Author: பதாகை

அசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு”

அஜய் ஆர்

photo

துர்ச்சகுனங்கள் என்று சரளா நம்பும் சில சம்பவங்கள் காலையில் அவள் வீட்டில் நடக்கின்றன. தன் கணவனுடன் வண்டியில் அலுவலகம் செல்லும்போது அவள் அலைபேசியில் பேசவேண்டிய சூழலில், கணவன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து ஒரு கோர விபத்து நிகழ்கிறது. வண்டி ஓட்டும்போது அலைபேசியில் பேசக்கூடாது என்ற செய்தியை எடுத்துக் கொள்ளவேண்டிய கதை மட்டுமா இது? நேரடியான/ விரிவான விவரிப்புக்கள் இல்லாமல், சரளாவின் கணவன் பெயர் ‘ஜான்ஸன்’, தம்பதியர் தனியே வசிக்கிறார்கள், அலுவலகத்திற்கு அவர்கள் தயாராவது என்று நமக்கு அவர்கள் குறித்து அசோகமித்திரன் சொல்லிச் செல்வது, அவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்களா, இரு தரப்பு பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொண்டார்களா, தம்பதியரின் கனவுகள் என்னவாக இருந்திருக்கும் போன்ற கேள்விகளை எழுப்புவதால், சற்று தொலைவில் நடக்கும் விபத்தைப் பார்த்து ஒரு கணம் வருந்தி விட்டு விலகிச் செல்வதைப் போல் இல்லாமல், வாசகனை விபத்திற்கு மிக அருகில் நிறுத்தி சஞ்சலமடையச் செய்கிறது.

இப்படி, ஒன்றைத் தொட்டு ஆரம்பித்து, வேறு பல விஷயங்களைத் தொட்டுச் சென்று ஒரு சரடாக இணைப்பது அமி.யின் புனைவுலகில் புதிதில்லை. 1998ல் வெளிவந்த அ.மியின் ‘புதிய பயிற்சி’ கதையில் கணினி பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக இருக்கும் மகள் அலுவலகத்திலிருந்து திரும்புவதை எதிர்பார்த்து அவர் தந்தை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். மகளின் வரவுக்காக காத்திருக்கும் அந்தப் புள்ளியில் ஆரம்பித்து, சாலைகளின் மோசமான நிலைமை, மகளின் வேலைப்பளு, கணினி யுகம் மலர்வதைப் பற்றிய புரிந்தும்-புரியாததுமாகிய அவருடைய சிந்தனைகள் என்று கதை விரிகிறது. மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற நிலையத்திலேயே பயிற்சியாளராக வேலைக்குச் சேர்வதால்- அவர் மகளே அப்படித்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்- பயிற்சியின் தரம் எப்படி இருக்கும் என்பது போன்ற கூர்மையான அவதானிப்பும் உள்ளது. தன் மகளே தனக்கு போட்டியாளர்களை உற்பத்தி செய்கிறாளே என்ற அவரின் சிந்தனையுடன் கதை முடியும்போது (இத்தனை ஆண்டுகளில் தோன்றிய கணினி நிறுவனங்கள், அங்கு பயிற்சி பெறுபவர்கள்/ பெற்றவர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு இன்று காத்திருக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்) மீண்டும் தந்தையாகி விடுகிறார். இந்தக் கதையை இங்கு குறிப்பிடுவது இதுவும் ‘சகுனம்’ கதை போல் சமகாலத்தில் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்வைத்து ஆரம்பித்து, அதை விரித்துச் செல்கிறது என்பதால். அ.மி எப்போதும் சமூக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், அது குறித்த நுட்பமான அவதானிப்புக்கள் அவரிடம் உள்ளன என்பதும் தெரிகிறது.

இப்படி விரிந்து செல்லும் தன்மையை ‘இரண்டு விரல் தட்டச்சு’ தொகுப்பின் பல கதைகளில் காண்கிறோம். ‘உறுப்பு அறுவடை’, கதைசொல்லியின் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் உரிமையாளனுடன் கதைசொல்லியின் உரையாடலாக ஆரம்பிக்கும் கதை, வெகு தொலைவில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது, சாலைகளின் மோசமான நிலை, வண்டிகளுக்கு ஏற்படும் விபத்து என்று விரியும்போது இதுவும் இன்றைய சூழல் பற்றிய விமர்சனமா என்று தோன்றலாம். ஆனால் அ.மியின் புனைவுலகு அப்படி ஒரு நேர்க்கோட்டுத் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. வேன் உரிமையாளர் சரவணனின் மனைவியை கதைசொல்லியும் நாமும் சந்திக்கிறோம். குடித்து கல்லீரல் கெட்டுக் கிடக்கும் சரவணன் பற்றி தெரிய வர, அவளுக்கு கதைசொல்லி உதவுகிறார். அந்தப் பெண்மணி கணவனுக்காக படும் இன்னல்களைப் பார்த்து “நான் நினைத்துப் பார்த்தேன். இந்த வியாதி சரவணன் மனைவிக்கு ஏற்பட்டிருந்தால் சரவணன் யாரையாவது உதவிக்குத் தேடித் போவானா” என்று கதைசொல்லி நினைப்பது. அ.மியின் புனைவுலகில் எங்கும் தென்படும் பெண்களின் துயரின் மீதுள்ள கரிசனத்திற்கு ஒரு சான்று.

சிறு பிள்ளைகளைப் பறி கொடுப்பவர்கள், இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவருக்கு மகள்களாகப் பிறந்து, வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு, படிப்பை நிறுத்தி பின் தந்தையின் உறவினர்களால் வீட்டை விட்டு துரத்தப்படும் போது விபரீத முடிவெடுப்பவர்கள் (ஒரு நண்பனைத் தேடி), என்று பல கதைகளின் பாத்திரங்கள் துயரின் நிழலில் தான் உள்ளார்கள். அதே நேரம் இவர்கள் எல்லோரும் விதியே என்று உட்கார்ந்து விடுபவர்களும் அல்ல. கணவனால் கைவிடப்பட்ட பெண் நடத்தும் தட்டச்சு நிறுவனம், அதில் படிக்க வரும் – குடிகார தந்தையினால் பாதிக்கப்பட்ட – இளம் பெண்கள், தங்கள் சூழலைத் தாண்டிச் செல்லும் உந்துதல் உள்ளவர்கள்.

ஏதோ பூஜை என்று கிளம்பிச் சென்ற கணவன் திரும்பி வராமல் போக, ஒரே ஒரு முறை தன் கணவனுடன் பார்த்த கதைசொல்லியிடம் அவனைத் தேடும்படி உதவி கேட்குமளவிற்கு -இந்தப் பெண்மணிக்கும், ‘உறுப்பு அறுவடை’ கதையின் ‘சரவணன்’ மனைவிக்கும் அதிக வித்தியாசம் இல்லை- அவர்களிடம் செயலூக்கம் உண்டு(அகோரத் தபசி).

துயர் நிறைந்த வாழ்வெனும்போது, ஜோசியம்/ ஜோசியர்கள் அவ்வப்போது தலைகாட்டுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. கண்டம் கதையில் ஜோசியம் தெரிந்த (ஆனால் ஜோசியர் அல்ல) ஒருவர் வலிய வந்து தனக்குத் தெரிந்தவர் குழந்தைகளுக்கு ஜோசியம் பார்க்கிறார். “எந்தக் குழந்தைக்கும் கண்டம் இல்லாமல் பார்த்துக்கொள்” என்ற வேண்டுதலுடன் கதை முடியும்போது, அது ஜோசியம்/ அதன் பாதிப்பு இவற்றைப் பற்றிய கதையாக இல்லாமல், மானுட நேசத்தைப் பற்றிய அ.மியின் இன்னொரு கதையாக மாறுகிறது. ‘ஜோதிடம் பற்றி ‘இன்னொரு கர்ணப் பரம்பரைக் கதை’ கதையிலும் ஜோசியம் வருகிறது, கண்டம் உள்ள கணவனை மலைப்பாம்பிடமிருந்து மனைவி காப்பாற்றுகிறார். விதியை மதியால் வெல்லும் இன்னொரு கதை என்று நினைப்பதற்குள், “ஜோதிடர்கள் கிரகங்களையும் ராசிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் ஒரு மலைப்பாம்பு இரையைத் தேடித் போய்க் கொண்டிருக்கிறது” என்று கதை முடிவது புன்சிரிப்பை வரவழைப்பதோடு, மலைப்பாம்பு இரையைத் தேடி (தொலைத்து) அலைவது, என்னதான் ஜோசியம்/ பிரார்த்தனை என்றிருந்தாலும், மனிதர்களும் அவரவர் இரையைத் தேடி அலைந்து அதில் வெற்றி/ தோல்வி பெறுவதை நினைவூட்டுகிறது. பள்ளி ஆண்டு விழாவில், பல இரைச்சலுக்கு இடையில் தன் அக்கா பாடியதைப் பற்றி “எங்கள்வரை அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் யாரும் கேட்க முடியாதபடி ஒரே கூச்சல் குழப்பம்” என்று சொல்வது அ.மியின் தாழ்குரல் நகைச்சுவையுணர்விற்கு இன்னொரு சான்று.

