந்து கண் அசந்தான்.

மறுபடியும் மறுபடியும் என் காதில் அந்த வாசகம் பிரவாகித்தது. முண்டாசும் , கோட்டும் , பஞ்சகச்சமும் அங்கிருந்து அகன்றிருந்தது.

மாப்பஸான் – ஸ்லோன் கிராஸ்லி

தமிழில்: பீட்டர் பொங்கல்

guy-de-maupassant

Image Credit: americanliterature.com

மாப்பஸானைக் கண்டுகொள்வதற்கு முன், நான் முதலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் படிக்க வேண்டியிருந்தது. பிரான்சுக்குப் போவதானால் அயர்லாந்தைக் கடந்து செல்ல வேண்டும் என்ற அளவில்தான் இதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஏனெனில், நானறிந்து ஜேம்ஸ் ஜாய்ஸுக்கும் மாப்பஸானுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. ‘க்ளே‘ என்ற கதைக்கும் ‘தி நெக்லஸ்‘ என்ற கதைக்கும் இடையே சில மெல்லிய இணைகோடுகள் இருக்கலாம் (சலிப்பில் ஆழ்ந்திருக்கும் அழகிய பெண்ணின் தாளவொண்ணா குமுறல்). மாப்பஸான், ஜாய்ஸ் இருவரும் காத்திரமான மீசை வைத்திருந்தார்கள், இருவருக்கும் மேக நோய் இருந்தது. ஆனால் இதில் கடைசியாகச் சொன்ன நிலை இருவரையும் பிணைக்கக்கூடிய உரமாக முடியாது; மேக நோய் என்பது மறைந்த ஆண் எழுத்தாளர்கள் விஷயத்தில், சாட் பரிட்சைகளில் உன் பெயரைப் பிழையின்றி எழுதுவதற்கு இணையான ஒன்று. ஆனால்கூட, எட்டாம் வகுப்பு ஆசிரியராய் இருப்பதற்கு அநியாயத்துக்கு தகுதியற்றிருந்த என் ஆங்கில ஆசிரியைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் – இந்த இரு படைப்பாளிகளும் என் நினைவில் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறார்கள்.

முதலில், அவள் ‘டப்ளினர்ஸ்‘ கதையை நாசம் செய்தாள். ‘தி டெட்‘ கதைக்கு அவள் தந்த விளக்கம்? சோகம். பனிப்பொழிவு. அடுத்தது. ‘எவலைன்‘? ரயில் பயணம். பெண்கள். அடுத்தது. ஒரு கதையின் சாரத்தை அளிப்பதற்கும் சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு இருக்கும் என்றால், அவளது வகுப்புகள்தான் அதன் அளவை. ஒருவேளை, இந்த அம்மணி வேறெங்காகிலும் இருக்க வேண்டியவளாய் இருக்கலாம். இங்கு இருப்பதற்கு பதில், இந்நேரம் “ஹேங் இன் தேர்” என்று எழுதப்பட்ட பூனை போஸ்டர்களைத் தன் விரல் நகங்களால் கிழித்துக் கொண்டு ஆசிரியர்களுக்கான அறையில் அவள் ஒரு சந்திப்பிற்காகக் காத்திருப்பாளாக இருக்கும். நான் சொல்ல வருவது இதுதான் – எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள், அதன் ஆசிரியர்களுக்கு நிறைவளிக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கதை குறித்த விவாதங்களை வெகு வேகமாகக் கடந்து சென்றாள் என்பதுதான் – எங்களில் மோசமானவர்களைக்கூட அவளது வேகம் ஆச்சரியப்படுத்தியது. ‘அரபி’‘ கதைக்கு அவள் அளித்த விளக்கம்தான் என்னைத் தீர்த்துக் கட்டியது. தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது மோகம் கொண்ட ஒரு சிறுவனின் கதை ‘அரபி‘. கிராமத்தில் நடக்கும் சந்தைக்கு தான் போகப் போவதாக அவளிடம் சொல்கிறான், பதிலுக்கு நினைவுப் பொருள் ஏதேனும் வாங்கிவரச் சொல்கிறாள் அவள். அவள் பணித்த செயலால் குதூகலிக்கும் அவன், மிகப் பொருத்தமான ஒரு பரிசைத் தேடி இறுதியில் கண்டெடுக்கிறான். ஆனால், அந்தக் கடையை நடத்தும் பெண்மணி அவனைப் பார்த்துச் சிரித்தபடி உதவி வேண்டுமா என்று கேட்கும்போது அவன், இல்லை, வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.

“பார்த்தீர்களா,” என்று என் ஆசிரியை கதையை முடித்தாள், “சில சமயம் ஜாய்ஸ் கதைகளில் அர்த்தமே இருப்பதில்லை, அதுதான் விஷயம்”

நிச்சயம் அதுவல்ல விஷயம். தனியார் பள்ளி அமைப்பில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அமெச்சூர் நிஹிலிஸ்ட் நீயென்றால், அப்போது வேண்டுமானால் அதுதான் உனக்கு விஷயமாக தெரியலாம். ஆனால் உலகில் ஒருவர் மீதொருவர் ஒருதலைக்காதல் கொண்ட எந்த ஒரு பதின்பருவ கும்பலாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கதை புரிந்திருக்கும்: கடையை கவனித்துக் கொண்டிருக்கும் பெண்மணி அவன் திசையில் தன் வசீகரப் புன்னகையை வீசும்போது, நம் நாயகன் தன் காதலி நாகரீகமாகப் பேசியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறாள், அவள் அவனிடம் சல்லாபிக்கவில்லை. அப்போதே அவனது காதல் ஜோதி அணைந்து போகிறது, அதனிடத்தில் சங்கடப் புகைதான் மிஞ்சி நிற்கிறது. நான் அப்போது ‘ஆனி ஹால்‘ பார்த்திருக்கவில்லை, ஆனால் பார்த்திருந்தால், ஜேம்ஸ் ஜாய்ஸ் என் வகுப்பறைக்குள் நுழைந்து அந்த மார்ஷல் மக்லூஹன் காட்சியை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பேன். ‘அரபி‘ அப்போதே எனக்கு மிக முக்கியமான கதையாகிப் போனது, பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய ஒரு சிறு இலக்கியப் பொருள் அது. (பதின்பருவ உள்ளத்தின் வினையை என்னவென்று சொல்ல- அஞ்சாதே, ஜேம்ஸ், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்!). எனவே, அடுத்து கிழிபடப் போவது கை டி மாப்பஸான் என்ற ஒரு பிரெஞ்சுக்காரன் என்பதை பாடத்திட்டத்தில் பார்த்ததும் எனக்குக் கவலை வந்துவிட்டது.

