Author: பதாகை

மாண்புடையாள்

தி. வேல்முருகன்

தீபாவளிக்கு மறுநாள் மதியம் சாப்பிட்டு வீட்டிலேருந்து வேலைக்கு போயிட்டு இருக்கேன். பெரிய மதுவு திரும்பும்போது தம்பின்னு ஒரு குரலு கேட்குது.

தம்பின்னு திரும்பவும் குரலு உடைஞ்சு அதுல ஒரு பதட்டம். நான் வண்டிய திருப்பி அந்த பெரிய மதுவு பஸ் ஸ்டாண்ட்கிட்ட வந்து நிறுத்தினேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவிதான் கூப்புடுராங்க.

“என்னம்மா? “

“இங்க வாயேன் தம்பி”

அங்கதான் சைக்கிள் கடைக்காரர் ஒக்காந்து இருந்தாரு. அப்பாக்கு தெரிஞ்சவரு. உடம்பு கொஞ்சம் பலவீனமா நடுங்குது. கையெல்லாம் சருகு போல தோல் சுருக்கம் தெரியுது.

“என்னம்மா? என்னாச்சு? “

“பஸ்சே வரல தம்பி ஒரு மணி நேரமா! கொஞ்சம் கரிக்குப்பம் வரைக்கும் போகனும், தெரிஞ்சவங்க வீட்டுக்கு. நீ கொஞ்சம் இவங்கள கொண்டு உட்டுடேன். நான் பின்னாடியே வந்துடறேன்.”

“அதுக்கென்னமா… நீங்க மெல்ல வந்து உட்காருங்கப்பா!”

அவரால நடக்க முடியல. ஒரு தள்ளாட்டம் இருந்தது. வண்டியில ஏறும்போது.

“என்னம்மா தனியா அனுப்புறிங்களே, நீங்களும் வாங்களேன்?”

“ஏய், நீயும் ஏறிக்க. இடம் இருக்கு பாரு…”

சைக்கிள் கடைக்காரர்தான் சொன்னாரு. அந்த குரலு, அந்த சத்தம், கொஞ்சம் கூட பலவீனம் இல்லாம உறுதியா தெரிஞ்சுது.

பஜாஜ் 125 விண்ட் மாடல். நல்ல நீளமான சீட்டு உள்ளது. நல்லா உட்கார்ந்து வண்டிய பிடிச்சுக்க சொல்லிவிட்டு எடுத்தேன். முதல்ல அந்த அம்மா கொஞ்சம் கூச்சமும் சங்கடமும் பட்டாங்க. பிறகு ஏறிகிட்டாங்க. கையில இருந்த கட்டப்பைய வாங்கி முன்னாடி வச்சிக்கிட்டேன். வண்டி ஓட ஆரம்பித்தது.

இவர் பேரு ராயரு சைக்கிள் கடை தான் வச்சிருந்தாரு. என்னோட புது சைக்கிள அப்பா ஒவராயிலுங்காக இவர் கிட்ட விட்டு இருந்தாங்க. அப்ப இவரு கடையில நிறைய சைக்கிள் இருக்கும் சின்ன சைக்கிள்லாம் இருக்கும். எப்பவும் கூட்டமா இருக்கும். பரங்கிப்பேட்டை ரேவுதுரைக்கு மீனு வாங்கப் போற சைக்கிள் எல்லாம் கூடையோட நிக்கும். எப்பவும் ஆளும் பேச்சும் பஞ்சர் ஒட்ட காத்தடிக்கன்னு இருக்கும்.

நான் அன்னைக்கு சைக்கிள் வாங்கப்போனேன். அப்ப ரோட்டோரம் பெரிய வேப்பமரம். நிழல்ல பூவும் பழமுமா அது ஒரு தனி வாடை. நல்லா காத்தடிச்சுகிட்டு இருந்திச்சு. ஒரு ஆயா அந்த பழத்த பொறுக்கிக்கிட்டு இருந்துச்சு. நான் சைக்கிள் கொடுங்கன்னு கேட்டேன்.

“ஒக்கார்றா என் கூட்டாளி. மவனே, கொஞ்சம் நேரமாவும் நீ போயி விளையாடுடா,”ன்னாரு அப்ப இத எல்லாம் பார்த்தன்.

இப்ப தெரியற இந்த சைக்கிள் கடைக்காரர் வாட்டம் சாட்டமா நல்ல நிறம் கையில பச்சை நரம்பு தெரியும். பாவம் இப்ப இப்படி தளந்து நிக்கிறாரு.

வாய்க்கால் பிரிந்ததும் ஆனைக்குட்டி மதுவு வந்தது. இருபுறமும் மாந்தோப்பு. தாழங்காடு தாண்டியதும் குட்டியாண்டவர் கோயில் சாலையில் இருபுறமும் புளியமரமும் பனைமரமும் வரிசையாக நின்றது. தைக்கால் வந்ததும் தர்க்காவின் விளக்கு கம்பத்தை பார்த்துவிட்டு நான் சைக்கிள் கடைக்காரர் மனைவியைக் கேட்டேன்.

“அம்மா, அங்க யாரு வீட்டுக்கு போறிங்க?”

“அதுவா தம்பி அங்க சொந்தக்காரங்க இருக்காங்க அங்க போறோம்”

தோப்பிருப்ப வண்டி தாண்டுச்சு. நான் ஒன்னும் பேசல.

“அம்மா கரிக்குப்பம் வந்துட்டுது”

“இன்னும் கொஞ்சம் தூரம் தான் போயேன்”

சிறிது தூரம் போனபின் ரோடு இடப்புறம் பிரியும் இடத்தில், “இங்க தான் நெறுத்து நெறுத்து” என்றார்கள்.

நான் வண்டிய மெதுவா நிறுத்தினேன்.

“மெதுவா மெதுவா,”ன்னாரு சைக்கிள் கடைக்காரர்.

மனைவி இறங்கும்போது குரல் கணீர்ன்னு இருக்கு. இறங்கியதும் பைய வாங்கி கிட்டாங்க. சைக்கிள் கடைக்காரர் இறங்கி கால் தாங்கிகிட்டே போயி ரோட்டோரம் இருந்த எல்லக்கல் மேல கைய ஊணி உக்காந்ததுட்டாரு. நான் அவர் மனைவிய கேட்டேன்.

“ஏம்மா ரொம்ப முடியல போல இருக்கே, பையன் வீட்டுக்கு போகக்கூடாதா?”

அவ்வளவுதான் அந்த அம்மா கண்ணுலேருந்து தண்ணி கொட்டுது, உதடு பச்சைப்புள்ள மாதிரி துடிக்குது.

“அழுவாதம்மா, யாரையாவது கூப்புடனுமா? என்ன கஷ்டம் சொல்லும்மா?”

முந்தானையால முகத்த தோடைச்சிக்கிட்டு, “எல்லாம் தப்பாயிடுச்சுப்பா,”ன்னு சொல்றாங்க.

“என்னம்மா சொல்றிங்க?”

“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குடியிருக்கர வீட்ட உட்டுடக்கூடாதுப்பா. புள்ளைவோ இருக்கு பொண்ணு இருக்குவோ ஆனால் இருக்கதான் இடமில்லே”

“ஏம்மா?”

“பெரிய பொண்ணு கல்யாணத்துக்கு வீட சொச்ச பணத்துக்காக போக்கியம் போட்டோம். அவ்வளவுதான், அத மூக்க முடியல. இரண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு அதையே வித்து முடிச்சோம்..

