எழுத்து

வ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’

வ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்).

காவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர் நமக்குத் தெரிந்தமட்டில் விவரிக்காமல் விட்டு விட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்கள். நம் நாட்டு இலக்கண ஆசிரியர் பொருள் யாப்பு அணிகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அலங்கார சாஸ்திரத்தை நம் நூலாசிரியர் ஆழமாக ஆய்ந்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், காவிய சமக்ரத்தைப் பற்றின ஆராய்ச்சிகள் இதுவரை வந்திருக்கும் நூல்களில் விஸ்தாரமாகக் காணப்படவில்லை. பெருங்காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று இலக்கணங்களில் ஓர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம், என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் அரிஸ்தோத்தலன் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனியே கவனித்துக்கொண்டு வந்து அரணியத்தை மறந்து விட்டார்கள்; மேனாட்டவர் மரங்களை கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.

காவிய சமக்ர இலக்கணத்தை தாண்டி கவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிக அணியை வர்ணிக்கும் போது சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுகிறான். அரிஸ்தோத்தலன், ஓராஸியன், புவாலோ, வீதா, பெயின் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும். அவ்விலக்கணக்காரர்களுடைய பிரதான அபிப்ராயம் என்னவென்றால்,

ஓர் பெருங்காப்பியம், அனேக அவயங்கள் சேர்ந்ததாயினும் ஒரு ஜீவப் பிராணியைப் போல ஓர் தனிப்பிண்டமாயிருத்தல் வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்கிற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயமும் தன் தனக்கு முன்னே உள்ள அவயத்தோடும், பின்னேயுள்ள அவயத்தோடும் பிணைக்கப் பெற்று ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை, விக்ரமாதித்தன் கதை, மதன காமராஜன் கதை, அராபியக் கதை முதலிய கதைகளை ஒரு பக்கமும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம், ராமாயணம் முதலிய காவியங்களை ஓர் பக்கமும் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் மேற்காட்டிய இலக்கணத்தின் கருத்து விளங்கும். பின் சொல்லிய மூன்றிலும் ஒரே ஒரு வஸ்து தான் காவியமாக எழுதப்படுகிறது. இவற்றுள் அனேக உப கதைகள், வர்ணனைகள் உபாக்கியானங்கள் வருகின்றன என்பது வாஸ்தவம். ஆனால் இவை அனைத்தும் கதையின் மத்திய சம்பவத்துக்குத் துணையாக நிற்கின்றன. மத்திய சம்பவத்துக்கு வித்தாகவோ, மத்திய சம்பவத்தினின்று இயற்கையாக விளைந்த விளைவாகவோ விளங்குகின்றன.

முன் சொல்லப்பட்ட நூல்களோ அவை செய்யுள் நூல்கள் அல்ல என்பது ஓர் பக்கமிருக்க,, தனிக் கதைகளின் கேவலம் சேர்க்கையே ஆகும். அவைகளில் மத்திய சம்பவத்திற்கும் கதைகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக லேசானது – அதைச் சம்பந்தம் என்று கூட சொல்லத் தகாது. மகா காவியத்தின் பகுதிகளுக்கோ இத்தகைய ஒட்டின்மை இராது. அவற்றின் சம்பந்தம் ஜீவ சம்பந்தம். உபக்கியானங்கள் முதலிய புற அணிகள் பெருங்காப்பியத்தினுள் அளவுக்கு மீறி இரா, மற்ற உறுப்புகளெல்லாம் காவியத்துக்கு அகத்துறுப்புக்களாகவே விளங்கும்.

அவ்வுறுப்புகளில் எதை எடுத்து விட்டாலும் கதை ஊனமாகிவிடும்.

பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலினின்று எடுக்கப்பட்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டடத்தையோ கட்டுவதற்கு அனந்த கோடி ரீதிகள் உண்டு. ஆனால் சில ரீதிகள்  தாம் கட்டடத்துக்கு அழகு தரும். பெரும்பாலானவை வானத்தையும் சூரிய ஒளியையும் மூடுமே ஒழிய செளந்தரிய உணர்ச்சியை திருப்தி செய்யா. அப்படியே ஓர் காவியத்தைப் பல மாதிரி எழுதலாம். நள சரித்திரம், ராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய காவியங்களெல்லாம் அவ் அவ் ஆசிரியர்களின் மனோதர்மத்துக்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளன. சில சம்பவங்களைச் சிலர் விரிக்கிறார்கள். மற்றவற்றைச் சுருக்கி விடுகிறார்கள். வேறு சிலர் முற்சொல்லியவர்க்கு மாறாகச் செய்கிறார்கள். சிலர் சில சம்பவங்களை எடுத்து விட்டு புது சம்பவங்களைப் புகுத்துகிறார்கள். ரசிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்த கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும். சொல்லப்போனால் பெருங்காப்பியங்களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங்காப்பியங்கள் பெருமையுள்ளனவாகா.

காவிய ரசனையை மகா வித்துவான் ஒருவருடைய விஸ்தாரத்துக்கு ஒப்பிடுவோம். எல்லா வித்துவான்களும் ஏழு ஸ்வரங்களைத்தான் – அல்லது அர்த்த ஸ்வரங்களையும் சேர்த்துக்கொண்டால் இருபத்திரண்டு ஸ்வரங்களைத்தான் – கையாள்கிறார்கள். இந்த ஸ்வரங்கள் துவாரா நவரஸங்களைத்தான் ஊட்டுகிறார்கள். ஆனால் ஒரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும், இன்னொரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும் ஒரு பாடகன் ஒரு கீர்த்தனை பாடுவதற்கும் இன்னொருவன் அதே கீர்த்தனையைப் பாடுவதற்கும் எத்தனை பேதம்! ஒருவன் ராகத்தின் ஸ்வரங்களில் யாதொரு அபஸ்வரத்தையும் கொண்டு வந்து கலக்காமல் பாடி விடுகின்றான். ராகம் பிழையின்றி சாஸ்திரரோக்தமாகப் பாடப்பட்டிருக்கும். லயத்தில் யாதொரு பிசகும் இருக்காது. கேட்போர் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டும் சிரக்கம்பம் செய்து கொண்டும் கேட்பார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தில் யாதொரு சலனமும் ஏற்பட்டிராது. அலை வந்து மோதியும் அசையாத பாறை போல் அவர்களுடைய இருதயமும் அப்படியே இருந்துவிடும். இன்னொருவன் வருகிறான். அதே ராகத்தைப் பாடுகிறான். ஆனால், எல்லாரும் அமுத மழையில் சிக்கி அகப்பட்டவர்கள் போல் ஆகி விடுகிறார்கள். அவரவர்களுடைய சமஸ்காரத்திற்கேற்றபடி அவரவர்களுடைய இருதயம், மந்த மாருதத்தில் ஊசலாடும் பூங்கொம்பர் போலவும், சிற்றலைகளால் அசைந்தாடும் தாமரை போலவும், கருப்பஞ் சாற்றில் கரையும் கற்கண்டைப் போலவும், அக்னியின் நெகிழ்ந்து உருகும் மெழுகைப் போலவும் , தங்கத்தைப் போலவும் ஆகிவிடுகிறது.

அவர்களுடைய மனது புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுகிறது. மனோ லோகத்தில் சித்திரத்துக்கு மேல் சித்திரம் தோன்றிக்கொண்டே வருகிறது. அவர்கள் லயப்பட்டு, வயப்பட்டுப் போய் விடுகிறார்கள். இந்தக் கலைஞனுக்கும் முன் சொல்லப்பட்ட கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் இவனிடம் கனிவு இருந்தது, அவனிடம் அது இல்லை. ஆனால் அது மாத்திரமில்லை இவனுடைய பாட்டின் அமைப்பு மனோஹரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆவிருத்தமும் அதற்கு முன்னே பாடப்பட்ட ஆவிருத்தத்தனின்று இயற்கையாக வளர்ந்த வளர்ச்சியாகும்; அதே மாதிரி தனக்குப் பின்னே வரப் போகும் ஆவிருத்தற்குத் தோற்றுவாயும் ஆகும். ஒவ்வொரு ‘சங்கதி’யும் அந்தந்தப் பதங்களை அலங்கரிக்க விழுந்த அலங்காரமாகுமேயன்றி, பதங்களையே முழுக்கி மூடிவிடும் வெறும் சப்த சாலங்களாகா. ஒவ்வோர் ரசமும் போதிய அளவு விஸ்தரிக்கப்பட்டு இயற்கையான சோபானங்கள் வழியாக அதனோடு பொருந்தக்கூடிய வேறொரு சுவைக்கு வழிகாட்டிக் கொண்டு போகும். கடைசியாக எல்லா ஆவிருத்தங்களும் எல்லாச் சுவைகளும் இன்னலன் தெரிய வல்லாருடைய இருதயம் லயித்துப் போகும். ஓர் சமஷ்டி உணர்ச்சியை உண்டாக்கும்.

அதே மாதிரித்தான் ஒரு காவிய ரசனையும். காவியத்தின் தனித்தனிப் பாகங்களிலுள்ள இன்சுவை ஒரு பக்கமிருக்க, பாகத்தும் பாகத்துக்கும் உள்ள பொருத்தம் அழகாக இருப்பதோடு காவியமானது நம்ம சமஷ்டீகரணத்தைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இந்த சஷ்டீகாரம் அழகாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காவியமானது ரசிகருடைய இருதயத்தைக் கவர்ந்து எல்லாரும் விரும்பத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக்காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயத்துக்கும் மற்ற அவயங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும், அவயங்களுக்கும் அரண்மையின் சமக்ர அமைப்புக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக்காட்டும் விமர்சனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.

 

மகளின் சித்திரங்கள்

ஜிஃப்ரி ஹாசன்

சித்திரம் போல் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறாய்
எவரும் கண்டுகொள்ளாத
உன் ஓவியத்தில் உயிரோட்டத்தையும்
அன்பையும் காண்கிறேன்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும்
உன் கோடுகள் மீறியுள்ளன
இதயங்களை சுண்டி இழுக்கும்
நிறப் பூச்சுக்கள் அதில் இல்லை
எனினும் அதில் உன் துடிப்பான கனவுகளும்
வேட்கையுமுள்ளன
காகிதங்களில் பட்டாம்பூச்சிகளைப் போல்
நீ எதையோ கிறுக்குகிறாய்
நான் இப்போதெல்லாம்
நிஜப் பட்டாம்பூச்சிகளை இரசிப்பதே இல்லை
பூக்களை நீ வரைகிறாய்
காகிதங்களில் ஒரு நந்தவனத்தின்
வாசனை ஒட்டிக் கொள்கிறது
ஏதோ ஒரு மனித உருவைக் கிறுக்கி விட்டு
“தந்தையே, நான் உங்களை வரைந்துள்ளேன்“
என்கிறாய்
எனது புகைப்படத்தைக் காட்டிலும்
என்னை அது துல்லியமாய் காட்டுவதாக
உணர்கிறேன்
நம் வீட்டின் சுவர்களை
உன் கிறுக்கல்கள் அசிங்கப்படுத்தியிருப்பதாய்
சொல்லப்படும்போது
அவை அலங்காரங்கள் என
தயக்கமின்றிச் சொல்கிறேன்
நீ நினைக்கிறாயா?
உனது கிறுக்கல்களுக்கு
என்னைப் போல் ஒரு இரசிகன் கிடைப்பானென்று

இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

பானுமதி. ந

8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

இதை நீர் சூழ்ந்த உலகு என்கிறார்கள். பனிக்குடத்துடன் பிறந்து நீர்க்குடத்துடன் நம் வாழ்வு நிறைகிறது. துவங்கும் புள்ளியும், முடியும் புள்ளியும் நீர்… நீர். நம் கடவுளின் தலையிலும் நீர்… அவன் உறைவிடமும் நீர்…

காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தரங்கிணி அறிமுகமாகிறாள். அந்த ஆறுதான் அவளின் நதிமூலம்.. “எங்கம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியேதான் நான் ஆயிட்டேன்- வேண்டியவா, வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி, எங்கெங்கே எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி, ஒரு சமயம் பெருகி, ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்,” தரங்கிணி இராக “மாயா”.

அவள் கணவன்… தங்களிடையில் குழந்தையும் கூட தனிமையின் பங்கம் என நினைப்பவன். அவன் சொல்லும் ஒரு தொடர் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ”தனியாயிருக்கலாம். ஆனால்…தனிமையாயிருத்தல்…..அப்பா

குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப் போய் தான் இறந்து போய்விட்டோம் என்பதை உணரும் உணர்வு மாத்திரமிருந்தால் எப்படி இருக்கும்?” அவனை அலைக்கும் தீயை அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக் கொள்ள முடிந்தது. சாவும் சத்தியமும் அவனளவில் ஒன்று.

அவள் உயிர் நீட்சி ஒன்று தான் வறட்சி தீர்க்கும் மருந்து என்கிறாள். சொல்லாலே மந்திரம் செய்யும் கதை இது. ”எனக்கு உயிர் மேல்தான் ஆசை. நான் செத்துப் போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர்.”

இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம் இப்படித்தான்”- அவள் சொல்லி, அவள் உணர்ந்து, இன்னுமொரு கல்யாணத்திற்கு அவன் செவி சாய்ப்பதை அவள் தாயாகப் போகும் தருணத்தில், தன்னை வளர்த்த ஆற்றின் கரையில் அவள் அறிவது….அப்பா! ”வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக்கொத்தாய்ச் சடை பிடித்த பிடரி மயிர் அலை மோத தலைகள்  உதறிக் கொண்டு வெள்ளை குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக் கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.”

மாயா தரங்கிணி… ஆறு வளர்த்த இராகம்… அதுவே அவள் அகம், அதுவே அவள் புறம். அதுவே அவள் அறம் அதுவே அவள் மறம்.. அவளுயிரின் தொடர்ச்சி… தன்னை பலியிட்டாவது சாவிலும் வாழும் ஆசை.

அவள் புன்னாக வராளி..அவள் தொடங்குவதே நிஷாதத்தில்தான், முடிவதும் அதில்தான்
நி ச ரி க ம ப த நி நி த ப ம க ரி ச நி

இனி பங்கஜம்——நளபாக விருந்தில் முதன்மையான உணவு.

இவளை இனம் கண்டு கொள்வது அத்தனை எளிதில்லை.இவள் அந்த கலவையில் செய்த உணவோ, இந்தக் கலவையில் செய்த உணவோ என உண்பவனை கேட்டுக் கொள்ளச் செய்கிறார் தி. ஜா.

அதிக முதன்மையில்லாமல் அறிமுகமாகி நினைவில் நிற்கும் அற்புத ருசி. கண்களுக்கும், நாவிற்கும், வயிற்றிற்கும், மனதிற்கும் இசைவான ஒரு அமுது. ”இவளைப் பார்த்தால் இருபது வயது போல- முப்பது வயது போல- நாற்பது வயது போல-எல்லா வயதும் தெரிகிற தோற்றம்”. இது மாமியாரான ரங்கமணி மருமகளைப் பற்றி நினைக்கும் தோற்றம்.

யாத்ரா ஸ்பெஷலில் சமையல் தலைமையாக ரங்கமணி கண்ட காமேச்வரன் – ஒரு ஆசானாக, மகனாக, சமையல் கலைஞனாக, அம்பாள் உபாசகனாக, அறிவு, அழகு, ஒழுக்கம், பண்பு ஒருமித்தவனாக, தன் வம்சத்தின் சாபத்தை களைபவனாக ரங்கமணியைக் காண வைக்கிறது. அந்த யாத்திரையில் வரும் ஒரு ஜோதிடர் சொல்வது, அவளைச் சிந்திக்க வைத்து காமேச்வரனை தன் வீட்டில் தனக்கு மகனாக சமையல்காரனாக, பூஜை செய்து குல சாபம் போக்குபவனாக அழைப்பு விடுக்கிறது. இரவல் வம்சமாகவே வளரும் தன் குடியில் தன் வம்சத்து வித்து வேண்டும் என அவள் நினைக்கிறாள். அவளுக்கு ஒரு தத்துப் பிள்ளை உண்டு. அந்தப் பிள்ளை இந்த பங்கஜத்திற்கு சரியான இணை இல்லை என நினைக்கிறாள்.

ஒரே கூரையின் கீழ் வாழும் மூவரின் தனிமையைப் போக்க அவன் வருகிறான். அவர்கள் அன்பு செலுத்த அவன் வேண்டும். அவன் இது வரை அறியாத குடும்ப நேசத்தை அவர்கள் மூலம் அனுபவிக்கிறான். அவன் எல்லாமுமாக இருக்கிறான். தொட்டிச் செடியாக இருந்தவர்கள் தோட்டத்துக் கொடிகளாக, காற்றையும், சூரியனையும்,மிகும் நீர் உறிஞ்சும் மண்ணையும் அனுபவிக்கிறார்கள். இத்தனைக்கும் இடையில் ரங்கமணியும் பங்கஜமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு….

உனக்கில்லை …. எனக்குத்தான்”. இளமையும், மிக மிகத் தனிமையுமான நடுவயதும், வாழ்வின் பேழையிலிருந்து பருகத் தவிக்கின்றன. ரங்கமணியின் வயதும், நிலையும் அவளை இலைகள் மூடிய கனியெனக் காட்டுகின்றன. இளமையும், வாழ்வின் உரிமையும் பங்கஜத்தினை எண்ணத்தினால் சற்று அசைத்துப் பார்க்கின்றன. யாரும் இல்லா ஓர் முன்னிரவு சமயத்தில் காமேச்வரனின் விரல்களை பற்றச் செய்கின்றன. தனக்கு அதுவே போதும் என்று அவள் சொல்கையில் தி ஜா கத்தியின் மேல் நடந்த நம்மை பாதுகாப்பாக இறக்கி விடுகிறார். மன இயல் வல்லுனர் போல் தி ஜா போடும் கோலங்கள். உணர்ச்சியில் தடுமாறாத விவேகம்.. ஒரு சமையல காரன் சமைக்கும் மன- மண விருந்து. அவன் கரம் பட்டு அவள் தன் கணவனுடன் உடன்பட்டு காமன் எழுதும் உயிரோவியம்.

ஊரோடு உறவாகிறது அவனுக்கு. புழங்காத அறையினுள் காற்றும், வெளிச்சமும் அவனால் வருகிறது. நட்பும், நேசமும் கலகலப்பும் தனிமையைப் போக்கும் அருமருந்தென செயல்படுகிறது. பங்கஜத்திற்கு சீமந்தம் வருகிறது. அவன் அனைத்துமாக இருக்கிறான். அதில் தத்து வந்த பிள்ளையின் சொந்தக்காரர்களும், குணம் கெட்ட ஊர்க்காரரும் இவனை இணைத்துப் பேச, இந்த சின்னத்தனம் தாங்காது அவன் குமுறுகிறான். பங்கஜத்தின் கணவனோ இந்த அவப் பேச்சுக்களை ஒதுக்கி விடுகிறான். அவன் இருவரின் மேல் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை மிக அழகாக வெளிப்படுகிறது.

தன் இருப்பிடம் விட்டு வராத பங்கஜம். அவள் புகுந்த ஊரின் பல பகுதிகள் அவள் அறியாதவை. வறட்டு வாழ்வில் வசந்தம் என வந்தவன் அவன். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தோழமையானால் இந்த உலகில் தனிமை என்பதே இல்லை. உடல் கவர்ச்சியால் அவர்களின் நட்பை கொச்சைப்படுத்தும் சமூகத்தில், தனிமை என்றுமே தகிக்கும் நெருப்புதான். ஆனாலும், புனிதத்தை மட்டுமே இங்கே தி. ஜா நினைக்கவில்லை. ”உனக்கில்லை எனக்குத்தான் “ என்பதில் உளம் விழையும் நட்பை பூரணமாக அறிய உடலும் உணர வேண்டும் என்னும் மனிதர்களின் நுண்ணிய ஆவலை (ஆசை அல்ல) தி ஜா வினால் மட்டுமே விரசம் இல்லாமல் சொல்ல முடியும். சொல்லி பங்கஜத்தை, காமேஸ்வரனை, துரையை, ரங்கமணியை, ஜோசியக்காரரை வெற்றி பெறச் செய்யவும் முடியும்.

காமேச்வரன் தன் சில உடைமைகளை ரங்கமணியின் அகத்தில் வைத்துவிட்டு தன் பழைய யாத்ரா வேலைக்குத் திரும்புகிறான். கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் சொல்கிறான்.

வராளி… பொதுவாக கச்சேரிகளில் நடுவில் மட்டும் பாடப்படும் ஒரு இராகம். முதலில் பிடிபடாது போனாலும் பின்னர் தன் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துவிடும். சுரங்கள் ஆரோகணத்தில் வரிசைப்படி இல்லை. அவரோகணத்தில் இருக்கிறது. இரண்டு “க” ஏறுமுகத்தில் வருவதுதான் அதன் அழகு; அதன் எழுச்சி.. கீழே பாடுகையிலும்,நிதானமான ஆலாபனையிலும் உருவெடுத்து பின்னர் மலை அருவியிலிருந்து பெருக்கெத்தோடும் ஆறு போன்ற இராகம். எல்லோரும் எப்பொழுதும் அதைப் பாட முடியாது. தம்பூரின் சுருதியோடு தன்னைக் கலந்து அது இழையோடும்.

பங்கஜ வராளியைப் பாட தி. ஜாவால் தான் முடியும். தரங்கிணியைப் புன்னாக வராளியாகப் பாட லா.ச.ராவால் மட்டுமே முடியும்.

வராளி: ச க ரி கம ப த நி ச ச நி த ப ம க ரி ச
புன்னாக வராளி: நி ச ரி க ம ப த நி நி த ப மக ரி ச நி

வயலினில் ஒன்று. மகுடியில் மற்றொன்று. இரண்டுமே அம்சம்தான்.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புலரி

சிகந்தர்வாசி

கடற்கரையோரம் உட்கார்ந்துக்கொண்டு
அவன் கால் தடங்களை பார்க்கிறான்

சம்ஸார சாகரத்தில் ஒரு துளி ரத்தம் போல்
நீர் மேல் காலைச் சூரியன்

கண்ணுக்கு தெரியாத இலக்கை
நோக்கிப் பறக்கும் ஒற்றைப் பறவை

அவன் எழுந்து நடக்கிறான்

காலதேவன் மெல்லிய காற்றாய்
கால் தடங்களை அழிக்கத் துவங்குகிறான்

கிழக்கு வெளுக்கிறது

நெடுமரம்

ஸ்ரீதர் நாராயணன் 

 

tree-life-18184847

என் வழியில் நின்று கொண்டிருக்கும்
நெடுநெடுவன உயர்ந்திருக்கும் விருட்சம்.

இலைஇலையாக விரித்து
என்னைப் பற்றியிழுக்கிறது.
கிளைகிளையாகப் பற்றி
மேலேறுகிறேன்.
கணுக்கணுவாய் பிளந்து
கையில் எடுக்கிறேன்.
துகள்துகளாக்கி தொகுத்துக் கொள்கிறேன்.
செதில்செதிலாக சிதறடித்து
சேர்த்து எடுக்கிறேன்.

அள்ளிஅள்ளி உண்டு
ஆற்றல் பெருக்குகிறேன்.

நிமிர்ந்து எழுந்து வேரூன்றி
கிளைகள் பரப்பிக் காத்திருக்கிறேன்,
நீ கொண்டுவரும் கோடலிக்கென.

 

Picture courtesy: Deviant Art