என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பாடம் நடத்தப்படும் பக்கங்களைக் கடந்து வாசித்துப் பார்க்கிறேன். முதலில் ‘தி நெக்லஸ்‘ கதையில் துவங்குகிறேன் (அதுதான் சிறிதாக இருக்கிறது). அதன்பின் ரத்தத்தை உறைய வைக்கும் ‘பூல் டி ஸ்வூஃப்‘ (Boule de Suif). இரு கதைகளின் முடிவுகளும், அவற்றின் தாங்கிக்கொள்ள முடியாத அளவு கச்சிதமான திருப்பங்களும், எனக்கு அதிர்ச்சியளித்தது நினைவிருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன், அவற்றின் அளவையும்கூட. அதன் எழுத்துரு எனக்கு நினைவிருக்கிறது என்று எண்ண விரும்புகிறேன், ஆனால் அதை மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் இப்போதும் பார்க்க முடிகிறது, நான் என் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன், திறந்த வாய் மூட மறந்து அமர்ந்திருக்கிறேன், ஒரு தந்திரக் காட்சியை இப்போதுதான் கண்டதுபோல். மீண்டும் ‘தி நெக்லஸ்‘ கதையைப் படிக்கிறேன். மாப்பஸான் கதைகளை எனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உணர்கிறேன், அவற்றை நானாகவே புரிந்து கொள்ள வேண்டும், அவற்றின் ஆசிரியர் என்னிடம் நேரடியாகப் பேச வேண்டும். ஏன், அந்த போஸ்டர்- கிழிக்கும் கள்ளக் காட்டுப்பூனை. கடைசியில் அவள்தான் என் ஆசிரியர்களில் மிகச் சிறந்தவராக இருந்தார். கொஞ்சமும் ஒளிவுமறைவற்ற அவளது ஆர்வமின்மைக்கு அப்பால் அவள் என்னைக் கதைகளை நேசிக்கச் செய்துவிட்டாள்.

பூல் டி  ஸ்வூஃப்‘ கதைக்கு அவளது விளக்கம்? விபசாரம். யுத்தம்.

நன்றி, இப்போது என் முறை.

நான் வளர்ந்து விட்ட நிலையில் என் இப்போதைய பிரச்சனை, இந்தக் கதைகளின் ஆற்றல் குறைந்து வருகிறது என்பதுதான் – அதிலும் குறிப்பாக, ‘தி நெக்லஸ்‘ கதை. காலம் போகிறது, முதல் காதல்களின் நினைவழிகிறது என்பதும் இதற்கொரு காரணம். ஆனால் என் தேர்வுகளும் இதற்கான காரணம்தான். கடந்த சில ஆண்டுகளாக நான் வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். ‘தி நெக்லஸ்‘ கதையை என் நாவலுக்கான இன்ஸ்பிரேஷனாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தக் கதையைத் தனித்தனியாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் திருப்பிப் பார்த்து மீண்டும் இணைத்திருக்கிறேன். ‘தி க்ளாஸ்ப்‘ கதையின் பிரதான பாத்திரங்கள் பொய்யான லட்சியங்களை ஒரு சங்கிலித் தொடராய்த் விரட்டிச் செல்கின்றனர்- ‘தி நெக்லஸ்‘ கதையின் அரைகுறை இரக்கம் கொண்ட நாயகியைப் போலவே. கதை பற்றிய என் முதல் உணர்வுகளைப் பொடிப்பொடியாய்த் துகளாக்க, நான் அந்தக் கதையைப் பற்றி சிலரிடம் நேர்முகம் காண்கிறேன்- நினைத்துப் பார்க்குமிடத்தில் திரும்பச் சொல்லச் செய்கிறேன். அவ்வளவு முக்கியமாய் இருந்த இந்தக் கதை எனக்கு ஒன்றுமில்லாமல் போகும்வரை நான் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டேயிருக்கிறேன். இயல்பாகவே, எனக்கு இந்தப் பரிமாற்றம் பிடித்திருக்கிறது. இதிலிருந்து எனக்கு ஒரு முழு புத்தகமே கிடைத்திருக்கிறது. காமத்துக்குரிய பதார்த்தங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

வேறொரு கதையைத் தன்னிகழ்வாய் வாசிக்கும்போதுதான் இந்தக் கதையை மீட்க நேர்ந்தது. ஒரு ஜனவரி மாதப் பனிப்புயலில், ஐசாக் பாபெலின் “கை டி மாப்பஸான்” என்ற கதை எதிர்ப்பட்டது. மாப்பஸான் வெறியள் என்று சொல்லிக்கொண்டு திரியும் என்னைப் போன்ற ஒருத்திக்கு இந்தக் கதையைப் படித்ததேயில்லை என்பது கேலிக்குரிய விஷயம்தான். மாப்பஸான் கதைகளை மொழிபெயர்த்து ஒரு பணக்கார போஷகருக்கு காதல் வலை விரிக்கும் ரஷ்ய இளைஞன் ஒருவனைப் பற்றிய இந்தக் கதையில் அவன் வீடு திரும்பி, மாப்பஸானின் கொடூர மரணம் பற்றிய தகவலை வாசிக்கிறான் (மாப்பஸானின் மரணத்தின் மிகக் குரூரமான விஷயம் அவரது பால்வினை நோயல்ல). காமம். உயர்குடிகள். பிரெஞ்சு விஷயங்கள். ஆம், அந்தத் தளங்கள் அத்தனையையும் அந்தக் கதை கையைப் பிடித்து இழுத்தது. ஆனால், பாபெலின் கதை உண்மையில் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய இழை பற்றியது, உயர் கலையையும் அடிமட்டக் குப்பையையும் பிரிக்கும் மெல்லிய இழை. “சொற்றொடர் ஒன்று இவ்வுலகில் பிறக்கிறது, அது நன்றும் தீதுமாய் ஒரே சமயத்தில் இருக்கிறது. ரகசியம் ஒரு சிறிய, ஏறத்தாழ கண்ணுக்கே தெரியாத  திருகலில் இருக்கிறது. அதைத் திருப்பும் கோலை நீ உன் கரங்களில் ஏந்தியிருக்க வேண்டும், மெல்ல மெல்ல வெம்மை அடையும் அதை நீ ஒரு முறைதான் திருப்ப முடியும், இரண்டாம் முறை திரும்பாது”. நான் என் பதின்பருவத்தில் சிறுகதைகள் வாசிக்கும்போது அடைந்த தூய நேசத்துக்கு “கை டி மாப்பஸான்” கதை என்னை மீண்டும் அழைத்துச் சென்றது. மாப்பஸான் கதைகளில் ஒன்றை நான் என் புனைவுக்குள் சேர்த்துக் கொள்ள நினைப்பதற்கு முன்பான காலம் அது.

பாபெல் கதையைப் படித்து முடித்தபின், நான் என் அறையின் குறுக்கே நடந்து, அலமாரியில் இருந்த ஒரு தொகுப்பை எடுத்து, ‘தி நெக்லஸ்‘ கதை இருக்கும் பக்கத்தைப் புரட்டிப் பிரித்தேன். அதை வாசித்தேன் – உண்மையாகவே வாசித்தேன்- முன் எப்போதும் நான் அதை வாசித்திராதது போல். தலைக்கனம். இழப்பு. பாரிஸ். உண்மையைச் சொன்னால், இது ஒன்றும் அவ்வளவு மோசமான விளக்கம் அல்ல.