அ.மியின் கதைத் தொகுப்பில் ‘லான்ஸர் பாரக்ஸ்’ இல்லாமலும், அதில் ‘மாடுகள்’ உலா வராமலும் இருந்தால் நிறைவின்மை இருக்குமல்லவா? இதில் இரண்டு கதைகளில் மாடு வருகிறது. மாடு வளர்ப்பு, அது ஓடிப்போவது என ஆரம்பித்து, பாழடைந்த கோட்டையில், அதன் வரலாறு குறித்த கதைசொல்லியின் கற்பனைகளோடு இணையும் ‘கோட்டை’ சிறுகதை, கோட்டையை மீண்டும் ஒரு முறை நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் “இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும் சேர்ந்து கொண்டது” என்று கதைசொல்லி சொல்லும் இடத்தில்,ஆயாசமோ, வருத்தமோ இல்லாமல், எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனப்பக்குவமே தெரிவதோடு, சிறு வயது நினைவுகள் என்ற இடத்திலிருந்து தாவி, கதைசொல்லியின் நிராசைகளின் புகலிடமான, அந்தரங்கமான இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. ‘தோல் பை’ கதையிலும் மாடு/ மாடு வளர்ப்புப் புராணம், ‘சுந்தர்'(!!) என்ற மாடு வருகிறது. மாடுகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல் துயரத்தைத் தருவதைப் பார்க்கிறோம். (தோல் பையைப் பார்த்து “எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் மாடுகள் இப்படித்தான் முடிய வேண்டியிருக்கிறது”, என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார்)

சம்பவம் 1

தனக்கு கடன் கொடுக்கும் சரவணனுடன் கதைசொல்லிக்கு சற்றே கடுமையான உரையாடல் நடக்கிறது (வாடிக்கை). அடுத்த மாதம் சரவணனைப் பார்க்கும் கதைசொல்லி, அவன் மனைவி அவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளதை அறிந்து, ஒரு நாள் விடுமுறை எடுத்து, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று சமாதானம் செய்கிறார்.

சம்பவம் 2

‘இரு நண்பர்கள்’ கதையில், வேலை தேடும் இருவரில் ஒருவர் தான் விண்ணப்பித்துள்ள வேலைக்கு, அது குறித்த நம்பிக்கை இல்லாத தன் நண்பனையும் விண்ணப்பிக்க வலியுறுத்துகிறான். வலியுறுத்துபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. வெகு நாட்கள் கழித்து, தன் நண்பனுக்கு அந்த வேலை கிடைத்தது என்று அறியும் போது அவனுக்கு எவ்வளவு மகிழ்சிகரமான விஷயம். ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. கூச்சமாக இருந்திருக்குமோ? “அந்த நேரத்தில் இப்படித் தன்னிடம் கூட அந்த நண்பன் கூச்சப்பட்டிருக்கிறானே என்ற எண்ணந்தான் வருத்தமளித்தது”

சம்பவம் 3

தாய் இறந்த செய்தியைத் தெரிவிக்க, நள்ளிரவு தாண்டி தந்தி அலுவலகம் செல்லும் சங்கரன் (தந்தி), அலுவலர்கள் தூக்க கலக்கத்திலும் தனக்கு சில சிறு உதவிகள் செய்வதைப் பார்த்து “நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் கழித்தும் ஒரு தந்திக்காரருக்கு இவ்வளவு அனுதாபம் கொள்ளத் தோன்றுகிறது” என்று நினைக்கிறான்.

முதல் சம்பவத்தில் பண நெருக்கடியில் இருக்கும் கதைசொல்லி, தொழில் முறையில் மட்டுமே தெரிந்தவனுக்காக வலியச் சென்று உதவுகிறார். வெறும் பண பரிவர்த்தனைதான் என்று பார்க்காமல் “அவன் எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கான். அதெல்லாம் எதுக்கு. அந்தக் குழந்தைங்க படிப்பு கெடக்கூடாது” என்கிறார். இரண்டாவது சம்பவத்தில் முதல் நண்பன், வேலை கிடைத்த விஷயம் தனக்கு சொல்லப்படாதது குறித்து துணுக்குற்றாலும், அது குறித்து மொத்தத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். மூன்றாவது சம்பவத்தில் தாயை இழந்த பெரிய துக்கத்திலும், தன் வேலையின் எல்லைகளைத் சற்றேத் தாண்டி உதவி செய்யும் நபரை சங்கரனால் கவனிக்க முடிகிறது.

மூன்று சம்பவங்களிலும் உள்ள ஒற்றுமை சக மனிதரிடம் கரிசனம், மனித நேயம் வெளிப்படும் இடங்கள். இவை வாழ்வை முற்றிலும் வெளிச்சமாக்கும் ஒளி அல்ல, என்றேனும் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை தரும் கீற்றுக்கள் மட்டுமே. தந்தி அலுவலக ஊழியர், தாய் மரணம் இல்லாத இன்னொரு செய்திக்காக சங்கரன் சென்றிருந்தால், நள்ளிரவைத் தாண்டிய அந்த வேளையில் எப்படி நடந்து கொண்டிருப்பார்? ‘வாடிக்கை’ கதையில், மனைவியை சமாதானம் செய்ததற்காக நன்றி சொல்ல வரும் சரவணனிடம், கதைசொல்லி ஐநூறு ருபாய் கடன் கேட்கிறார். ஆம், அவர் அந்த ஐநூறு ரூபாய்க்காக வேலூர் செல்லவில்லைதான், அதற்கு கூலியாக அந்தப் பணத்தைக் கேட்கவும் இல்லைதான், ஆனால் பணமுடைதான் அவர் வாழ்வின் யதார்த்தம் என்பதால், அவர் அப்படிக் கேட்பது தவிர்க்க முடியாததாகிறது.

ஆகாயத் தாமரை நாவலின் நாயகன் ரகுநாதன் ஒரு இக்கட்டில் இருக்கும் போது அவன் சிறு வயது/ கல்லூரித் தோழி மாலதியைச் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறான். அவர்களுக்கிடையே உள்ளது நட்பா அல்லது அதைத் தாண்டிய ஈர்ப்பா என்றெல்லாம் அ.மி சொல்வதில்லை. ஆனால் மாலதி ரகுநாதனுக்கு உதவ முயல்கிறாள், தனக்குத் தெரிந்த ஓர் இடத்திற்கு வேலைக்காக அழைத்துச் செல்கிறாள். அது பலனளிப்பதில்லை. நாவலில் ஒரு சில முறை மட்டுமே சந்திக்கும் அவர்கள், மீண்டும் தொடர்பற்று போகிறார்கள், மீண்டும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ நிலைமை சீராகி ரகுநாதன் நல்ல நிலைக்கு வந்துவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறிய சந்திப்பு, அவ்வளவுதான். அவர்களுக்கிடையே இயல்பாக மீண்டும் ஏற்படும் தொடர்பும் அதே போல் இயல்பாகவே முறிகிறது. மாலதியால் உதவ முடியவில்லை. தொடர்பில் இருக்க முடியவில்லை தான், ஆனால் அவள் பொறுப்புள்ள வேலையில் இருக்கிறாள், அதை அப்படியே விட்டுவிட்டு எப்போதும் ரகுநாதனுக்காக அலையவேண்டும் என்று சொல்ல முடியாது, அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. மற்றவர்களுக்காக தன்னையே உருக்கிக் கொள்ளாமல், அதே நேரம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயலும் மாலதியை இந்தத் தொகுப்பில் உள்ள பாத்திரங்களோடு பொறுத்திப் பார்க்கலாம். யார் உதவ முன்வந்தாலும், இறுதியில் நமக்கு நாம்தான் உதவிக் கொண்டாக வேண்டும் என்ற புரிதலும் இதில் உள்ளது.

ஆனால், ஒரு போதும் நம்மை விட்டு நீங்காத துயரங்களை சுமந்தலையும் வாழ்வில், அடுத்த அடி எடுத்து வைத்து பயணத்தைத் தொடரும் ஊக்கத்தை இந்த நம்பிக்கை கீற்றுக்கள்தான் தருகின்றன. அவையே இந்தக் கதைகள் உள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ முழு தொகுப்பையுமே மானுட நேயத்தை எப்போதுமே வலியுறுத்தி வரும் அ.மியின் புனைவுலகின் மற்றுமொரு காத்திரமான பிரதிநிதியாகப் பார்க்கச் செய்கின்றன.

000

ஒளிப்பட உதவி – We Can Shopping

ஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே

 காஸ்மிக் தூசி

photo

சிறிய கோயில் நகரம்
அதன் மலை அடிவாரத்தில்
நெருக்கியடித்துக் கொண்டிருக்கும்
அறுபத்து மூன்று பூசாரிகள் உள்ள
அறுபத்து மூன்று வீடுகள்
அதன் முந்நூறு தூண்கள்
ஐந்நூறு படிகள் மற்றும்
பதினெட்டு வளைவுகள் விட்டு

பூசாரியின் மகன்
ஒருபோதும் சொல்லத்துணியாத
திறமையின் வழிபணம் சேர்த்த
ஒருபோதும் உள்ளே கால் வைக்க மாட்டேன்
என அவன் நம்பும்
கோயில் நாட்டியக்காரியின்
அறுபத்து நான்காவது வீட்டை கடந்து
இடிந்த கோயிலைத் தாண்டிச் சென்றாலும்

காணவில்லை கோயில்நாயை
கோரக்‌ஷநாத் முடிவெட்டும் சலூன்
மகாலஷ்கந்த கபே
மற்றும் மாவு மில் தாண்டிவிட்டால்
அவ்வளவு தான்.
முடிந்தது.

வந்தாயிற்று நகரம் விட்டு
கையில் ஒரு தேங்காயோடு.
பாக்கெட்டில் ஒரு பூசாரியின் முகவரி அட்டை
மற்றும் தலைக்குள் சில கேள்விகள்.
ஜெஜூரி ஒருபுறம்
ரயில் நிலையம் மறுபுறம்
வழியில் இரண்டுக்கும் நடுவே வந்தபின்
கனவில் இருப்பது போல.
செய்வதறியாது
நிற்க வேண்டியதுதான்.
இருபுறமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின்
ஏற்கவும் இழக்கவும் முடியாமல்
அசையாமல் நிற்கும் முள்ளாகி.