“மளிகை கடை வச்சாரு. பொட்டிக் கடை கூட வச்சு பார்த்தாச்சு, கொடுத்தத வாங்கத் தெரியாது தம்பி, திரும்ப சைக்கிள் கடைக்கே வந்தாச்சு

“பசங்க அவன் அவன் சம்பாரிச்சு கல்யாணம் பண்ணிகிட்டானுங்க. இந்த சரியா படிக்காத புள்ளைவோ என்ன பண்ணும்? அங்க அங்க கிடைக்கற வேலையை செஞ்சிட்டு கஷ்டப்படுதுவோ, நாங்க எங்க போறது?

“முதல்லாம் எல்லாம் சைக்கிள் வேலைக்கு வரும், ஒன்னும் கஷ்டம் தெரியல. இப்பல்லாம் எங்க, அதுவும் கிடையாது, ஞாயிற்றுகிழமை ஒன்னு இரண்டு வரும். இவங்களுக்கு உடம்பு தெம்பு கொறைஞ்சதும் அதுவும் போச்சு“

சைக்கிள் கடைக்காரர் எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டு இருந்தாரு.

“காலையில கிளம்பினோம், யார் கண்ணிலும் படாம வந்துடனுமுன்னு.

“எல்லாம் விபரமா ஒரு நாளைக்கு சொல்றன். உன்னதான் தெரியும, நல்ல புள்ள இல்ல நீ வேலைக்கு போ. நேரம் ஆவுது பாரு. இங்க பக்கத்துல தான் நான் போவனும் நீ போ“

நான் வண்டி எடுத்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்து கண்ணாடி வழியாக பார்த்தேன்

சைக்கிள் கடைக்காரரை கைத்தாங்கலா முதல்ல நிக்க வச்சாங்க. அவரு கையை உதறி முன்னாடி சாயப்பார்த்தாரு.

நான் வண்டியைக் கீழப்போட்டுட பார்த்தேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவி சிரமப்பட்டு நிமித்தி பிடிக்கிறாங்க, அவரு நெஞ்சு உயரம்தான் இருக்காங்க. எனக்கு புரியுது. இப்ப அழுவுறாங்க. அவுங்க உதடு துடிக்குது. செட்டியார் குனிஞ்சு அவங்கள பார்க்குறாரு. சைக்கிள் கடைக்காரரை ஆதரவா அவரு மனைவி புடிச்சு இருக்காங்க. நான் அப்படியே திரும்பி ரோட்ட பார்த்து  இருக்கேன். ஒரு ஐம்பதடி தூரத்தில ஒரு கட்டடம்
இருந்துச்சி. நான் அந்த கட்டத்த முன்பே பார்த்து இருக்கேன். ஆனால் அதுல இருந்த போர்ட அன்னைக்குதான் பார்த்தேன். அதுல அரசினர் ஆதரவற்றோர் முதியோர் இல்லமுன்னு இருந்துச்சு.

நான் வேலைக்குப் போயிட்டேன். மனசுல அவங்க ரெண்டு பேரோட நினைப்பு மட்டும் இருந்துச்சு. எப்படி இருந்தவங்க இப்படி ஒரு சூழ்நிலை வந்து போச்சே, என்னா ஆவாங்கன்னு தெரியலையே, அவங்கள பார்க்கனும்னு நினைச்ச நான் தொடர்ந்து வேலையால மறந்துட்டேன்.

ஒரு வாரம் போயிருக்கும். மாலை வேல முடிஞ்சு திரும்பும்போது 6:30 மணி இருக்கும் வெளிச்சம் இருந்தது. செட்டியாரம்மா கரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிற்குறாங்க வண்டிய நிறுத்தி, “வாங்கம்மா நான் கொண்டு விடறேன்“ன்னு சொன்னேன்.

“இல்லப்பா. பையன் பார்த்தா ஏசுவான், நீ போ. நான் பஸ்ல வந்துடறேன்“

“சரிம்மா?”

வண்டி எடுக்கப்போறேன். “தம்பி, தம்பி. இருப்பா… நேரம் வேற ஆவுது. பெரிய மதுவுல உட்டுடு”

“சரிம்மா ஏறிக்குங்க. கம்பி புடிச்சுக்குங்க”

வண்டி போயிகிட்டு இருக்கு. அவங்களாவே சொல்ராங்க,

“ஒன்னும் சரியில்ல தம்பி. நான் பொறந்த ஊரு குறிஞ்சிப்பாடி. என்ன இந்த குடும்பத்துல இவருக்கு கட்டி குடுத்தாங்க. நான் வந்தப்பிறகுதான் இவரு தம்பிவோளுக்கு கல்யாணம் ஆச்சு. அப்புறம் சொத்த பிரிச்சு கொடுத்தாங்க , பங்கா ஊடும் கொஞ்சம் நிலமும் வந்துச்சி. சரியா பார்க்க தெரியல. சாமர்த்தியம் இல்ல. ஒரு சூழ்நிலையில வீட்ட போக்கியம் போடப் போவ, அத மூக்கவே முடியல என்தம்பிவோ மளிகை கடை போட்டு கொடுத்தான். அதையும் கட்டுசிட்டா இல்லாமல் கடன கொடுத்துட்டு வாங்க தெரியல. கடன் வாங்கனவன் அடிக்க வரான்பா . நாங்க வாங்கன கடத்துக்கெல்லாம் போயிடுச்சு. மீளவே முடியல. எல்லாம் போச்சு.

“கடைசியாக அவ ராஜம் ஊட்டுலதான் ஒரு வருசமா இருந்தோம். அவ ரொம்ப நாளா காலி பண்ணுங்கன்னு சொன்னா. இந்த மாசம் இந்த மாசம்ன்னு தள்ளி போட்டுக்கிட்டு இருந்தோம். இந்த மாசம் வர்ற முதியோர் பணம் வரல. நானும் எங்கெங்கோ ஓடிப் பார்த்தேன். பெரட்ட முடியல. தீவாளிக்கு மொத நாளு பொட்டிய தூக்கி வெளில வச்சுட்டு கதவ சாத்திட்டா. மழை புடிச்சுக்கிச்சு.

“பொழுது போனப்பிறகு பையன் வூட்டுக்கு போனேன். தீபாவளி. மவன் வூட்டுல இருந்துட்டு இங்க வந்தாச்சு. அம்மா பையன் வீட்டுல இருக்க முடியாதா? என்னோட பெரிசா கஷ்டப்படறான்பா, கிடைக்கற வேலைய செய்யறான், நாங்க ஒன்னும் செய்யல அவனுக்கு. சுனாமி வீட்டுல வாடகைக்கு இருக்காம்பா. இவரு முடியாதவர இரண்டுநாளு வச்சிக்க முடியல. தண்ணி வசதி கிடையாது. மருமக ஏதாவது சொல்றதுக்கு முன்னே நம்மளே போயிடும்முன்னு வந்துட்டேன்.”

“எங்க வந்திங்கம்மா?”

“ஆமா இனி மறைச்சிதான் என்ன ஆவப் போவுது? அதாம்பா கரிக்குப்பத்துல அனாதை இல்லம் இருக்கு இல்ல, அங்கதான் கொணாந்து தங்க வச்சேன். முதல்ல சேர்த்துக்க மாட்டேன்னுதான் சொன்னாங்க. அப்புறம்தான் நான் படற கஷ்டத்தை பார்த்துட்டுஒத்துகிட்டாங்க.

