Author: பதாகை

பட்டுவாடா

கலைச்செல்வி

அவனுடையது ஓடைக்கரையில் அமைந்த பசுமையான மலையடிவார கிராமம். தன் வயதொத்த இளைஞர்களோடு ஓடை நீரில் பாய்ந்து குதித்து விளையாடுவதும், அவ்வப்போது சினிமாவும், சனியன்று கூடும் சந்தையில் பெண் பிள்ளைகளை மறைந்திருந்து பார்த்து பரவசமடைவதையும் தற்போதைய பொழுதுப்போக்குகளாய் கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் இந்த மரணம் எதிர்பாராத ஒரு கையறு நிலை.

நிற்காமல் வழிந்த நீரை துடைக்க முயலாமல் நடந்தான். கண்ணுக்கெட்டிய தொலைவில் குடிசையின் உச்சிகள் தெரியத் தொடங்கின. இது அவனுக்கு புதிய ஊர் அல்ல. அடிவாரத்திலிருந்து சிறிதளவே உயரத்திலிருந்த இந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள் அவன் வகுப்பில் படித்திருக்கிறார்கள். இப்போது .இறந்துக் கிடக்கும் அவனுடைய அம்மா இங்கு கத்தரி வற்றலும், அப்பளமும், உப்பு மாங்காயும் கொண்டு வருவாள். அதற்கீடாக பண்டமோ, பணமோ வாங்கிக் கொண்டு திரும்புவாள். சோனியாய் திரியும் நாய்கள், சாணம் மொழுகிய களங்கள்.. கால்நடைகள்… வளர்ப்புச் செடிகளை தொடர்ந்து குடிசைகள் தென்படத் தொடங்கின. தபால்களை கொடுக்கவும் சேகரிக்கவுமாக சென்ற அவனது அப்பா இப்போது இங்குதானிருக்கிறார் என்று திடீரென்று அதீதமாக நம்பத் தொடங்கினான். அந்த நம்பிக்கையின் முடிவில் ஆற்றுப்படுத்த முடியாத அழுகை வந்தது.  அவரை பார்த்து விட்டால் போதும் என்று மனதார எண்ணினான்.

கண்ணீரும்கம்பலையுமாக நின்ற அவனை பார்த்ததும் அந்த ஊர் பதறிப்  போனது. நிறுத்தவியலாத அழுகையோடு அவர்களிடம் தகவலை சொன்னான். “அடப்பாவீ.. நல்லாருந்த பொம்பளைக்கு என்னாச்சு திடுப்புன்னு..” என்று அங்கலாய்த்தது. இவன் ஒரே பிள்ளை என்று தெரிந்துக் கொண்டதில், “இந்தப் புள்ளக்கு ஒரு வழிய காட்டி வுடாம அப்படியென்ன அவசரமாம்..“ என்று பரிதவித்தது. அவனுடைய அப்பா நேற்று மதியமே கிளம்பி விட்டதாக வருத்தம் தெரிவித்தது,

”நா கௌம்பறேன்..” என்றவனை நிறுத்தி, “ஒங்கப்பா தபாலு மட்டுமா கொண்டாருவாரு.. நாட்டுல.. தேசத்தில நடக்கற நல்லதுகெட்டத அவரு வாயால கேட்டாதானே கேட்டாப்பல இருக்கும்.. மனுசன் இனிம ஒடஞ்சில்ல போயிடுவாரு..” என்று விட்டு சோற்றையள்ளி இலையில் வைத்தது. அவன் தீவிரமாக மறுத்து அழுதான்.

”தம்பி.. அவுத்தால மல கொஞ்சம் செங்கூத்தா போவும்.. பாத்துக்க.. வேணும்னா யாரவாது அனுப்பி வுடவா ஒத்தாசக்கு..” தவிப்பாய் உபசரித்தார்கள். அதையும் மறுத்து விட்டு கிளம்பினான்.

மலையேற்றம் அத்தனை புதிதில்லை என்றாலும் ஏற ஏற மலை உயர்ந்துக் கொண்டே செல்வது போலிருந்தது. அதுவும் அவர்கள் கூறியது போல செங்குத்தான பாதையாக இருந்தது. இதற்கு மேல் அவனுக்கு எல்லாமே புதிது. தன்னையும் ஒருநாள் அழைத்துச் செல்லுமாறு அம்மா, அப்பாவை கேட்டிருக்கிறாள். அதை நினைத்துக் கொண்டபோது மீண்டும் அழுதான். அப்பா பாசக்காரர்தான். ஆனால் பணியில் இடையூறுகள் வருவதை விரும்புவதில்லை. அவரை இப்போதே பார்த்து கதறி அழ வேண்டும் என்ற தோன்றியது. அந்த எண்ணமே அவனுக்கு நடப்பதற்கான தீவிரத்தை கொடுத்தது. கீழிருந்து பார்க்கும்போது இரட்டை மலைகளாக தெரிந்தவை மேலேறியதும் அடுக்குகளாய் பிரிந்துக் கிடந்தன. ஆயினும் ஆட்கள் ஆங்காங்கு நடமாடியது தெம்பளித்தது. அந்த வழியே வந்தவர்கள் அலுத்து களைத்திருந்த அவனுக்கு நீரோடையை கைக்காட்டி விட்டுச் சென்றனர். கைகளை குவித்து நீரை ஏந்தி முகத்தில் அடித்துக் கொண்டான். பிறகு அப்படியே அள்ளிப் பருகினான்.  பாதை மடிந்து திரும்பி ஊர்களை அடையாளம் காட்டியது. சிறு சமவெளிப் பரப்பு அது. அதில் குடியிருப்புகள் அடர்வாக பரவியிருந்தன