தடத்தில் செல்லாமல் திகைப்பூட்டி
நிறுத்தி வைக்கும் காட்சி
சோளக்கொல்லையில்
ஒரு டஜன் சேவல்களும் கோழிகளும் .
ஒரு வகை அறுவடை நடனம் போல.
இதுவரை பார்த்தவற்றிலேயே
விநோதமானது
ஏழு பறவைகள்
தன் நான்கு மடங்கு உயரத்திற்கு குதிக்க
குறுக்கே பாய்கின்றன
ஐந்து பறவைகள் தானியம் எடுத்த அலகுடன்

Untitled

என்னைப்பார்க்க எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கும்
என்பதை மறந்துவிட்டு நிற்கிறேன்
உண்மையில் இருப்பதைப்போலவே
இடப்புறம் பூசாரி
வலப்புறமாக
ஒரு ஸ்டேஷன் மாஸ்டர்.
000

(அருண் கொலாட்கரின் Between Jejuri and The Railway Station என்ற கவிதையின் தமிழாக்கம்)

ஒளிப்பட உதவி- http://banmilleronbusiness.com/

மாசாவின் கரங்கள்- தனா

(சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, எழுதியவர் முகவரி vedhaa@gmail.com)

மணலை வாரி இறைத்தபடி போருக்கான ஓலத்துடன் வெகு வேகமாக பாலையைக் காற்று கடந்துகொண்டிருந்தது. ஒழுங்கற்ற வட்டமாய் வேலியிடப்பட்ட மந்தையில் அரைக்கண் மூடி இன்னும் எத்தனை தூரமென்ற ஆழ்ந்த சிந்தனையில் நின்றபடியும், கால் மடக்கி மணலை அழுத்தியபடியும் கிடந்தன ஆடுகள். அதன் தடித்த மயிர்களுக்கிடையே மணல் செருகிக்கிடந்தது. ஆழ்ந்து ஊன்றப்பட்ட கோலுக்கும் காலுக்குமான கயிற்றைச் சட்டை செய்யாத கழுதைகள் மெல்லிய உடலசைவுடன் அரையுறக்கம் கொண்டன. பாம்பூர்ந்த தடத்தை கடந்த தேளொன்று மணல்பெருக்கிய நடையுடன் வரும் தியாசைக் கண்டதும் சட்டென தன்னை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது. ஆங்காங்கே பொருத்தப்பட்ட நெருப்புகள் பல அணைந்து கங்குகளாய் கனன்றன. மற்றவை காற்றுடன் உத்வேகமாய்ச் சண்டையிட்டு சடசடத்தன.

தரையில் பாவாமல் பாவி, பின் அந்தரத்தில் சுழன்றாடும் மணற்புயலின் இரவொன்றில் யனோவா சன்னதம் கொண்டான். ஜெஹோவாவின் மொழியில் கதறியபடி பித்லாஹ்மியின் தெருக்களில் அலைந்தான். மக்கள் காற்றில் தள்ளாடியபடி முகம் மறைத்து, கண்கள் சுருக்கி அவனை தொடர்ந்தனர். வற்றிய பெண் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியபடி தெருக்களைப் பார்த்தனர். கூடத்தை அடைந்த கிழவன் பலிமேடை பற்றி மூச்சிரைத்தான். மண் படர்ந்த உதடு பிரித்து ஓலமிட்டான். திசைக‌ளில் கிழக்கை அவன் கண்கள் பற்றின. கைகளும் அதையே சுட்டின. வெயிலூறிய பகலொன்றில் இரைக்கான ஆடுகளோடும், பொதிக்கான கழுதைகளோடும் பெருங்கூட்டமாய் கிளம்பினர் மக்கள். பல சூர்யோதங்களை கடந்தபின், இயற்கையால் உறிஞ்சப்பட்டவர்கள் தவிர எஞ்சியோர் இதோ இப்பாலையில் கிடந்தனர்.

பெருந்துயர் போர்த்திய அக்கூட்டத்தில் எவருக்கும் விழித்திருக்க வலிமையில்லை. உடல்கள் தெரியாவண்ணம் அவர்கள் மேல் கவிந்திருந்த கம்பளி கிழிசலுக்குள்ளே தட்டுத் தடுமாறி வழியறிந்து நுழைந்து கொண்டிருந்தது குளிர். அழத்திராணியற்ற குழந்தைகள் மரணித்ததைப்போல் தூங்குகின்ற இரவிது. பெரும் மணற்பரப்பை கடக்கத் துணிந்த மக்களுக்கு இத்தகைய இரவு பகல் இன்னும் முழுதும் பழக்கப்படவில்லை. சுடும்பகலில் விழிக்காதவர்கள் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டு மறக்கப்பட்டனர்.

மாசா தன் உடல் முழுதும் மறைக்காத கம்பளிக்கு பணிந்து, அதற்குள் தன்னை குறுக்கிக்கொண்டாள். குளிரில் விரைத்த அவளின் முலைக்காம்புகளும், பாதங்களும், மணல் கடந்து மரமொதுங்கும் அவளின் கனவுகளுக்குள் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டன.

தியாஸ் தனக்கு வணங்காத கால்களை இழுத்து இழுத்து அக்கூட்டத்தை நெருங்கினான். வீங்கிய அவன் உதடுகள் குளிரில் மரத்துப்போனாலும் கடுத்தது. அவனின் அழுக்கு தோய்ந்த கருப்பு உடையின் உள்ளே, உறுப்புகள் மீது வலிகள் தெறித்தன. கண்ணில் தெறிக்கும் மணலை கைகளில் தடுத்தபடி, அலங்கோலமாய் ஆங்காங்கே குவிந்திருக்கும் கம்பளிகளை கண்டான். கண்ணீர் இளஞ்சூடாய் விழிகளை நிரப்பியது. நீர் முழுதும் வற்றிய உடலில் எங்ஙனம் புதிதாய் ஊற்று பிறக்கிறது என்ற ஐயம் அவனுக்கு இருந்தது. அவன் தொண்டையில் எழுந்த கேவல்களை பல்லடைத்து அடக்கிக்கொண்டான். கட்டித்துக்கிடந்த அவன் தலைமயிர்க்கடியிலும், கீழ்தாடையிலும் ரத்தத்துடன் வலி உறைந்து நின்றது.

மணல் தேய்த்து நடந்தபடி நெருப்பருகே சென்றான். புனல் வாய் போன்ற இரும்பு குடுவையில் சுள்ளிகள் எரிந்தன. அதை தன் இளைத்த கைகள் கொண்டு எடுத்தான். தீ வெடித்துச் சிதறி காற்றுடன் நகர்ந்து காணாமலாயின. கறுத்திருண்ட பெரும் மேகங்களாய் கிளம்பிய கூட்டம் சில காலங்களில் சிறுத்துப் போனது, அவனுக்கு மாசாவை கண்டறிய உதவியாய் இருக்க கூடும். நெருப்பை இடவலது திருப்பி, உற்றுப் பார்த்தபடி கூட்டத்தில் புகுந்தான்.

உப்பி சுருண்டிருந்த பசோக்காவின் கம்பளியை அடையாளம் கண்டான். சாம்பல் நிறத்தில் கறுப்பு கோடிட்ட நிறத்தில் இருந்த அழகிய கம்பளி இப்பொழுது வெளிறி நைந்திருந்த்து. முன்பு ஒரு குளிர்காலத்தில் பசோக்காவின் வீட்டிலிருந்து அக்கம்பளியை எடுத்துக்கொண்டு வெளிவரும் போது பசோக்கா வாசலுக்கு வந்துவிட்டிருந்தான். கம்பளியை கீழே வைத்துவிட்டு அதிரும் இதயத்துடன் மெல்ல அவனை கடக்கையில் பசோக்காவின் நுரை பொங்கும் எச்சில் தியாசின் காதில் சொத்தென விழுந்தது. திரும்பாமல் நடந்த தியாஸ் அந்த எச்சிலை அவனை விட்டு மறையும் வரை துடைக்காமல் இருந்தான். பசோக்கா இத்திருட்டை பற்றி யனோவாவிடம் முறையிடாமல் தன்வீட்டுப்பொருட்களை தியாசிடமிருந்து காத்துக்கொண்டான். இப்பொழுது அந்த கம்பளிக்குள் குழந்தையின் அசைவைக் கண்டான் தியாஸ். அக்கம்பளி பசோக்காவையும், அப்பெண் குழந்தையையும் மட்டுமே உள்ளடக்க முடியும். அவன் அருகில் யாரும் சுருண்டிருக்கவில்லை. அவன் மனைவி இரக்கமுள்ளவள்.
தியாஸ் குறுக்கும் நெடுக்குமாக காலை இழுத்துக்கொண்டு அலைந்தான். கண்ணீர் முற்றிப்பெருக மனம் வெகுவாய் அடைத்துக்கொண்டது. தவிட்டு நிறமுடைய கம்பளிக்கு வெளியே தண்ணீர் குடுவையின் மர மூடியை நெருப்பு காட்டியது. சத்தமின்றி மெல்ல உருவினான். குடுவையின் வாய்ப்பகுதியில் நீர் கசிந்திருந்தது. பாதி அளவுள்ள தண்ணீரை கனம் உணர்த்தியது. சிரமத்துடன் உதடு பிரித்து இரண்டு மிடறுகள் விழுங்கி விட்டு மரமூடியை அழுத்தி மூடி கம்பளிக்குள் செருகினான். நீர் நெஞ்சை கடந்ததாகத் தெரியவில்லை.

