Author: பதாகை

டிசம்பர் பூக்கள்

ஸ்ரீதர் நாராயணன்

NKN_6637.JPG

கரளைகற்கள் உறுத்தும்
வெட்டிவைத்த பாத்திகளில்
காட்சிக்கென மட்டும்
வளர்க்கப்பட்டிருக்கும்,

பெயர் தெரியாத
வெளிறிய ஊதா வண்ணப்பூக்களை
படமெடுத்து சேமிக்கையில்
‘டிசம்பர் பூக்கள்’
எனப் பெயரிடுகிறேன்.

பெயர் தெரிந்து கொள்ளாமலேப் போன
புதுமண்டபத்து பூக்கார அம்மாளின்
பூதொடுக்கும் தாளகதியையும்
வாயோர வெற்றிலை சிவப்பையும்
எப்படிப் பெயரிடுவது

934

நரோபா

 வரிசை நெடுக கூட்டமோ கூட்டம்.

வாயில் கதவு ஒரு தொலைதூர கருந்துளை என  எங்கோ தெரிந்தது.

ரொம்ப காலமாக நின்று அலுத்துவிட்டது.

வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்த எனக்குப்பின் முன்னிருப்பது போல் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது.

விட்டுவரவும் மனமில்லை.

வியர்வை வழியும் கழுத்தில் பவுடர் பொதிந்த கைக்குட்டையைச் சுற்றியிருந்தார் முன்னாலிருப்பவர்.

பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து நெடுநேரமாகத் துழாவியபடி இருந்தார் பின்னாலிருப்பவர்.

யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

தொலைவில் துவங்கிய பரபரப்பு அலையாக என்னை வந்தடைந்தது.

தாழ் திறக்கப்பட்டுவிட்டது.

கதவு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.

“தகுதியுடையவர்கள் இவ்வழி,” என வலப்பக்கம் ஒரு பாதை திரும்பியது.

தயக்கமே இன்றி திரும்பினேன்.

“தனித்துவமானவர்கள் இவ்வழி,” என மற்றொரு பாதை பிரிந்தது.

ஐயமே இல்லை. அதுவே என் வழி.

“சிறப்புடையவர்கள் இவ்வழி,” என திறந்தது மற்றொரு பாதை.

அவ்வழியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவரையும் காணவில்லை நான்.

முன்னவரின் பவுடர் நெடி மட்டும் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது.

நெடுந்தூரப் பாதை மற்றுமொரு பிரிவில் சென்று முட்டியது – “தன்னம்பிக்கை கொண்டவர்கள் இவ்வழி” என்றது.

நானறிவேன் என்னம்பிக்கையை என பீடு நடை போட்டேன்.

குறுகியும் இருண்டும் சுழன்றும் குளிர்ந்தும் சென்றது அப்பாதை.

தொலைவிழியாக தெரிந்த ஒளி மெல்ல கீற்றாக மாறியது.

பாதையின் முடிவில் வானுயரத் தெரிந்த வெள்ளை மதில் சுவர் ஓரமாக பலரும் அமர்ந்திருந்தார்கள்.

சுருட்டு பிடித்தப்படி திரும்பிய அவன், “இதோ வந்துட்டான்யா 934… சவுத்த மூதி எம்புட்டு தடவதான் திரும்பி வருவானோ,” என்றான்.

மலங்க மலங்க விழித்தபடி நானும் அந்த மதில் சுவரைப் பார்த்தப்படி குந்தி அமர்ந்தேன்.

 

ஒளிப்பட உதவி – Ripley Auctions

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 5

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம்- 5

karl

 சோக்லோஸும் மரியாவும் வசித்த காண்டோமினியம் கென்மோர் ஸ்கொயர் அருகே காமன்வெல்த் அவென்யுவில் இருந்தது. நகருக்குள் எப்போது வந்தாலும் செய்வது போல ஹெண்டர்சன் இப்போதும் I-93 எக்ஸிட் வழியாக நகரை அடைந்து காரை வீட்டருகே நிறுத்தி பூட்டிவிட்டு நடந்தார். வீட்டின் முன்வாயிலில் அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருக்கும்போது சோக்லோஸுடன் சில நாட்களுக்கு முன் தான் பேசிக்கொண்டிருந்ததை கசப்புடன் நினைத்துப் பார்த்தார். மீண்டும் அவர் ஏமாற்றப் பட்டுவிட்டார்: அவரைக் தூக்கியெறிந்து விட்டு போன பெண்ணை அவர் சமாதானப் படுத்தவேண்டும். அந்த வேலையைக் கொடுத்திருப்பது யாருக்காக அவள் ஹெண்டர்சனை விட்டுவிட்டு போனாளோ அவர். அந்தப் பெண்மணி! அவரை மயக்கி தனது ஆய்வுக்கட்டுரையை  எழுதச் செய்தது மட்டுமல்லாமல் இப்போது அதை எழுதியதற்காக அவரைத் தண்டிக்கவும் போகிறாள். வாயில் ஊறிய கசப்பைக் காறி டுலிப் மலர்ச்செடிகளில் உமிழ்ந்தார் ஹெண்டர்சன். ஹெண்டர்சன் ஆய்வு நிதிக்கு கையேந்தும் வேளையில் சோக்லோஸ் போன்றவர்கள்  நேஷனல் சயின்ஸ் கழகத்தின் மானியங்களில் கொழிக்கிறார்கள் –  ஹெண்டர்சன் பதற்றத்தில் இருக்கும்போது தன்னை படர்க்கையில் எண்ணிக்கொள்வது போல இப்போதும் நினைத்துக் கொண்டார்.

கதவு திறந்தது. வெளுத்துப் போன ஜீன்சும் மஞ்சள் போலோ சட்டையும் அணிந்து, அக்ரோன் நகரில் பார்த்ததை விட இயல்பாக தெரிந்த சோக்லோஸுக்கு பின்னால் நின்றிருந்தாள் மரியா. அவள் லேசாக சுருங்கிவிட்டது போல் பட்டது அவருக்கு. வலிநிறைந்த துல்லியத்தோடு அவரால் நினைவுகூர முடிந்தது – தலைமுடி ஐஸ்-டீயின் ப்ரௌன் நிறத்திலிருந்து கருப்பாக மாறியிருந்ததைத் தவிர அவளில் வேறொன்றும் மாற்றமில்லை. ஆரஞ்சு நிற மேற்சட்டையும், கருநிற ஸ்கர்ட்டும், ஊதா நிற காற்சட்டையும் அவள் அணிந்திருந்தது அவளின் இயல்பான ஒரு வினோத கவர்ச்சியை ஊட்டுவதாக இருந்தது. அவருக்கு முன்னால் அவள் நின்ற அந்தக் கோலம் ஹெண்டர்சனுக்குள் ஆசையின் வெம்மையை ஊற்றாக பாயச் செய்தது. உள்ளே நுழைந்த ஹெண்டர்சனை மரியா தன் கைகளை சிறு டவலில்  துடைத்தவாறு பார்த்தாள்.