(ஸ்லோன் கிராஸ்லியின் நாவல், ‘தி க்லாஸ்ப்’ இம்மாதம் பேப்பர்பாக் வடிவில் பதிப்பிக்கப்படுகிறது)

நன்றி – The Necklace, Sloan Crossley, The Paris Review 

இலக்கியத்தை அறிதல்

அமரநாதன்

இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் சிலர் ஒவ்வொரு வாரமும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அது போல் இம்முறை சந்தித்தபோது பன்னிரு படைக்களத்தின் இறுதி அத்தியாயங்கள் பற்றிய பேச்சு வந்தது. அதை வாசித்தபொழுது தவிர்க்க இயலாமல் அண்ணா இறந்ததும் கருணாநிதி எழுதிய இரங்கற்பாவும் நினைவுக்கு வந்தது. அது கவிதை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பன்னிரு படைக்களத்தில் பீமன், “நீங்கள் வென்று தருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது (தின்றது!) கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை,” என்று கூறுவதை மொழிவளம் என்று என்று ஒரு நண்பர் பாராட்டியபோது “அடுக்குமொழி” இலக்கியத்தின் பொற்காலத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

நண்பர்கள் சிலரின் பார்வையில் இந்த “மொழிவளமே” ஒட்டுமொத்தமான அளவுகோலாகி நாவல் தேர்ச்சி பெற்று விடுகிறது. இது போலொன்று வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் எல்லா எழுத்தாளர்கள் விஷயத்திலும் நடந்தேறி வருகிறது. மிகச் சாதாரணமான நாவல்கள்கூட இலக்கியமல்லாத காரணங்களுக்காக – 31 வயதாகியும் பூப்படையாத பெண்ணைப் பற்றிய முதல் நாவல், தேனி மாவட்டத்தில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் வாழும் ஏதோ ஒரு பழங்குடியினப் பெண்களைப் பற்றிய முதல் நாவல் – இலக்கியம் என்று போற்றப்படுகிறது. மொழிவளம் வேறு இலக்கியம் வேறு. உண்மையில் மொழிவளமோ, அல்லது யாரும் எழுதாத ஒன்றை எழுதுவது என்பதோ மட்டும் ஒரு படைப்புக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்து விடுவதில்லை.

எதார்த்த எழுத்தை, அது யதார்த்தமாய் இருக்கிறது என்பதாலேயே உயர்ந்த இலக்கியம் என்று ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இலக்கியமல்லாத காரணங்களைக் கொண்டு இலக்கியத்தைக் கண்டடையும் முயற்சிதான். வாழ்க்கை அனுபவம், வாசிப்பனுபவம் இரண்டிற்கும் தவிர்க்க இயலாததொரு தொடர்பு உண்டு என்ற சிந்தனை எழுத்தாளனுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அசோகமித்திரன் ஒரு நேர்காணலில், “அது கதை அய்யா,” என்றார்.

வாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் எதிரெதிர் தட்டுகளில் வைப்பதானால் எங்கே அனுபவம் முடிகிறது, எங்கே கற்பனை துவங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட சிந்தனை ஒரு படைப்பாளியைக் குழப்பவே செய்யும். வாழ்க்கை என்று கருதியதால்தான் ஜெயமோகன் ‘அறம்’ தொகுதியில் உள்ள கதைகளை எழுத முடிந்தது. இதே காரணத்தினாலேயே ‘தோல்’ போன்ற நாவல்களும் எழுதப்படுகின்றன. அனுபவ வாழ்க்கை ஒரு புனைவினுள் எவ்வளவு இருக்கலாம்? புனைபடைப்பு என்றாலும் சிக்கல்தான். அது வாசிப்பனுபவத்தினுள் வருவது கடினம்.

இப்படிக் கூறலாம்: புனைவின் களத்தில், அதன் தருணத்தில் நடக்கச் சாத்தியமுள்ளவற்றைப் பற்றி படிப்பது நமக்கு நல்ல வாசிப்பனுபவமாகிறது. நாம் படிப்பது மகிழ்ச்சிக்காகவே என்று கூறுவது ஒரு ஹெடானிச சித்தாந்தம் என்றாகிவிடலாம். ஆனால் இப்படி ஒரு கருத்து இலக்கிய கோட்பாடுகளில் விவாதிக்கப்படுகிறது. Pleasure என்பது வெறும் புலனின்பம் மட்டுமல்ல- அறிவு, ஆன்மா சார்ந்த விஷயம் என்று கொள்வோமானால் அதன் பொருள் வேறாகிவிடலாம். இந்நிலையில் இன்பம் X துன்பம் என்ற இருமை இல்லாமலாகி விடலாம்; உதாரணமாக திருமணம் – பிரிவு, குழந்தையின் பிறப்பு – தாயின் பிரசவ வலி. இது பற்றி நிறைய விவாதங்கள் உண்டு.

கனிவு, புரிந்துணர்வு, போன்ற விஷயங்களைக் கொண்ட கதைகளுக்கு நாம் அளிக்காத சலுகையை வன்முறை, குரூரம், துரோகம், காழ்ப்புணர்வு போன்ற எதிர்மறை உணர்வுகளை இரக்கமின்றிச் சித்தரிக்கும் கதைகளுக்கு அளித்து நாம் அவற்றிற்கு இலக்கிய மதிப்பு தருகிறோம் என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அதனுள் உள்ள தர்க்கத்தினடிப்படியில்தான் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்படிச் செய்யும்போது இப்படியொரு எண்ணம் எழ வாய்ப்பில்லை. வாழ்க்கை X இலக்கியம் விவாதம் நிறைய பேசப்பட்டுவிட்ட ஒன்று. அந்த இருமை அவசியமில்லை.

வாழ்க்கை என்றால் யாருடைய வாழ்க்கை? விஜய் மல்லையா நன்றாகவே வாழ்கிறார். தினந்தோறும் நூறு இருநூறு சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர் யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை திரும்பக் கொடுக்கிறார். இதில் எது வாழ்க்கை? நேரடி அனுபவம் எப்போதும் இலக்கியமாவதில்லை.

‘அப்பாவின் நண்பர்’ கதையில் தேவை நிர்பந்தத்தால் அப்பாவின் நண்பரைத் திட்டித் தீர்க்க வேண்டுமென்று எண்ணுகிறான் மகன். அவனது அம்மாவுமே அப்பாவின் சிநேகிதரைத் திட்டிக் கொண்டுதான் இருப்பாள், ஆபத்து காலத்தில் உதவவில்லை என்ற ஆதங்கத்தில். உண்மையில் மகன் அவர்களின் சந்திப்பை அஞ்சுவான். ஆனால் அவன் அச்சத்துக்கு மாறாக அம்மாவுக்கோ அப்பாவின் சிநேகிதரைப் பார்த்தவுடன், “இவ்வளவு நல்லவங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல உங்கள் நண்பருக்கு எப்படி மனது வந்தது,” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதைப் பல்வேறு வகைகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதில்தான் இலக்கிய அனுபவம் இருக்கிறது. அது வாழ்க்கை தரும் நேர்க்கோட்டிலான அனுபவமல்ல.

ஒளிப்பட உதவி – The Nonist 

ஆசுவாசம்

– ஸ்ரீதர் நாராயணன் –

birds flock

உயரக் கம்பத்தின் வடக்குமூலையில்
கருநீல இறக்கையை விரித்து
ஒரு பறவை எழும்புகிறது
தொற்றினாற்ப்போல நூற்றுசொச்சப்
பறவைகளும் எழும்பிப் பறக்கின்றன.

காவ்-காவ்; காவ்-காவ் எனக்
குரலெழுப்பிக் கொண்டே
வானில் சிறு வட்டங்களிட்டு
கம்பிகளில் மீண்டும்
வந்தமர்கிறது.

அலைஅலையாக தொடர்கிறது
பறவைகளின் ஆட்டம்.

வாகன நெரிசல்களுடனும்
வியர்வை வழிதல்களுடனும்
அண்ணாந்து நோக்கி
குதூகலிக்கும் கூட்டத்தில்
நானும் ஒருவனாய்

தெறிக்கும் துளியென
ஒரு நீளவால் பறவை மட்டும்
அருகிலிருந்து ஆட்டத்தை
ரசித்துக் கொண்டிருக்கும்
மக்னோலியா மரத்தின்
உச்சியில் சென்றமர்கிறது.