காற்றின் வேகம் குறைந்த கணத்தில், மந்தையில் ஓர் ஆடு சத்தமிட்டது. தியாஸ் அதை நோக்கி விருவிருவென நடந்தான். மந்தையின் ஓரத்தில் மாசாவின் கம்பளி இருந்தது. மாசாவிற்கு அவன் அளித்த முதற்பொருள். ஒருநாள் முழுக்க போர்த்திவிட்டு தன் வாசனையுடன் அவளுக்கு கொடுத்தான். அவனின் இடுங்கிய கண்களை கண்டவாறே மாசா பெற்றுக்கொண்டாள். கருப்பும், கருஞ்சிவப்புமான முடிகளை கொண்ட கம்பளி. நெருப்பை அவளருகே நிறுத்தி வைத்தான். மறுபடியும் அவளருகே வீற்றிருப்பதின் மகிழ்ச்சி, யாகுதாவின் அடிவயிற்று உதையில் பெற்ற நீண்ட வலியை மறைத்தது. வெகு நேரம் குளிருக்கு முகத்தைக் கொடுத்து காலைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். போதிய வெளிச்சத்தை தரவியலாத விண்மீன்களும் குறை நிலவும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன.

தியாஸ் மெல்ல கம்பளிக்குள் கை நுழைத்து அவளின் குளிர்ந்த கணுக்காலை பற்றினான். பாம்போ தேளோவென பயந்து கால் உதறி திடுக்கிட்டு எழுந்தாள் மாசா. பசியும் தூக்கமும் பொங்கிய கண்களுக்கு தியாஸ் கலைக்கப்பட்ட முகம் கொண்ட ஓவியமாய் தெரிந்தான். மாசா கண்களை அழுத்தி மூடி பின் திறந்து பார்த்தாள். நெருப்பின் ஒளியில் தியாஸ் சிவந்து தெரிந்தான். மாசா கம்பளியை இழுத்து போர்த்தி குனிந்து கொண்டாள்.

“என்னை பார் மாசா” என்றான் தியாஸ் முனங்கும் உதட்டுடன். அவன் உடல் மெதுவாக நடுங்கத்தொடங்கியது. “வழிந்தோடும் உயிரைத் தேக்குவது எத்தனை சிரமம் தெரியுமா மாசா?

மாசா நிமிர்ந்தாள். பாலையில் நெளிந்தோடும் ஒற்றையோடை போல் அவள் வரண்ட வெளுத்த கன்னச்சருமத்தில் நீர் இறங்கியது. “நீ போய்விடு தியாஸ், நான் உன் உயிரற்ற தேகத்தை பார்க்க விரும்பவில்லை. நீ போய்விடு. அதற்காக நான் உனக்கு நன்றியுடையவளாய் சாவேன்” மெல்லிய கேவலில் விசும்பினாள். பின் தலை திருப்பி அடங்கிப்போன அக்கூட்டத்தை பார்த்தாள். எங்கேயும் அசைவில்லை.

“இப்பெரும் மணற்பரப்பில், உனக்கு எதிரான திசையில் செல்ல எனக்கு தைரியம் இல்லை மாசா”. அவள் அழுகையும் பெருகியது. தன் கைகளைக்கொண்டு வாயைப் பொத்திக்கொண்டாள்.

“பார் மாசா, அத்தனை பேர் அடித்தும் என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. மயக்கம் குறைந்து வலி தெறிக்க நான் இமைகள் விரித்த போது ஒரு மணல் குன்றை கண்டேன். நிச்சயமாய் மாசா, உன் மஞ்சள் நிற மார்பகங்களையே கண்டேன். பெரும் மணலாய் நீயே படுத்திருந்தாய். வலிக்க எழுந்து போய் அம்மணலில் முகம் புதைத்தேன். நீயே எனக்கு உயிரூட்டினாய். இன்று நான் உன்னை மறுபடியும் பார்த்துவிட்டேன் மாசா. இனி என்னால் உன்னை பிரிய முடியாது,” அவளின் கரம் பற்றினான்.

மாசா அவன் உள்ளங்கைகளில் சூட்டை உணர்ந்தாள். “நீ போய் தான் ஆக வேண்டும் தியாஸ். இவர்கள் விழிக்கும் போது இங்கே இருக்காதே. இன்னுமொருமுறை அவர்கள் உன்னை அடிப்பதை காண்பேனானால் தாய் தந்தையரற்ற என் சகோதரிக்காக நான் உயிர் வாழ‌ முடியாம‌ல் போய்விட‌க்கூடும். வில‌கி போய்விடு தியாஸ். என் த‌ந்தைக்கு நான் ச‌த்திய‌ம் செய்திருக்கிறேன். என் தமையனின் பிஞ்சு உடல் கூறாக்கப்பட்டு அள்ளிச்சென்றபோது, வெட்டுப்பட்டுக்கிடந்த என் தந்தைக்கு நான் சத்தியம் செய்திருக்கிறேன். இதோ என் வயிற்றில் என் தமையன்.. உன் மகன். நான் இவனைப் பெற வேண்டும். உயிருள்ளதாய். சிரித்து, துள்ளி மணலை இறைத்து விளையாடும் அவனை நான் திரும்பப்பெற வேண்டும். நீ போய் விடு. எங்காவ‌து சென்று பிழைத்து கொள் தியாஸ்.. இனியும் திருடாதே..”

தியாஸ் கன்னம் இழுக்க, வலியில் முன்ங்கியவாறே அழுதான். குரல் வெளிவரவில்லை. ஆனால் கழுத்து நரம்புகள் வெட்ட வெட்ட அவன் அழுதான். மாசா கம்பளியால் தன் முகத்தைப் பொத்திக்கொண்டாள். தியாஸ் அவள் கம்பளியை பிடித்து இழுத்தான். அவள் இறுக்கப்பிடித்தபடி உள்ளே குலுங்கிக்கொண்டிருந்தாள். தியாஸ் அவள் முகத்தை நிமிர்த்திப்பார்த்தான்.

யோசேப்புவின் வீட்டிலிருந்து மரச்சில்லுகளை பொறுக்கி தன் வயிறு முழுக்கச்சுற்றியபடி வந்த மாசாவை தியாஸ் வழிமறித்தான். பிள்ளை உண்டானது எப்படி என்று வம்பிழுத்தான். மாசா அவனை போடா திருடா என்றாள். தியாஸ் அவள் மரச்சில்லுகள் கொண்ட மடியை உருவிவிட்டு தள்ளிப்போய் நின்றுகொண்டான். ரொட்டிக்கும் மரச்சில்லுக்கும் தன்னை விற்றவளே என ஏசினான். அவள் கண்ணில் கண்ணீர் பொங்க அவனை முறைத்தபடி நின்றாள். அவன் அலட்சியமாய் சிரித்தான். அவள் அங்கிருந்து நகரவுமில்லை. மரச்சில்லுகளை பொறுக்கவுமில்லை. தியாஸின் முகம் மாறியது. சரி விடு. கோவப்படாதே என்றான். மாசா அவனிடம் எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்துத் தந்தால் ஒழிய நகர மாட்டேன் என்றாள். தியாஸ் அவளை அடிக்க கை ஓங்கினான். அவள் கண் இமைக்கவில்லை. மெல்லக்குனிந்து பொறுக்க ஆரம்பித்தான். அவள் கால்களை சுற்றிக்கிடந்த சில்லுகளை பொறுக்கினான். அவள் கால்கள் திடமாய் நின்றிருந்தன. மெல்ல வருடினான். அவை இளகின. பின் அவள் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். மாசா அவன் தலை கோதினாள்.

விறகுகளை தீயுடைக்கும் ஓசையுடன் மக்கள் எழுந்தனர். மாசா பதறினாள். தியாஸ் பல்லை இறுக்கக் கடித்தபடி வீம்புடன் அமர்ந்திருந்தான். சகேயு ஓடி வந்து தியாஸை எட்டி உதைத்துத் தள்ள தியாஸ் பின்னால் சரிந்து விழுந்து பின் உடல் மணலில் இழுக்க ஊர்ந்து மாசாவின் இரு கரங்களைப்பற்றி தன் முகத்துடன் சேர்த்து அழுத்திக்கொண்டு அவள் மடியில் தன்னை புதைத்துக்கொண்டான். எத்தனை சூடு அவள் கரங்களுக்கு.. இச்சூட்டில் தானே என் மகனும் வாழ்கிறான் என எண்ணிக்கொண்டான். ஆம் அவன் என் மகன் தான். அவள் கரங்களை தன் கரங்களால் அழுத்தி பிடித்து முகத்தில் வைத்துக்கொண்டான். சகேயு தியாசின் முதுகில் உதைக்கத்தொடங்கினான். பின் மாசாவிடமிருந்து அவனை பிரிக்க அவன் ஆடை பற்றி இழுத்தான். தியாஸ் மாசாவின் இரு கரங்களை விடாமல் பற்றிக்கொண்டான். சகேயு மூச்சிரைக்க தியாஸின் கழுத்தில் ஓங்கி மிதித்தான். தியாசின் கைகள் சட்டெனத்தளர மாசா தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்து சகேயுவின் கால்களை கட்டிக்கொண்டு அழுதாள். உலர்ந்த பார்வைகள் கொண்ட மக்கள் அவர்களைச் சுற்றி குளிரில் நடுங்கி நின்று கொண்டிருந்தனர். மெல்ல நடந்தபடி யனோவா வந்தார். தியாசைக்கண்டதும் சிவந்த விழிகள் விரிந்தன. அவன் மேல் காரித்துப்பினார். மாசா இப்பொழுது யனோவாவின் காலைக்கட்டிக்கொண்டாள். எத்தனை சுற்றம் இருந்து தந்தையின்றி என் பிள்ளை பிறக்கலாமா? கருணை கொள்ளுங்களேன் என இறைஞ்சினாள். ய்னோவா அவளை குனிந்து பார்க்கவில்லை. தியாசை மட்டுமே நோக்கினார். பின் கூட்டத்தை நோக்கினார்.