அவனுடைய அப்பாவை அங்கு எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. சேதியை கேள்விப்பட்டதும் அவர்கள், அவனுடைய அப்பாவின் மீது கரிசனம் கொண்டார்கள். அவர் மனம் தேறும் வரைக்கும் எங்கும் அலைய வேண்டாம் என்றும் தபால்களை தாங்களே வந்து வாங்கிக் கொள்வதாகவும் பரிவோடு சொன்னார்கள். மேலே முன்னேறியபோது மலையடுக்குகள் பாதை குழப்பத்தை ஏற்படுத்தின. அவர்கள் மேல் நோக்கி விரலை நீட்டியது எந்த மலையடுக்கை என்று புரியாமல் அங்கேயே நின்றபோதுதான் கால்களின் வலியை உணரத் தொடங்கினான். இத்தனை மக்கள் இங்கு வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு கால்களை தவிர வேறு பொது போக்குவரத்து ஏதுமில்லை என்பதும் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இங்கெல்லாம் அதிகபட்சம் மாலை நான்கு மணிக்கு மேல் பாதுகாப்பில்லை என்பார் அப்பா. அதற்குள் அவரை பிடித்து விட வேண்டுமே என்ற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அவன் இன்று விழித்த நேரமே சரியில்லை. இல்லையெனில், இத்தனை பெரிய துரதிர்ஷ்டம் அவனுக்கு வாய்த்திருக்காது. அவனும் அப்பாவும் அம்மாவுமாக இருந்த அன்பான கூடு இன்று சிதைந்திருந்தது. அதை இந்த நொடி வரை அவனால் அப்பாவுக்கு தெரிவிக்க முடியவில்லை. ஒருவேளை அப்பா அருகில் இருந்திருந்தால் அம்மா இறந்திருக்க மாட்டாளோ..? தான் எண்ணியதை உறுதியாக நம்பினான். அம்மாவும் இதே எண்ணத்தோடுதான் இறந்திருப்பாள் என்றும் நம்பினான். ஏதோ ஒரு பாதையில் மனம் உந்தித்தள்ள நடக்கத் தொடங்கினான். நல்லவேளையாக அது சரியான பாதையாக இருந்தது. அப்பா அங்கு வரவேயில்லை என்றார்கள். பிறகு அவன் பதறிப் போனதை உணர்ந்து தபால்கள் ஏதுமில்லாத நாட்களில் அவர் ஊருக்குள் வராமல் செல்வது வாடிக்கையான ஒன்றுதான் என்றார்கள்.

அவன் அந்த பதற்றமான விஷயத்தை சொன்னதும் “எப்போது..“ என்று அதிர்ந்தார்கள். “இன்று அதிகாலை..“ என்றான். அதற்குள் அவர்களுள் ஒருவன் சரிவின் மறுப்பக்கத்திலிருக்கும் குடியிருப்புகளில் அவரின் இருப்பு தென்படுகிறதா என்று பார்த்து விட்டு வருவதாக புறப்பட்டிருந்தான். வேக வைத்த வள்ளிக்கிழங்கும், புளிப்பு ரசமும் கொடுத்தார்கள்.  அவர் நிச்சயம் இங்கிருந்து கிளம்பியிருக்கக் கூடும் என்று ஊகப்பட்டார்கள். அதையே அங்கு சென்று வந்தவனும் ஊர்ஜிதப்படுத்தினான்.

இதற்கு மேல் இங்கு நடமாடுவது அத்தனை நல்லதல்ல என்று வற்புறுத்தினார்கள். அவன் நிலைமையை சொன்னான்.

“பெரியவுங்க.. ஊர்க்காரங்கள்ளாம் இருக்காங்கள்ள.. பாத்துக்குவாங்க.. ராத்தங்கீட்டு போறதுதான் நல்லது..” என்றனர்.

அவர் தபால்களோடு எப்போது கிளம்பினார் என்று அக்கறையாக விசாரித்தனர். செவ்வாய்கிழமை காலையில் என்றான். திங்களன்று அம்மாவுக்கு துணிதுவைக்கும் சோப்புகளும், இரும்பு வாணலியும் வாங்கி வந்தார். பிறகு பொட்டுக்கடலையை மறந்து விட்டதாக அவள் நாக்கைக் கடிக்கவும், மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அப்போது அவன் ஓடை நீரில் விளையாடிக் களைத்து ஊற வைத்த பருப்புப் போல உப்பி.. வெளிறி.. திரும்பியிருந்தான். அவன் பொறுப்பற்று போனதற்கு அவர் செல்லம் கொடுத்து வளர்த்ததுதான் காரணம் என்று வழக்கம் போல அம்மா குற்றச்சாட்டை வீச.. அவர் “இன்னொருக்கா மந்திரிச்சு கயிறு கட்டுனா தானா சரியாப் போயிடும்..“ என்றார் சமாதானமாக. “ம்க்கும்..“ என்றாள் அம்மா அசுவாரஸ்யமாக. ”தோட்டத்தில மாங்கா செங்காயா வுளுந்துக் கெடந்துச்சு.. எடுத்தாந்து புட்டில போட்டு வச்சிருக்கேன் பாரு.. பச்சடி வச்சா நல்லாருக்கும்..” என்றார் சேறு அப்பிய கால்களை மூங்கில் காலோரம் கழுவிக் கொண்டே. அவரிருக்கும் நாட்களில் வீட்டில் சமையல் தடபுடலாகவே இருக்கும்.

செவ்வாய்க்கிழமை காலையில் கிளம்பினால் சனிக்கிழமை மதிய சாப்பாட்டுக்கு வந்து விடுவார். அன்று மீதமானதுகளே அடுத்தநாளுக்கும் போதுமானதாக இருக்கும். அம்மா புதன்கிழமை இவனுக்காக கோழி வாங்கி வருவாள். அதில் காலும் தலையும் மட்டுமே அவளுக்கு. அப்பா எப்போதும் கோழி சாப்பிடுவதில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கறி குழம்பு தின்ற கையோடு, சந்தைக்கு தேவைப்படும் காய்களை வயலில் அறுத்து கட்டி எடுத்து வருவார்.