“வாருங்கள், அற்புதமான அறிஞரே! உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி, ஜான்!” தோள்களை அணைத்து, கன்னங்களில் முத்தமிட்டு கிறங்கிப்போன ஹெண்டர்சனை வரவேற்றாள் மரியா. “உள்ளே வா, ஜான் – எல்லாம் தயாராக இருக்கிறது!”

வீட்டைச் சுற்றிக் காண்பித்தார் சோக்லோஸ். அது ஒரு சுமாரான வீடு – சோக்லோஸ் விரைந்து கடந்த ஒளிகுறைந்த, துணிகள் பொதிகளாக தரையிற்கிடந்த அந்தப் படுக்கையறையைத் தவிர – பெரிதாக ஈர்க்கும்படி ஒன்றுமில்லை. பளபளக்கும் ஒக்மரப் பலகைகள் பதித்த, பெரிய சன்னலுடன் வெளிச்சமும் காற்றோட்டமும் கூடிய   டைனிங் அறையில் அனைவரும் அமர்ந்தார்கள்.அந்த அறை சோக்லோஸ் – மரியா இருவரின் தவறவிடமுடியாத தடயங்களால் நிரம்பியிருப்பதாகப் பட்டது.  பிரேம் செய்யப்பட்ட கணித ஆய்வுக்கட்டுரையின்  பட்டயம்; அருகிலேயே உறைகளில்லாத இசைவட்டுகளும் ஸ்டீரியோவும்.

பொருட்களின் பொருத்தமற்ற அருகண்மை ஹெண்டர்சனின் எரிச்சலைக் கூட்டியது.  மாலை இன்னும் சூடு தணியவில்லை; திறந்து விடப்பட்டிருந்த சன்னல்கள்வழி பக்கத்துவீட்டு தொலைக்காட்சியிலிருந்து ரெட் சாக்ஸ்  ஆடிக்கொண்டிருந்த பேஸ்பால் போட்டியின் ஒளிபரப்பின் சன்னமான ஒலி வழிந்து கொண்டிருந்தது.  ஹெண்டர்சன் சோக்லோஸ் ஊற்றித்தந்த கலங்கிய ரெட் வைனை மூன்று  மடக்குகளில் விழுங்கினார். “வீட்டுக்கான கடன் அதிகம் இருக்குமே? ஆனாலும் ஓர் உதவி பேராசிரியருக்கு பரவாயில்லைதான்!” என்றார் ஹெண்டர்சன்.

“வீட்டின் கீழ்தளத்தில் தண்ணீர் புகுந்து விடும். ரேடியேட்டர் அவ்வப்போது பழுதாகிவிடும். அதைத் தவிர…பிரச்சனை ஒன்றுமில்லை,” என்றார் சோக்லோஸ்.

கொலாப்கி அடுக்கிய தட்டுடன் சமையலறையிலிருந்து மரியா வெளிப்பட்டாள். கொலாப்கி – ஹெண்டர்சனுக்கு  நெஞ்சில் எழுந்து வந்த தீவிர உணர்வெழுச்சியில் கண்கள் கலங்குவது போலிருந்தது. ஒரு குறிப்பிட்ட ஆகஸ்டு மாத பின்னிரவின் நினைவு: இதே கொலாப்கியும் ரெட்  வைனும். அவரும் அவளும் , தரையில் சப்பணமிட்டு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த வெப்பமிகுந்த இரவில், வெறும் உள்ளாடைகளில். தேய்ந்து போன இசைத்தட்டு ஒன்று படுக்கையறையில் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது…

அந்தப் பெண்!

உணவு மேசையில் அமர்ந்த ஹெண்டர்சன் முள்கரண்டியால் கொலாப்கியை வெட்டி முட்டைக்கோஸை வாயில் போட்டுக் கொண்டார்.

“உனக்கு காரம் பிடிக்கும் என்று தெரியும் ஆனால் ரொம்பக் காரமாக இருக்காது என்று நினைக்கிறேன்,” என்றாள் மரியா’.

ஹெண்டர்சன் நிமிர்ந்து அவளை பார்த்தார். “ம். பிறகு? சோக்லோஸ் – மிக்லோஸ் – சொன்னான் – நீ மிகவும் மாறி விட்டதாக.மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லத்தான் நினைக்கிறேன், ஆனால் அப்படிச் சொன்னால் அது சரியாக இருக்காது,” என்றார்.

சிறிய அடிபட்ட மிருகமொன்றை குழந்தையொன்று பார்வையிடும் பாவனையில் மரியா ஹெண்டர்சனை மிருதுவான பார்வையொன்று பார்த்தாள். “நீ மாறவேயில்லை, ஜான். வெட்டிப்பேச்சு உனக்கு பிடிப்பதில்லை இல்லையா?” ஒயினை சுவைத்தவாறே சிரித்தாள். “உருப்படாத என்னுடைய யோசனைகளில் இதுவும் ஒன்று என்று நீ நினைப்பது எனக்குத் தெரியும். ஆனால் அப்படியில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன்.”

“J.A.M. கணித ஜர்னலில் நீ ‘ஒத்துக்கொள்ளப்போகும்’ உண்மைக்கு எனது அனுமதி தேவை, இல்லையா? இந்த டின்னரின் காரணமே அதுதான், இல்லையா?”

மரியா சிரித்தாள். உயிரற்ற பார்வையொன்றை அவர் மேல் வீசியபடி, “ஜான், ப்ளீஸ் – உன் அனுமதி வேண்டும்தான், நான் மறுக்கவில்லை,” என்றாள்.

“என் அனுமதி,” ஹெண்டர்சன் தொடர்ந்தார். “நீ பாட்டுக்கு ஆய்வு உன்னுடையதல்ல என்று மறுப்பு வெளியிட்டுவிட்டு போய்விடுவாய். உன் மனசாட்சியின் உறுத்தலில் இருந்து உனக்கு விடுதலை கிடைத்து விடும். எனக்கு? பணிநீட்டிப்பு குழுவின் அவமதிப்பும், கருத்தரங்குகளில் ஒதுக்கப்படுவதும் நடக்கும்.”

