மாயக்கூத்தன்
பத்து நாட்கள், லாமா சொன்னபடியே கடுமையாகவும் ஆத்மார்த்தமாகவும் தியானம் செய்த பிறகு அவர் என்னையும் வண்ணக்கழுத்தையும் கூப்பிட்டனுப்பினார். வண்ணக்கழுத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு அவருடைய அறையை நோக்கி ஏறிச் சென்றேன். வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் இன்றைக்கு பழுப்பு நிறத்தில், மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருடைய பாதாம் வடிவக் கண்களில் ஒருவித புதுமையான சமநிலையும் சக்தியும் ஒளிர்ந்தது. அவர் வண்ணக்கழுத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு,
“வாடைக் காற்று உன்னை குணப்படுத்தட்டும்
தென்றல் உன்னைக் குணப்படுத்தட்டும்
கோடைக் காற்றும் கொண்டல் காற்றும் ஆரோக்கியத்தை உன் மீது பொழியட்டும்
அச்சம் உன்னைவிட்டுப் போகிறது
வெறுப்பு உன்னைவிட்டுப் போகிறது
சந்தேகமும் உன்னைவிட்டுப் போகிறது
தைரியம் பொங்கும் புதுவெள்ளமென உனக்குக்குள்ளே விரைகிறது
உன் இருப்பு மொத்தத்தையும் அமைதி ஆள்கிறது
அமைதியும் வலிமையும் உனது இரு இறக்கைகள் ஆகிவிட்டன
உன் கண்களில் துணிவு ஒளிர்கிறது;
இதயத்தில் சக்தியும் வீரமும் உறைகின்றன
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!
சூரிய அஸ்தமனத்தில், இமாலய சிகரங்களை வெவ்வேறு வண்ணச் சுவாலைகளாய் ஒளிரும் வரை நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இந்த எண்ணங்களை தியானித்தோம். எங்களைச் சுற்றி இருந்த பள்ளத்தாக்குகள், குகைகள், காடுகள் எல்லாம் ஊதாப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தன.
வண்ணக்கழுத்து மெதுவாக லாமாவின் கைகளில் இருந்து கீழே குதித்து, அந்த அறையின் வாசலுக்கு நடந்து சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தான். தன்னுடைய இடது இறக்கையை விரித்து காத்திருந்தான். பிறகு மென்மையாக, அவ்வளவு மெதுவாக, ஒவ்வொரு சிறகாக, ஒவ்வொரு தசையாக, கடைசியில் பாய்மரத் துணியைப் போல விரிய, வலது இறக்கையை உயர்த்தினான். உடனடியாகப் பறப்பதைப் போல நாடகத்தனமாக எதையும் செய்யாமல், ஏதோ மதிப்புமிக்க, ஆனால் உடைந்துவிடக் கூடிய இரு காற்றாடிகளைப் போல தன்னுடைய இறக்கைகளை மூடிக் கொண்டான். அந்திச் சூரியனுக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்பதை அவனும் அறிந்திருந்தான். ஒரு பூஜாரியின் மாண்புடன் அவன் படிகளில் இறங்கினான். என் பார்வையை விட்டு அவன் மறைந்தவுடன், தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளும் சத்தததைக் கேட்டேன், கேட்ட மாதிரி கற்பனை செய்தேன். உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காண விரைந்து எழுந்தேன். ஆனால், லாமா என் தோள்களில் கையைப் போட்டு என்னை தடுத்து நிறுத்தினார். அவருடைய இதழ்களில் இன்னதென்றுபுரிந்து கொள்ள முடியாத ஒரு புன்னகை தவழ்ந்திருந்தது.
அடுத்த நாள் காலையில் நடந்த விஷயங்களை கோண்டிடம் சொன்னேன். அவர் சாதாரணமாக பதில் சொன்னார். ”வண்ணக்கழுத்து தன் இறக்கைகளை விரித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு வணக்கம் சொன்னான் என்று நீ சொல்கிறாய். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. விலங்குகள் ஆன்மீக எண்ணம் கொண்டவை. ஆனால் மனிதன் தனது அறியாமையால் அவை அப்படியில்லை என்று நினைக்கிறான். குரங்குகள், கழுகுகள், புறாக்கள், சிறுத்தைகள், ஏன் கீரிப்பிள்ளைகள் கூட சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.”
“எனக்கு அவற்றைக் காண்பிக்க முடியுமா உங்களால்?”
“முடியும். ஆனால் இப்போது இல்லை. நாம் போய் வண்ணக்கழுத்துக்கு காலையுணவைக் கொடுப்போம்” என்றார் கோண்ட்.
நாங்கள் அவனுடைய கூண்டை அடைந்த போது, அது திறந்திருப்பதையும் அதற்குள் அவன் இல்லாததையும் கண்டோம். நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், மடாலயத்திற்கு வந்த பிற்பாடு ஒவ்வொரு இரவும் அவனுடைய கூண்டை நான் திறந்து தான் வைக்கிறேன். ஆனால், அவன் எங்கு போனான்? பிரதான கட்டிடத்தில் அவனைக் காணவில்லை என்பதால் நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம். அங்கு ஆளில்லாத வெளிப்புற அறையில் அவனுடைய சிறகுகள் கிடப்பதைக் கண்டோம். பக்கத்திலேயே கோண்ட், மரநாய் ஒன்றின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்தார். பிரச்சனை இருந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், அந்த மரநாய் அவனைத் தாக்கி கொன்றிருந்தால், தரையில் அவனுடைய ரத்தம் இருந்திருக்குமே. பிறகு எங்கு பறந்து போயிருப்பான்? என்ன செய்திருப்பான்? இப்போது எங்கே இருப்பான்?
நாங்கள் ஒரு மணிநேரம் அலைந்தோம். எங்களுடைய தேடலை நிறுத்தலாம் என்று நினைத்த போது, அவன் எழுப்பும் ஒலியைக் கேட்டோம். நூலகத்தின் கூரையில், இறவாணத்தில் தங்கள் கூடுகளில் இருந்த தன்னுடைய பழைய நண்பர்களான உழவாரக் குருவிகளுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். இவனுடைய ஒலிக்கு அவர்கள் பதிலளிப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. திருவாளர் உழவாரக்குருவி “சீப் சீப் சீப்” என்று கத்தினார். நான் உற்சாகத்தில் வண்ணக்கழுத்தை நோக்கிக் கூவினேன். “ஆயா ஆய்!” என்று காலைச் சாப்பாட்டிற்காக அவனை அழைத்தேன். அவன் கழுத்தை வளைத்து கவனித்தான். பிறகு, நான் மீண்டும் அவனை அழைக்க, அவன் என்னைப் பார்த்தான். உடனடியாக தன் இறக்கைகளை சப்தமாக அடித்து, கீழ் நோக்கிப் பறந்து என்னுடைய மணிக்கட்டில், சிறிதும் அலட்டிக்கொள்ளாதது போல் வந்து அமர்ந்தான்.
அன்றைய சூரிய உதயத்தின் போது, காலை தியானத்திற்காகச் செல்லும் பூசாரிகளின் காலடிச் சத்தங்களைக் கேட்டு, கூண்டிலிருந்து வெளி வந்து, வெளிப்புற அறைக்குச் சென்ற போது, அங்கு ஒரு அனுபவமில்லா இளம் மரநாய் அவனைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. வண்ணக்கழுத்தைப் போன்ற அனுபவசாலியால், ஒன்றிரண்டு சிறகுகளை மட்டுமே உதிர்த்து அந்த மரநாய்க்கு எளிதாக போக்குகாட்டிவிட முடியும். அந்த இளம் மரநாய், குவிந்திருக்கும் இறகுகளுக்கு இடையே புறாவைத் தேடிக் கொண்டிருக்க, அவனுக்கு இரையாகி இருக்க வேண்டியதோ வானத்தை நோக்கிப் பறந்திருக்கும். வானத்தில், உதிக்கும் சூரியனுக்கு வணக்கம் செலுத்த பறந்து கொண்டிருந்த தனது பழைய நண்பனான உழவாரக் குருவியைப் பார்த்திருக்க வேண்டும். இருவரும் இணைந்து காலை வழிபாட்டை முடித்த பின்னர், உரையாடுவதற்காக மடாலய நூலகக் கூரையில் இறங்கியிருக்கிறார்கள்.