கவிதை

துணையிழந்த கிழத்தியொருத்தி

பூவன்னா சந்திரசேகர்

துணையிழந்த கிழத்தியொருத்தி
இழுத்துப் போட்ட சுருட்டின்
பொறியெடுத்து கனல் கூட்டி
குளிர் காய்கிறான்
பருவம் ஏய்த்து உடைந்தொழுகும்
வானின் துளைகளையெல்லாம்
சாரம் கிழித்து திரையாக்கி
வேடு கட்டுகிறான்
நிரைத்தது போக
மீந்தவை யாவும்
எதுக்களித்து நிற்கும்
சுனை சுற்றி சுருண்டு கிடந்து
அணைக் கட்டுகிறான்
சேரேறி கரையான அவனுக்கு
கிடாயும் பொங்கலும்
எப்போதேனும் கிட்டும்
குறுகிக் கிடந்த உடல் நோக
நேர் நிமிந்தவன்
நெட்டியுடைக்கும் நாளில்
ஊரழியும்.

அந்தியில் கரையும்

புஷ்பால ஜெயக்குமார்

அந்தியில் கரையும்
காகத்தின் ஓசை
சொல்லமுடியாத தூரத்தில்
முன் எப்போதோ கேட்டது
தற்போது ஒருவன்
நடித்து முடித்த
கதைகளின் நிகழ்வுகளை
படித்த புத்தகத்தின்
பக்கங்கள் போல்
கூறாக நின்றது காகிதங்கள்
மறதியில் நினைவுறும்
அதிசயத்தின் சல்லடையில்
சலித்த அனுபவங்கள்
சிக்கியது விடாப்பிடியாக
சுமக்கும் ஞாபகங்கள்
பகடையை உருட்டும்
இச்சைக்குப் பேர் போன
முடிவினை நோக்கி
கையின் விசை கூட
நிலப்பரப்பில் நின்றபடி
கல்லை வீசியவனின்
உள்ளுணர்வின் புரியாமையினால்
கேட்டது கிடைக்கும்

நீரற்ற மணல்வெளி

ம இராமச்சந்திரன்

மணல்நீரால் நிரம்பி வழிகிறது அது
ஒற்றை மனிதாய் நடுவில்

நீர் சூழ்ந்தாலும் மண்ணால் சூழப்பட்டாலும்
முகிழ்த்தெழும் அச்சத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

சுட்டெரிக்கும் வெயில் பொழுதில்
மூலநதித் தேடி
வழித்துணை கம்புடன் பயணம்

காட்டின் மெல்லோசை அசைவுகளின் சரசரப்பு
உயிர்ப் பயத்தை உச்சப்படுத்தியது

அருவி ஓசையில் அகமகிழ்ந்து
மனித நடமாட்டத்தால் உயிர்ப்புற்றேன்

வாகன வரிசை மனித கும்மாளம்
காட்டை நிறைத்தன
வழக்கம் போல
குரங்குகளின் காத்திருப்பும் ஏமாற்றமும்

தனித்திருத்தலின் பொருளற்ற சந்தம்
கூட்டிணைவின் உள் மகிழ் அமைதி
நதிமூலத்தை உணர்த்திவிட்டன

பொழுதடங்கி ஈரக்காற்றின் வருகை
வந்த வழி நோக்கி கால்களின் எத்தனிப்பு

கைகாட்டியும் நம்பிக்கையற்று கடந்துசெல்லும்
வாகனங்களின் மனப் பயத்தையும் பாதுகாப்பையும்
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

மணல்வெளியின் நடுவில் மரணப் பயத்தோடு
வாழ்வுத் தேடும் கால்களின் வேகத்தில்
உயிர்த்திருக்கும் உயிர்ச்சாரம்