“மவன் வீட்டுல இரண்டு நாள் தங்கியிருந்து பார்த்தேன், மருமகள் அனுசரனை இல்லை, பிறகு அங்க இங்கன்னு விசாரிச்சப்ப இங்கே வயசான காலத்துல தங்கற இடம் இருக்குன்னு தெரிஞ்சு கொண்டு வந்து சேர்ந்தேன். அவருக்கு முடியாம போனப்பிறகு கூடயேதான் இருக்கேன். பகல்ல அப்படியே யாருக்கும் தெரியாம வந்து கூடயே பொழுதுக்கும் தேவையானத செஞ்சு கொடுப்பேன். அங்க இருக்குறவங்களுக்கும் வேத்தும்மையில்லாம செய்வேன். இப்ப எல்லாம் சரியாயிடுச்சு. ரா ஒரு பொழுது எல்லாரும் பார்த்துக்கிறாங்க. பகல்ல நான் வந்துடப் போறேன். என்னமோ போப்பா, நான் இருக்கறவரைக்கும் யாரும் ஒரு சொல்லோ கஷ்டப்படவோ அவர உடமாட்டேன். ஆனால் அவரு கஷ்டப்படாம நல்லவிதமா போயிட்டாபோதும் அல்லும் பகலும் அதே நினைப்பு ஓடிக்கிட்டு கிடக்கு. பகீர்ன்னு ஒரு பதட்டம் எந்த செய்திய கேட்டாலும் வந்து நெஞ்சடைக்குது. இன்னும் எவ்வளவு நாளைக்கோ?”

“சரிம்மா கவலைப்பட்டு நீங்களும் உடம்பு கெடுத்துக்காதிங்க? இப்ப எங்க போறிங்க?”

“மவன் வீட்டுக்குத்தான். மருமக முழுகாம நிற மாசமா இருக்கா. கைப்புள்ளய வச்சிக்கிட்டு கஷ்டப்படறா.அப்புறம் யார் பார்ப்பா? நான் தான் பார்க்கனும்”

பெரிய மதுவு வந்து விட்டது.

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 4

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம் – 4


மரியா தன் அம்மாவின் வாத நோயைப் பற்றியும், தனது மணிக்கட்டுகளில் அடிக்கடி ஏற்படும் வலியைப் பற்றியும், அவள் அக்காவின் மகனுக்கு தான் தைத்துப் பரிசளித்த பூசணிநிற ஸ்வெட்டரைப் பற்றியும் மூச்சு விடாமல் பேசினாள். மெது மெதுவே அவள் குரல் ஒரு செய்வதறியாத, திக்கற்றுத் தவிக்கும் தொனியை அடைந்தது. இது வரை செய்திராத ஒரு செயலைச் செய்யப்போவதான குறிப்பு தோன்றியது. பேச்சு வளர்ந்தது.ரேகனைப் பற்றி, சார்லி பார்க்கரைப் பற்றி, உடலுறவைப் பற்றி…

ஹெண்டர்சனால் கேட்க சகித்துக் கொள்ள முடியாத ஆனால் கிளர்ச்சியூட்டிய சோக்லோஸுடனான தனது உறவைப் பற்றியும் விவரித்தாள். சமீபமாக வேறு ஒரு பிரச்சனை. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல் ஆரம்பித்துவிட்டு முடிக்கமுடியாத தனது ஆய்வுக்கட்டுரை. “யாருக்குத் தெரியும்? இதுதான் சரியான நேரமோ என்னவோ, போலந்துக்கு திரும்பிப் போய் ‘மாலா வார்ஸாவா’ ரெஸ்டாரண்ட்டை ஆரம்பிப்பதற்கு?” மரியா பெருமூச்செறிந்தாள்.

“வேண்டாம், கொஞ்சம் பொறு. எனக்கு ஓர் ஆறு வாரம் – ஒரு மாதம் தா,” என்றார் ஹெண்டர்சன்.

மரியா மேற்கொண்டிருந்த ஆய்வு அவரது சொந்த ஆய்விலிருந்து அவ்வளவு ஒன்றும் விலகியதல்ல. ஹெண்டர்சன் நூலகத்திற்கு சென்று தேடத்தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே அவருக்கு பிடி கிடைத்துவிட்டது. அடுத்த ஞாயிறன்று, மரத்திலிருந்து பழங்கள் கனிந்து உதிர்வது போல் கணித சமன்பாடுகள் எழுத எழுத அவரைச் சுற்றிலும் உதிர்ந்து இறைந்து கிடந்தன. திங்களன்று காலை களைப்பாக செய்தியைச் சொல்ல மரியாவை அழைத்த ஹெண்டர்சன், மறுமுனையில் சோக்லோசின் குரலைக் கேட்டதும், கண்களை மூடிக்கொண்டு போனை கீழே வைத்தார்.

எப்போதாவது அப்படி நடப்பதுண்டு; பிரகாசமான வால் நட்சத்திரம் போல் ஒளிரும் ஓர் ஆய்வுப்படிப்பு மாணவன் மேற்கொண்டு ஒளிராமல் அப்படியே எரிந்து மறைந்து விடுவதுண்டு. மரியாவின் டாக்டர் பட்டப்படிப்புக்கான இறுதி ஆய்வறிக்கையை அவள் விவரிக்கக் கேட்ட குழு ஏழு நிமிடங்களில் – ஏழே நிமிடங்களில் – அவள் தேறி விட்டாள் என்று அறிவித்து விட்டது. இனி அவள் Dr. மரியா சில்கோவ்ஸ்கி. அன்றிலிருந்து இது வரை அவள் வேறொரு கட்டுரையையும் சமர்ப்பித்ததில்லை.

“இன்றிரவு உன்னை சந்திக்க வேண்டுமென்று நான் சொன்னதற்கான கடைசிக் காரணம்,” பார் மேடையில் காலிக் கோப்பையை வைத்த சோக்லோஸ் தொடர்ந்தார், “எங்கள் புது வீட்டிற்கு இரவுணவிற்கு உன்னை அழைக்க மரியாவும் நானும் விரும்புகிறோம்.”

இரவுணவின் மேசையில் சோக்லோஸுக்கும் மரியாவுக்கு நடுவிலமர்ந்திருப்பதை நினைக்கவே ஹெண்டர்சனுக்கு கசப்பாக இருந்தது. சோக்லோஸை ஒரு நீண்ட பார்வை பார்த்துவிட்டு இறுதியாக, “டின்னர்,” என்றார்.

“பல புது கலப்பு உணவுகளை அவள் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் – போலிஷ் – பிரென்ச், போலிஷ் – காண்டோனீஸ் இப்படி,” சோக்லோஸ் தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.

களைப்பும், குழப்பமுமாக தள்ளாடி எழுந்த ஹெண்டர்சன், “பிரென்சும் வேண்டாம், காண்டோனீஸும் வேண்டாம்; அவள் வெறும் போலிஷ் உணவுகளை சமைத்தால் தான் நான் வருவேன் என்று சொல்லி வை,” என்றார்.

“சரி, பிகோஸ் சமைக்கச் சொல்கிறேன்,” சோக்லோஸின் தெளிவான பார்வையில் ஓர் குறுகுறுப்பு நிறைந்த எதிர்பார்ப்பு கலந்திருப்பது போல் ஹெண்டர்சனுக்கு தோன்றியது. “அது உனக்கு பிடித்த உணவு என்று நினைக்கிறேன், சரிதானே?”

“அவையெல்லாமே எனக்குப் பிடித்தவைதான்,” என்றார் ஹெண்டர்சன்.