இரவு முழுவதும் பனி மூடிய நிலவொளியில் மலை குளிர்ந்துக் கிடந்தது. பதியாட்கள் கேப்பைக்கூழும், கீரையுமாக அவனை உண்ண வைத்தனர். பழக்கமின்மையால், ஊடுருவிய குளிருக்கு அவர்கள் அளித்த போர்வை கால்வாசிக் கூட காணவில்லை. ஆயினும், நடையலுப்பு கண்களை அசத்தியது. அவன் கண்விழித்த நேரத்தில் பளிச்சென்று பகல் புலர்ந்திருந்தது. முப்புறமும் கரும்பாறைகள் உயர்ந்து நிற்க, இயல்பாக தோன்றிய ஓடைப்பள்ளத்தில் உடலை சுத்தப்படுத்திக் கொண்டான். கேழ்வரகு ரொட்டியும் பானகமும் கொடுத்தனர். கிளம்பும்போது இலையில் கட்டிய புட்டுமாவை நீட்டினர்.

பசுமையாக படர்ந்திருந்த வனம் அமைதியாக அவனுடன் வரத் தொடங்கியது. மரங்களின் இடைவெளிக்குள் சூரியன் அவனை பாதுகாப்பாக செலுத்திக் கொண்டிருந்தது. கொடிகள் கூட அனாயசமான புஷ்டியோடு மரங்களோடு எழும்பி நின்று விழுதுகள் போல தொங்கிக் கிடந்தன. சில இடங்களி்ல் தரையே தெரியாத அளவுக்கு செத்தைகள் அடர்ந்திருந்தன. சரிவில் மரங்கள் அடர்ந்திருந்தன. பாதை செங்குத்தாக மேலேறி சென்றது. சிறு பெண்கள் குழுவொன்று பொதுபொதுப்பான ஈரமண் ஒட்டிய கிழங்குகளுடனும் கீரைக்கத்தைகளுடனும் எதிர்புற சரிவிலிருந்து மேட்டுக்கு ஏறிக் கொண்டிருந்தது. காற்று சற்றே வேகம் கூட்டி சுழன்றதில், துாரத்தில் எங்கோ மரக்கிளை முறித்து விழும் சத்தம் கேட்க, அவன் திடுக்கிட்டுப் போனான்.  “ஒங்க பின்னுக்குதான் வர்றோம்.. பயந்துக்க வேணாம்..” என்றார்கள் அந்தப் பெண்கள்.

சிறு வெட்கத்தோடு நடந்தான். நட்டு வைத்த துடைப்பங்களாக ஈச்சம் புற்கள் வழியெங்கும் பரவிக் கிடந்தன. ஆங்காங்கே கூட்டமாக பெண்கள் சீமாறு புல் அறுத்துக் கொண்டிருந்தனர். இடையில் ஓடையொன்று குறுக்கிட்டது. அதன் கரையெங்கும் கோரைகள் ஆளுயுரத்திற்கு முளைத்துக் கிடந்தன. தாழ்ந்து படர்ந்திருந்த மரங்களில் குரங்குகள் தாவி குதிக்க… அதன் நீண்ட வால்கள் ஓடைக்கும் மரங்களுக்குமிடையே பாலம் போல தொங்கின. குரங்குகளின் குதியாட்டத்தில் சருகு இலைகள் ஓடைக்குள் உதிர்ந்தன. குனிந்து ஓடை நீரை அள்ளியடுத்து பருகினான். நல்ல சுவையான நீர். அவனின் பிம்பம் நீரில் விழுந்திருந்தது. “அவருக்கு இவ்ளோ பெரிய பையனா..“ நேற்றிரவு அவர்கள் இவனைக்கண்டு ஆச்சர்யப்பட்டதை எண்ணிக் கொண்டான். ஈரம் செறிந்த கரையில் படர்ந்திருந்த புற்கள் அவன் காலடியில் மசிந்து, பிறகு திமிர்த்து நிமிர்ந்தன.

அடுத்தடுத்த கிராமங்கள் அருகருகே இருந்தன. அவை எல்லாவற்றிலிருந்தும் அப்பா நழுவிச் சென்றிருந்தார். இனி மேலேற வேண்டிய அவசியமில்லை என்பது அவனுக்கு நிம்மதியளித்தது.  அவர்கள் அளித்த கருப்பட்டி காபியை அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்து அருந்தினான். களியும் கீரை பிரட்டலையும் இலையில் ஏந்தி வந்த பெண் அழகாக இருந்தாள்.

தொலைவிலிருந்த கிராமங்கள் அருகே வரத் தொடங்கியிருந்தன. மலைச்சரிவில் சற்றே ஏறி, அடுத்திருக்கும் தாழ்வான சமவெளி கிராமங்களை முடித்துக் கொண்டு, கீழிறங்க வேண்டியதுதான். கீழிறங்கும்போது பாதைக் குழப்பம் வராது. அதிக நேரமும் தேவைப்படாது என்றார்கள்.  அடிவாரத்திலிருந்து இரண்டு மணி நேர பேருந்து பயணத்திலிருந்தது அவனது கிராமம்.

சூரியன் மரங்களுக்கிடையே பம்மி பம்மி நகர்ந்தது. மதிய நேரத்து வெயில் என்றாலும் குளிர்ந்த உடலுக்கு இதமாகதானிருந்தது. சரிவிலிருந்த குடியிருப்பின் தலைபாகங்கள் தெரிய தொடங்கின. இன்னார் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பின் அவர் கிளம்பி விட்டதாக கூறினார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அப்பாவுக்கு தகவல் எட்டியிருப்பதை ஊகிக்க முடிந்தது. அவனுக்கு தாகம் எடுத்தது.  நீர் வேண்டுமென்றான். குடுவையில் அளித்த நீரை அருந்தி விட்டு, மீதியை முகத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டான். குடுவையைப் பெற்றுக் கொண்ட பெண் அம்மாவுக்கு என்னாச்சு.. என்றாள் பரிவாக. குபீரென்று பொங்கி வந்த துக்கத்தோடு “செத்துட்டாங்க..“ என்றான் சிதறலாக. அவள் காலைக் கட்டிக் கொண்டிருந்த சிறுவன் எதற்கோ சிணுங்கிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ தின்பண்டத்தை அவனிடம் நீட்ட, சிறுவன் அழுகையை நிறுத்தி விட்டு அதை சாப்பிட ஆரம்பித்தான். அவனது வலதுக்கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற கயிறு லேசாக அவிழ்ந்து தொங்கியது.