பிறந்த மகவெல்லாம் இறந்தன. வயிற்று நீரில் ஊறி வளர்ந்த அங்கங்கள் வெட்டப்பட்டு இறந்தன. விடாய் கொண்ட மண் எத்தனை சுலபமாய் அத்தனை ரத்த்தையும் உறிஞ்சியது என்று நாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். நம் இறைவனுக்கு நாம் செய்த துரோகம் என்ன? அவன் கருணை பாலைக்காற்றாய் நம்மை கடந்து போய்விட்டதேன் என அறியோம். ஆனால் அவன் நம்மை காப்பான் என்றுதானே இன்னும் கோலைக் கைபிடித்தவண்ணம் உயிர்பிடித்து நிற்கின்றோம். அவனின் கருணை பொழிய வேண்டுமென்றுதானே மிஞ்சிய நம் உடைமைகளை அவனுக்கு பலியாய் வளர்த்தோம். அதைத் திருடிப் புசித்தவன் நம்முடையவன் என்றால் எங்ஙனம் குளிரும் நம் தந்தையின் உள்ளம்? எங்ஙனம் மகவாய் பிறப்பான் எம் தந்தை? பின் மெல்ல மாசாவைக் குனிந்து நோக்கினார்.

சகேயு தியாசை இழுக்க, எந்த மீறலும் இல்லாமல் தியாசின் உடல் மாசாவின் கரங்களிலிருந்து வழிந்தது. சிலர் மாசாவை தூக்கி இழுத்துக்கொண்டு போனார்கள். அவள் தன் அத்தனை ஆற்றலையும் கொண்டு கத்தினாள். பாலை அதை ஒரு சிறு நரியின் ஊளையாய் எடுத்துக்கொண்டது. கூட்டம் மெல்ல குழந்தைகளையும் உடைமைகளும் எடுத்துக்கொண்டு நத்தையென ஊறி தியாசைத் தனிமையாக்கினர். எழவோ திரும்பவோ முடியாமல், மண்ணிலிருந்து தியாஸ் தன் தலையை மெல்ல உயர்த்தினான். தன் எச்சில் படர்ந்த மண்ணை மட்டும் நோக்கி மகனே யூதாஸ் என முனங்கியபின் உயிர்விட்டான்.

யுக சந்தி?- முகம்மது ஐஷ்வர்யன்

(சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. எழுதியவர் – aishwaryyan@hotmail.com)

பஸ் ஓரளவு காலியாத்தான் இருந்துது. ஆனாலும் கடசி வரிசையிலே ஜன்னலோரமா போய் உட்கார்ந்தேன். தனியா இருக்கணும்போல தோணிச்சுது. எதுக்கா? அழறதுக்குத்தான். ஆம்பளை அழலாமா? அதுவும் பட்டப்பகல்ல, நாலுபேர் ஏறி இறங்குற பஸ்ஸுல! குழப்பமாத்தான் இருக்கு. இப்போல்லாம் பொம்பளைங்களே லேசுல அழறது இல்லையே. சினிமாவுல கூட சிவாஜி, சிவகுமார் காலத்துக்கப்புறம் யாரும் பெருசா அழுதமாதிரி தெரியல. கமல் அழுவார்தான். இப்போ அவரும் குறைச்சுக்கிட்டார்தானே. குடும்பப்படம் பாபநாசத்திலே கூட நாயகன் மாதிரி மயில் அகவலாகவோ குணா மாதிரி குமுறி குமுறியோவோ அழலைதானே!

மத்தவங்க கதை எதுக்கு? நானே, ’அழுவேன்.. ஆனால் அழமாட்டேன்’ ரகம். குழப்புகிறேனா? உண்மை அதுதான். சினிமாவிலே நிழலான கதாபாத்திரங்களுக்காக சட்டென அழுதுடுற நான், நிஜத்திலே கல்லாட்டமா நிப்பேன். மரணமா இருந்தாலும்தான்! நாகர்கோவில் லக்ஷ்மி தியேட்டர்லயும் பயோனியர் தியேட்டர்லயும் சிவாஜி கூடவும் சவுகார் கூடவும் சேர்ந்து புழிஞ்சு புழிஞ்சு அழுத நான், என் பத்தொன்பது வயசிலே அப்பா செத்தப்போ சொட்டு கண்ணீர் விடலை! இத்தனைக்கும் அப்பா தலைமாட்டிலேதான் நின்னுட்டிருந்தேன். துக்கம் விசாரிக்க வந்தவங்க சின்னதா கேவிக்கிட்டு சட்டுனு உடம்பை குலுக்கினப்போ தொண்டையை அடைக்கத்தான் செஞ்சுது. ஆனா என் கண்ணுல மட்டும் ஊஹும் தண்ணி வரவே இல்லை. அப்பாவுக்கும் எனக்கும் சுமுகமான உறவு இல்லாமத்தான் நான் அழலைன்னு பலரும் பேசிக்கிட்டதுலேயும் உண்மை இல்லாம இல்லை.

அப்பா என்னை புள்ளையா வளர்த்ததைவிட பந்தயக்குதிரையா நினைச்சதுதான் அதிகம்.. பார்க்கிறப்போல்லாம் விரட்டிக்கிட்டேதான் இருந்தார். அதெல்லாம் ’அக்கறை’ன்னு இப்ப இந்த அம்பது வயசுல நானும் ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அப்பாவானப்பறம் சொன்னாலும் அன்னைக்கு அதை அடக்குமுறையாத்தான் நினைச்சு வெறுத்தேன். அந்த வெறுப்பினாலே எப்பவுமே அவரோடு ஏட்டிக்கு போட்டி வெறைப்புத்தான். கடைசியிலே களைச்சுப்போய் தனியா கூப்பிட்டுப் பேசுவார்.

“எனக்கு மட்டும் உன்னை எப்பவுமே கண்டிக்கணும்னு ஆசையா என்ன? எல்லாம் ஒரு பயம்தான். நீ நல்லாத்தான் படிக்கிறே. ஆனா இதெல்லாம் பத்தாது. படிப்பைத் தவிர என்னால உனக்கு காசு பணம் சொத்துன்னு வேற எதுவும் தரமுடியாது. அதனாலத்தான் சொல்றேன். நீ எவ்வளவு வேணும்னாலும் படி. இன்னும் அதிகமா உழைக்கணும். இப்போ பண்ற மாதிரி எழு மணி வரை தூங்குறது.. எப்பப் பார்த்தாலும் ரேடியோவில பாட்டு கேக்கறது.. மாசம் தவறாம சினிமா பார்க்க அடம் பிடிக்கிறது எல்லாம் ரொம்ப தப்புப்பா.“

அப்போதும் நான் இளகாமல் இறுக்கமாகத்தான் இருப்பேன். கடைசியில் அந்த அஸ்திரத்தை எடுப்பார்.

“உனக்கு என் உடம்பு பிரச்சனை தெரியாது. நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கும் தெரியாது. என்மேலே இரக்கப்பட்டாவது கொஞ்சம் கூடுதலா ஒழுங்கையும் உழைப்பையும் கடைபிடி”

அந்த தழுதழுப்பான குரல் என்னை கலங்கடித்துவிடவே மவுனமாக தலையாட்டி நகர்ந்து போய் புத்தகத்தை தூக்குவேன். எல்லாம் அந்த ஒரு ராத்திரி வரைதான். விடிஞ்சா பழைய குருடியாக என் தலையில் அவர் தண்ணீர் ஊற்றுவதும் நிமிராத வாலாக அவரை முறைச்சபடியே நான் எழுந்திருப்பதுமா பழைய வாழ்க்கைக்கே போயிருப்போம்.

ஆனால் அவர் உண்மையை மட்டும்தான் எப்போதும் சொல்லியிருக்கிறார்னு அவரது நாப்பத்தெட்டு வயசு அகால மரணம் உறுதி பண்ணிடுச்சி. அப்பாவை எடுக்கிற நேரத்திலே குனிந்து அவரது நெத்தியிலே முத்தமிட்டே அவரை வழியனுப்பினேன். அவ்வளவுதான். ’அவ்வளவேதான் எனக்கும் அப்பாவுக்குமான பந்தம்’ என ஊரும் உறவும் மட்டுமல்ல அம்மா, தங்கச்சிகளும் கூட நம்பியிருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை.

அன்னையிலேர்ந்துதான் நான் அப்பாவாகவே உருமாறினேன்.. ஆனால் அப்பாவுக்கு நேர் எதிராக! என்ன மறுபடியும் குழப்புறேனா? அப்பா வாழ்க்கையை ஓர் அனுபவமா வாழாம ஒரு தவமாவே வாழ்ந்து போய்சேர்ந்தவர். முழுக்க தியாகமான வாழ்வு. ஓரளவு கைநிறைய சம்பாதிச்சாலும் மூணு செட்டுக்கு மேலே தனக்குன்னு நல்ல உடுப்பு வச்சுக்கிட்டது இல்லை.. ஒரு ஓட்டலுக்கு போய் டிபன் காபி சாப்பிட்டது இல்லை… ரேடியோ சினிமான்னு எந்த கேளிக்கையையும் சுகிச்சது இல்லை. அவரது அதிகபட்ச பொழுதுபோக்கே ’ஹிண்டு’ பேப்பர் மட்டும்தான். தனக்குன்னு எதையுமே ஆசைப்படாம தன்னோட குடும்பத்து நன்மைக்காக அவர் காட்டின அதே அக்கறையை நான் உள்வாங்கிக் கிட்டாலும்.. அதைச் செயல்படுத்தறதுல அப்படியே அவருக்கு நேர்மாறா நடக்கவே முடிவெடுத்தேன்.