திருடன் – ஜினிசிரோ தனிஜகியின் ஜப்பானிய சிறுகதை

ஜப்பானியச் சிறுகதை

மூலம் : ஜினிசிரோ தனிஜகி

ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட்

தமிழில் : தி. இரா. மீனா  

ஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜகி [ 1886 –  1965 ] நவீன எழுத்தாளர் வரிசையில் அடங்குபவர். சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல் என்று பல்வடிவ படைப்பாளி வரிசையில் ஒருவர். புகழ் பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் சோசகிக்குப் பின் அம்மொழியின் சிறந்த நாவலாசிரியர் என்ற போற்றுதலுக்கு உரியவர். 20-ம் நூற்றாண்டில் மாறிவரும் ஜப்பானிய சமூகவாழ்வின் போக்கைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். சிறந்த சமகால எழுத்தாளர் என்று பாராட்டப்படும் இவர் ஜப்பானிய அரசின் ’அஸகி’ விருது பெற்றவர்.

 

பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது.

நானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி இருந்தோம்.

அந்த நாட்களில் மிகவும் குழப்பத்திற்கு உரியதாக இருந்த காதலைப் பற்றி நாங்கள் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது குற்றம் பற்றிய உரையாடலாக மாறி விட்டது. ஏமாற்றுதல், திருட்டு, கொலை என்று பேச்சு வேறு திசையில் திரும்பியது.

“கொலைக் குற்றத்தைத்தான் நாம் மற்ற  குற்றங்களைவிட அதிகமாகச் செய்கிறோம்,” என்று ஹிகுச்சி சொன்னான். அவன் ஒரு  பேராசிரியரின் மகன். ”நான் ஒரு காலத்திலும் திருட மாட்டேன். என்னால் அதைச் செய்ய முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் என்னால் நண்பனாகப் பழக முடியும். ஆனால் திருடன் என்பது வித்தியாசமான ஓர் இனம்,” சொல்லும்போது அவனுடைய அழகான முகத்தில் ஒருவிதக் கருமை படர்ந்தது. அவனுடைய முகத்தின் சுருக்கம் வெறுப்பைக் காட்டியது.

“இப்போதைய நாட்களில் நம் அறைகளில் திருட்டு அதிகம் நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அப்படியா?” என்று ஹிராட்டா எங்களுடைய அறைக் கூட்டாளியான நகுமாராவிடம் கேட்டான்.

“ஆமாம். அதைச் செய்வது மாணவர்களில் ஒருவன்தான் என்று சொல்கிறார்கள்”

“எப்படி அவர்களுக்குத் தெரியும்?” நான் கேட்டேன்.

“உம்… அது பற்றி எனக்கு எல்லா விவரமும் தெரியாது — அடிக்கடி நடப்பதால் உள் வேலையாகத்தான் இருக்க வேண்டும்,” நகுமாரா ரகசிய குரலில் சொல்லி நிறுத்தினான்.

“அது மட்டுமில்லை. வடக்கு அறைப் பகுதியில் ஒரு மாணவன் தன் அறைக்குள் போனபோது உள்ளிருந்து யாரோ அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்களாம். மாணவனை  அறைந்து விட்டு  கீழே ஓடி விட்டானாம். அவனை விரட்டிக்கொண்டு ஓடியபோது இருட்டில் அவன் ஓடிய இடம் தெரியவில்லையாம். அவன் தன் அறைக்குத் திரும்பியபோது அவனுடைய பெட்டி திறந்து கிடந்ததாம். புத்தக அலமாரி குலைந்து இருந்ததாம். இது திருடன் வந்து போனதைக் காட்டுகிறது,” என்று ஹிகுச்சி விளக்கினான்.

“அவன் முகத்தைப் பார்க்க முடிந்ததா?”

“இல்லை. இவை எல்லாம் மிக வேகமாக நடந்து விட்டன. ஆனால் அவன் உடை அணிந்து இருந்த விதம் நம்மில் ஒருவர் போல இருந்ததாம். அவன் ஓடியபோது கோட்டை வைத்து தலையை மறைத்துக் கொண்டு ஓடி விட்டானாம். ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்தது. அவன் கோட்டில் விஸ்திரியா பூக்கொண்டை இருந்ததாம்.”

“விஸ்திரியா பூவின் கொண்டையா? அதை வைத்துக் கொண்டு  எதையும் உறுதியாக நிரூபிக்க  முடியாது,” ஹிராட்டா சொன்னான். அவன் ஒரு நிமிடம் என்னைச் சந்தேகத்தோடு பார்த்ததாக நினைத்தேன். அது என்னுடைய கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். என் குடும்ப உடையின் அடையாளம் விஸ்திரியா பூக்கொண்டை என்பதால் என் முகம் அந்த நேரத்தில் வறட்சியானதாக உணர்ந்தேன். ஏனோ அந்த இரவில் நான் அந்த கோட் அணிந்திருக்கவில்லை.

“அவன் நம்மில் ஒருவனாக இருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. நம்மிடையே ஒரு திருடன் இருக்கிறான் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்,” அந்த நேரத்தில் நான் பலவீனமாக உணர்ந்ததால் எனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள முயன்றேன்.

“இல்லை. அவனை இன்னும் ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள்” ஹிகுச்சி திடமாகச் சொன்னான். அவன் கண்கள் மின்னின. ”நான் சொல்வது ரகசியமாக இருக்கட்டும். டிரஸ்ஸிங் அறையில்தான் அவன் பெரும்பாலும் திருடுகிறான் என்று சோதனை செய்த காவல் குழுவினர் சொல்கின்றனர். ஒரு ஓட்டை வழியாக அவர்கள் நடப்பதை எல்லாம் கண்காணிக்கின்றனர்.”

“ஓ? யார் இதை உனக்குச் சொன்னது?” நகுமாரா கேட்டான். “குழுவில்  உள்ள ஒருவர்தான். ஆனால் யாரிடமும் இதைச் சொல்லி விடாதீர்கள்”

“உனக்கே இவ்வளவு தெரியும் என்றால், அந்தத் திருடனுக்கும் கண்டிப்பாக அதிகமாகவே தெரிந்திருக்கும்,” ஹிராட்டா வெறுப்பாகப் பார்த்தான்.

ஹிராட்டாவும், நானும் நல்ல உறவு நிலையில் இல்லை என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேருக்குத்தான் ஒன்றாக இருக்கிறோம். எப்போதுமே எங்களை நான் ’நாங்கள் ’  என்றுதான்  சொல்வேன். ஆனால் ஹிராட்டாவுக்கு என்னைப் பிடிக்காது. நான் எல்லோரும் நினைப்பது போல இல்லையாம். என்னை அவனுக்கு நன்றாகத் தெரியும் என்று வெறுப்பாக என்  நண்பன் ஒருவரிடம் அவன் சொன்னானாம். ”எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் எப்போதும் எனக்கு நண்பனாக முடியாது. அவனுடன் நான் பழகுவது எல்லாம் இரக்கப்பட்டுத்தான்,” என்றும் சொன்னானாம்.