ஹெண்டர்சனின் கையை தனது கைகளுக்குள் பொதிந்தவாறு மரியா சொன்னாள், “உனக்கு என் நன்றி கிடைக்கும், ஜான். என்னை மகிழ்வாக வைத்துக்கொண்ட பெருமிதம் உனக்கு கிடைக்கும். அவ்வளவுதான் என்னால் உனக்குத் தரமுடியும், ஜான். என்னிடம் வேறென்ன இருக்கிறது, சொல்?”

“கடவுளே!” மரியாவின் தொடுகையால் திடீரென்று ஹெண்டர்சன் கிளர்ச்சியடைந்தார். “இது மிகவும் அவசியமா? வெளியே Ph.D பட்டதோடு உலவும் அவ்வளவு முட்டாள்களை நினைத்துப் பார். நீ இதற்கு தகுதியானவள், மரியா! பலியொன்றும் இல்லாத குற்றம், அவ்வளவுதான்.”

“பாதிக்கப்படாதவர்கள் இல்லாத குற்றமென்று ஒன்று இல்லை, ஜான்,” மரியா தோள்களை குலுக்கினாள். “மதத்தை நீ கண்டடைந்தால் நான் சொல்வது என்னவென்று நீ புரிந்து கொள்வாய்.”

வெறுப்பாக தலையை அசைத்துக் கொண்டார் ஹெண்டர்சன். மரியா மாறி விட்டாள். கொஞ்சம் மந்தமாக, தன்னிச்சையாக இல்லாமல். அவள் பேசிய ஆங்கிலத்தின் சாயலும் – வசீகரிக்கும் அயல்நாட்டு தொனியைக் கேட்க முடியவில்லை; எரிச்சலூட்டும் அரைகுறை அமெரிக்க இழுவை. மரியாவுக்கு அருகே, சோக்லோஸ் ஏதும் பேசாமல்  தீவிரமான பாவனையுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். ரெட் சாக்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தின் ஒளிபரப்பில் ரசிகர்களின் சத்தம் வர்ணனையாளரின் உரத்தக் குரலை மீறி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது. ஆட்டம் தலா மூன்று என ஐந்தாவது ஆட்டத்தில் சமநிலையில் இருந்தது.

மூவரும் கொலாப்கியை அமைதியாக சாப்பிட்டு முடித்தனர். காலித் தட்டுகளை கொண்டு போய் உள்ளே போட்டுவிட்டு ஆவிபறக்கும் பிகோஸ் நிறைந்த பாத்திரங்களுடன் சோக்லோஸ் உணவுமேசைக்கு வந்தார். இன்னொரு ஒயின் பாட்டிலை எடுக்க சோக்லோஸ் உள்ளே சென்ற போது, ஹெண்டர்சன் கைகளை மேசையின் மீது ஊன்றிக்கொண்டு மரியாவைப் பார்த்துக் கேட்டார், “ஆக, இப்போது நீ மன்னிக்கப்பட வேண்டும்? அதற்கெல்லாம் உங்களை போன்றவர்களுக்கு பாதிரிமார்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்?” என்றார்.

மரியா உதடுகளை இறுகக் கடித்தபடி அவரை வெறித்துப் பார்த்தாள். அமைதியாக, “இது மனச்சாட்சி சம்பந்தப் பட்டது, ஜான். பல மோசமான காரியங்களை செய்திருக்கிறேன், ஜான். உன்னை ஏமாற்றியது. இன்னொருவரின் எழுத்தைத் திருடியது. மிக்லோஸ் இல்லாத காலைகளில் உன்னை அழைத்தது. எதுவுமே சரியல்ல.”

“அதுவெல்லாம் ஒரு காரணமேயல்ல. ஒன்றும் நடக்கவில்லை! நாம் கண்ட்ரோல் தியரியைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம் – அதுவொரு பாவமா?”

“தவறுதான். உன்னை நான் நடத்தியவிதம் தவறுதான், ” மரியா தலையை அசைத்துக் கொண்டாள். “பல வருடங்களாக நான் மகிழ்ச்சியாக இல்லை.”

“இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாய்?” ஹெண்டர்சன் வினவினார்.

மரியா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவள் முகத்தில் உணர்ச்சிகள் சந்தேகத்திலிருந்து வருத்தத்திற்கும் பின்  மென்மைக்கும் கணநேரத்தில் மாறின. “ஆம், இப்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்,” என்றாள்.

ஹெண்டர்சன் ஏதோ சொல்ல வாயெடுத்தார், பின் தலையை இல்லையென்பது போல் அசைத்துக்கொண்டு ஒரு பெரிய மிடறு ஒயினை விழுங்கினார். மரியா மகிழ்ச்சியாக இருப்பதை அவரும் விரும்பினார். ஆனால் இப்படியல்ல. மதத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு, பின்வாசல் வழியாக மகிழ்வின் நிழலுக்குள் நுழைவது எளியதுதான். ஆனால் அதுவொரு முட்டாளின் பேரம்.   கோபம் தலைக்கேற அமைதியில்லாமல் மொத்த ஒயினையும் வாயில் கவிழ்த்துக் கொண்டு புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டார்.

“சரி, நாம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்,” ஹெண்டர்சன் திறந்திருந்த ஜன்னல் வழியே கேட்டுக் கொண்டிருந்த பேஸ்பால் ஆட்டத்தின் வர்ணனையை சுட்டிக்காட்டினார். “இந்த ஆட்டத்தில் ரெட் சாக்ஸ் வென்றால் உனக்கு என் அனுமதி உண்டு. உன் மறுப்பை நீ வெளியிடலாம். என்  தொழிலை சீர்குலைக்கலாம். நீ சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் ரெட் சாக்ஸ் தோற்று விட்டால், என்னை மன்னித்துக்கொள் மரியா, நீ உன் மனசாட்சியுடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் எல்லாரையும் போல்.”

“ஜான்! என்ன இது – என்ன பேசுகிறாய் நீ?” மரியா பதறினாள். அவளும் சோக்லோஸும் உறைந்த பாவனையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “தயவு செய்து எனக்காக இதைச்செய் ஜான். நமது நட்புக்காக. ப்ளீஸ்”

“ஹெண்டர்சன்,”   சோக்லோஸ் கிசுகிசுத்த குரலில் கேட்டார், “இப்படி எளிமையாக தீர்க்கக் கூடிய விஷயமல்ல இது. நம் அனைவருக்கும் இது முக்கியம்.”