குடும்பத்து மீதான அக்கறையை கோபம், கண்டிப்பு, தண்டனை மூலம்தான் வெளிப்படுத்தணும்னு சட்டம் ஒண்ணுமில்லையே! தானும் சிரிக்காம மத்தவங்களையும் சிரிக்க விடாம அப்படி ஒரு இறுக்கமான அன்பு பாசம் அக்கறை என்னத்துக்கு? காசு செலவில்லாமல் இயற்கையே கொடுத்த சின்ன சின்ன சுகங்களைக் கூட அவர் அனுபவிக்கலையே! ஸ்பரிச சுகம் எத்தனை பெரிய இன்பம்! பள்ளிக்கூடம் மாறின ஒன்பதாம் வகுப்பைத்தவிர மற்ற எல்லா வகுப்புகள்லயும் மாதாமாதம் முதல் ராங்க் எடுத்த ஒரு மகனின் தோள் தொடுற, கட்டி அணைக்கிற, முத்தமிடுகிற சுகங்கள் ஒண்ணையுமே அவர் அனுபவிக்கவில்லையே! அப்பா பிணத்தை தூக்குறப்போ நான் முத்தமிட்டதோட நோக்கம்கூட அப்பா வாசம் எப்படி இருக்கும் என்று தெரிஞ்சுக்கத்தானோ என்னவோ? அப்போதான் அந்த சபதம் எடுத்தேன், ‘எனக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறந்தால் எங்க முதல் ஸ்பரிசம் நிச்சயம் பிணத்தை முத்தமிடுகிற சோகமா இருக்கவே கூடாது’ன்னு! அதன்பிறகு நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

சொல், செயல், நடவடிக்கை எல்லாத்துலேயுமே அவருக்கு நேர் எதிரான அணுகுமுறைகளோட வாழ்ந்தேன் ; வாழறேன். கோவமா யார் கிட்டேயும் ஒரு வார்த்தை பேசத்தெரியாது. ’இது பிடிக்குது இது பிடிக்கலைன்னு’ தீர்த்து சொல்லத் தெரியாது. ரெண்டு தஙகச்சிங்களுக்கு அண்ணனா வளர்ந்தப்ப ஒருதடவைகூட கை நீட்டினதில்லை. சென்னையில வேலை கிடைச்சு குடும்பத்தை கூட்டிவந்ததும் , ஒரு வாரம் ஹோட்டல், ஒருவாரம் சினிமா, ஒருவாரம் நண்பர்கள் வீடு, ஒரு வாரம் மெரினா என்று வாரம் தவறாம அம்மாவை அழைச்சிட்டுப் போய்.. அப்பா கொடுக்காத சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் வாரி வாரி வழங்கினேன். அந்த சுதந்திரத்தையே தனக்கான அதிகாரமா மாத்தி என்னை அடக்கி ஆளத்தொடங்கினதோட, தங்கச்சிங்க கல்யாணத்துக்கான டவுரி பண்டமாற்று வியாபாரமா, எனக்கு கல்யாணம் பேசினபோது அந்தப் பொண்ணு முகத்தைக்கூட பார்க்காமத்தான் தாலி கட்டுனேன். இருவது வயசு வரைக்கும் பசங்களை அடிச்சுத்தான் வளர்க்கணும்னு சொல்லி சொல்லியே அடிச்ச அப்பாவின் பிள்ளையான நான் என் மகனை (இந்த பதினேழு வருடத்தில்) ஒரு தடவை கூட அடிச்சதும் இல்லை குட்டுனதும் இல்லை.

நீங்களே அதிசயப்படுற அளவு இப்படியெல்லாம் அநியாயத்துக்கு நல்லவனா இருந்தும் கடைசியிலே என் நிலைமையைப் பார்த்தீங்களா? திருச்சி – சென்னை பஸ்ஸின் கடைசி மூலையிலே உட்கார்ந்து அழவேண்டிய கதிகேடு!

ஒரு அப்பா செத்துப்போன குடும்பத்து மூத்த மகன் என்ன என்ன செய்யணுமோ அத்தனையையும் தப்பாமத்தான் செய்தேன். ஆனாலும் அதெல்லாம் பத்தாது அதுக்கும் மேலே பெருசா ஏதாவது எதிர்பார்த்தாங்களோ என்னவோ இன்னைக்குவரை அம்மா, தங்கச்சிங்களுக்கு அந்த நன்றியுணர்வு இல்லவே இல்லை. ஒருகட்டத்துல ’உங்க நன்றியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.. நிம்மதியா வாழவிட்டா போதும்’னு நான் நொந்துக்கிறாப்பிலே கல்யாணமாகி தனிக்குடித்தனம் போன ரெண்டு தங்கச்சிங்களோ இல்லை ஒரு தங்கச்சியும் அம்மாவுமோ இல்லே மூணுபேருமாவோ அடிக்கடி முட்டிப்பாங்க. நாள்கணக்கு மாசக்கணக்கு தாண்டி வருசக்கணக்கா ஒருத்தொருக்கொருத்தர் பேச்சுவார்த்தைகூட இருக்காது. பலசமயம் பஞ்சாயத்து பண்ணப்போய் நான் பொல்லாதவனா பேரெடுத்து திரும்பியிருக்கேன்.

என்னை ரொக்கத்துக்கு விக்கிறாப்பிலே அம்மாவா தேடிக் கொண்டு வந்த என் மனைவியை அம்மாவுக்குத்தான் மொதல்ல புடிக்காமப் போச்சு. அண்ணி கொண்டு வந்த பணம் நகையை ஆதாரமா வச்சு ஆளுக்கொரு வீடு கட்டி முடிச்சப்பறம் தங்கச்சிகளுக்கும் அண்ணியைப் புடிக்காம போச்சு. ஆனாலும் ‘யார் எது சொன்னாலும் நீ வாயை திறக்காதே’ன்னு நான் சொன்னதை என் சம்சாரம் விதியே என்று கடைபிடிச்சது பெரிய ஆறுதல்தான்.

ஆனால் அம்மா? வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்கிற மூர்க்கத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக விசுவரூபம் எடுக்க ஆரம்பிச்சார். தையல் கற்றுக்கொள்கையில் நியூஸ்பேப்பரை வெட்டிப்பழகும் அதே சுவாரஸ்யத்தோடு உறவுகளையும் உணர்வுகளையும் சகட்டுமேனிக்கு வெட்டித்தள்ளினார். இருபது வருசங்களாக அப்பா போட்ட கோட்டுக்குள்ளே வாழ்ந்துபழகிய அம்மாவுக்கு, ’நல்லது செய்வதா நினைச்சு நான் கோடுங்களை அழிச்சது பெரும் வினையாவே போச்சுது. அப்படித்தான் சித்தி மகள் கல்யாணத்துக்காக நான் நாகர்கோவில் பொறப்பட்டப்போ.. “எங்கே பொறப்பட்டுட்டே? சித்தி வீட்டுக்கா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..” – என தடுத்தார்..

“திடீர்னு சித்தியோட பகைங்கறதால சித்தப்பா செஞ்ச உதவிகளை மறக்கலாமா? அப்பா செத்தப்போ ஆஸ்பத்திரிலேர்ந்து மயானம் மட்டும் அவர்தானேம்மா உதவி செஞ்சாரு. அந்த நன்றியை நினைக்க வேணாமா? “

“சொள்ளமாடன் இல்லேன்னா சுடலை மாடன்கிறாப்பிலே அவர் இல்லேன்னா இன்னொருத்தர் உதவி இருப்பாங்க. பெருசா சொல்ல வந்துட்டான். நீ ஆபிசுக்கு போற வழியைப் பார். என்னை மீறி ஊருக்குப்போனா நீ திரும்ப வர்றப்போ நான் வீட்டுல இருக்க மாட்டேன்”

அம்மாவின் அந்த ஒரே துருப்புச்சீட்டில் என் ஆட்டம் முற்றாக முடிந்துவிடும். ஆனாலும் ஒரு டிபிகல் இந்தியனாக தமிழனாக அம்மாவுக்கு தலையாட்டியேதான் வந்தேன். மனைவி பிள்ளைகளைப் பின் தள்ளிவிட்டு அம்மாவுக்கே முன்னுரிமை தந்தேன். அம்மா சொன்னார் என்று கடனுக்கு மேல் கடனாக வாங்கி சென்னைக்கும், என் தகுதிக்கும் பொருத்தமில்லாத பெரியவீடாகவே கட்டிமுடித்தேன்.

தவணை முறையில் காரும் வாங்கி நிறுத்தினேன். டிவி பார்க்கையில் பேரப்பிள்ளைகளை இடைஞ்சலாக கருதினாள் என்று இன்னொரு டிவியை அம்மா அறையிலேயே பொருத்தினேன். ஹாலில் இருந்த ஃபோனும் அறைக்குள் இடம்பெயர்ந்தது. ஆசைப்பட்டாள் என்று ஜன்னலை உடைத்து ஏசியும் மாட்டினேன். ஆனாலும் திருப்திப்பட்டாள் எனத் தோன்றவில்லை. வயது ஆக ஆக இறுக்கமான முகபாவத்துடன் தான் உண்டு தன் டிவி உண்டு என அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். சாப்பாடு கூட சீரியல் நடிகர்களோடுதான் என்றாகிப்போனது. சீரியல் நேரத்தில் யார் உள்ளே போனாலும் முகம் சுளித்தாள். சமயங்களில் கதவை அறைந்து சாத்தினாள்.

குறையில்லாத வாழ்வு சிலருக்கு வரம் சிலருக்கு சாபம்தானோ? அம்மாவின் எரிச்சல் குணம் கண்டு நானும் உறவாடலை குறைத்துக் கொண்டேன். அதனால்தானோ என்னவோ கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பிணங்கி இருந்த ரெண்டாவது மகளுடன் திடீரென் உறவை புதுப்பித்துக் கொண்டாள்.. போன்மூலமேதான்!

