காஸ்மிக் தூசி

புத்த வீர சாமி

காஸ்மிக் தூசி 

 

பிக்குகளின்
கனவில் வந்த பெருமழை
அவர்களை
ஆற்றைக் கடக்க விடாமல்
கரையில் நிறுத்தி விட்டது

பழைய
மேலாடைக்கு
குழந்தையின் குருதி ஊற்றி
நிறம் ஏற்றிக்கொண்டிருக்கிறான்
ஒரு முதிர்ந்த பிக்கு

கை தளர்ந்து
தாமரை மடிந்த ஆசனத்தின்
குமிழ் சிரிப்பில்
புத்தன் சிலை
குமிழி எழ ஆற்றின்
ஆழம் அமிழ,

காற்றில் துடி துடிக்கும்
குருதி நிறத் துணி போர்த்தி
மறுகரையில்
புதிதாய் எழுகிறார்,

விரிந்த பெருமார்புடன்
மீசை முறுக்கி,
முறைத்த விழியுடன் –

தோள் புடைக்க
கொடுவாள்
ஏந்தும்,
புத்த வீர
சாமி.

இடமாற்றம்

காஸ்மிக் தூசி 

புல்வெட்டும் எந்திரத்துக்கு
கூடுவிட்டு கூடுபாய்ந்த
கிராமத்து வீட்டு
காராம்பசு,

தன் கட்டுப்புல்லையும்
சுவைத்து
தின்றுவிட்டது.

மறுநாள் காலை
வெட்டிய புல்லை
கொட்ட எடுக்கையில்

நாசியில் நிறையும் –
நீராவி பறக்கும் –
பசுஞ்சாணத்தின்
மணம்.

போதி மரம் இல்லாத ஊரில்- காஸ்மிக் தூசி- ஒரு குறிப்பு

போதி மரம் இல்லாத ஊரில்- காஸ்மிக் தூசி

1. இது ஒரு காட்சி, அதை விவரிப்பதற்கு அப்பால் உயர்ந்த லட்சியங்கள் இல்லை.

2. கவிதை யாருக்கும் எந்த செய்தியும் சொல்வதில்லை, சமூக அக்கறை என்று எதுவும் இதில் வெளிப்பட்டவில்லை. தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே.

3. இது யாரைப் பார்த்து சொல்லப்படுகிறது, அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்று கேட்டால் சொல்ல முடியாது. உரக்க வாசிக்க உகந்த கவிதை அல்ல, காகிதத்தில் எழுதிக் கொடுத்து அதை வேறொருத்தர் மௌனமாக படித்து தனக்குள் புரிந்து கொள்ள எழுதப்பட்டது. அந்தரங்க அகக்குரல் என்று சொல்லப்படும் விஷயம்.

4. கருத்து எளிமையான ஒன்று, அதே சமயம் சொல்லப்பட்ட எதுவும் மீண்டும் சொல்லப்படுவதில்லை, சொன்ன விஷயத்துக்கும் அலங்காரம் ஏதும் இல்லை: கருத்தில் மட்டுமல்ல, மொழியிலும் எளிமை.

5. ‘போதி மரம் இல்லாத ஊரில்’ என்ற இந்தக் கவிதையில் ஓக், மேபிள் மரங்கள் வருகின்றன – காஸ்மிக் தூசி வெளிநாட்டில் வசிப்பவர், அவரது தனிப்பட்ட வாழ்வனுபவங்கள் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகளில் பதிவு செய்யப்படுகின்றன. இது தமிழுக்கு புதிது என்பதால் வேப்ப, புளிய மரங்களால் கிடைக்காத இடம் ஓக் மற்றும் மேபிள் மரங்களால் கிடைக்கிறது.- புதுமை.

இதுபோல், இன்னும் பல சொல்லலாம், ஆனால் உரத்த குரல், உயர்ந்த லட்சியங்கள், சமூக அறைகூவல் மற்றும் அறிவுரை, விழிப்புணர்வு புகட்டல், அலங்காரம் மற்றும் மிகைகள், பழகிய விஷயங்கள் இந்தக் கவிதையில் இல்லை.

எளிய கவிதைதான். ஆனால் இதில் நாம் ஒரு தனிப்பார்வை, தனிக்குரல், தனி அனுபவத்தின் அடையாளங்களை காணலாம்.

காஸ்மிக் தூசி கவிதைகள் பதாகையில் தொடர்ந்து வருகின்றன. அவற்றை வாசிப்பவர்கள், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருப்பதை கவனிக்கலாம், அது தீவிரத்தன்மை, அசட்டை, முக்கியம், முக்கியமின்மை என்று வெளிப்படுகிறது. உண்மையாகவே போதி மர நாட்டம் உண்டா, அல்லது போதி மர பாவனையின் ஆழமின்மையை உணர்ந்த காரணத்தால் அது குறித்த விளையாட்டுத்தனத்தை கைகொள்கிறாரா என்பவை விமரிசன நோக்கில் பேசப்பட வேண்டியவை.