தனது நாற்காலியில் சாய்ந்துகொண்ட ஹெண்டர்சன் தோள்களை குலுக்கிக் கொண்டார். இவ்வளவு நாள் விதிகளின் படி ஆட்டத்தை  ஆடி என்ன கண்டார் தோல்வியைத் தவிர? விதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க தீர்மானித்து விட்டார்.

சோக்லோஸ் அறையின் மூலையிலிருந்த தொலைக்காட்சியை இதுவரை பார்த்திராத ஒரு பொருளை பார்ப்பது போல வெறித்துப்பார்த்தார். பின் சானல்களை மாற்றி ரெட் சாக்சின் ஆட்டத்தை வைத்தார். மூவரும் தத்தம் நாற்காலிகளை நகர்த்தி போட்டுக்கொண்டு அமைதியாக ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆறாவதிலும் எட்டாவது ஆட்டத்திலும் ரெட் சாக்ஸ் ஸ்கோர் செய்ய, ஒன்பதாவது ஆட்டத்தில் டைகர்ஸ் மூன்று சுற்று ஓட்டத்தின் மூலம் மீண்டும் ஆட்டத்தை சமன் செய்தது. ஒன்பது ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் சமமாக இருந்ததால், ஆட்டத்தை தீர்மானிக்க மேலதிக இன்னிங்ஸ் ஒன்று என்ற கணக்கின்படி ஆட்டம் மீண்டும் துவங்கியது. தனது நாற்காலியில் கைகளை இறுகக் கட்டியபடி முன்னகர்ந்து மரியா அமர்ந்திருக்க, ஹெண்டர்சனோ எதிலும் மனம் நிலையில்லாமல் மைதானத்தின் மேல் பறக்கவிடப்பட்டிருந்த பலூனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  மூன்று நான்கு என ஒயின் கோப்பை அடுத்து கோப்பையாக அருந்தியபடியே ஹெண்டர்சன் பெரிய ஜன்னல் வழியாக அந்தி  மெதுமெதுவே இளஞ்சிவப்பிலிருந்து  ஆரஞ்சு நிறமாக தொலைவானம் வரை மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தார். எத்தனை அந்திகள் அவரது அலுவலக ஜன்னல் வழியே வடக்குவானின் வர்ண ஜாலங்களை, செந்நிற தீற்றல்களை தனிமையில் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்! சோக்லோஸ் தன்னை உற்றுப் பார்த்துக்  கொண்டிருப்பதை உணர்ந்து ஹெண்டர்சன் திரும்பிப் பார்த்தார். சோக்லோஸ் திரும்பிக் கொண்டார்.

டைகர்ஸ் அணி பதினொன்றாவது ஆட்டத்தில் ஒரு ஓட்டம் முன்னிலை; ரெட் சாக்ஸ் இரண்டு ஓட்டங்களை தவற  விட, கூட்டத்தில் ஒரு சலசலப்பு.

“இப்போது என்னவாகும்?” மரியாவின் பக்கவாட்டு முகத்தைப் பார்த்து பேசினார் ஹெண்டர்சன். “என்ன நடக்கும் மரியா? நீ மேலும் மேலும் உன் பாவ மன்னிப்புகளை செய்து கொண்டே போவாய். உன் மன நிம்மதியைக் கூட்டிக் கொள்வாய். பிறகு? உன்னைத் சுற்றியிருப்பவர்களை நினைத்துப் பார்த்தாயா? மன்னிப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை, மரியா!”

மரியா அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. “கணிதம் போல் மதத்திலும் விடை  காண முடியாத கேள்விகள் நிறைய உண்டு. பொறுத்திருந்து பார்,” என்றார் ஹெண்டர்சன்.

அவர்  சொல்லிமுடிக்கவும், கூட்டத்தின் சத்தம் ஒரு பேரிரைச்சலாக எழும்பியது. விசையுடன் அடிக்கப்பட்டு அந்தரத்தில்  பறந்த பந்தை கண்டார் ஹெண்டர்சன். அசைவில்லாமல் தொங்கியது போல் தோன்றிய பந்து, திடீரென ஒரு மாயக்கரத்தினால் அடிக்கப்பட்டது போல் கீழ் நோக்கி விழத் தொடங்கியது. மரியா பரபரப்பில் கைகளை கொட்டிக் கொண்டாள். டெட்ராய்ட் அணியின் வலதுபுற தடுப்பாட்டக்காரர் பின்னோக்கி ஓடி, மைதான சுவரில் மோதுவது போல் விழுந்து எழுந்தான். மைதான கோட்டை தாண்டிப்  பறந்த பந்து, அவன் எழுந்த போது அவனது நீட்டிய கையின் கிளவ்ஸுக்குள். பந்தை பிடித்து விட்டான்! பாஸ்டன் ரசிகர்களிடம் ஒரு நம்பிக்கையில்லாத முனகல்; டெட்ராய்ட் ஆட்டக்காரன் முஷ்டியை காற்றில் குத்தியவாறு பந்தை கைகளுக்குள் மாற்றியவாறு தனது அணியினர் அமர்ந்திருந்த பக்கத்திற்கு செல்வதைக் கண்டார்கள்.

சோக்லோஸ் பெருமூச்செறிந்தார். “நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆட்டங்களில் என்னால் இந்த பதற்றத்தைத் தாங்க முடிவதில்லை.” மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவர், ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தொலைக்காட்சியில் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொண்டு தத்தம் அணியின் டக் அவுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஹெண்டர்சன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டிருந்தார். மரியா தொலைக்காட்சிப்பெட்டிக்கு அப்பால் மிகத் தொலைவில் ஏதோவொன்றை பார்ப்பவள் போல் அமர்ந்திருந்தாள். உதடுகள் ஒரு மெல்லிய கோடாக இறுகியிருக்க, கைகள் எதையோ வேண்டுவன போல் குவிந்திருந்தன. அவளை பார்த்தபடி, “நான் கொடூரமானவனாக இருந்திருந்தால், இதில் ஒரு நீதியை சுட்டிக் காட்டியிருப்பேன்,” என்றார் ஹெண்டர்சன்.

“ஆனால் நீ கொடூரமானவனில்லை. நீ தயை நிறைந்தவன்; புத்திசாலி, கருணையுள்ளவன்.” மரியா ஹெண்டர்சனின் கையை தான் கைகளில் ஏந்திக் கொண்டாள். “நீ கொடூரமானவனில்லை தானே, ஜான்?”