அவன் இதையெல்லாம் பேசியது என் முகத்துக்குப் பின்னால்தான். என்னிடம் எதையும் அவன் நேரடியாகச் சொல்லவில்லை. அவன் என்னை வெறுக்கிறான் என்பது மிக வெளிப்படையானது .எதற்கும் விளக்கம் கேட்பது எனக்கு பழக்கம் அல்ல. ”என்னிடம் குறை இருந்தால் அவன் அதைச் சொல்லி விட வேண்டும். என் குறை என்ன என்பதை அவன் எனக்கு சொல்லவில்லை என்பதோ அல்லது நான் அதற்குத் தகுதியானவன் இல்லை என்றோ அவன் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவனை நான் நண்பன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். அவ்வளவுதான்,” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவன் என்னைப் பற்றிச் சொன்னது என்னைத் தனிமைப்படுத்தினாலும் அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஹிராட்டா கட்டுமஸ்தான தேகம் உடையவன். அவன் அழகை பள்ளியே பெருமையாக நினைக்கும். நான் மிக ஒல்லியானவன். அடிப்படையாகவே எங்களுக்குள் வேறுபாடுகள் உண்டு. நாங்கள் வெவ்வேறு உலகத்தில் இருப்பவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். தவிர ஹிராட்டா ஒரு ஜூடோ கலைஞனும்கூட. ”ஜாக்கிரதை. நொறுக்கி விடுவேன்,” என்று அவன் தசைகளே சொல்வது போல இருக்கும். அவனைப் பற்றி நான் இப்படிச் சொல்வது என் கோழைத்தனம். அவனுடைய கட்டுமஸ்தான தேகம் கண்டு எனக்கு பயம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அற்பமான பெருமையோ, போலி கௌரவமோ கிடையாது. ”என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும்வரை மற்றவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவனைக் கண்டு வெறுக்கும் அவசியமும் எனக்கு இல்லை,” இந்த மாதிரியான மனநிலைக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதால் ஹிராட்டாவின் கர்வத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. அதனால்தான், “ஹிராட்டா என்னைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவனுடைய நல்ல கருத்துக்களை மதிக்கிறேன்,” என்று அந்தப் பையனிடம் சொல்ல முடிந்தது. நான் அதை நம்பினேன். என்னை பயந்தாங்கொள்ளியாக  நான் நினைத்தது இல்லை. ஹிராட்டாவைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு நல்ல மனம் இருப்பதாக எனக்கு கர்வமும் ஏற்பட்டது.

“விஸ்திரியா கொண்டை?” என்று கேட்டுவிட்டு அன்று இரவு ஹிராட்டா என்னைப் பார்த்த பார்வை நரம்பைச் சுண்ட வைத்தது. அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? என் குடும்பத்தின் அடையாளம் விஸ்திரியா என்று அவனுக்குத் தெரியுமா? அல்லது என்னுடைய சிந்தனை அப்படி எல்லாம் என்னை யோசிக்க வைக்கிறதா? ஹிராட்டா என்னைச் சந்தேகப்பட்டால் நான் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வேன்? ”அந்தக் கொண்டை   எனக்கும் இருப்பதால்  நான் சந்தேகக் கோட்டிற்குள் வருகிறேன்,” என்று நகைச்சுவை போல இயல்பாக சிரித்துக் கொண்டு சொல்லலாம். மற்றவர்கள் என்னுடன் சேர்ந்து சிரித்தால் சரி. ஆனால் அவர்களில் ஒருவன் ஹிராட்டா என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் தீவிரமாகச் சந்தேகப்படத் தொடங்கிவிட்டால்… அப்புறம்? அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தால்… ஐயோ! நான் யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடக் கூடாது.

இந்த விஷயத்திற்காக இப்படி யோசிப்பது முட்டாள்தனம் என்று தோன்றினாலும் அந்தக் குறுகிய நேரத்தில் மனதில் இப்படித்தான்  சிந்தனைகள்  ஓடின.  ”இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அப்பாவி   மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? ”இதையடுத்து ஒரு குற்றவாளியின் கவலையையும் தனிமையையும் நான் அனுபவித்தேன். ஒரு நிமிடம் முன்னால் வரை நான் அவர்களின் நண்பர்களில் ஒருவனாகவும், பள்ளியின் சிறந்த மாணவர்களில் ஒருவனாகவும் இருந்தேன். ஆனால்,இப்போது எனக்குள்ளேயே நான் ஒதுக்கப்பட்டவனாக இருக்கிறேன். இது அபத்தமானது, ஆனாலும் அவர்களை நம்பவைக்க முடியாதது      என் இயலாமையாக இருந்தது. ஹிராட்டாவின் மனநிலை காரணமாக நான் குழம்பி இருந்தேன், அவனுக்குச்  சமமானவனாக  இருந்த போதிலும்.

“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன்தான்,”என்று ஹிகுச்சி பொதுவாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்து பயமுறுத்தின.

“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன் …” திருடன் ! எவ்வளவு வெறுக்கத்தக்க ஒரு பெயர்! என்னைப் பொறுத்தவரை இந்தச் சூழ்நிலையில்   ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது  தன் குற்றத்தை எல்லா வகையிலும் மறைக்க முயற்சி செய்வதும், அந்த எண்ணத்தை மனதில் இருந்து வெளியேற்றப் பாடுபடுவதும், யாரிடமும் அதைச் ஒப்புக் கொள்ள முடியாது என்பதும்தான். இப்போது நான் இந்த இருட்டால் மூடப்பட்டிருக்கிறேன். நான் சந்தேகத்திற்கு உரியவன் என்பதை நம்ப மறுத்தேன்; என் நெருங்கிய நண்பர்களிடம்கூட இதை என்னால்  ஒப்புக் கொள்ள முடியாதது குறிந்து வருந்தினேன். ஹிகுச்சி என்னை நம்பியதும், காவலர் குழு சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டதும்தான் இந்த எண்ணத்திற்குக் காரணம். ”யாரிடமும் போய் இதைச் சொல்லாதே,” என்று அவன் சொன்னபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தேன்? ஹிகுச்சி என்னைச் சந்தேகப்படவேயில்லை என்றாலும் எங்களிடம் அவன் சொன்னதற்காக காரணத்தைப் பற்றி யோசித்தேன்.

ஒழுக்கமான மனிதர்களுக்கும்கூட இந்த குற்ற எண்ணங்கள் வரலாம் என்று எனக்குத் தோன்றியது. ஒரு திருடன் என்ற கற்பனை எனக்கு மட்டும் வந்திருக்க முடியாது என்று நினைத்தேன். மற்றவர்களும் இது போல சங்கடத்தை அனுபவித்து இருக்கலாம். காவலர் ஹிகுச்சியிடம் மட்டும் ரகசியத்தைச் சொன்னதால் அவன் பெருமைக்கு உரியவனாக இருக்கலாம். எங்கள் நான்கு பேரில் அவன் அதிகமாக நம்பப்பட்டவன். ’மற்ற இனங்கள்’ வரிசையில் சேர்க்கப்படாதவன். அவன் நம்பப்படுவதற்குக் காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். புகழ் பெற்ற பேராசிரியரின் மகன். எனவே அவனைப் பார்த்து நான் பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை. அவனுடைய சமுதாய அந்தஸ்து போலவே அவனுடைய நேர்மையான குணமும் காரணமாக இருக்கலாம். எனது பின்னணி—நான் உதவித் தொகை பெற்றுப் படிக்கும் புத்திசாலி மாணவன், ஒரு ஏழை விவசாயியின் மகன் கலப்படமானவன்.  நான் திருடனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் முன்னால் ஒரு வித பயபக்தியோடு இருந்தாக வேண்டும். நாங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவனுடைய வெளிப்படையான பேச்சு, என் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கை ஆகியவை எங்களிடையே உள்ள இடைவெளியின் ஆழத்தை அதிகப்படுத்தியது. சிரிப்பது, வம்பு பேசுவது,  நகைச்சுவையாகப் பேசுவது என்று எல்லாம் இருப்பதாக நாங்கள் காட்டிக் கொண்டாலும் எங்களிடையே இடைவெளி அதிகமானது. இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதற்குப் பிறகு ’விஸ்திரிய” கொண்டை உடைய கோட்டை அணிவதா, வேண்டாமா என்ற குழப்பமும் கவலையும் எனக்குள் அதிகரித்தன. நான் அதை அணிந்து கொண்டால் யாரும் கவனிக்காமல் போகலாம். ஆனால் ஒரு வேளை அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, ”ஓ !அவன் அதை அணிந்து இருக்கிறான்! ” என்று சொல்லலாம். சிலர் சந்தேகப்படலாம், அல்லது என் மீது உள்ள சந்தேகத்தை மறைத்துக் கொள்ளலாம், அல்லது என்னை பார்த்து பரிதாபப்படலாம். நான் கோட்டை அணியாமல் ஒதுக்கி விட்டால் அது பெரிய தவறாகிவிடும். ஹிராட்டா மற்றும் ஹிகுச்சி மட்டும் இல்லாமல் மற்ற நண்பர்கள் மத்தியிலும் சங்கடத்திற்கு ஆளாவேன். என்னைச் சந்தேகப்படுவது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கும் அது துன்பத்தைத் தரும் என்பது கவலை அளித்தது. என்னுடைய நண்பர்களாக இருக்கிறவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது இடைவெளியை அதிகப்படுத்தும். திருட்டு கூட அசிங்கமானதில்லை. ஆனால் அது ஏற்படுத்தும் சந்தேகம் அசிங்கமானது. யாரும் என்னைத் திருடன் என்று நினைக்க மாட்டார்கள்; அது ஊர்ஜிதம் செய்யப்படாத வரை. என்னுடன் எப்போதும் போல பழையபடி பழகி, நெருக்கமாக இருப்பார்கள். என்னை நம்பக் கட்டாயப்படுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் நட்புக்கு என்ன அர்த்தம்?

திருடனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்தப் பாவச் செயல்  நண்பனிடம் இருந்து திருடுவதைவிட மோசமானது; நட்பை அழிப்பது; சந்தேக விதையை விதைப்பது; இது திருடுவதைவிடக் கொடுமையானது. மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத திருடனாக நான்  இருந்திருந்தால் நட்பு மங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ரகசியமாக திருடும்போதுகூட வெட்கப்படாமல் இருந்திருப்பேன். ஒரு திருடனின் அபிப்ராயத்தில் இருந்து பார்த்தால் இதுதான் அவன் மனப்போக்கு. ”நான் திருடுவேன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் நண்பர்களை மதிப்பேன் என்பதும்,” இதுதான் உண்மைத் திருடனின் மனநிலை. ’அதுதான் வேறு இனத்தவனாகக்’ காட்டுகிறது. இந்த வகையில் நான் யோசிக்கும்போது எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாவதை உணர முடிந்தது. இது எனக்குத் தெரிவதற்கு முன்னாலே நான் முழுத் திருடன் ஆகி விட்டேன்.

ஒரு நாள் என் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அந்த கோட்டை அணிந்து கொண்டு பள்ளி மைதானத்துக்குப் போனேன். நகுமாராவைப் பார்த்தேன். பேசிக் கொண்டே நடந்தோம்.

“இன்னும் அந்தத் திருடனைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்,” என்றேன்.

“ஆமாம்,” அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

“ஏன்? அவனைக் குளியல் அறையிலேயே அவர்களால் பிடிக்க முடியவில்லையா?”

“அவன் அதற்குப் பிறகு அங்கு வருவதில்லையாம். மற்ற இடங்களில் நிறைய பொருட்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஹிகுச்சியை கூப்பிட்டு காவலர் கோபித்துக் கொண்டாராம். அவர்களின் திட்டத்தை அவன் வெளிப்படுத்திவிட்டதாக திட்டினார்களாம்”

“ஹிகுச்சி?” என் முகம் வெளிறுவதை என்னால் உணர முடிந்தது.

“ஆமாம்…” அவன் வருத்தமாகச் சொன்னான். கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ”நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் உன்னிடம் சொல்லாமல் இதுவரை மறைத்து விட்டேன். ஆனால் நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். நீ இதை விரும்ப மாட்டாய். காவலர் உன்னைச் சந்தேகிக்கிறார். எனக்கு அதைப் பற்றிப் பேசவே வெட்கமாக இருக்கிறது. நான் ஒரு நிமிடம்கூட உன்னை சந்தேகப்பட்டதில்லை. நான் உன்னை நம்புகிறேன். நான் உன்னை நம்புவதால்தான்  உன்னிடம் சொல்கிறேன். நீ என்னைத் தப்பாக நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.”

“என்னிடம் சொன்னதற்கு நன்றி. நான் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்,” கண்ணீரை அடக்கிக் கொண்டேன். ’கடைசியாக வந்தே விட்டது!’ நான் பயந்த மாதிரியே… இந்த நாளைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

“உன்னிடம் சொல்லிவிட்டபிறகு சுமை இறங்கியது போல இருக்கிறது. நாம் இதைப் பற்றிப் பேசுவதை இத்தோடு நிறுத்தி விடலாம்,” என்னைச் சமாதானப்படுத்துவது போல நகுமாரா சொன்னான்.

“இதைப் பற்றிப் பேச நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் நம் மனதில் இருந்து இதை அழித்து விடமுடியாது. என் மீது நீ வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. இதில் நான் மட்டும் அவமானப்படவில்லை. என் சினேகிதனான உனக்கும் அவமானம். நான் சந்தேகத்திற்கு உரியவனாக இருப்பதே நட்பிற்கு அவமானம்தான். என் மதிப்பை இழந்து விட்டேன் பார். இல்லையா? நீயும் என்னை வெறுத்து விடுவாய்”.

“சத்தியமாக நான் உன்னை வெறுக்க மாட்டேன். எந்த அவமானத்தையும் நீ எனக்குத் தரவில்லை. ஹிகுச்சிக்கும்தான்… காவலர் குழுவிடம் அவன்  உனக்கு ஆதரவாகவே          பேசியதாகச் சொன்னார்கள். உன்னைச் சந்தேகிப்பதற்கு முன்னால் அவன் தன்னையே சந்தேகித்துக் கொள்வேன்  என்றும் சொன்னானாம்,” சிறிது  விழிப்பு அடைந்தவனாக  நகுமாரா பேசினான்.

“ஆனால் அவர்கள் இன்னமும் என்னை சந்தேகிக்கின்றனர். இல்லையா? என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்வதில் பலனில்லை. உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை என்னிடம் சொல்.நான் அப்படியாவது தெரிந்து கொள்கிறேன்”

“காவலருக்கு எல்லாவிதமான குறிப்புகளும் தெரியும். ஹிகுச்சி அன்று இரவு எல்லாவற்றையும் சொல்லிவிட்ட பிறகு எந்தத் திருட்டும் குளியல் அறையில் இல்லையாம். அதனால்    அவர்கள் உன்னைச் சந்தேகப்படுகிறார்கள்.” தயக்கத்தோடு நகுமாரா விளக்கினான்.

“ஆனால் என் ஒருவனிடம் மட்டும் அவன்  அதைச் சொல்லவில்லையே!” நான் இதைச் சொல்லாவிட்டாலும் மனதில் இது உடனடியாக ஓடியது. இது என்னைத் தனிமையானவனாகவும், இழிவானவனாகவும் காட்டியது.

“ஹிகுச்சி நம்மிடம் சொன்னது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அந்த இரவில் நாம் நால்வரும்தான் இருந்தோம். வேறு யாருக்கும் தெரியாது. நீயும், ஹிகுச்சியும் என்னை நம்பினால்..”