“உன் தங்கச்சிக்கும் எனக்குமான சண்டை தீர்ந்துடுச்சு.. அதனால மறுபடி அவளை வந்து போகச் சொல்லலாம்னு இருக்கேன்”

“தாராளமா வரட்டும் போகட்டும். ஆனா மறுபடி ரெண்டுபேரும் சண்டை போட மாட்டீங்கன்னு கியாரண்டி குடுக்க முடியுமா? “

“என்னைப் பார்க்க என் மவ வர்றதுக்கு உன் பர்மிஷன் வேணுமோ?”

சண்டைக்கு தயாரில்லாமல் நான் அலுவலகம் போய்ட்டேன். மாலையில் வீடு வந்தால் அதிர்ச்சி அம்மா வீட்டை விட்டு போய் விட்டாள். என்னால் நம்பவே முடியலை. அரக்கபரக்க தங்கச்சிகளுக்கு போன் போட்டால் அம்மா ஊருக்கே போய்விட்ட தகவல் கிடைச்சுது. ‘என்னதான் கோபம்னாலும் எதுக்கு ஊருக்கு போகணும்? உங்க கிட்டேயாவது வந்திருக்க வேண்டியதுதானே?’ங்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க முடியாது. ’எங்களாலயெல்லாம் அம்மாவை வச்சு பார்க்க முடியாது’ன்னு ஏற்கனவே பலதடவை சொல்லியிருந்தவங்க அவர்கள். மறுநாள் நாகர்கோவிலுக்கு போன் போட்டபோதுதான் அம்மா சித்தி வீட்டில் இருப்பது தெரியவந்துது. நான் உடனே வர்றேன்னு சொன்னதுக்கு “வேணாம் வேணாம் அம்மா உன் மேலே ரொம்ப கோவமா இருக்காங்க.. ஒரு வாரம் கழிச்சு வந்தா போறும்’னு சித்தி சொன்னது நியாயமாகப் பட்டது.

அதான் நேத்தைக்கு பொறப்பட்டு இன்னைக்கு காலையிலே ஊருக்குப் போயிட்டேன். எப்பவுமே சிரிப்பும் குதூகலமுமாக நான் நுழையும் சித்தி வீடு முதன்முதலாக அன்னியமாகப் பட்டுது. அம்மா நடந்துகொண்டது அதை விட அதிர்ச்சியாக இருந்தது. கூடத்தில் டிவி பார்த்து கொண்டிருந்தவள் என்னை கண்டதுமே முகம் சுருக்கி உள்ளறைக்கு சென்று விட்டாள். பின்னாலேயே ”அம்மா அம்மா” என்று அழைத்தவாறே இயல்பாக நகர்ந்த என்னை சித்தப்பா வழிமறித்தார்.

வலுக்கட்டாயமாக இழுத்து பிரம்பு நாற்காலியில் இருத்தினார்.

“உன்னை யார் இப்ப வரச்சொன்னது? மைனிக்கு இன்னும் கோவம் தீரலைடா.. “

“அந்த அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? திடீர் திடீர்னு சண்டைபோடறதும் திடீர் திடீர்னு ஒண்ணு சேர்றதும் தப்புன்னு சொன்னது உலகமகா குத்தமா? “

“குத்தமான்னு கேட்டா குத்தம்தான். ஏன்னா அம்மா வயசு அப்படி”

“ஏன் சித்தப்பா உங்களுக்கு என்னை தெரியாதா? என் தங்கச்சிங்க மாதிரி நான் எப்பவாவது அம்மா கிட்டே அவமரியாதையா நடந்திருப்பேனா?”

“நீ நல்லவன்தான்.. அதுக்காக அம்மாக்க போனை கட் பண்ணுனது நியாயமா?”

அதிர்ந்துபோய் விட்டேன். ”என்ன நான் போனை கட் பண்ணினேனா? என்ன சொல்றீங்க?”

“உங்கம்மா தங்கச்சி கூட பேசக்கூடாதுன்னுதானே போனை கட் பண்ணி வச்சே”

“யார் சொன்னாங்க?. நேத்தைக்கு நான் பொறப்படறப்போகூட போன் வந்துதே. அப்போ வேலை செய்யுதுன்னுதானே அர்த்தம்”

“அவன் என்ன முட்டாளாக்கப் பார்க்குறானா? போன் வரும் ஆனா கால் போகாது.. அப்படி கட் பண்ணி வச்சிருந்தான்” – அறையினுள்ளிருந்தே அம்மா குரல் வந்தபோதுதான் சட்டென புத்திக்கு எட்டியது, ’இந்தமாதம் இன்னும் பில் கட்டாதது’. அதன் விளைவாகத்தான் அவுட் கோயிங் மட்டும் துண்டிக்கப்பட்டிருக்கிறது போலும். விஷயத்தை விளக்கிச் சொல்லியும் சித்தப்பாவே நம்பத் தயாரில்லைங்கறப்போ அம்மா பத்தி சொல்லணுமா?

அம்மா இருந்த அறையை நெருங்கி தட்டிப்பார்த்து ஏமாந்தேன். மறுபடி தட்டுனதும் உள்ளிருந்து குரல் வந்த்து.

“என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா? நீ எனக்கு புள்ளையும் இல்லை நான் உனக்கு அம்மாவும் இல்லை”

விக்கித்துப்போனேன். அதுக்குமேல் அங்கே நிக்க திராணியில்லாம தேகம் நடுங்கிச்சுது. இறுக்கமான என் அப்பாவை பார்க்கறப்போல்லாம் சட்டுனு உடல்மொழியை மாத்தி மரியாதையும் பாசமும் காட்டின என் பாட்டி நினைவிலே வந்து போனாள். போன தலைமுறை இறுக்கத்தை தளர்த்தணும்னு புறப்பட்ட நான் தோத்துப்போன மகனா வெளியே வந்தேன். பஸ் நிலையம் நோக்கி நடந்தேன்.

சென்னைக்கு டிக்கட்டும் எடுத்த பிறகுதான் அந்த புதிய எண்ணம் வந்துது. திருச்சியில் இறங்கி கல்லூரியில படிக்கும் மகனைப் பார்த்தா என்ன? பழைய தலைமுறை உண்டாக்கிய காயத்திற்கு புதிய தலைமுறை மருந்து பூசினா இதமா இருக்கும்தானே! கூடவே மகனைப் பார்த்தாகவேண்டிய நிர்பந்தமும் இருந்துது. நானும் எங்கப்பாவும் எலியும் பூனையும்னா, என் மகனும் நானும் நகமும் சதையும் மாதிரி! இப்போ மொதல் மொதலா நகச்சுத்தி வந்திருக்கு. அதிலும் சொந்த காசுல சூன்யம் வச்சுக்கிட்ட நிலைமை!

போனவருஷம் அவனது பதினெட்டாவது பிறந்தநாளை கொஞ்சம் அமர்க்களமாவே கொண்டாடினேன். ‘டொட்டடாய்ங்’ என பரிசை நீட்ட, பிரிச்சவன் அசந்தே போனான். பதினையாயிரம் ரூபாய் ஸ்மார்ட் ஃபோன்! ’பச்சக்’கென முத்தமிட்டான் போனை அல்ல என்னைத்தான்!

“தேங்க் யூ.. தேங்க்யூப்பா. இவ்வளவு காஸ்ட்லி போனா? நினைச்சே பார்க்கலை. பலதடவை கேட்க நினைச்சும் கார் கடனோட தவணை முடியலியேன்னு மனசை அடக்கிக்குவேன்”

அதுதாங்க என் புள்ளையோட ஸ்பெஷாலிட்டி! மத்த பிள்ளைகளைப் போல அதுவேணும் இது வேணும்னு கேக்கறதே இல்லை.

“இப்பவே பதினைய்யாயிரம் ரூபா போன்னா அண்ணனோட அடுத்த பிறந்த நாளைக்கு என்னப்பா குடுப்பீங்க?”- மகள் ஆர்வமா கேட்டா.

“அதை இப்பவே சொல்லலாமா? சரி சொல்றேன்.. அதை நினைச்சாவது இன்னும் நல்லா படிக்கட்டும். அடுத்த வருஷம் ஆப்பிள் லேப்டாப்”

“ஹைய்யா அப்போ அண்ணனோட டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் எனக்கு.. “

“நிஜமாவே மேக் வாங்கி தருவீங்களா? ஐம்பது அறுபதாயிரம் ஆகும்பா”

“அதுக்குன்னு ஒரு சீட்டு போட்டா போச்சு”

மறுபடியும் ஒரு பச்சக் தந்தான். அன்னைக்கு ராத்திரி திருச்சிக்கு கிளம்பறதுக்கு முன்னால அவன் என்னை இறுக்கி கட்டி அணைச்சப்போ மனசு நிறைஞ்சு போச்சு. ஆனா அப்போ உத்தரத்துல விதி சிரிச்சதை நான் பார்க்கவே இல்லை. இது நடந்து பத்து மாசம் ஆகுது.

முந்தா நாள் அம்மா பஞ்சாயத்துக்காக நாகர்கோவில் பஸ் பிடிக்க காத்திருந்த சமயம் பையன் போன் வந்துது.

“சீக்கிரம் சொல்லுப்பா அவசரமா ஊருக்கு பொறப்பட்டுட்டு இருக்கேன்”

“அப்பா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.. இன்னும் ரெண்டு மாசத்திலே என் பொறந்தநாள் வருதுல்லே..”

“ம்..”

“இந்த தடவை மேக் லேப்டாப் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்கள்ல”

“ம் சொல்லு”

“ரமேஷ் வினீத் எல்லாரும் புது பைக் வாங்கிட்டாங்கப்பா”

“அப்ப உனக்கு ரொம்ப வசதியா போச்சு. அவங்க கூடவே சுத்தலாம்.”