ஆதர்சங்கள், லட்சியங்கள், புனிதத்தன்மை போன்ற உச்ச மதிப்பீடுகள் தனி மனித குறைகளால் வெறுமையாகிப் போயின, சமூக அமைப்பால் பொய்த்து விட்டன என்ற காரணங்களால் ஒருவர் எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள மறுப்பது, நகையுணர்வு, irony, frivolousness, கமிட் செய்து கொள்ளத் தயங்குவது, தன்னைத் தானே பகடி செய்து கொள்வது போன்ற நவீன பாவனைகளை மேற்கொள்கிறார் என்றால் அது ஒரு விஷயம். அதில் நாம் நாட்டம் விலகல் என்ற இரு எதிர்நிலைகளையும் காணலாம். ஆனால் அது போன்ற ஒரு பாவனை, அந்த  பாவனைக்கு எதிரான பாவனை, ஆழமில்லாத விளையாட்டுத்தனம், சலிப்பு தட்டக்கூடியது. ஆனால் இதை எல்லாம் பேச இந்த ஒரு கவிதை போதாது, நாம் இவரது இது போன்ற பிற கவிதைகளையும் பார்க்க வேண்டும்.

விசை, திசை இரண்டும் இருந்தால்தான் தொடர்ந்து எழுதும்போது ஒரு அலை என உயர்ந்து எழ முடியும். திசை இல்லாமல் விசை மட்டும் இருக்கிறது என்றால் எத்தனை எழுதினாலும் ஒரு கொந்தளிப்பு மட்டுமே இருக்கும், ஒரு oeuvreக்கு உரிய ஒருமை கூடாது. தனிப்பார்வை, தனிக்குரல், தனி அனுபவத்தின் வெளிப்பாடு வேண்டும் என்று சொல்லும்போது திசை என்று சொல்லக்கூடிய நகர்வை விழைகிறோம்.  இது ஒரு கவிதை, கதையில் கிடைக்கும் விஷயம் அல்ல. தொடந்து எழுத வேண்டும், அதனூடே ஓர்மை கூட வேண்டும்.

கவிதையின் துவக்கம் அழகாக, கற்பனைச் செறிவோடு, கவித்துவ மொழியில் அமைந்திருக்கிறது- “வெயில் வெண்மையை/ நிறங்களாக/ பிரிக்க ஆரம்பித்திருக்கும்/ இலைகள்”. நிறப்பிரிகை தெரியும், அது வெண்மையை வானவில் வண்ணங்களில் பிரிக்கிறது. இதே கோடையின் வெண்மை இலைகளில் பல வண்ணங்களில் பழுக்கின்றது, பருவ மாற்றத்தின் போது. இலைகளில் ஏற்படும் நிற மாற்றத்தைச் சுட்டி நேரடியாக இல்லாமல் பருவ மாற்றத்தை உணர்த்துகிறது கவிதை. அதற்கு அடுத்த வரிகளில் இந்தக் கற்பனை மறைந்து உரையாடல் தமிழ் வந்து விடுகிறது, “குளிர் கால உறக்கத்துக்கு/ தயாராகி விட்ட/ சற்று குண்டான/ அந்த அணிற் குஞ்சு,” என்ற இறுதி வரிகள் துவக்கத்திலிருந்து எங்கோ வந்து விட்டன. போதி மரத்துக்கும் மேபிள் மரத்துக்கும் உள்ள சம்பந்தம்தான் துவக்கத்துக்கும் முடிவுக்கும். கவிதை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பயணித்து விட்டது, மொழியில் மட்டுமே கூட. சொல்ல வந்த விஷயத்துக்கு தகுந்த வடிவத்தை இந்தக் கவிதையில் பார்க்கலாம்.

பதாகையில் இது போன்ற கவிதைகளை பதிப்பிக்க விரும்புவது இவை சிறந்தவை என்பதால் அல்ல, இவை பிடிக்கும் என்பதால். இதற்கும் தர மதிப்பீடுகளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

போதி மரம் இல்லாத ஊரில்

காஸ்மிக் தூசி 

வெயில் வெண்மையை
நிறங்களாக
பிரிக்க ஆரம்பித்திருக்கும்
இலைகள்

ஓக் மரத்தடியின்
பழைய மரப்பெஞ்சில்
ஒரு பழைய புத்தகம்
வாசித்திருக்கையில்

மேலிருந்து
இறங்கி
நெருங்கி வந்து,
இது என்னுடைய இடம்
இங்கே என்ன செய்கிறாய்?
எனும் கேள்வி.

போதி மரம்
இல்லாத ஊரில்
போதி மரத்துக்கு
வேறு என்னதான் செய்வதாம்?
என்கிறேன்.

எழுந்து
இரு கைகள் உயர்த்தி
அதோ
அந்த மேப்பிள் மரத்தை
பார்த்தாயா
போதியை
போலத்தானே இருக்கிறது
அங்கே போயேன்,
என்று கூச்சலிடுகிறது

குளிர்கால உறக்கத்துக்கு
தயாராகிவிட்ட
சற்று குண்டான
அந்த
அணிற்குஞ்சு.

தூய வெண்மையின் பொருளின்மை

காஸ்மிக் தூசி 

தனிமையின் விஷமேறி
நீலம்பாரித்து நிற்கும்
வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது.

இலைகளற்ற கிளைகளில்
விளையாட யாருமற்று
நிறங்களை துறந்த கிரணங்கள்
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன

நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும்
சிறிதளவு
வெண்மை.

பனி பூத்து
பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,

எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல்

பசியில்
வளை நீங்கி
வந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்

பனியில் புதைந்து துழவும்
என் கால்கள்
நெருங்கி நிலைப்பட
அசையாமல் ஆகும்
அணில்

இப்போது
எங்களுடன்
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன.
மலைத்தொடர்கள் தியானிக்கின்றன

அணிலின் விழித்திரையில்
ஒரு புராதன
ஓவியமாய்

அசைவின்றி
எஞ்சி
ஒருங்கும்
இப்பிரபஞ்சம்.