“நீதான் இது பற்றி யோசிக்க வேண்டும். உனக்கு யாரென்று தெரியும். அவன் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை,” நகுமாரா சொல்லி விட்டு இரக்கமாகப் பார்த்தான்.

திடீரென்று எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ஹிராட்டாவின் கண்கள் என்னை ஊடுருவது போல உணர்ந்தேன்.

“நீ அவனிடம் என்னைப் பற்றிப் பேசினாயா?”

“ஆமாம்… அது சுலபமானதில்லை என்று உனக்கும் தெரியும். நான் உங்கள் இருவருக்கும் நண்பன். நானும் ஹிகுச்சியும் நேற்று இரவு அவனுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். அவன் அந்த அறையைக் காலி செய்வதாகச் சொன்னான். ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனை நான் இழக்க வேண்டியதுதான்.”

நான் நகுமாராவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ”நீயும், ஹிகுச்சியும் என்னுடைய நண்பர்களாக இருப்பதில் எனக்குப் பெருமை. நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. நகுமாராவும் அழுதான். வாழ்க்கையில் முதல் முறையாக நான் மனிதர்களின் பரிவு உணர்வை அனுபவித்தேன். தனிமையான நிலையில்  தவித்தபோது நான் தேடியது இதைத்தான். நான் எப்படிப்பட்ட கெட்ட திருடனாக இருந்தாலும் நகுமாராவிடம் இருந்து என்னால் எதையும் திருட முடியாது.

“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் உனக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கிறேன். என்னால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு அழிந்து போவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவன்    என்னை நம்பாவிட்டாலும் நான் அவனை மதிக்கிறேன். அவன் என்னை விட எவ்வளவோ உயர்ந்தவன். மற்றவர்களைவிட அவன் நல்ல குணங்களை நான் அறிவேன். வெளியேற வேண்டும் என்றால் ஏன் நான் போகக் கூடாது? தயவு செய்து என்னைப் போக விடுங்கள். நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து இருங்கள். நான் தனியாக இருந்தாலும் கஷ்டப்பட மாட்டேன்,” என்றேன்.

“நீ போக வேண்டிய அவசியமில்லை. அவனுடைய கருத்து எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போது நீதான் கஷ்டத்தில் இருப்பவன். அவன் அநியாயமாக  இருக்கும்போது அவனுடன் நான் சேர மாட்டேன். நீ போனால் நாங்களும் போய் விடுவோம். அவன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்று உனக்குத் தெரியும். ஒரு முறை அவன் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாற மாட்டான். அவன் விருப்பப்படி செய்யட்டும். அவனுக்கு புத்தி வந்து மன்னிப்புக் கேட்கும்வரை நாம் காத்திருப்போம். அதற்கு நீண்ட காலம் ஆகாது.”

“அவன் கண்டிப்பாக வந்து மன்னிப்புக் கேட்க மாட்டான். அவன் என்னை நிரந்தரமாக வெறுத்து விடுவான்”.

.”நான் அப்படி நினைக்கவில்லை. அவன் தன் பேச்சிலிருந்து மாற மாட்டான். அவன் பலமும்,பலவீனமும் அதுதான். தன் எண்ணம் தவறு என்று தெரிந்தால் அவன் மன்னிப்புக் கேட்டு நம்மோடு சேர்ந்து விடுவான். அது அவனிடம் எனக்குப் பிடித்த குணம்”. நான் ஹிராட்டாவிடம் கோபப்படுவதாக நினைத்து நகுமாரா சொன்னான்.

“அப்படி அவன் வந்தால் நல்லது…” நான் பதில் சொன்னேன். ”அவன் உங்களிடம் வரலாம். ஆனால் திரும்பவும் என்னுடன் நட்பு வைத்துக் கொள்வான் என்று நான் நம்பவில்லை… ஆனால் நீ சொல்வது சரி. அவன் அன்புக்கு உரியவன். அவனுக்கு என்னையும் பிடித்திருந்தால்…”

நகுமாரா என் தோள் மீது கை போட்டான். நாங்கள் புல்வெளியில் நடந்து கொண்டிருந்தோம். அது மாலை நேரம். லேசாகப் பள்ளி மைதானத்தில் பனி படர்ந்திருந்த்து. முடிவில்லாத கடலால் சூழப்பட்ட தீவில் இருப்பது போல உணர்ந்தோம். இங்கும் அங்குமாகப் போய்க் கொண்டு இருந்த மாணவர்கள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தனர். அவர்களுக்கும் தெரியும். அதனால் என்னை ஒதுக்குகின்றனர் என்று நினைத்தேன். மிகத் தனியாக உணர்ந்தேன்.

அந்த இரவில் ஹிராட்டா தன் மனநிலையை மாற்றிக் கொண்டான் போலும். அறையைக்          காலி செய்யவில்லை. ஆனால் ஹிகுச்சி, நகுமாராவிடம் கூட அவன் பேசவில்லை. இந்த மாதிரி நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் நண்பர்களின் அன்புக்கு மதிப்பு தர வேண்டும். நான் போனால் அது என்னை இன்னும் அதிக குற்றவாளியாகக் காட்டும். இன்னும் சிறிது காலம் நான் காத்திருக்க வேண்டும்.

“கவலைப்படாதே, திருடனைப் பிடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்,” இரண்டு நண்பர்களும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு வாரம் ஆனது. திருட்டு வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. கடைசியில் நகுமாரா, ஹிகுச்சியின்  பணம், சில புத்தகங்கள் ஆகியவையும் திருடு போயின.

“ஓ.. உங்களுடையதும் திருட்டு போயிற்றா?ஆனால் இனி எதுவும் காணாமல் போகாது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹிராட்டா கேலியாகச் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.

இரவு உணவுக்குப் பிறகு எப்போதும் நகுமாராவும், ஹிகுச்சியும் நூலகத்திற்குப் போவார்கள். நானும் ஹிராட்டாவும் மட்டும் அறையில் இருப்போம். எனக்கு இது சங்கடமாக இருக்கும். அதனால் நான் மாலை நேரங்களில் நூலகத்திற்கோ அல்லது நடைப் பயிற்சி செய்யவோ போய் விடுவதுண்டு. ஒரு நாள் இரவு ஒன்பதரை மணி அளவில் நான் எங்கள் அறைக்கு வந்தேன். அதிசயமாக ஹிராட்டா அங்கு இல்லை. மற்றவர்களும் இல்லை. எங்களுடைய படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தேன். ஹிராட்டாவின் மேஜை அருகே போனேன். மேஜையைத் திறந்து தேடினேன். சில நாட்களுக்கு முன்னால் அவன் வீட்டில் இருந்து வந்த கவரில் பத்து –யென் மணியார்டர் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து என் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மேஜையை மூடினேன்.  ஹாலுக்கு வந்தேன். டென்னிஸ் மைதானத்தின் குறுக்கே போய் முற்றத்தை அடைந்தேன். வெறுமையாக இருந்த இருட்டுப் பகுதிக்குப் போனேன். நான் திருடும் பொருட்களைப் பத்திரமாகப் புதைத்து வைப்பது அங்குதான். அந்த நேரத்தில் யாரோ ’திருடன்’ என்று கத்தினார்கள். பின்னால் இருந்து பாய்ந்து என்னைக் கீழே தள்ளி தலையில் அடித்தார்கள். அது ஹிராட்டா.

“எல்லோரும் வாருங்கள் ..வாருங்கள் உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது, காட்டு!”