(தொடரும்)

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3 

அத்தியாயம் 4

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின் முறையாக முன்னனுமதி பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT 

அவளது வாழ்வு

ஜிஃப்ரி ஹாசன்

துர்க்கனவுகள் சங்கமிக்கும்
இடமாகிற்று வாழ்வு
கடவுள் வரைந்த
அவளது வாழ்வின் புதிர்களை
காலம் அவிழ்க்கத் தொடங்கியது
கடவுளால் அவளுக்கென வரையப்பட்ட வாழ்வு
இன்னும் அநாமதேயமாய் அலைந்து கொண்டிருக்கிறது
குளிரில் ஒடுங்கிய பறவையின்
மௌனச்சிறகுகளால் விசிறப்படும்
நீர்த்திவலைகளாய் அவள் கனவுகள்
ஒவ்வொன்றாய் உதிர்கின்றன
கானகத்துள் உறைந்திருக்கும்
இருட்டின் மௌனத்தை ஒத்த ஒரு மௌனம்
அவள் வாழ்வைப் போர்த்துகிறது
தனித்துப்போனவளின் துயரம் எதைப் போன்றது?
தனித்தலையும் ஒரு பறவையின் துயர் போன்றதா?
கைவிடப்பட்டவளின் மெளனம் எதைப் போன்றது?
கூரிய மலைகளின் மௌனத்தை விட கெட்டியானதா?
அவளது மௌனம் பூத்த கனவு எதை விடப் பெரியது?
மனிதர்களால் உதிர்க்கப்பட்ட
சுடு சொற்கள் அவள் இதயத்தை ஊடுறுவிய போது
தன் உடலெங்கும் பீறிட்ட கொடிய வலியை விடவும் பெரியதா?
அவளது ஏக்கம் எதை விடப் பெரியது?

அழைப்பு

ஹரீஷ் கண்பத்

பேருந்து நிலையத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வந்திறங்கி முக்கால் மணி நேரமாகியிருந்தது. வருவதாகச் சொல்லி விட்டு தாமதித்துக் கொண்டிருந்த நண்பன் மேல் கோபம் வரவேயில்லை. ஊரின் வெயில் கூட நின்று நிதானமாக உடலைத் தடவுவது போலிருந்தது. ஜனம் வெள்ளமாய் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரிடமும் பரபரப்பில்லை. மாறாக உற்சாகம் மண்டிக் கிடந்தது. ஊரில் வாழ்ந்த நாட்களில் இது போன்ற பண்டிகை சமயங்களில் இந்தப் பக்கம் வந்ததில்லை. பண்டிகையின் சுவடு ஊர் முழுக்கப் படர்ந்து பரவியிருப்பதாகப் பட்டது.எத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கிறேன் என்று சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளவில்லை. நிச்சயம் ஐந்தாறு வருஷங்கள் இருக்கும். கடைசியாக மாரியின் திருமணத்துக்கு வந்தது.

வருகிறேன் என்று சொன்னவனுக்கு மீண்டும் அழைத்தேன். எடுத்துப் பேசினான். எதிர்முனையில் காற்றின் இரைச்சல் அதீதமாக இருந்தது.வண்டியோட்டிக் கொண்டே பேசுகிறானோ என்று கவலையாக இருந்தது. “ கலெக்டரேட்ல இருக்கறண்டா பையா. வந்துர்றேன்” என்றான். எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். பசித்தது. நிலையத்தின்   வெளியே எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவகம் இருப்பதாக ஞாபகம் வந்தது. மெதுவே நடந்து அங்கே சென்றேன். நிரம்பக் கூட்டம். மீண்டும் வெளியே வந்து நின்று கொண்டேன்.பக்கத்தில் மிட்டாய்க் கடை வாசலில் ஒரு குழந்தை அலறிக் கொண்டிருந்தது. அதன் அம்மா குழந்தையைக் கொண்டு வந்து மிட்டாய்க் கடை வாயிலில் அமர வைத்த தன் அறிவைத் தானே நொந்து கொண்டே குழந்தையைச் சமாதானம் செய்தபடி இருந்தாள்.

மெல்ல நடக்கத் துவங்கிய என்னை வழிமறித்தவாறு வண்டியை நிறுத்தினான் பிரபு. செல்லமாக அவன் தோளில் தட்டி, “இதான் வர்ற டைமாடா பையா?” என்றேன். பல வருடப் பட்டண வாசத்தால் பேச்சில் தலைகாட்டாமல் தேய்ந்தழிந்து போன ஊர் வாசம் இங்கு வந்ததும் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடுவது ஆச்சரியம் தான்.”இல்லடா. நான் வந்தர்லான்னு பாத்தன். உன்னிய கிரிஸ்ணகிரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ணுடான்னா நீயி தரும்புரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ற. மொதுல்லயே போன் பண்ணிருந்தா கரெட்டா வந்துட்ருப்பேன்” என்றான்.“செரி ரொம்ப பேசாத. பசிக்கிது. எங்கனா சாப்புட போலாம் வா” என்றேன்.” எங்க போறது?” என்று என்னையே திருப்பிக் கேட்டான். “ அதியமான் போலாம் வா” என்று வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. திடீரென்று ஞாபகம் வந்தவனைப் போல், “ டேய் நம்ம டீலக்ஸு இன்னும் இருக்குதா இழுத்து மூடிட்டானுகளா?” என்றேன். டீலக்ஸ் என்று நாங்கள் அழைப்பது எங்கள் ஊரின் பலான படத் திரையரங்கை. கல்லூரி நாட்களில் அங்கேயே பழியாய்க் கிடந்ததுண்டு.” நல்லா தான் இன்னும் ஓடினிருக்குது” என்றவன் சற்றே பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தான். “ எல்லா தேட்டரும் அப்டியே தாங்கீது. கணேசா மட்டும் மூடிட்டான்” என்றான்.அந்த அரங்கில் மௌனம் பேசியதே படத்தைத் தனியே போய்ப் பார்த்தது நினைவில் வந்து போனது.”டேய்.. அப்புறமா எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி போய் பாத்துட்டு வந்துரலாம்” என்றதற்கு சரி என்று தலையாட்டினான். அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.