அடுத்த நாளிரவு, பாஸ்டனில் தனது வீட்டின் பழைய சோபாவில் சாய்ந்தபடியே ஹெண்டர்சன் சில்கோவ்ஸ்கியின் தேற்றத்தை எழுதியது தான்தான் என்று வெளியில் தெரிந்தால் ஏற்படக்கூடிய பயங்கரமான ஆனால் சாகசமான நிகழ்வுகளை மனதில் திரையிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னவாகும்? ஒரு சிறிய அவமானகரமான ஊழலாக பார்க்கப்பெறும்; அடுத்தக் கருத்தரங்கில் காப்பி அறைக்குள் அவர் நுழைந்தால் சட்டென்று ஓர் அமைதி கவிழும். நேர்மாறாக அவரது மதிப்பு உயரவும் வாய்ப்பிருக்கிறது, என ஹெண்டர்சன் நினைத்துக் கொண்டார். ஆனால் பதவி நீட்டிப்புக்கான சீராய்வு குழுக்கள் அவ்வளவு இரக்கமும் நகைச்சுவை உணர்ச்சியும் நிறைந்தவையல்ல.

ஆனாலும் என்னவாகிவிடப் போகிறது? அவரது பணி நீட்டிப்புக்கான ஆய்வு கடுமையான கண்டனங்களை பதிவு செய்யலாம்; அதிக பட்சம் அவரை வேறு வேலை தேடிக்கொள்ளச் சொல்லலாம். உண்மையைச் சொல்லப்போனால், ஹெண்டர்சன் கல்வித்துறையை வெறுத்தார். குரோதம் நிறைந்த துறை மீட்டிங்குகளை வெறுத்தார். இளநிலை பட்டப்படிப்பு முடித்த வெறுமே சுய ஈர்ப்பு நிறைந்த மாணவர்களுடனான, ஸ்பானிஷ் இலக்கியம் படிப்பதா அல்லது கணிதமா என்பது போன்ற முடிவற்ற உதவாத உரையாடல்களை வெறுத்தார். இவர்களை பார்க்கும் போது ஹெண்டர்சனுக்கு, அவரது பட்டப்படிப்புக் காலங்கள் நினைவுக்கு வரும்; ஒரு நாளைக்கு பதினோரு மணி நேரம் புத்தகங்களில் மூழ்கியிருந்த நாட்கள்; உறைந்துபோன உணவை சூடு செய்வதற்காக மட்டும் எழுந்த நாட்கள்; பாக்மன் நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளின் வழியே பனிவிழுவதை பார்க்க மட்டும் நிமிர்ந்த நாட்கள்; தனிமையேயானாலும் வலியற்ற ஜீவிதம்.

ரஷ்ய கணிதவியலாளர்கள் அவரைப் புரிந்து கொள்வார்கள்; காதலுக்காக தேற்றங்கள் இயற்றப்படுவதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். உயரிய, அழிந்துபோன உன்னதங்களை ரஷ்யர்கள் போற்றுவதுண்டு – ஆனால் ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள் – யாருக்கு தெரியும் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று…

ஒரு சூனியவெளிக்குள் தனது மனதை ஹெண்டர்சன் இருத்திக் கொண்டார். அவரது வீட்டுக்கு வெளியே, செல்பேசியில் யாரோ ஒருவன் பேசிக்கொண்டிருப்பது அரைகுறையாக அவர் காதில் விழுந்தது.’எண்ணூறுக்கு படியாது, தொள்ளாயிரத்து ஐம்பது என்றால் பேசலாம். அதுதான் கடைசி.’ எவ்வளவு எளிமையான வாழ்க்கை என எண்ணிக் கொண்டார் ஹெண்டர்சன். அவனுக்கு சில்கோவ்ஸ்கியின் தேற்றம் பற்றி ஒன்றும் தெரியாது.

சமையலறைக்குள் நுழைந்த ஹெண்டர்சன் ஒரு கோப்பை பாலை பாத்திரத்தில் ஊற்றி சுடவைத்தார். பால் சூடாகும் வாசம் வயிற்றை புரட்டவே, பாலை அப்படியே சின்க்கில் கவிழ்த்துவிட்டு, பாத்திர காபினெட்டுக்குள் குனிந்து தேடினார். எப்போதோ குடித்துவிட்டு மீதம் வைத்து, பழங்காலச் சின்னம் போல் புழுதி படிந்து போயிருந்த வைல்ட் டர்க்கி மதுபுட்டி கிடைத்தது. காப்பி கோப்பையில் இரு விரற்கடையளவுக்கு ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தார். குவிந்து கிடந்த காஸெட்டுகளில் தேடி பெயின்மெனின் இயற்பியல் உரையை எடுத்து ஓடவிட்டுவிட்டு சோஃபாவில் சரிந்தார். அந்த இயற்பியல் மேதையின் குரல் அந்த சிறிய அபார்ட்மென்டை நிறைத்தது. எப்போதும் அவரை சாந்தப்படுத்தும் அந்தக் குரல், அந்த உரை இன்றென்னவோ அவரது சராசரித்தன்மையை சுட்டிக்காட்டுவது போல் தோன்றியது. ஆனாலும் ஹெண்டர்சன் உரையை நிறுத்தவில்லை. பதிலாக எழுந்துபோய் சத்தத்தை உரக்க வைத்து விட்டு வந்தார் – மிக உரக்க, அக்கம்பக்கத்தோருக்குக் கேட்கும்படி.

(தொடரும்)

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3 

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின் முறையாக முன்னனுமதி பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT 

பொதிகை

நித்ய சைதன்யா

இருள் கவிந்த பின்னும்
கலைந்து விடுவதில்லை
போர்வைக்குள் சுருண்டு
இரவைக்கடக்கும்
முதல் கதிர் பற்றி இழுக்கும்
நுனி
பறவைகள் அறியும்
ஒலிக்குறிகள் வனமெங்கும்
சிதறிப்பரவி
நதியோட்டத்தை வேகமூட்டும்
சூடு பறக்கும் யானையின் பிண்டம்
மீட்டுவரும்
வனத்தின் அச்சத்தை
பகலெல்லாம்
சதுரங்க விளையாட்டின்
புதிர்களோடு
விரிந்து அலையும்
வனத்தின் கனி
மலையிடுக்கில் வீழ
பரமபதம் துவங்கும்

அப்பாஸ் கியாரொஸ்டமி – ஓர் அஞ்சலி

எஸ்.சுரேஷ்

ak-bw-sholeh-620x348

Image Courtesy: filmmakermagazine.com

லைப் அண்ட் நத்திங் மோர்” என்ற படத்தில் ஓர் எளிய காட்சி. வயது முதிர்ந்த இயக்குனர் ஒருவர் இரானின் கிராமப்பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருப்பார். நில நடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்திருந்த பகுதிகள் அவை. இயக்குனர் ஒரு மூதாட்டியின் வீட்டு முன் காரை நிறுத்தி, அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிப்பார். மூதாட்டி கனமான சுமையைச் சுமந்து கொண்டிருப்பார். அவர்கள் உரையாடல் இப்படிச் செல்லும்:

இயக்குனர்: “உங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன், ஆனால் என் முதுகு சரியில்லை”
மூதாட்டி: “அதனால் பரவாயில்லை. நானே இதைச் செய்து கொள்கிறேன்”
இயக்குனர்: “உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள். என் முதுகு நன்றாக இருந்தால் உங்களுக்கு உதவி செய்திருப்பேன்”

ஆவணப்படம் போன்ற மிக எளிய காட்சியமைப்பு. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கஷ்டங்களை, படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று உணர்கிறீர்கள். இப்போது ஒரு மாயம் நிகழ்ந்து, இரானிய சினிமா உலக சினிமாவாக மாறுகிறது.