“இல்லப்பா நீங்கதான் சொன்னீங்கள்ல செகண்ட் இயர்ல தினமும் லைப்ரரிக்குப் போற பழக்கம் வேணும்னு.. ஹாஸ்டல்ல இருந்து லைப்ரரி ரொம்ப தூரம்னுதான் இன்னும் தொடங்காம இருக்கேன். அதனால லேப்டாப்புக்குப் பதில் பைக் வாங்கித் தந்திருங்கப்பா..”

“நீ பைக் கேட்டது லைப்ரரிக்கா? இல்லை உன் நண்பர்கள் வாங்கிட்டாங்கங்கிறதுக்காகவா? “

“ரெண்டும்தான்”

“ஆனா என் பதில் ஒண்ணுதான். இப்ப உனக்கு பைக் கிடையாது. உனக்கு எப்போ என்ன வாங்கித்தரணும் இந்த அப்பாவுக்கு தெரியும்”

“…”

“என்ன புரிஞ்சுதா? “

“……. “

அந்த மவுனத்தின் பின்னாலிருந்த மகனோட ஏக்கம் எனக்கு பிடிபட்டாலும் அப்போ சமாதானப்படுத்த நேரமில்லாம ஊருக்கு ஓடிப்போனேன். திரும்பறப்போ அம்மா தந்த காயத்துக்கு மருந்தா மகனது நினைவு மேலோங்கி வந்ததும் போன் போட்டேன். எடுக்கலை. பிறகுதான் வகுப்பு நேரத்தில் சைலண்ட் மோடில் அவன் போனை வைக்கறது ஞாபகம் வந்துது. ’சாயந்திரம் ஐந்து ஐந்தரை மணி அளவில் திருச்சி வருவேன் பஸ் ஸ்டாண்டில் சந்திக்கவும்’னு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். நேரில பார்த்த உடனே ’உன் இருபதாவது பிறந்தநாளைக்கு பைக் வாங்கித்தர்றேன்’னு வாக்குறுதி குடுக்க நினைச்சேன். அப்பவும் சமாதானமாகாம சிணுக்கமாக முகத்தை வைச்சா வேறவழியில்லாம ’சரி’ சொல்லணும்னு முடிவு பண்ணுனேன். என் அம்மா மாதிரி என்னாலதான் இறுக்கமா நடந்துக்க முடியாதே. பிள்ளை முகம் பார்த்தாலே உருகிடுவேனே! அவனும் அப்படிப்பட்டவன்தானே..

எனது மனசின் வேகம் புரிஞ்சுதானோ என்னவோ நாலரைக்கே திருச்சி போய்ச் சேர்ந்துட்டேன். . இறங்கிய கையோடு போனைப் போட்டேன். மணி அடிச்சுது.. ஆனால் எடுக்கலை. நாலு தடவை முயற்சி பண்ணிட்டு கடைசியில அறை நண்பன் அரவிந்துக்கு போன் போட்டேன். உடனே எடுத்தான்.

“அப்பா எப்படி இருக்கீங்க? “

“நான் நல்லா இருக்கேன். உன் ஃப்ரண்டு எங்கே? “

“இதோ இங்கேதானே இருக்கான்..”

“அப்புறம் ஏன் நான் போன் பண்ணி எடுக்கலை?”

“அப்படியா? இதோ நானே போனை குடுக்கிறேன்.”

போனின் மவுனத்தினூடே சில இழுபறி பேச்சு கசிந்தது.

“ஏதோ கோபம் போல. பேசமாட்டேங்கிறான்”

என் மகன்… என் ம..க..னா இப்படி பகிரங்கமாக கோபம் காட்டுகிறான்?. நம்பவே முடியலை.

அதீத ஹீனத்துடன் “நிஜமாவா? “ எனக்கேட்ட்தும் சட்டென உரத்த சத்தம் காதில அறைஞ்சுது.

”நான் தான் உங்க போனை எடுக்கலைலே அப்புறம் எதுக்கு ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாம் போன் பண்ணி என்னை அசிங்கப்படுத்தணும்? யூ ஆர் நாட் எ குட் ஃபாதர். ஐ ஹேட் யூ டாட்”

என்னால நம்பவே முடியலைங்க. என் பையனிடமிருந்து அப்படி ஒரு எதிர்மறையை நான் எதிர்பார்க்கவே இல்லை. மேற்கொண்டு என்ன செய்வதுன்னு தெரியாம திணறி நிக்கிறபோதான் காலியாக கிளம்பின இந்த பஸ்ஸோட கண்டக்டர் டிரைவருக்கு விசில் கொடுத்தவாறே என் தோள் தொட்டு ‘சென்னையா?’ன்னு கேட்க மவுனமாக ஏறி உட்கார்ந்துட்டேன்.

இன்னமும் நம்பமுடியலை.. காலையிலே என்னைப் பெத்தவ அறைக்குள்ளே போய் கதவை அடைச்சு என்னை அவமானப்படுத்தினா.. சாயந்திரம் நான் பெத்தது அறையிலே ஒளிஞ்சுகிட்டு என்னை அசிங்கப்படுத்திடுச்சு. அதான் இந்த அழுகை! இப்படி ஜன்னல் ஓர சீட் பிடிச்சு அழுதா மட்டும் தீர்ந்துரக்கூடிய வேதனையா என் சோகம்? எங்கப்பா மாதிரி வீட்டை மிலிட்டரி கேம்ப் ஆக்க வேணாம்னு அதிக சுதந்திரம் கொடுத்ததுக்கான தண்டனையை அம்மா தந்துட்டாங்க. ஸ்கூல் ஹெட்மாஸ்டரா எங்கப்பா என்கிட்டே பழகின மாதிரி இல்லாம தோள்ல கைபோட்டு ஏ ஜோக் சொல்லுற ஃப்ரண்டுபோல அதிக சுவாதீனம் கொடுத்து பழகினதுக்கான பரிசை என் மகனும் கொடுத்திட்டான். ரெண்டு தலைமுறைகளை இணைக்கிற பாலமா என்னை நான் கற்பனை பண்ணிக்கிட்டதுக்கு இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து என்னையே புல்டோசர் வச்சு சாய்ச்சுட்டாங்களே! ஒரே நாள்ல என்னைப் பெத்த தாயாலயும் நான் பெத்த மகனாலுமா உதாசீனத்துக்காளாகி இப்படி நடுத்தெருவு.. இல்லை இல்லை நடுரோட்டிலே பஸ்லே அழுதுட்டே போக வச்சிட்டாங்களே! இருட்டு அருகில் ஆளுங்களும் இல்லைங்கறதால கண்ணீர் பொங்கி பொங்கி வழியற சமயம்.. சட்டுனு விளக்குங்க எரிஞ்சதும் வெளிச்சத்தில் அதிர்ந்துபோய் கையால முகத்தை துடைச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்காக வண்டி நிறுத்தப்படப்போற முஸ்தீபு. வேகம் குறைச்சு இருட்டுல ஓடுற வண்டியின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். ’நான் எந்த இடத்தில் இருக்கிறேன்’னு என்னால அனுமானிக்க முடியவிலை. சாலையிலே மட்டுமில்லே வாழ்க்கையிலும்தான்!

 

முடிவுகள் – பதாகை சிறுகதைப் போட்டி 2015

இவ்வருடத்திற்கான சிறுகதைப் போட்டியை நண்பர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களான நடுவர்கள் திரு பாவண்ணன் மற்றும் திரு க மோகனரங்கன் அவர்களின் தனித்துவமிக்க மதிப்பீடுகளும் சிறப்பித்திருக்கின்றன.

story_competition_prizes

வெற்றி பெற்றச் சிலரைத் தவிர பங்கேற்ற பிறர் அனைவருக்கும் ஏமாற்றம் ஏற்படுவதை இது போன்ற போட்டிகளில் தவிர்க்க முடியாது. ஆனால் வெற்றி தோல்விகள் தனி நபர் படைப்பூக்கத்தின் விசையையோ அது வெளிப்படும் திசையையோ தீர்மானிப்பதாக இருக்க முடியாது. முடிவுகளுக்கு அப்பால் என்னவென்று யோசித்தால், புனைவு எழுதும் ஊக்கமும் புனைவிலக்கியம் குறித்த விமரிசனமும் இன்று மிகவும் அவசியப்படுகிறது. வெற்றி தோல்விகள் அல்ல, தொடர்ந்த இலக்கியச் செயல்பாடே அர்த்தமுள்ளதாக இருக்கும்.

போட்டிக்கு வந்த சிறுகதைகளை தங்களுக்கேயுரிய அளவீடுகளால் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் தேர்வை அறிவித்த நடுவர்களான திரு பாவண்ணன் அவர்களுக்கும், திரு க மோகனரங்கன் அவர்களுக்கும் பதாகை தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பரிசுக்குரிய சிறுகதைகளை எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.

judges_panel_2015

பரிசுப்பெற்ற கதைகளின் விவரம் பின்வருமாறு.

முதல் பரிசு (தலா ரூ3000/- பரிசு)

  • மாசாவின் கரங்கள் – தனா
  • யுகசந்தி – முகம்மது ஐஷ்வர்யன்

(வரும் 4-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

இரண்டாம் பரிசு (தலா ரூ1500/- பரிசு)

  • விடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்
  • இரண்டு தோசைகள் – ராஜா (எ) இளமுருகு

(வரும் 11-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

மூன்றாம் பரிசு (தலா ரூ750/-)

  • வண்ணத்துப்பூச்சிகளின் கோவில் – ஆ. ஜீவானந்தம்
  • தாலாட்டு – ரபீக் ராஜா

(18-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

வெற்றிப் பெற்ற படைப்பாளிகளுக்கு பதாகையின் வாழ்த்துகள்.