வீட்டின் நினைவுகள் மூச்சு முட்ட அழுத்தும் கொடி போல் மூளையைச் சுற்றிலும் படர்ந்து இறுக்கத் துவங்கியது. தலையை உலுக்கிக் கொண்டேன். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.” டேய் காந்தி நகருல எங்கப்பாவோட அத்த வீடு கீது. அங்க தான் போவணும். சாயந்திரமா பத்திரிக குடுக்க கெளம்பலாமா” என்றேன்.”செர்ரா.. என்னைய வீட்ல விட்டுட்டு நீ வண்டிய எட்துனு போ. சாய்ந்தரம் என்னைய கூட்டிக்கோ” என்றான்.கிளம்பினோம். கணேசா தியேட்டரின் வழியே போகும் போது அந்த இடம் பல்லெல்லாம் கொட்டிப் போய் விட்ட பின்பும் புன்னகை மாறாத பாம்படக் கிழவி போல் தோன்றியது.

அப்பாவின் அத்தை மிக மிகத் தளர்ந்திருந்தார். இன்னமும் அவர் கையில் பிரம்புடன் பாடம் எடுப்பது போலவே ஒரு பிம்பம் மனதில் பதிவாகியிருந்ததை அழிப்பது சிரமமானதாயிருந்தது.நடுங்கும் விரல்களால் தலையைத் தடவி வரவேற்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறையில் புகுந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது மணி நாலாகியிருந்தது.தயாராகி வெளியே வந்து வண்டியை எடுத்தேன். வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போதே காற்றில் லேசாகக் குளிர் கலந்திருந்தது. குளிர் இந்த ஊருக்குப் புதிதில்லை. அற்புதமான சீதோஷ்ணம். சிறு வயசில் எத்தனை குளிரையும் தாங்கும் உடம்பு, இப்போதெல்லாம் முடிவதில்லை.பட்டணம் பல விதமான உபாதைகளை விதைத்திருக்கிறது.

குளிரை ரசித்து உணர்ந்தபடியே அவன் வீட்டுக்கு வண்டியை மெல்ல விரட்டினேன்.சத்திர மேல் தெருவும் அப்படியே தானிருந்தது. மாலை நேரம் வீட்டு வாசல்களில் முளைக்கும் பணியாரக் கடைகள் மொளகா வடைக் கடைகள் வியாபாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. பிரபு வீடு மட்டும் முற்றிலுமாக மாற்றிக் கட்டப்பட்டிருந்தது.  வெளியே வந்தவனிடம் விசாரித்தேன். “ தெர்லடா பையா. ரெம்ப நாளா இப்டி தான் கீது. மின்ன எப்பிடி இரின்ச்சுனு மறந்து போச்சி” என்றான் சாதாரணமாக. நான் வந்து எவ்வளவு வருஷங்கள் ஆகி விட்டிருக்கின்றன என்று அப்போது தான் புரிந்தது..

இருவரும் கிளம்பினோம். நானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டேன். அழுக்கடைந்த கட்டிடமென ஞாபக அடுக்குகளில் எப்போதும் பதிந்திருக்கும் அரசு மருத்துவமனை, பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரியாக மாறியிருந்தது மனசை என்னவோ செய்தது. இது வழியே பிரதான சாலையிலிருந்து எத்தனை முறை வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன். இப்போது வெறும் கட்டிடக் காடாய் கண் முன் நின்றது. ஏனோ கல்லூரி படிக்கையில் விபத்தில் இறந்து போன அடுத்த வகுப்பு மாணவனின் உடலைப் பார்க்க இங்கு வந்தது நினைவில் நிரடியது. துக்கத்தை அனுசரிக்காமல் அப்போது மனம் கவர்ந்திருந்த பக்கத்து வகுப்பின் பெண்ணை நோட்டம் விட்டபடியிருந்த குற்ற உணர்வும் துல்லியமாய் கண் முன் வந்துன் போனது.

செந்தில் நகரை அடைந்து தினேசனுக்கு தொலைபேசினேன். அவன் வீட்டுக்கு வழி சொன்னான். வீட்டைக் கண்டடைவது அவ்வளவு சிரமாகவெல்லாம் இல்லை. தெரு மூலை வீடு. அபாரமாக வரவேற்றான். பாலாஜி அங்கேயே வந்திருந்தான். அங்கேயே வைத்துப் பத்திரிகையைக் கொடுத்தேன். பெண் என்ன செய்கிறாள் , திருமணம் எங்கே போன்ற கேள்விகள் சடுதியில் முடிந்து போக, எங்கள் உரையடலில் எப்போதும் எனக்குப் பிடித்தமான பகுதியான கல்லூரி ஆசிரியர்களின் வசனங்களைக் கிண்டலடிக்கும் பகுதி துவங்கியது. பாலாஜி அதில் விற்பன்னன். நேரம் போனதே தெரியவில்லை. மணி ஆறாகி விட்டிருந்தது. சுரேஷின் வீடு அருகிலிருப்பதால் அவனைப் போய் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவனைச் சந்தித்து பத்திரிகையைக் கொடுத்தேன். அவன் அம்மா சுரேசனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இன்னும் எதுவும் தகையவில்லை எனவும் லேசான வருத்தத்துடன் கூறினார்.அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு அடுத்து மாரியைப் பார்த்து விட்டு வந்து விடலாமென்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஆறு மணிக்கே இருள் முழுவதுமாகக் கவிந்திருந்தது. காற்றில் குளிர் வெகுவாக ஏறியிருந்தது.குளிரில் வண்டியைச் செலுத்துவது சிரம்மாயிருந்தது. இன்னொரு பக்கம் ஆனந்தமாயும் இருந்தது. மாரியின் ஊரருகே புதிதாக ஒரு மேம்பாலம் முளைத்திருந்தது. அதைக் கட்டிப் பல வருஷங்கள் ஆகியிருக்கக் கூடும். நான் இப்போது தான் பார்க்கிறேன். இடப்புறம் திரும்பி ஊர்ப் பாதையில் நுழைந்ததும் பழகிய வீட்டு நாய் போல் இருள் வந்து மேலெங்கும் அப்பிக் கொண்டது.மாரியின் திருமணத்துக்கு வந்த போது இருந்தது போலவே இப்போதும் ஊரில் ஏதோ திருமணம் நடந்து கொண்டிருந்தது. சீரியல் விளக்குகளின் ஒளி மினுங்கிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் இந்திப் பாடல் பாடிக் கொண்டிருந்த்தைக் கேட்டு சிரிப்பாக வந்தது.

மாரி வீட்டைல் அடைந்தோம். ட்யூப் லைட் பலகீனமாக எரிந்து கொண்டிருந்த வெளிப்புறத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஏறி ஒரு சிறுவன் ஆடிக் கொண்டிருக்க, இன்னொருவன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பிள்ளைகளாக இருக்கக் கூடும். எழுந்து வந்து முகம் மலர வரவேற்றான். அவன் மனைவி சமையலறையில் வேலையாய் இருப்பது தெரிந்தது. ஆள் தளர்ந்திருந்தான்.

சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்து, எழுந்து உள்ளே சென்றவன் திரும்பி வருகையில் கையில் மிக்சர் தட்டோடு வந்தான். “ என்னாயா ஆளே டல்லாயிட்ட?” என்றேன். அதேனோ எப்போதும் மாரிய மட்டும் “டா” போட்டு அழைக்க வாய் வந்ததேயில்லை. உருவம் காரணமாக இருக்கலாம்..என்னவோ போ. ஜட்ஜு எக்ஸாம் எளுதினேன். ஜஸ்டுல மிஸ்ஸாயி போச்சு. அடுத்து எப்பன்னு தெர்ல. வேலை டென்சன் வேற. பி பி கூட வந்திருச்சுன்னா பாத்துக்க” என்றான்.

“இந்த வயசுல பி பி எல்லாம் வரக் கூடாதுயா. என்னா போ நீயி. “ என்று சலித்துக் கொண்டேன். அவன் பிள்ளை ஓயாமல் சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தான். பத்திரிகையை கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்ததும், “ந்தா.. ஒரு நிமிசம் இரு. வந்தர்ரேன்” என்றபைட் மாரி உள்ளே ஓடினான்.

சில நிமிஷங்கள் கழிந்து வந்தவன் கையில் சில பொட்டலங்களைத் திணித்தான். கைய நீட்டு என்றவன் ஒரு கயிற்றைக் கையில் கட்டி விட்டான். “ காசி போய்ருந்தன். பிரசாதம். இது கால பைரவரு கவுறு. கலியாணம் வேற நிச்சியமாயிருக்குது. இருட்டுல வேற போறீங்க. இத கட்டிக்க” என்றான்.மாரியின் கைச்சூடு குளிருக்கு இதமாக இருந்தது.

“செல்லா இங்க தான் பைபாஸுக்கு அந்தாண்ட இருக்கறானாம். பாத்துட்டு போயர்லாமா” என்றான் தினேசன்.அவனுக்குத் தொலைபேசி, அவனை பைபாஸ் முனைக்கு வரச் சொல்லி விட்டு அங்கே கொண்டு போய் வண்டியை நிறுத்தினோம்.அடுத்த சில நிமிடங்களில் செல்லா வந்தான். கல்லூரியில் பார்த்த எந்தச் சுவடுமின்றி முதிர்ந்திருந்தான். ஆனால் உற்சாகமாக இருந்தான். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருந்தான். ஓஷோவைப் பின்பற்றுவதாகச் சொன்னான். பத்திரிகையைக் கொடுத்ததும் அந்தத் தேதியில் பட்டணம் வரும் வேலை இருப்பதாகவும் கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். பேச்சு எப்படியோ திசை திரும்பி கல்லூரியை பற்றி மாறியது. அடுத்த அரை மணி நேரம் பாலாஜி கல்லூரி வாத்தியார்களைப் பற்றி ஆற்றிய பலகுரலில் எல்லாரும் வயிறாரச் சிரித்தோம். கிளம்பும் போது பாலாஜியின் தொண்டை முழுவதுமாகக் கட்டியிருந்தது.

குளிரில் எனக்குமே தொண்டை லேசாக அடைக்கத் துவங்கியிருந்தது. ஆனால் மனசு மட்டும் ஏனோ தளும்பிக் கொண்டே இருந்தது.” டேய் எங்க வீட்ட போயி ஒரு வாட்டி பாத்துட்டு வந்தர்லாம்” என்றேன். பிரபு, தினேசன் , பாலாஜி மூவருமே ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் தான் எத்தனை நாட்கள் உண்டு உறங்கி, விளையாடி, கூடி களித்து ஒன்றாக திரிந்த இடம் அது. அவர்களுக்கும் நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்.

பைபாஸ் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை எந்த விதமான மாற்றங்களுமில்லாமல் அப்படியே பலகீனமான மஞ்சள் சோடிய வெளிச்சத்துடன் மனசை என்னவோ புரட்டியது. என் தெருவில் எதுவுமே மாறியிருக்கவில்லை. வீட்டு வாசலில் சாலையில் நின்றபடி, தெரு விளக்கொளியில் வீட்டை சற்று நேரம் வெறித்தபடி இருந்தேன்.” இங்க தான நாம கிரிக்கெட் ஆடுவோம்” என்று அவர்கள் மூவரும் அந்த வீட்டைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்பேசியை எடுத்துப் படம் பிடிக்க முயன்றேன். இருளில் சரியாக வரவில்லை. கண் லேசாகக் கலங்கியது போல் தோன்றியது. பிரமை போல. சட்டென்று ஏதோ ஒரு நொடியில் உள்ளே போய் வீட்டை வாங்கியவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு சுற்றிப் பார்த்து விட்டு வரலாமா என்னும் ஆசை பூதாகாரமாக எழுந்து ஏனோ எழுந்த நொடியிலேயே அடங்கி அமிழ்ந்து போனது. கிளம்பி விட்டேன்.

வண்டியில் ஏறி நகரத் துவங்கிய பின்னும் அவ்வளவு வெட்ட வெளியிலும் வீட்டைப் பற்றின அலையலையான நினைவுகள் பின் தொடர்ந்து துரத்தி வந்து மூச்சு முட்டச் செய்தபடி இருந்தன.

வழியில் கடையில் சாப்பிடப் போன போது சாப்பாடு இறங்கவில்லை. ஏதோ பேர் பண்ணி விட்டு கிளம்பினேன். வீட்டுக்குப் போய் கட்டிலில் விழுந்த பின்னும் துரத்தல்கள் தொடர்ந்தன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலையில் எழுந்திருக்கும் போது ஏழரை ஆகியிருந்தது.இன்று காரிமங்கலம் போவதாக ஏற்பாடு. கோபுவைப் பார்க்க, கல்லூரியில் என் அருகில் மூன்று வருசங்களும் அமர்ந்திருந்தவன்.

அவன் வீட்டை அடைந்ததும் வரவேற்றான். கல்லூரி படிக்காய்யில் அவன் குரலை வெகுவாகக் கிண்டல் செய்வோம். இப்போது அவன் கல்லூரியில் விரிவுரையாளன் ஆகி விட்டிருக்கிறான். காலம் யாரை எப்படி மாற்றுகிறதென்று சொல்லவே முடிவதில்லை. குரல் நல்ல கெட்டிப்பட்டிருந்தது. பிள்ளைகள் மருண்டு விழித்தன. மாட்டுப் பொங்கல் தினமாதலால் சுடச் சுட பொங்கலும் வடையும் கொடுத்தான். பத்திரிகை வைத்து விட்டு செந்திலைப் பார்க்கக் கிளம்பினோம்.