நான் பார்த்த கியாரொஸ்டமி படங்களில் பலவும் அவை முடிந்தபின்தான் துவங்கியிருக்கின்றன. அவை என்னை யோசிக்கச் செய்கின்றன. மேற்குலகின் ஊடகங்கள் அளிக்க முடியாத ஒரு மனச்சித்திரத்தை அவரது திரைப்படங்கள் அளிக்கின்றன. அத்தனை அரசியலுக்கும் அப்பால் அவரது திரைப்படம் சாமானிய மக்களையும் அவர்களது சாமானிய போராட்டங்களையும் பேசுகின்றது. அவர்களது வாழ்க்கை நம் வாழ்க்கையைவிட அவ்வளவு வித்தியாசமானது அல்ல என்ற புரிதல் நமக்கு ஏற்படுகிறது. அத்தனை பரப்புரைகளும் நிறுவ முடியாத உண்மையை, கியாரொஸ்டமி ஒரு சில ஃபிரேம்களிலேயே அடைந்து விடுகிறார். அவர் நம் மனதின் சுவர்களை உடைத்து, நாம் நம்மைச் சுற்றி உறையாய் போர்த்தியிருக்கும் அடையாளங்களை அகற்றி சக மனிதனை புரிந்துணர்வோடு அணுக வாய்ப்பு அளிக்கிறார்.

அண்டர் தி ஆலிவ் ட்ரீஸ்” என்ற படம். ஒரு சிறு லாரியில் திரைப்படக் குழுவினர் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். வழியில் லாரியை நிறுத்தி, ஒரு தாயையும் மகளையும் ஏற்றிக் கொள்கின்றனர்.  திரைப்படக் குழுவில் உள்ள ஒரு இளைஞன் திருமணம் செய்து கொள்ள தகுந்த பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறான். இறங்க வேண்டிய இடம் வந்து தாயும் மகளும் போனதும், இயக்குனர் அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்கிறார்:

இயக்குனர்: இந்தப் பெண் எப்படி? நீ இவளைத் திருமணம் செய்து கொள்ளலாமே? மிக அழகாக இருக்கிறாள்”
நடிகர்: “ஆனால் இவளுக்கு படிப்பு போதாது. நான் படித்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்”
இயக்குனர்: “ஏன்?”
நடிகர்: “நாங்கள் இருவருமே படிப்பில்லாதவர்களாக இருந்தால் எங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைப்போம்? எனக்கு படித்த பெண்தான் வேண்டும்”
இயக்குனர்: “உனக்கே படிப்பு கிடையாது. படித்த பெண் தன்னைப்போல் படித்த ஆணைத்தானே திருமணம் செய்து கொள்ள விரும்புவாள்? அவள் ஏன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?”
நடிகர் முகத்தில் ஒரு சிறு புன்னகை அரும்புகிறது.
நடிகர்: “உண்மைதான், ஆனால் நான் படித்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்”

இந்த ஆசைகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. அனைவரையும் உடனே தொடக்கூடிய சிறுசிறு சம்பவங்களில் கியாரொஸ்டமியால் கவனம் செலுத்த முடிகிறது, இயல்பான மானுட நடத்தையில் அவரால் அக்கறை காட்ட முடிகிறது என்பதுதான் இரானுக்கு வெளியே படமாக்கப்பட்ட அவரது திரைப்படங்களும் போலித்தனம் இல்லாமல் உண்மையைப் பேசக் காரணமாய் இருக்க வேண்டும். தனக்கு நேரடி அனுபவமாய் இல்லாத வாழ்வை இயக்குனர் படம் பிடித்திருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

ரேயின் மறைவு தன்னை நிலைகுலையச் செய்ததாகவும் கியாரொஸ்டமியின் படத்தைப் பார்த்ததும்தான் ரே விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பக் கூடியவரைக் கண்டு கொண்ட திருப்தியில் தன் உள்ளத்தில் அமைதி திரும்பியதாகவும் குரசோவா கூறியது மிகப் பிரசித்தம். ரேயின் கவித்துவம், திரை இலக்கணங்களை மீறாத கியாரொஸ்டமியிடம் கிடையாது, இவ்விருவரின் திரைமொழியும் மிகவும் வேறுபட்டவை என்றாலும், இருவரும் சாமானிய மனிதனை கருணையுடன் நோக்கினார்கள். இதனால் அவர்கள் திரைப்படங்களில் தென்பட்ட மனித நேயம், குரோசவா கியாரொஸ்டமியை ரேயின் இடத்தில் நினைத்துப் பார்க்க காரணமாக இருக்கலாம்.

ஒரு திரைக்கலைஞராக கியாரொஸ்டமி மிக உயர்ந்த இடத்தில் மதிப்பிடப்பட வேண்டியவர், ஆனால் அவர் தன் திரைமொழியின் கலைநுட்பங்களை முன்னிருத்துவதில்லை. “க்ளோஸ்-அப்” திரைப்படத்தில் உச்சக்காட்சியை நோக்கி கதையை மிக அருமையாக நகர்த்திக் கொண்டு செல்கிறார். மக்மல்பஃப் என்ற புகழ் பெற்ற இரானிய இயக்குனரைப் போல் நடித்து ஒரு குடும்பத்தில் தங்கியிருந்த காரணத்துக்காக ஒருவன் கைது செய்யப்படுகிறான். அவன் எதையும் திருடவில்லை, எந்த விதத்திலும் தவறாக நடந்து கொள்ளவில்லை. அவன் அந்தக் குடும்பத்தினரின் விருந்தோம்பலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான், அதுதான் அவன் செய்யும் தவறு. அவன் கைது செய்யப்பட்டு விசாரணை துவங்குகிறது. அவன் ஏமாற்றிய குடும்பத்தினர் மன்னித்தால் அவனுக்கு விடுதலை அளிக்க தான் தயாராக இருப்பதாய் நீதிபதி கூறுகிறார். கியாரொஸ்டமி பரபரப்பை உருவாக்க எதையும் செய்யாதபோதும் இந்த இடத்தில் நாம் சீட் நுனிக்கு வந்துவிடுகிறோம். மானுட நிலையை கியாரொஸ்டமி சித்தரிக்கும் விதம், ஏமாற்றியவனை குடும்பத்தினர் மன்னிக்க வேண்டும் என்று நாம் விரும்பச் செய்கிறது. அதன்பின்னர்தான் தேர்ந்த தொழில்நுட்பத்துடன் இப்பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். ஆவணப்படம் போல் ஒவ்வொரு காட்சியாய் பதிவு செய்த போதிலும், கியாரொஸ்டமி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், வலிந்து எதையும் முயலாமல், நம்மைக் கதையினுள் இழுத்துக் கொள்கிறார்.

அல்லது, “செர்ட்டிஃபைட் காப்பி” என்ற படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளை அவர் படமாக்கிய விதத்தைப் பாருங்கள். மெல்ல மெல்ல கதையில் இறுக்கம் கூடுகிறது, திடீரென்று ஒரு திருப்பம். அதன் பின் வரும் நிகழ்வுகள் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன. இவையனைத்தும் கவனமாய் அமைக்கப்பட்ட திரைக்கதையின் பகுதிகள். ஆனால் படம் சிரமம் தெரியாமல் நகர்கிறது. ஒரு கதை என்றால் இப்படித்தான் இயல்பாக இருக்க வேண்டும் என்று சொல்வது போன்ற காட்சியமைப்பு. மீண்டும் மீண்டும் கவனித்துப் பார்க்கும்போதுதான் இதிலுள்ள திரை நுட்பங்கள் நமக்குப் புலப்படுகின்றன.

நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவதைவிட மனிதர்களை உள்ளபடியே சித்தரிப்பதில்தான் கியாரொஸ்டமிக்கு ஆர்வம் இருந்தது என்பதையும் “செர்ட்டிஃபைட் காப்பி” உணர்த்துகிறது. படத்தின் கதைக்களம் அதனளவிலேயே சுவாரசியமானதுதான், “மூட் ஃபார் லவ்” திரைப்படத்திலும் இது போன்ற ஒன்றை பார்த்திருக்கிறோம். ஆனால் கியாரொஸ்டமி தன் திரைக்கதை மேதைமையை வெளிப்படுத்துவதை நோக்கமாய் கொண்டிருக்கவில்லை. அதைவிட, துணையில்லாமல் தனியாளாய் குடும்பம் நடத்தும் தாயின் உணர்வுகளை முழுமையாய்ச் சித்தரிப்பதே அவரது இலக்காக இருந்தது. ஒரு எளிய காட்சி. ஒற்றையாய் வாழும் தாய், பினோஷே, தன் ஆண் நண்பனுடன் பேசிக்கொண்டே நடந்து செல்கிறாள். அப்போதே அவள் போனில் தன் பதின்ம பருவ மகனுடனும் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்தக் காட்சி நமக்கு விவரிக்க முடியாத எத்தனையோ விஷயங்களை உணர்த்துகிறது. அந்தப் பெண்ணின் ஆழமான சோர்வும் அவளது சுமையின் எடையும் நமக்குப் புலப்படுகிறது. படத்தின் இறுதி காட்சியில், அந்த ஆண் நண்பன் தன் முகம் கழுவிக் கொள்ளும்போது, அவனது முகத்தில் தென்படும் பீதியை நாம் கவனிக்கிறோம். தான் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு விட்டோம் என்பது அவனை அச்சுறுத்துகிறதா அல்லது அந்தப் பெண்ணின் நிலையை அவன் ஒருவாறு புரிந்து கொண்டதுதான் பீதியில் ஆழ்த்துகிறதா என்ற கேள்வி பூடகமாய் எழும் காட்சி இது.

ஜப்பானிய மொழியில் வந்த “லைக் சம்ஒன் இன் லவ்” என்ற கடைசி படத்தில்தான் கியாரொஸ்டமியின் செய்கலை நுட்பம் முழுமையாய் பரிமளிக்கிறது என்று சொல்ல வேண்டும். ஒரு மிகச் சிறந்த சிறுகதையை வாசிக்கும் அனுபவத்துக்கு இணையான திரைப்பட அனுபவம் இது. பேராசிரியரும் அவரது ஆண் நண்பனும் பழகிக் கொள்வது, அதைத் தொடர்ந்த குழப்ப நிலைகளைக் கொண்டு கதையை முன்னகர்த்திச் செல்வது, இவற்றின் சித்தரிப்பு நாம் கியாரொஸ்டமியின் பிற படங்களில் பார்க்காத ஒன்று. தனது முந்தைய படங்களில் கையாளாத நுட்பங்களை இதில் வெளிப்படுத்துகிறார் கியாரொஸ்டமி. இது தவிர, இந்தப் படத்தில்தான் நாம் மரபான கதையொன்றைப் பார்க்க முடிகிறது. இக்காரணத்தினாலேயே, இவரது பிற படங்களைவிட இது பெருவாரி மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய படமாகவும் இருக்கிறது (டோக்யோவை அதன் ஒலிகளைக் கொண்டே கியாரொஸ்டமி நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்பது ரசித்துப் பார்க்கக்கூடியது. டோக்யோ சென்றவர்கள், நியான் விளக்குகளைவிட இடைவிடாது ஒலிக்கும் சப்தங்களே அந்நகரின் தனித்துவம் என்பதைக் கண்டு கொள்வார்கள். கியாரொஸ்டமி டோக்யோவின் ஓசைகளை ஒன்றுவிடாமல் பதிவு செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்).

அறம் மற்றும் இருத்தல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதில்தான் கியாரொஸ்டமிக்கு ஆர்வம் இருந்தது, தீர்வுகளைப் பரிந்துரைப்பதில் அவருக்கு ஒருபோதும் நாட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. ‘டேஸ்ட் ஆஃப் செர்ரி’ இதற்கு ஒரு நல்ல உதாரணம். உண்மையில், விடை தெரிந்து என்ன ஆகப் போகிறது? எது அறம் என்ற குறிப்பிட்ட சில குழப்ப நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்ற கேள்விதான் சுவாரசியமானது. ‘சர்ட்டிஃபைட் காப்பி’ படத்தின் ‘நாயகனும்’கூட அறம் புலப்படாத இக்கட்டான சூழ்நிலையில்தான் சிக்கிக் கொள்கிறான். உச்சக் காட்சியின் முடிவை நாம்தான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. கியாரொஸ்டமியின் பல படங்களும் இப்படிதான் முடிகின்றன. இது பலருக்கு அதிருப்தி அளிக்கும் முடிவாக இருக்கலாம், ஆனால் கியாரொஸ்டமியின் அழகியலுடன் இது முழுமையாய்ப் பொருந்திப் போகிறது.
இந்த ஒரு விஷயத்தில் கியாரொஸ்டமி தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரனை மிகவும் நினைவுபடுத்துகிறார். அசோகமித்திரனின் எழுத்தை கவித்துவம் கொண்டது என்று சொல்ல முடியாது. சிறுகதை இலக்கணத்தை மீறாத உரைநடையையே அசோகமித்திரனிடத்தில் நாம் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் எவ்வளவு சிரமமில்லாமல் அவர் சக மனிதனிடத்தில் உள்ள பரிவை வெளிப்படுத்தி விடுகிறார் என்பதுதான் ஆச்சரியம். இருவருமே ஒரு தொலைவில் விலகி நின்றே நிகழ்வுகளை விவரிக்கிறார்கள், எந்த தீர்ப்பும் எழுதுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்ற பொருளில் இதைச் சொல்கிறேன். ஆனால் இந்தத் தொலைவே அவர்களது கருணையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. இவ்விருவரும் யாருக்காகவும் பேசுவதில்லை, ஆனால் அசோகமித்திரனின் கதையானாலும் சரி, கியாரொஸ்டமியின் படமானாலும் சரி, அவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது நமக்கு தெளிவாகவே புலப்படுகிறது.

கியாரொஸ்டமியின் இழப்பு மிகப்பெரிய ஒன்று – அவரது கடைசி படமான ‘லைக் சம்ஒன் இன் லவ்’ அவர் படைபூக்க உச்சத்தைத் தொட்டிருப்பதை உணர்த்திய படம். அவரது இனி வரும் படங்கள் மிகச் சிறந்த அனுபவம் அளிப்பதாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க இடமிருந்தது. உண்மையில் நாம் இப்போது மகத்தான கலையனுபவங்களை அடையும் முன்பே இழந்திருக்கிறோம். உலக சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்று கியாரொஸ்டமி இனி எக்காலமும் பேசப்படுவது உறுதி. ரே, குரசோவா, ஓசூ போன்ற மகத்தான படைப்பாளிகளின் வரிசையை அவரும் சேர்ந்துவிட்டார்.