சமவெளியை நெருங்கி வர வர நடமாட்டம் அதிகமிருந்தது. ஆண்களும் பெண்களும் ஏதோ நிமித்தம் அலைந்துக் கொண்டிருந்தனர். எல்லோரையும் விட அவனுடைய அப்பா மட்டுமே கடும் சவாலான வேலை பார்ப்பதாக எண்ணிக் கொண்டான். அதோடு அப்பாவை எல்லோரும் அறிந்திருப்பது பெருமிதமாக தோன்றியது.  அதே நேரம் பழக்கப்படாத தனது கால்களே இரண்டு நாட்களுக்குள் பயணத்தை முடித்துக் கொண்டபோது அப்பாவுக்கு நான்கு நாட்கள் தேவைப்படுவது வியப்பளித்தது.

இறக்கம் சரசரத்து அவனை சமவெளியில் சேர்த்திருந்தது. அங்கும் அப்பா அறிமுகமாகிதானிருந்தார். சொல்லப்போனால் அவன் கொண்டு வந்த சேதியை அவர்களும் கேள்வியுற்றிருந்தனர். ”நாங்கதான் அவர காரு புடிச்சு அனுப்பி வச்சோம்.. நீங்க அவர தேடிக்கிட்டு வாரது தெரியாது தம்பி..” என்றார் அங்கிருந்த ஓட்டல்காரர் ஒருவர்.

”காரு புடிச்சார்ரோம் தம்பி.. செத்த ஒக்காருங்க..” உள்ளே அழைத்துச் சென்றார்.

”கொஞ்சமா சாப்டுக்கங்க.. சடங்குசாத்திரமெல்லாம் முடிஞ்சு சாப்பாட்ல கை வைக்க ரொம்ப நேரமாயிடும்..” பரோட்டாவை பிய்த்து வைத்து குருமாவை ஊற்றினார். “நல்ல மனுசன்.. ஒங்கம்மாவுக்குதான் குடுத்து வைக்கல..” என்று வருத்தப்பட்டார். அதற்குள் கார் வந்திருந்தது. அவனும் சாப்பிட்டு முடித்திருந்தான்.

”எலைய அப்டியே வச்சிட்டு கைய கழுவிக்கங்க தம்பீ.. காரு வந்துருச்சு..” டிரம்மிலிருந்த நீரை முகர்ந்து  ஊற்றினார்.

வலது கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற கயிற்றை இயல்பாக பின்னுக்கு தள்ளிக் கொண்டு கையை கழுவினான். மந்திரித்த கயிறு அது. அப்பாவுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை அதிகம். அந்த சிறுவனின் கையிலும் இதேமாதிரியான கயிறு இருந்தது நினைவுக்கு வந்தது. தொடர்ச்சியாக, தபால் பட்டுவாடாவை அப்பா வேண்டுமென்றே நான்கு நாட்களுக்கு இழுப்பதாக தோன்றியது.

இவன் வீடு திரும்பியபோது அவனுடைய அப்பா சடலத்தின் வலப்பக்கத்தில் குனிந்தபடி அழுதுக் கொண்டிருந்தார். இவன் சடலத்தின் இடதுபுறம் சென்று நின்று கொண்டான்.

 

***

தனிமை

காலத்துகள்

‘பை நாளைக்கு சாயங்காலம் பாக்கலாம்’ எப்போது போல், வானில் தோன்றியவுடன் அவனுடன் சில வினாடிகள்பேசிய வீனஸ் உலாக் கிளம்ப, அவளுடைய மாலை வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சில நட்சத்திரங்கள் அவள் பின்னால் அதீத சிமிட்டலுடன் செல்வதைப் பார்த்தபடி இருந்த துருவன் மீண்டும் தனிமைப்பட்டான். சற்று தொலைவில் மினுங்கியபடி தோன்ற ஆரம்பித்திருந்த விண்மீன்களைஅவன் அழைக்க, அவை வெறுமனே கையசைத்து விட்டு நாலைந்து பேராகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தன. ‘நானும் வரேன்’ என்று அவன் சொல்ல, ‘ஐயோ நீ ரொம்ப பெரிய ஆளு, உன் லெவலுக்கு நாங்க வர முடியாது’ என்று விலகிச் சென்றார்கள். சேர்த்துக்கொண்டாலும் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை, ஒருபோதும் தோற்க விடுவதில்லை, அதற்கு இப்படியே இருந்து விடலாம்.

எல்லாம் ‘அவரின்’ உபயம். தந்தைமடியில் உட்காரும் பிரச்சனையில் ஆரம்பித்து, அந்த ஆசை நிறைவேற ‘அவரை’ நோக்கி தவம் செய்து, பின் ‘அவரின்’ அருளால் விண்ணில் இந்த இடத்திற்குவந்து சேர்ந்தது’அவருக்கு’ அணுக்கமானவனாகமற்றவர் அவனை குறித்து எண்ண வைத்துள்ளது. முன்பெல்லாம் அவருக்கு பிரியமானவனாக இருப்பது பற்றி பெருமிதம் கொள்வான், அவரும் பாற்கடலிலிருந்து கிளம்பி விண்ணுலா செல்லும்போதெல்லாம்இவனருகில் வந்து சில அன்பு வார்த்தைகள் பேசி விட்டுதான் செல்வார். பின் அவரைக் காண்பது அரிதாகியது, இப்போது எந்த அவதாரத்திற்கான முஸ்தீபுக்களில் இருக்கிறாரோ. அல்லது இனி எந்த அவதாரத்தினாலும் பயனில்லை என அவருக்கு பிடித்தமான ஆழ்நித்திரையில் இருக்கலாம், சிக்கிக் கொண்டது நான்தான்.

நடந்தவையெல்லாம்இப்போது மங்கலாகத் தான் நினைவில் உள்ளது, ஆசைப்பட்டது போல் தந்தை மடியில் உட்கார்ந்தேனா, என்னை மீண்டும் பெற்றோருடன் சேர்க்காமல் ஏன் இங்கு தனியாக அமர வைத்தார். இப்படி முடிவற்ற தனிமையில் உழல்வதற்கு பூமிலேயே வாழ்ந்து முடிந்திருக்கலாம். இப்போதெல்லாம் மினுங்கக் கூட மனமிருப்பதில்லை.

oOo

துருவனுக்கு எதிரே இருந்த, சமீபத்தில்தான் கட்டி முடித்து குடும்பங்கள் குடியேற ஆரம்பித்திருந்த அபார்ட்மென்ட்டின் மூன்றாம் தளத்தில் உள்ள வீட்டின் உள்ளறைக்குள் நுழைந்த ஐந்தாறு வயதிருக்கக் கூடிய சிறுவன்,ஜன்னலையொட்டி இருந்த நாற்காலியின் மீதேறி ஜன்னல் கம்பிகளை பிடித்து வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தவன், ‘இன்னிக்கு பத்து ஸ்டார்ஸ் புதுசா இருக்குமா’ என்று,தட்டில் சாதத்துடன் ‘சாப்டுடா’ என்றபடி வந்த அம்மாவிடம் சொன்னான். ‘அதோ போல் ஸ்டார்’ என்றான் சிறுவன்.

‘அது இருக்கட்டும், சாப்புடு’.

‘அந்த ஸ்டார் மட்டும் ஏம்மா எப்பவுமே தனியா இருக்கு, அதுக்கு ப்ரண்ட்ஸ் இல்லையா’

‘சொல்றேன் ஒரு வாய் சாப்பிடு’

‘மூன் இன்னும் வரலையே, இன்னிக்கு ப்ளூ மூன்தான, ஸ்நேக்மூன கடிக்கறதால அது ப்ளூ ஆயிடுதா’

‘ஆமா சாப்பிடு’

‘பாம்பு மூன ஒரே அடியா முழுங்கிடுமா, இல்ல கடிக்க மட்டும் செய்யுமா’

‘மூன் சரியா சாப்பிடாட்டி பாம்பு முழுங்கிடும், உன்னையும்தான்’

‘பாம்போட ஸ்டமக் இருட்டா இருக்குமா’

‘நாளைக்கு கேட்டு சொல்றேன், இந்தாகடைசி வாய்’ஊட்டி விட்டு அம்மா, ‘அந்த பாம்பு கிங் கோப்ராவா, அனகோண்டாவா’ என்ற சிறுவனின் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினாள்.அவள் வேலை முடிந்தது. மீண்டும் வெளியே பார்த்தபடி’பாவம் மூன்’ என்று முணுமுணுத்தபடி இருந்தவன் பின் சித்திரக் கதையொன்றைபடிக்க ஆரம்பித்தான்.

oOo

‘என்ன அங்கேயே பாத்துட்டிருக்க’ என்ற குரல் கேட்டு துருவன் திரும்பினான். நிலா.

‘சாங்காலம் அந்த அபார்ட்மென்ட் பையன் ஒன்ன பாம்பு வெறுமனே கடிக்குமா, இல்ல முழுசாமுழுங்கிடுமான்னுகவலைப்பட்டுக்கிட்டுக்கிருந்தான் ‘ என்று துருவன் சொன்னதற்கு நிலா உரக்க சிரிக்க அந்த இடத்தில் ஒளி இன்னும் வலுவானது.

‘பாவம் தனியா இருக்கான், அபார்ட்மென்ட்ல அவன் வயசுல வேறகுழந்தைங்க இல்லல’ என்று நிலா கேட்க, ‘ஆமா, சாயந்திர நேரம் பூரா ஜன்னலேந்து வெளியே எட்டிப் பாத்துக்கிட்டுருப்பான்’

‘தனியா இருக்கறது எவ்ளோ கொடுமைனு எனக்குத் தெரியும்’ என்று நிலா சொல்ல, ‘என்ன விட நீங்க ரெண்டு பேரும் எவ்வளவோ மேல். இன்னிக்கு அந்த பையனோட அம்மா அவனுக்கு பருப்பு சாதம் தந்தாங்க, நெய்வாசனை இங்க அடிச்சுது. எங்கம்மாவும் எனக்கு அத ஊட்டி விட்டிருக்கா, இப்ப யாரு… உனக்கு மட்டும் என்ன, எல்லாரும் ஒன்னத்தான் பாக்கறாங்க, கவித எழுதறாங்க. ஒனக்கு நல்ல அதிர்ஷ்டம், நா தான்எப்பவுமே தனியா இருக்கேன், என்ன யாரும் கண்டுக்கறது இல்ல’

‘என்ன கவித எழுதி என்ன, காதல்ல ஜெயிச்சவுடனேஅம்போன்னுவிட்டுட்டு போயிடறாங்க. ஒனக்காவது நெறய நட்சத்திர சொந்தம் இருக்கு, மத்த ப்ளானட்ஸ் மாதிரி இல்லாம எர்த்க்கு நான் மட்டும்தான். ஐ ஆம் மோர் அலோன்.’

‘அப்படிலாம் சொல்லாத,…’

‘ஒங்க ரெண்டு பேருக்கும் அப்பா அம்மா இருந்தாங்க, இருக்காங்க, எனக்கு? அப்படி யாராவது இருக்காங்களா, இல்லையானே தெரியாது’

‘..’

‘அவ்ளோ ஏன் என்னோட ஒளியே எனக்கு சொந்தம் இல்ல, சூரியன் கிட்டேந்து கடன் வாங்கறேன்’

‘..’

எல்லா வீடுகளும் உறங்கிக்கொண்டிருக்கும் பின்ஜாம நேரத்தில் மினுங்குவதை கிட்டத்தட்ட நிறுத்தி துருவன் மீண்டும் மிளிர ஆரம்பித்து சிறுவனின் அபார்ட்மென்ட்டைசில கணங்கள் கவனித்த பின், மேகத்தின் மீது படுத்துறங்கிக் கொண்டிருந்த நிலாவை ‘எழுந்திரு’ என்று தட்டினான். ‘ட்யுடி டைம் முடிஞ்சிருச்சா’என்றபடி துயில் கலைந்தநிலாவிடம் ‘அதெல்லாம் இல்ல, வா போலாம்’ என்றான் துருவன்.

‘எங்க கூப்பிடற’

‘அந்தக் குட்டிப் பையன் கனவுக்குள்ள’

oOo

உடல் நீலம் பாரித்திருந்த நிலவை பாதி விழுங்கியிருந்த, தலையில் நட்சத்திரமொன்று பூத்திருந்த கருநாகத்தின் வாலைப் பிடித்திழுத்துக் கொண்டிருந்தான் சிறுவன். ‘நானா அது’ என்று நிலாவும் துருவனும் ஒரே நேரத்தில் கூறியதை’கஜேந்திரா, கஜேந்திரா’ என்று கத்திக் கொண்டிருந்தான் சிறுவனின் ஒலி அமிழ்த்தியது. ‘தப்பு தப்பா கூப்படறான், காப்பாத்த ஒருத்தரும் வர மாட்டாங்க ‘ என்று நிலா சொல்ல,’சரியா கூப்பிட்டா மட்டும் என்ன ஆகப் போகுது, அவர் வந்து இவனையும் தனியா வானத்துல ஒக்கார வெச்சுடுவாரு’ என்றபடிதுருவன் சிறுவனின் அருகே சென்றான். அவர்களை நோக்கிய சிறுவன் ‘இன்னொரு மூன்’ என்று உரத்த குரலெழுப்பியபின் திரும்பிப் பார்த்து ‘எங்க பாம்பு, ப்ளூ மூன்’ என்று அரற்ற ஆரம்பிக்கவும், ‘சத்தம் போடக் கூடாது’ என்றபடி துருவன் அவனுடைய வலது கையையும்,நிலா அவனுடையை இடது கையையும்பற்றிக்கொள்ள மேலெழும்பி வான்வெளிக்கு வந்தார்கள்.

‘மூன் நீ எப்படி பாம்பு கிட்டேந்து தப்பிச்ச, கலர் திருப்பி வெள்ளையாயிட்டியே’

‘பாம்புலாம் ஒன்னும் இல்லப்பா.’

‘இல்ல, இருக்கு, அதனாலத்தான் நீ இன்னிக்கு ப்ளூ ஆயிட்ட, அந்த ராகுதான ஒன்ன கொத்த வரான் அவனுக்கு பயந்துதான் நீ அப்பப்ப காணாமப் போயிடற’

‘அவன் ஏன்பா என்னை கடிக்கணும். நான் சும்மா எர்த்க்கு பின்னாடி போய் ஒளிஞ்சுப்பேன்’ என்று நிலா சொல்லிக்கொண்டிருக்கும்போதே’பாவம் அந்தாளே தலை வேற உடம்பு வேறையா ரொம்பா காலமா சுத்திட்டிருக்காரு’ என்ற துருவனைப் பார்த்து ‘சும்மாரு’ என்றாள்.

‘எதுக்கு நீ ஒளிஞ்சுக்கற’

‘ஒன்ன மாதிரி சின்னப் பசங்க என்ன கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கறதுக்காக தான்’

‘என்னையும் சேத்துக்க அதுல’

‘அடுத்த வாட்டி கண்டிப்பா நீயும் உண்டு’

‘என்னையும் சேத்துக்கோ’ என்ற துருவனை முறைத்தாள் நிலா.

‘போல் ஸ்டாரையும் சேத்துக்கலாம், பாவம்’

‘அவனுக்கு நெறய வயசாச்சு, ஒன்ன மாதிரி கொழந்தை இல்ல அவன்’

‘ப்ளீஸ்’ என்று சிறுவன் கெஞ்ச ‘சரி, ஒனக்காக’ என்ற நிலாவைக் கட்டிக்கொண்டவன் ‘ரொம்ப ஜில்லாப்பா இருக்கு’ என்றான். பின் துருவன் பக்கம் திரும்பி ‘நீ மட்டும் எங்கேயும் போகாம செம் ப்ளேஸ்ல இருக்கியே, ஏன்’ என்று சிறுவன் துருவனிடம்கேட்டதற்குஅவன்பதில் தேடிக்கொண்டிருக்க நிலா ‘லேட்டாயிடுச்சு வீட்டுக்கு போலாம் வா’ என்றாள்.

‘எனக்கு ஸ்கை மொத்தத்தையும் சுத்திக் காட்டுங்க, அதோட என்ட் வரைக்கும் போயிட்டு வரணும், அப்பறம் ராகுவ பாக்கணும்’

‘இன்னிக்கு வேண்டாம், நாளைக்கு நைட் ஒன்ன கூட்டிக்கிட்டு போறேன்’ என்றபடி அவனைமீண்டும் தூக்கத்தினுள் அழைத்துச் சென்று திரும்பினாள் நிலா.

தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பார்த்தபடி ‘பாம்பு ஒன்ன முழுங்க ஆரம்பிச்சது மட்டும் தான் கனவா, இல்ல இப்ப நடந்ததும் கனவு தானா’ என்று துருவன் கேட்க’கனவுன்னா யாரோடது? பையனோட கனவா, அதுல நாம நுழைஞ்சோமா, இல்ல கனவு கண்டதே நானோ நீயாகவோ இருக்கலாமில்லையா. இப்ப நாம பேசறது கூட கனவில்லைன்னு சொல்ல முடியுமான்ன’ என்றாள்நிலா.

‘குழப்பாத, அப்ப எது தான் நிஜம்’

‘வாட் ஈஸ் லைப், இப் நாட் பட் அ ட்ரீம்’

oOo

அடுத்த நாள் மாலை ‘ஹாய்’ என்றபடி பிரகாசமாக வந்தாள் வீனஸ். ‘ஹாய்’ ‘என்ன ரொம்ப பரபரப்பா இருக்க’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’

‘…’

‘என்ன அந்த அபார்ட்மெண்ட்டையே பாத்துக்கிட்டிருக்க,’

‘ஒண்ணுமில்ல’

‘…’

‘இன்னிக்கு கண்டுக்கவே மாட்டேங்கற’

‘அப்டிலாம் இல்ல’

சில வினாடிகள் கழித்து ‘ஒனக்கு நெறைய எடத்துக்கு போணும்ல’ என்று துருவன் கேட்க ‘போனாப் போறதுன்னு உன்கிட்ட தினோம் ரெண்டு நிமிஷம் பேசினதுக்கு எனக்கு தேவை தான். எனக்கென்ன ஆளா இல்லை’ என்று கிளம்பிய வீனஸின் பின்னால் எப்போதும் போல் விண்மீன் குழுவொன்று தொடர்ந்து சென்றது.

‘அந்தபையன் வருவானான்னு பாத்துக்கிட்டிருக்கியா’ என்றபடி நிலா வந்தாள்

‘வருவான், ஆனா அவனுக்கு நேத்து நடந்தது ஞாபகம் இருக்குமான்னு தான் தெரியல’

‘அது யாரோட கனவுங்கறத பொறுத்துதான் இருக்கு’

‘அம்மா தாயே, நீ திருப்பி ஆரம்பிக்காத’ என்று துருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அபார்ட்மெண்ட் ஜன்னலில் சிறுவன்.கையசைத்த அவனை நோக்கி துருவன் மினுங்க, குட்டிப் பயல் கைதட்டினான். ‘என்னத்த பாத்துடா கைதட்டற’ என்று உள்ளே வந்த அம்மா கேட்க ‘என் ப்ரண்ட்ஸ்மா’ என்றான். ஜன்னல் பக்கம் திரும்பாமல் ‘பாத்து நில்லு சேர் வழுக்கிடப் போகுது’ என்று கூறிவிட்டு அம்மா அறையை விட்டு வெளியே சென்றாள்.

கைதட்டியபடியே ‘இன்னிக்கு நைட் என்ன கூட்டிகிட்டு போணும்’ என்ற சிறுவனின் கூக்குரலைக் கேட்டு நிலா கன்னக் குழி விழ முகம் மலர, அவளுள்ளிலிருந்து முதல் முறையாக ஊற்றெடுத்த, சூரியனிடமிருந்து வருவதை விட அடர்த்தியான மஞ்சள் நிற ஒளியைக் கண்டு துருவன் சிரித்தான். அந்த மஞ்சள் சிரிப்பொலியை கேட்டு மற்ற கோள்களும், நட்சத்திரங்களும்தங்கள் இயக்கத்தை நிறுத்தி அவர்களிருவரையும்விழி இமைக்காமல் பார்த்தபடி இருந்தன. சீம்பாலின் நிறத்திற்கு மாறிய பாற்கடலின் அலைக்காற்று அங்கு துயில் கொண்டிருந்த ‘அவர்’ மீது பரவ கண் திறக்காமல் புன்னகைத்தார். பாதாள உலகில், மூன்று தலையுடைய தன் காவல் நாய்மஞ்சள் ஒலிகற்றையை சுவாசித்துமயங்கிதன் சர்ப்ப வாலை தரையில் தட்டியபடி படுத்து விட்டதை கண்ட ஹேட்ஸ், தன் சக பேரரசரான மகாபலியிடம் அந்த இனிய ஓசை குறித்து வினவ அவர் தமிழும், மலையாளமும் கலந்த மொழியில் விளக்கினார். அந்தி மாலையின் வண்ணங்களினால் நனைந்திருந்த பூலோகத்தை சிறுவனின் கைதட்டல் மென் ஊதா நிறமாக நிரப்ப மானிடர் ஒரு கணம் மயங்கி நின்றனர்.

பசியின் பிள்ளைகள்

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் 3

 

————

 

வில்லியமிடம் அப்போதே நான் சொல்லியிருந்தால்? ஜூலியா எண்ணினாள்.  அப்போதே சொல்லியிருந்தால், அவன் பையனை வெளியேற்றியிருப்பான்; பையன் வெளியேறியிருந்தால், பரிசோதனைகளைச் செய்திருக்க முடியாது; பரிசோதனைகளில் அவன் மூழ்கியிராவிட்டால், அவன் பித்துப் பிடித்தது போலாகியிருக்க மாட்டான்.

————-

வண்டியின் கூரை மீது தாளமிடும் மழைத்துளிகளை கூர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டாள். வெளியே எங்கோ ஒரு தேவாலய மணி ஏழு முறை அடித்து ஓய்கிறது; வெறுமையான, காற்றில் மிதக்கும் மணிச்சத்தம். டாக்டர் பெயர்ஸ் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

நான் அந்த ஆர்வமிக்க பெண்ணாக இன்னும் இருக்கக் கூடும், அவள் எண்ணிக் கொண்டாள், கூந்தலில் கெமோமில் பூக்களும்,கழுத்தில் பூசிய பன்னீருமாக.

நான் அப்போதே அவனிடம் சொல்லியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள் .