சாலையைக் கடந்து எதிர்ப்புறம் ஏழெட்டு கிலோமீட்டர்களில் அவன் ஊர். வீட்டு வாசலை அடைந்த போது சரியாய் எங்கிருந்தோ வேகமாக வந்தான். “இன்னிக்கு மாட்டுக்கு பூசை வெச்சிருக்கறோம் கீள காட்டுல. அங்க தான் இருந்தேன். நீங்கள்லாம் வரீங்களேனு வந்தேன்” என்றவன் கொஞ்ச நேரம் எங்களோடு கதைகள் பேசிக் கொண்டிருந்தான். எழுந்தவன் “ வாங்களேண்டா. நீங்களும்? பூசை இனிமே தான் போட போறோம். அஞ்சு பத்து நிமிசம் தான், இருந்துட்டு போவீங்க” என்றான். அவன் பின்னாலேயே நடந்தோம். வீட்டைப் பூட்டி விட்டு சரிவில் நடந்தான். இரண்டு நிமிடங்கள் தான். தூரத்திலிருந்தே அவன் அப்பா அம்மா தங்கை எல்லாரும் மாட்டுக்குப் பூசை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

மாட்டின் உடம்பில் வண்ணங்களை அப்பியிருந்தார்கள். விளக்கேற்றி விட்டு மாட்டின் கழுத்தில் மாலையிட்டு விட்டு, கைச் செம்பின் தண்ணீரை மாட்டைச் சுற்றித் தெளித்தபடி “ பலியோ பலி” என்றான் செந்தில். அவன் அப்பா “ பொங்கலோ பொங்கல்” என்றார். மாட்டைச் சுற்றி நடந்தபடியே “ பலியோ பலி பொங்கலோ பொங்கலு” என்று குரல் கொடுத்தனர். இதே போல் மற்ற மாடுகளுக்கும் பூசை நடந்தது. பூசை முடிந்த பின், படையலிட்டிருந்த வெல்லம், புளிக் குழம்பு, சோறு எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பிசைந்து இலைத் துண்டில் வைத்து எங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வளவு அற்புதமான சுவையுடனிருந்தது அந்தக் கலவை.

வெயில் ஏறியிருந்தது. மணியைப் பார்த்தேன். உச்சியை அடைந்திருந்தது. இரவு பட்டணம் கிளம்ப வேண்டும். நேரம் நிறைய இருப்பது போலிருந்தது. அடுத்த நொடியே நேரம் மிகக் குறைவாயிருப்பதைப் போல் தோன்றிப் பதறச் செய்தது.பத்திரிகையைக் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். டவுனை அடைந்ததும் தினேசனும் பாலாஜியும் கிளம்பினர். நான் பிரபுவுடன் அவன் வீட்டுக்குச் சென்று அவன் அறையில் படுத்து விட்டேன்.

தூக்கமும் விழிப்புமற்றா ஒரு மாதிரியான அரை மயக்க மந்த நிலையில் புரண்டபடிக் கிடந்தவனை பிரபு கையில் காபியுடன் எழுப்பினான். காபியை வாங்கி உறிஞ்சியபடியே “ பணியாரம் சாப்பட்லாமாடா பையா?” என்றேன். “செரி இரு வாங்கினு வரேன்” என்று கூறி விட்டுச் சென்றவன் சிறிது நேரத்தில் கையில் பொட்டலங்களுடன் வந்தான்.திருப்தியாகச் சாப்பிட்டோம். நேரம் குறைந்து கொண்டே வந்தது.

“செரி நா வீட்டுக்கு போறன். என்னிய கொண்டு போயி வுடு” என்றேன். வீட்டில் என்னை இறக்கி விட்டு விட்டு “நைட்டு எத்தினி மணிக்குடா பஸ்ஸு” என்றான். பத்தே முக்காலுக்கு வண்டி. நீ வரியா.. இல்லின்னாலும் ஒண்ணும் ப்ரச்னயில்ல. நான் போய்க்கிறேன்” என்றேன். “இல்லல்ல. நான் வந்து கூட்டினு போறேன். பத்தே காலுக்கு வரன்” என்று கிளம்பினான்.

என் வீடிருந்த பகுதியில் இப்போது சதுர அடி என்ன விலைக்குப் போகிறதென்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டு கிளம்பினேன். பழகிய பூனைக் குட்டி வீட்டை விட்டுக் கிளம்ப விடாமல் கால்களைச் சுற்றுவது போல கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ நினைவுச் சுழல் என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தது ஏதோ அசவுகரியமாக இருந்தது. பட்டணத்தை நினைத்து ஆயாசமாக இருந்தது.

இரவு உணவு எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டேன். நேரம் எப்படித் தான் போனதோ தெரியவில்லை.பிரபு வந்து ஆரனடித்தான். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் அடைந்ததும் “ நீ வேணா கெளம்புடா பையா. உங்கூட்ல திட்ட போறாங்க” என்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன் தான் குடித்து விட்டு வண்டியிலிருந்து விழுந்ததால் அவன் இரவில் எங்கே போனாலும் கண் கொத்திப் பாம்பாய் அவன் வீட்டில் கவனித்து வந்தனர். “ அதெல்லாம் ஒண்ணும் பரவால. உன் கூட தான் வந்துகுறேன்னு தெரியும் .ஒண்ணியும் சொல்ல மாட்டாங்க” என்று பிடிவாதமாய் நின்றான்.

வண்டி சரியான நேரத்துக்கு வந்தது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. ஏறி அமர்ந்து கையசைத்தவுடன் அவன் நகர்ந்தான்.ஊரின் குளிர் முகத்தில் பட்டால் தேவலாம் போலிருந்தது. குளிர் சாதனப் பேருந்தென்பதால் சன்னல்கள் திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தன. பேருந்தின் குளிர் சாதனம் மனசுக்கு ஒப்பவில்லை. மெல்லப் பேருந்து நகரத் துவங்கியது. இருள் படிந்திருந்த திறக்க முடியாத சன்னலின் வெளியே ஊர் கொஞ்சம் கொஞ்சமாக பின் தங்கி நழுவத் துவங்கியிருந்தது.