இரானிய சினிமாவுக்கு உலக அளவில் ஒரு இடம் பெற்றுக் கொடுத்தது கியாரொஸ்டமி என்பது எல்லாரும் அறிந்ததே. ரேவின் சாதனைகளை அடித்தளமாய்க் கொண்டு இன்னும் பல உயரங்களைத் தொடும் முயற்சியில் இந்திய திரையுலகில் வெகுசிலரே வெற்றி பெற்றனர். ஆனால் இரானிய திரைச்சூழல் மிகவும் ஆரோக்கியமாய் உள்ளது. மக்மல்பஃப், ஜாஃபர் பனாஹி, மஜீத் மஜீதி, அஸ்கர் ஃபர்ஹாதி முதலான பல இயக்குனர்கள் இரானுக்கு பெருமை சேர்க்கக்கூடியவர்கள். கியாரொஸ்டமி அவர்களனைவருக்கும் படைப்பூக்கம் அளித்த பிதாமகராக இருந்திருக்கிறார். இன்னும் பலர் இந்த வரிசையில் வருவார்கள் என்றுதான் நம்புகிறேன். கருணையையும் மானுட உணர்வுகளையும் மையமாய்க் கொண்ட கலையுணர்வும் அழகியலும் கியாரொஸ்டமியின் நோக்காய் இருந்தது. இரான் மட்டுமல்ல, உலகமெங்கிலும் இனி வரும் இயக்குனர்கள் பலரும் அவரவர் பாணியில் இவரது பார்வையை சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். கியாரொஸ்டமியின் ஆன்மா சாந்தியடைவதாக.

உணர்ச்சிகளின் இடம்: மார்கேஸ்ஸின் ‘The Saint’

ஆர். அஜய்

strangepilgrimscover

பதாகையில் வெளியான இந்தக் கட்டுரை குறித்த உரையாடலில், உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்று ஒரு கருத்து பகிரப்பட்டது. அந்தக் கட்டுரை மற்றும் கருத்தின் நீட்சியாக மார்கேஸ்ஸின் ‘The Saint‘ கதையை அணுகுவது சில புரிதல்களை நமக்கு அளிக்கலாம். மேலே சுட்டப்பட்டுள்ள கட்டுரையில் “In great fiction we are moved by what happens, not by the whimpering or bawling of the writer’s presentation of what happens,” என்று Gardner எழுதிய ‘Art Of Fiction‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது.

மார்கேஸ்ஸின் ‘The Saint‘ சிறுகதையில் மார்கரீட்டோ (Margarito) என்பவர் ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க கிராமத்திலிருந்து ரோமுக்கு வருகிறார். 18 வயதில் திருமணம் முடித்து, பிள்ளைப் பேற்றிற்குச் சில காலத்திலேயே மனைவி இறந்து, சில வருடங்களில் மகளையும் இழக்கிறார். அதன்பின் இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களின் கல்லறைகளை தோண்டியெடுக்கும்போது, மகளின் உடல் கெடாமல் இருப்பதைப் பார்த்து அவர் கிராமமே அதிசயிக்கிறது. மகளின் பூதவுடலை போப்பிடம் காட்டி, இத்தகைய அதிசயம் நிகழ்ந்துள்ளதால் தன் மகளை புனிதர் என கிருத்துவச் திருச்சபை ஏற்க வேண்டும் என்று மார்கரீட்டோ எடுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கதை.

இயல்பாகவே வாசகனை எளிதில் நெகிழச் செய்யக்கூடிய ‘sentiment/ பாசவுணர்ச்சிக்கான’ சாத்தியங்கள் இந்தக் கதையில் உள்ளன என்பது வெளிப்படை. அதே நேரம் வாசகன் இந்தக் கதையின் களத்தை நெகிழ்வோடு அணுகுவான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நடைபெற முடியாத ஒன்றுக்காக இருபத்து இரண்டு வருட காலம் ஒருவர் முயற்சி செய்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக உள்ளது, எனவே நம்மை நெகிழச்செய்ய முனையும் பசப்புணர்வே (sentimentality) கதையில் மிகுந்துள்ளது எனவும் ஒருவர் கூறலாம். அதுவும் தனக்கான நியாயங்களைக் கொண்டுள்ள தரப்பே.

Gardner குறிப்பிடும் புலம்பலோ, பிழிந்தெடுக்கப்படும் சோகமோ The Saint கதையின் எழுத்தில் இல்லை. மார்கரீட்டோ பற்றிய கதை என்றாலும், அவருடன் விடுதியில் தங்கும் கதைசொல்லியின் பார்வையிலே கதை நகர்கிறது. மார்கரீட்டோவின் முயற்சி பற்றிய எந்த விதந்தோதலும் இல்லாமலேயே அதன் கடினத்தை காபோ (Gabo) நமக்கு உணர்த்துகிறார். ரோம் வந்த ஒரு வருடத்தில் அந்நகரின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் மார்கரீட்டோவிற்கு அத்துப்படியாகிவிட்டது என்று காபோ ஒற்றை வரியில் சொல்லும்போது நகரம் முழுதும் அலைந்து திரியும் மார்கரீட்டோவின் உருவம் நம் மனக்கண்ணில் இயல்பாகவே தோன்றுகிறது. அவருடைய அன்றாட நடவடிக்கை பற்றிய எளிய விவரிப்பின் – பெரும்பாலும் வெளியே அலைந்து திரிந்தபடி இருக்கும் தனக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்திலும் தன் லட்சியம் தொடர்புள்ள (புனிதர்கள் பற்றியவையாக இருக்கக்கூடும்) நூல்களை படிப்பது, மாத இறுதியில் செலவினங்களை விரிவாக குறித்து வைப்பது- மூலமாகவே மார்கரீட்டோவின் நடை, உடை, பாவனை அனைத்திலும் கண்ணியத்தை, எப்போதும் சமநிலை குலையாத சீரான தன்மையை, கதைசொல்லி மட்டுமல்ல, அவர்கள் தங்கும் விடுதியில் உள்ள மற்ற அனைவரும், வாசகரும்கூட உணர ஆரம்பிக்கிறார்கள். சிற்சில நிகழ்வுகள் மூலம் அவரின் ஆளுமை இயல்பாகவே வாசகன் மீது தாக்கத்தை செலுத்த ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்கும் விடுதியின் அமைப்பு, அதன் உரிமையாளர், மற்ற குடித்தனக்காரர்கள் பற்றிய தகவல்கள், ரோம் நகரின் நண்பகல் மயக்கச் சித்தரிப்புக்கள், கதைசொல்லியின் புகழ் பெற்ற -திரைக்கதை எழுதச் சொல்லிக் கொடுக்கும்- ஆசிரியர், என காபோவின்- அவர் எடுத்துக் கொள்ளும் களத்தை/ நிலவியலை இன்னும் துல்லியமாக மாற்றும் – எழுத்துக்குரிய சின்னச் சின்ன இன்பங்கள் (incidental pleasures) இந்தக் கதையிலும் உள்ளன.

மார்கரீட்டோவை மிருகக் காட்சி சாலைக்கு கதைசொல்லி அழைத்துப் போக, சிங்கம் ஒன்று தொடர்ச்சியாக கர்ஜிக்கிறது. அங்குள்ள பணியாளர், சிங்கம் மார்கரீட்டோவையே கவனிக்கிறது, அவருக்காகவே கர்ஜிக்கிறது என்றும், அதில் பச்சாதாபம் தெரிகிறது என்றும் சொல்கிறார். சிங்கத்தின் கண்ணீர் என்றெல்லாம் இந்த நிகழ்வை நீட்டி முழக்காமல் சட்டென்று காபோ கடந்து விடுகிறார்- மேலும், இது பணியாளர் சொல்வதாகத்தான் குறிப்பிடப்படுகிறதே தவிர உண்மை என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. பணியாளர் சொல்லும் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மார்கரீட்டோ அன்று வேறு ஏதேனும் சிங்கங்களுக்கு அருகில் சென்றிருந்து, அவற்றின் உடல் மணம், அவர் மேல் பரவி அதனாலும் சிங்கம் கர்ஜிக்கக்கூடும் என்கிறார் அவர். அவ்வாறு நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ‘சிங்கத்தின் உடல் மணம்’ என்பதை, அச்சிங்கம் தன்னில் ஒருவராக, தன்னைப் போன்ற ஆளுமையாக மார்கரீட்டோவை எண்ணியதா என்பது குறித்தும் வாசகன் யூகிக்கலாம்.

இந்த நிகழ்வுகள் நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கதைசொல்லி மீண்டும் ரோம் செல்கிறார். தான் முன்பு தங்கிய விடுதியும், மிருகக்காட்சி சாலையும் அடையாளம் தெரியாமல் மாறி விட்டுள்ளது. தன் நண்பனை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த அவரது ஆசிரியரை இப்போது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் மார்கரீட்டோவை கதைசொல்லி மீண்டும் சந்திக்கிறார்.’ The Saint is there.. Waiting‘ என்று தன் முயற்சியின் தற்போதைய நிலை பற்றி குறிப்பிடும் மார்கரீட்டோ, இன்னும் சில மாதங்களில் தான் எண்ணியது நடந்துவிடும் என்று கூறி, கதைசொல்லியிடம் விடை பெற்று செல்கிறார். மார்கரீட்டோவை உண்மையான புனிதர் என்றும், அவர் தன்னையறியாமலேயே இத்தனை ஆண்டுகளாக, தன்னுடைய ‘புனிதர் பட்டத்திற்காகவும்’ (canonization) போராடி வருகிறார் என்று கதைசொல்லி எண்ணிக் கொள்வதோடு கதை முடிகிறது. எந்த அதீத மொழி வெளிப்பாடும் இல்லாமல் இயல்பான நடையிலேயே கதைசொல்லியின் மனவோட்டம் வெளிப்படுகிறது.

இங்கு ஒரு கருத்தை யோசிக்கலாம். உணர்ச்சிவசப்படச் செய்வதில் கதையோட்டத்துக்கு உள்ள பங்கும் கதைசொல்லலுக்கு உள்ள பங்கும் ஆராயத்தக்கவை. மகளை புனிதராக ஆக்க முயலும் தந்தையைப் பற்றிய கதையாக இல்லாமல் மனைவியை இழந்து தனியாளாக பெண்ணை வளர்க்கும் தந்தையைப் பற்றியதாக இது இருந்திருந்தாலும் அதன் கரு மற்றும் கதையோட்டம் உணர்ச்சிவசப்படச் செய்யும் சாத்தியத்தைக் கொண்டதாகவே இருக்கும். பெரும்பாலான கதைக்கருக்களுக்கும் இது பொருந்துமென்றாலும் கதையாக மொழியில் அது வெளிப்படும் விதமே நம்மை உணர்ச்சிவசப்படச் செய்கிறது, நெகிழ்த்துகிறது, அல்லது பசப்புணர்வு என்று விலக்கச் செய்கிறது. இந்தக் கதை உணர்ச்சிகரமானதுதான், வாசகனை நெகிழ்த்தும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் உணர்ச்சிகள் வாசகன் மீது திணிக்கப்படுவதில்லை, மாறாக அவற்றை உணரும் பாதையில் காபோவால் மெல்லச் செலுத்தப்படுகிறான், அதன் முடிவில் காபோவின் இடத்தையே அவன் அடைகிறான். மார்கரீட்டோவின் கண்ணியமான ஆளுமை குறித்த சுட்டுதல்கள் கதையின் ஆரம்பத்திலிருந்தே வருவதால் முடிவில் திணிக்கப்பட்ட திடீர் திருப்பமோ, உச்ச நிகழ்வோ வருவதில்லை.

..On one hand, don’t overdo the denouement, so ferociously pushing meaning that the reader is distracted from the fictional dream, giving the narrative a too conscious, contrived, or ‘workshop’ effect…,” என்று கார்ட்னர் குறிப்பிடுவதற்கு சிறந்த உதாரணம் இக்கதை. கடைசி வரை வாசகன் உணர்ந்திருந்த கதையின் ஒழுங்கைக் குலைத்து, அவனை அப்புனைவுலகிலிருந்து காபோ வெளியே இழுப்பதில்லை. இறுதியில் வாசகன் மார்கரீட்டோபால் அடையும் பாசவுணர்வு காபோ முதலிலிருந்து உருவாக்கும் உணர்வுச் சங்கிலித் தொடரின் கடைசி -அதை மேலும் இறுக்கும்- கண்ணியாகவே உள்ளது. இறுதி பகுதிக்கு முன்பான பகுதியை மறுவாசிப்பு செய்வது இது குறித்த மேலதிக தெளிவை அளிக்கக்கூடும்.

கதைசொல்லி மார்கரீட்டோவைச் சந்திக்கும் நிகழ்வுக்கான முன்னெடுப்பாக, காலத்தின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை காபோ விரிவாகச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன, கதைசொல்லி ஏன் மார்கரீட்டோவைத் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை, அப்படி அமைப்பதற்கான காபோவின் நோக்கம் என்ன? காலமாற்றத்தையும் மார்கரீட்டோவின் நிலைகுலையாத முயற்சியையும் இணைக்க முயன்றால், அவற்றிற்கிடையே உள்ள பெரும் வேற்றுமையை நேரடியாகச் சொல்லாமல் வாசகனை உணரச் செய்து, அதன் மூலம் அவனையும் மார்கரீட்டோ குறித்த ஒத்த முடிவுக்கு வரச் செய்கிறார் காபோ என்பது புரிகிறது. ஆம், இத்தனை ஆண்டுகளில் ரோம் நகரமே மாறியிருக்கும்போது, மார்கரீட்டோவின் மகளின் பூதவுடல் கெடாமல் இருப்பது அதிசயம் என்றால், மனதைத் தளர விடாமல், அதே கண்ணியமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் கொண்ட மார்கரீட்டோவின் அத்தனை ஆண்டு கால செயல்பாடும் (அவருடைய சிறு கிராமத்தில் அவரை நினைவில் வைத்திருப்பவர்கள் யாரேனும் இன்னும் இருப்பார்களா?) அதிசயம்தானே? அத்தனை மாற்றங்களுக்கிடையே தான் ரோம் நகருக்கு முதலில் வந்தபோது எந்த மனநிலையில் இருந்தாரோ, அது கெடாமல் இருக்கும் மார்கரீட்டோவும் புனிதர்தான் இல்லையா?

நம் வாசிப்பில் மார்க்கரீட்டோவின் கண்ணியம், ஒரு புனிதருக்கு உரிய கண்ணியம் எனப் புலப்படுகிறது என்றால் அது மார்க்கேஸின் கதைகூறலில் வெளிப்படுவதுதான். இந்தச் சிறுகதை அளிக்கும் நெகிழ்வு, உணர்ச்சிகள் நம்மை ஆக்கிரமிப்பதால் அல்ல, உணர்ச்சிகள் அடங்கிய ஒரு அமைதியில் தோன்றுவது. ஆனால் அதனால் இது உணர்ச்சிவசப்படச் செய்யாத கதையாகி விடுவதில்லை. உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்துக்கு நேர்மறை உதாரணமாக இந்தக் கதை இருக்கிறது.