“சரி. சரி. நீ கூச்சல் போட வேண்டாம். நான் உன் மணியார்டரைத் திருடி விட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். நீ அதைக் கேட்டால் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீ எங்கு கூட்டிக் கொண்டு போனாலும் வருகிறேன். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டோம். இல்லையா? உனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?” நான் அமைதியாக அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஹிராட்டா ஒரு நிமிடம் தயங்கினான். அடுத்த நிமிடம் என் முகத்தில் தொடர்ந்து          குத்தினான். ஏனோ எனக்கு வலிக்கவில்லை. இவ்வளவு நாட்களாக எனக்குள் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.

“நீ எனக்குப் போட்ட வலையில் நான் சிக்கிக் கொண்ட பிறகு என்னை நீ அடிப்பதால் எந்தப் பலனும் இல்லை. நீ என்னைப் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் நான் இந்த தவறைச் செய்தேன். ஏன் இவனிடம் இருந்து திருடக் கூடாது என்று நினைத்தேன். நீ என்னைக் கண்டுபிடித்து விட்டாய். அவ்வளவுதான். பின்னொரு நாள் நாம் இதைப் பற்றி நினைத்து சேர்ந்து சிரிக்கலாம்”

நான் ஹிராட்டாவின் கையை இயல்பாகக் குலுக்கினேன். ஆனால் அவன் என் சட்டைக் காலரைப் பிடித்து எங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான். அந்தச் சமயத்தில் மட்டும்தான் அவன் என் கண்களுக்கு கீழானவனாகத் தெரிந்தான்.

“நான் திருடனைப் பிடித்துவிட்டேன். அவன் என்னைப் பிடித்தான் என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்னை நகுமாரா, ஹிகுச்சியின் முன்னால் கீழே தள்ளினான். இந்த குழப்பத்தைப் பார்த்து அங்கு உள்ள மாணவர்கள் கூடி விட்டனர்.

“ஹிராட்டா சொல்வது சரிதான்,” நான் தரையில் இருந்து எழுந்து நண்பர்களைப் பார்த்துச் சொன்னேன். ”நான் திருடன்தான்,” எப்போதும்  பேசுவது போல பேச முயற்சி செய்தேன். ஆனால் என் முகம் வெளிறி விட்டது.

“நீங்கள் என்னை வெறுக்கலாம். அல்லது என்னைப் பார்த்து வெட்கப்படலாம்… நீங்கள் உண்மையானவர்கள். ஆனால் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். நான் திரும்பத் திரும்ப உங்களிடம் உண்மையைச் சொன்னேனே? நான் நீங்கள் நினைப்பது போல இல்லை, ஹிராட்டாதான் உண்மையானவன் என்றுகூடச் சொன்னேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஹிராட்டாவுடன் திரும்ப நட்பு வைத்துக் கொண்டாலும் அவன் என்னோடு பேச மாட்டான் என்றுகூடச் சொன்னேன். ஹிராட்டா எவ்வளவு நல்லவன் என்று மற்றவர்களைவிட எனக்குத் தெரியும் என்றும் சொன்னேன். நான் உங்களிடம் பொய் சொன்னதில்லை அல்லவா? நான் ஏன் உங்களிடம் வந்து இந்த உண்மையைச் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நான் உங்களை ஏமாற்றியதாக நினைக்கலாம். ஆனால் என்னுடைய நிலையில் இருந்து பாருங்கள். திருடுவதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னால் உங்களை ஏமாற்ற முடியாது. மன்னியுங்கள், அதனால்தான்  மறைமுகமாகச் சொன்னேன். இதைவிட என்னால் உண்மையாக இருந்திருக்க முடியாது. என் குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது உங்கள் தவறுதான். நான் வக்கிரமானவன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் உங்களிடம் உண்மையாகவே இருந்திருக்கிறேன். நான் உண்மையானவன் என்றால் ஏன் திருட்டை விட்டு விடக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது சரியான கேள்வியில்லை. நான் திருடனாகவே பிறந்தவன். சில சந்தர்ப்பங்களில் நான் உங்களிடம் என்னால்  முடிந்தவரை உண்மையானவனாக இருந்திருக்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது.ம னசாட்சி என்னை வருத்தியதால் ஹிராட்டா அறையை விட்டு வெளியேற வேண்டாம், நான் போகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையா? நான் உங்களை முட்டாளாக்கவில்லை. எல்லாவற்றையும் நான் உங்கள் நலத்திற்காகத்தான் செய்ய விரும்பினேன். நான் உங்களிடம் இருந்து திருடியது உண்மைதான், ஆனால் நான் உங்கள் சினேகிதன் என்பதும் உண்மைதான். எனக்கு உங்கள் நட்பு வேண்டும். திருடனுக்கும் உணர்வு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

நகுமாராவும் ஹிகுச்சியும் அமைதியாக நின்றனர். ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
“என்ன தைரியம் இவனுக்கு என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு என்னைப் புரியாது. நீங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் புரியாது,” நான் என் கசப்பை அடக்கிக் கொள்ளப் பார்த்தேன். ”நான் உங்கள் சினேகிதன் என்பதால் எச்சரிக்கவும் செய்கிறேன். கடைசி முறையாக இப்படி நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இருவரும் சுலபமாக ஏமாறக்கூடிய குணத்தால் ஒரு திருடனோடு சினேகிதம் கொண்டீர்கள். படிப்பில் உங்களுக்கு அதிக மார்க்குகள்  கிடைக்கலாம். வளர்ந்து பெரியவர்களாகி வாழ்க்கைக்குள் போகும்போது உங்களுக்குப் பிரச்னைகள் வரலாம்… ஆனால் ஹிராட்டா உங்களைவிட கெட்டிக்காரன். அவனை முட்டாளாக்க முடியாது!”

நான் ஹிராட்டாவைப் புகழ்ந்தபோது அவன் முகம் இறுக்கமாக  இருந்தது. வேறு எங்கோ பார்த்தபடி இருந்தான்.

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழிந்து விட்டன. நான் முழுத் திருடனாகி விட்டேன். பல தடவைகள் சிறைக்குப் போயிருக்கிறேன். இன்னமும் என்னால் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. குறிப்பாக ஹிராட்டா… ஒவ்வொரு முறை நான் திருடும்போதும் அவன் முகம் கண்ணுக்கு முன்னால் வரும். ’நான் சந்தேகப் பட்டது போல,’ என்று இகழ்ச்சியாகப் பார்த்தபடி, சொல்வது போல. அவன் மன உறுதி உடைய உண்மையான மனிதன். ஆனால் இந்த உலகம் புதிரானது. மிகவும் எளியவனான ஹிகுச்சி சிக்கலில் சுலபமாக மாட்டிக் கொள்வான் என்று நான் சொன்ன அந்த ஜோசியம் பொய்த்து விட்டது. அவன் தன் தந்தையின் செல்வாக்கால் பல நாடுகளுக்குப் பயணம் செய்தான். டாக்ட்ரேட் பட்டம் வாங்கி       விட்டான். ஹிராட்டா என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. வாழ்க்கை யாராலும் கணிக்க முடியாதது என்று சொல்வது உண்மைதான்.

நான் வாசகர்களுக்கு இங்கு சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான். ஒரு வார்த்தைகூட இங்கு பொய்யில்லை. நகுமாரா, ஹிகுச்சி ஆகியவர்களின் மனசாட்சி என் போன்ற திருடனின் மனதில் கண்டிப்பாக நிற்கும்.

நீங்கள் என்னை நம்பாமலும் போகலாம். நீங்கள் என் வகையைச் சேர்ந்தவராக இருந்தால்…

———————-

 

 

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா