எழுத்து

சிறுகதைகளின் முடிவு- டி. சி. பாய்ல்

(அட்லாண்டிக் இதழில் ஜோ பாஸ்லர் தொகுத்த கட்டுரையின் ஒரு பகுதி)

ரே கார்வர் 1970களில் அயோவா நகரிலிருந்த காலத்திலேயே அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. அங்கு நான் ஐந்தரை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், முதலில் ரைட்டர்ஸ் வர்க்சாப்பில் எம்எப்ஏ படித்தேன், அதன்பின் அங்கு பிஎச்டி செய்து முடித்தேன். அப்போது அவர், வுட் யூ ப்ளீஸ் பி கொயட், ப்ளீஸ்? என்ற அவரது முதல் நூலை மட்டும்தான் பதிப்பித்திருந்தார். அதற்கு முன் எங்களைத் தவிர வேறு யாரும் அவரைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை- அவர் எழுதிய கதைகள் எவ்வளவு மகத்தானவை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், சிறுபத்திரிக்கைகளில் அவர் எழுதிய ஒவ்வொரு கதையையும் தேடிப் படித்தோம். (more…)

மோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை

மித்யா

image

கொரியன் இயக்குநர் சோவா-குர் இயக்கிய ‘மோன்-ரோஷ்’ என்னும் படத்தை நேற்று பார்த்து பிரமித்து போனேன். உலக சினிமாவின் ஆகச்சிறந்த உன்னதங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் நான் இந்த படத்தை பார்க்க செல்லும்பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றேன். நீங்கள் இந்த இயக்குநரின் பெயர் கொரியன் பெயர் போல் இல்லாததை கவனித்திருப்பீர்கள். அதே போல் படத்தின் பெயரும் வேறு மாதிரி இருப்பதை கவனித்திருப்பீர்கள். இரண்டு பெயர்களையும் திருப்பி போட்டால் உங்களுக்கு கிடைப்பது: ரோஷ்மோன் மற்றும் குரோசோவா- ஆம், இந்த படத்திற்கும் குரோசோவாவின் படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. (more…)

இறுதிச்சுற்று நிலவரப்படி

அது
இப்படி
இவ்வளவு
மோசமாக
நடந்திருக்கக்கூடாது;
இல்லை
இதை
ஏற்றுக்கொள்ளவே
முடியாது;
பாவம்
இந்தமுறையேனும்
அவன்
காப்பாற்றபட்டிருக்க வேண்டும்.
தனி ஊசலாடும்
நினைவுகளை
ஒன்று திரட்டி
கண்களில்
இரத்தப்படலத்துடன்
நெடிவீச்சத்தை
தாண்டி
குறுக்குவெட்டுப்பட்டும்
நிதானித்து
ஏழு ரெண்டு
மைல் கடந்து
Yes I’ve Made It
என
ஆங்கிலம்
கலக்காமல்
அதிசயம் தான்
ஆனாலும்
இதோ
அடைந்துவிட்டேன்
என் இலக்கை
என்று
தமிழில்
சொல்ல
நினைத்திருந்தான்
நந்தகுமாரன்.
என்ன
செய்வது
இந்த
முறையும்
ஆறு
பேப்பர்
அவுட்!

கண்ணாடிச் சாளரம்

சோழகக்கொண்டல் 

கம்பிகள் இன்னும் சூழாத
கண்ணாடிச் சாளரம் ஒன்று
எனது வீட்டின் சுவற்றில்
இருக்கிறது

மழைக்கு வேர்க்கும் வெளிப்புறமும்
மழைநின்றும் குளிரும்
உட்புறமும் கொண்டு
உள்ளீடற்ற வெளியால் பிரிந்த
இரட்டைக் கண்ணாடிகளால் ஆன
மாபெரும் சாளரம் அது

ஒன்றையொன்று கவிழ்ந்து
அடைகாக்கும் வானவில்களும்
ஒன்றையொன்று துரத்தி
அலைக்கழியும் மேகங்களும் கொண்ட
வானங்கள் அதில்
வரையப்படுகின்றன

பருவங்கள்தோறும் நிறம் மாறும்
கண்ணாடிகள் வழி
கண்காணிக்கின்றன
ஓராயிரம் கண்களோடு
ஒளிரும் இரவுகளும் சூரியன்களும்

காலங்கள் மாறும்தோறும்
உரித்து ஒட்டப்படுகின்றன
புதுப்புது ஓவியங்கள்

இன்னும் திரையிடாமல்
திறந்தே வைத்திருக்கிறேன்
அந்த சாளரத்தை

ஒளியும் இருளும்
உள்நுழைய இருக்கும்
ஒற்றைவழி அதுதானே
என் வீட்டிற்கு.

ஒளிப்பட உதவி – Wyn-Lyn Tan

தாழ்வான கோவில்

காஸ்மிக் தூசி –

Low Temple-image-1

கடவுள்களை
இருளில் வைத்திருக்கிறது
தாழ்வான இந்தக்கோவில்
பூசாரியிடம்
தீப்பெட்டி இரவல்தர
ஒவ்வொருவராக
வெளிச்சத்துக்கு வருகிறார்கள்
கடவுள்கள்

ஸ்வாரஸ்யத்துடன் பார்க்கும் பஞ்சலோகம்
புன்னகைக்கும் கருங்கல்
ஆச்சரியம் ஏதுமற்ற
இன்னொரு கடவுள்

தீக்குச்சி எரியும்
இடைவெளியில்
சைகைகள்
உயிர்த்தெழுந்து மறையும்
ஒவ்வொன்றாக

தோன்றி மறையும்
அபிநயம்
மீண்டும் மறையும்

அந்த சாமி யார்
எனக் கேட்டால்
எட்டுக்கை அம்மன்
என்கிறான் பூசாரி

சந்தேகமாக இருமுகிறது
ஒருதீக்குச்சி
எண்ணிப்பார்த்தால்
கைகள் பதினெட்டு

எதிர்த்துக்கேள்வி கேட்டால்
இருக்கலாம் ஆனால்
இது எட்டுக்கை அம்மன்தான்
என்கிறான் பூசாரி

வெளியே
வெய்யிலுக்கு வந்து
சார்மினார் சிகரெட்டை
பற்ற வைத்தால்
இருபதடி
ஆமையின்மீது
ஏறி விளையாடிகொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய A Low Temple என்ற கவிதையின் தமிழாக்கம்)