ஆசுவாசப் பெருமூச்சில் ஆதி மனிதன்
காடலைந்த வலியும் வன்மமும்
என்னோடு பயணிக்கின்றன

கூட்டத்தோடு கூடியிருந்தாலும் வந்து
காதலித்துக் கொள்ளும் அந்தத் தனிமை

அக்னிசாட்சி

அஞ்சதி 

கொடுந்தீயில்
வெந்த அவள் மனத்தை
கொத்தித் தின்கிறது
குடும்பக் கட்டமைப்பு
எதையும் கேட்காமல்
அலுத்துப் போன அவள்
அங்கங்களில் மறந்தே போனது
மனமிருக்கும் இடம்
எல்லோருக்கும் சூரியோதயம்
அவளுக்கோ சந்திரோதயம்
வலிகளைக் கடந்திட
வழக்கமாகிப் போனது
அவள் மேல் உழும் காளைமாடுக்கு
எவ்வித உணர்வுகளும் புரியாது
அக்னி சாட்சியில்
அன்றாடம் கேட்கிறது
அபயக்குரல்
எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறாள்
தன் பிள்ளைக்கு வேண்டுமாம் அப்பா
மறுநாள் அக்னி பிரவேசத்தில் குளிக்க
அவள் அங்கங்களை அலசுகிறாள் இல்லற அமிலத்தில்.

தீண்டுவாரற்ற சடலங்கள்

தாட்சாயணி

தீண்டுவாரற்றுக் கிடந்தன சடலங்கள்
உயிர் மூச்சைப் பிடித்து
நாங்கள் ஓடிக்கொண்டிருந்த போது,
தெருவிலே தீண்டுவாரற்றுக் கிடந்தன சடலங்கள்.
முகமிழந்து, நிறமிழந்து,
முழங்கைகள், கால் இழந்து
தலை இழந்த முண்டங்கள் ஆகி,
வீதியெங்கும் சதைத்துண்டங்களாக,
தீண்டுவாரற்றிருந்தன அவை

இரைந்து கொண்டிருந்த எமன்களை
வானம் அணைத்து வைத்திருந்தது.
எரிகுண்டுகள் பின்னாலேயே சீறிக் கொண்டிருந்தன.
ஓயாத சில கரங்கள்,
தீண்டுவாரற்றுப் போன அந்தச் சடலங்களை
வீதியோரக் குழிகளுக்குள்
போட்டு மூடிக் கொண்டிருந்தன.

தீண்டுவாரற்றுக் கிடக்கும் சடலங்களைப் பற்றி
நீங்கள் யாரேனும்
ஒரு கணமாவது நினைத்துப் பார்த்ததுண்டோ?

நாங்கள் அறிந்திருந்தோம்,
யுத்தத்தின் அனல் மூண்ட நாட்களில்,
துரோகத்தின் நிழல் மூடிய காலங்களில்
தீண்டுவாரற்றுக் கிடந்தன
ஏராளம் சடலங்கள்.

வெறுவெளிகளில் கிடந்த பள்ளங்களில்
குண்டுகள் வீழ்ந்து மூடியிருக்கும் சடலங்கள்

மலக்கூடக் குழிகளுக்குள்,
நிர்ப்பந்தமாய் வீசி மூடப்பட்ட சடலங்கள்

பதுங்குகுழிகளின் சரிவில்
சமாதியாக்கப்பட்ட சடலங்கள்

நள்ளிரவின் இருண்மைக்குள்
அடையாளமற்றுத் துண்டிக்கப்பட்ட தலைகளோடு
கம்பங்களில் கட்டப்பட்ட சடலங்கள்

எனத் தீண்டுவாரற்ற சடலங்களின் கதை
சொல்லச் சொல்ல நீளும்.

இப்போதும்
தீண்டுவாரற்றுக் கிடக்கின்றன சடலங்கள்.
யாரிடமும் கொடுப்பதற்குமில்லை
யாரும் ஏற்பதற்குமில்லை.

உறவுகளின் கதறலொலி மட்டும்
தூரத்தில் எங்கோ கேட்கும்

வானத்தில் ஆத்மாக்கள்
சுழன்றடித்துக் கொண்டேயிருக்கின்றன.

வேண்டத்தகாத ஒரு பொருளாய்
உடல்களை வீசியெறிந்து பற்ற வைக்கிறார்கள்.

சுவாலை எழுகிறது
சுவாலை எழுகிறது

தீண்டத்தகாத உடலங்களெனினும்,
சுவாலை மட்டும்
அவ்வுடல்களைத் தழுவிக் கொண்டேயிருக்கிறது.