———

குளிர்காலத்தின் முதல் புயல் அக்டோபரில் வந்தது. பனி அடர்ந்த, நீரிணைக்கு அப்புறமிருந்து ஓலமிடும் காற்று  அவர்களின் குடில் கதவுகளை படபடவென்று அடித்துக் கொண்டும், கரி படர்ந்த புகைபோக்கியில் நெருப்பு பொறி பறக்க விட்டுக் கொண்டும் வந்து சேர்ந்தது. ஜூலியா குடில் மரச்சுவர்கள் பனியால் நனைந்து கிடப்பதை பார்த்தவாறு விழித்தாள்.  போர்வையின் மேல் பூத்தாற்போல் படிந்துகிடந்த பனியை சன்னல் வெளியே பரவிக்கிடந்த நீர்கோர்த்த ஒளி இன்னும் வெண்ணிறமாக காண்பித்தது. கன்னங்கள் கணப்பில் எரிய, முதுகோ குளிரில் நடுங்க அவள் அடுப்பின் மிக நெருங்கி நின்றுகொண்டாள்.

பாத்திரங்களை கழுவிவிட்டு, படுக்கையைப் புரட்டி போட்டுவிட்டு, குடிலைக் கூட்டிவிட்டு, புகைபடர்ந்த விளக்குகளை சுத்தம் செய்துவிட்டு… உடை மாற்றிக்கொண்டு, அறைக்குள்ளேயே நெஞ்சு படபடக்கும்வரை ஸ்கிப்பிங் செய்தாள். மேசைமீது தலை சாய்த்து அவளைப் பார்க்கும் அந்த பாடம் செய்த குருவியைப் பார்த்துக் கேட்டாள் – இன்று மதியம் என்ன செய்யப்போகிறோம்? மிதக்கும் வெப்பக்காற்று பலூன் ஒன்றில் லண்டன் பறந்து போவோமா? இல்லை, ஏதென்ஸ்? நீலக்குருவி பதிலொன்றும் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தது. வாழ்வில் முதல் முறையாக ஜூலியா தான் இன்னும் கொஞ்சம் அதிகம் மதநம்பிக்கை கொண்டவளாக இருந்திருக்கலாம் என்று விரும்பினாள். தினமும் பிரார்த்தனைக் கூட்டங்களாவது அவளுக்கு கிட்டியிருக்கும்.

நோயாளிகளின் அறையிலிருந்து கடமுடவென்ற சத்தம் கேட்டது. ஒரு கணம் நிதானித்த ஜூலியா விளக்கை தொடர்ந்து சுத்தம் செய்யத் துவங்கினாள்.

கடந்த சில வாரங்களாக அந்த அறையை அவள் தவிர்த்து வந்தாள். மணியொலிக்கும்போது, பையனின் தேநீரையோ உணவையோ அறைக்குள் சென்று மேசையின்மீது ஒரு மரியாதையான வணக்கத்துடன் வைத்துவிட்டு வந்து விடுவாள். பையனின் சட்டை தரையில் கசங்கிக் கிடைக்கும்; காலி தேநீர்க் கோப்பை படுக்கையினருகே  கவிழ்ந்திருக்கும்; ஒரு காடி வாசம் காற்றில் மிதக்கும். அவனது முன்பற்களில்லாத சிரிப்பு அறைக்குள் அவளை பின்தொடரும்படி, பையன் கட்டிலில் சரிந்து கிடப்பான்.

பத்து நிமிடங்கள் மேடம், உடை மாற்றிக்கொள்கிறேன், என்றான். கதவை சாத்திக்கொண்டு முகம் சிவக்க வெளியே வந்து நின்றிருக்கிறாள்.

பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி காமோமில் மலர்களை அள்ளியிட்டு, முகத்தை நீரின் அருகே கவிழ்த்தவாறு தலைமுடியை நீருக்குள் அமிழ்த்தினாள். நீராவி முகத்தில் முத்துக்களாக கோர்க்கும்வரை காத்திருந்துவிட்டு, ஈரமுடியை துண்டில் சுற்றிக்கொண்டு,வில்லியமின் மேசையிலிருந்து அவனது மருத்துவக் குறிப்பை எடுத்துக் கொண்டு சமையலறை மேடைக்கு வந்தாள் . ஒரு குவளை தேனீர்  ஊற்றிக் கொண்டு குறிப்பைப் புரட்டினாள்.

அக்டோபர் 17, 1822

மாலை 8 மணி – பையன் கொதிக்க வைத்த ஆட்டிறைச்சிரொட்டிஉருளைக்கிழங்கு மற்றும் காபி உண்டான்.

9 மணி 30 நிமிடங்கள் – அவன் வயிற்றில் திறந்திருக்கும் காயத்தின் வழியே கஞ்சி போன்ற திரவம் கொதிப்பதைக் காண முடிகிறது. அமில வாடைஒரு கசப்புச் சுவை. பையன் வலிக்கிறது என்று முரட்டுத்தனமாக புகார் செய்தான்ஆனால் பசியில்லை என்கிறான்.

11 மணி – அவ்வளவு செரித்த உணவும் குடலிலிருந்து சிறுகுடலுக்குள் மறைந்துவிட்டது. பையனுக்கு பசியில்லை.

செரிமானம் ஆரம்பிக்கும்போது உணவுண்ட திருப்தி ஏற்படுகிறது எனத் தோன்றுகிறது. ஆனால்முழுமையாக உணவு செரிக்கப்படும்வரை மீண்டும் பசியென்ற உணர்வு ஏற்படுவதில்லை. 

 குடலுக்குள் உணவு இல்லாமல் இருப்பது மட்டுமே பசியெடுப்பதற்கான ஒரே காரணமாக  இருக்க முடியாது என்பதை இது குறிக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக பையனுக்கு அடிக்கடி பசி ஏற்படுகிறதுபரிசோதனையும் தடையின்றி செய்ய முடிகிறது. ஹாவல் ஒரு முறை சொன்னது போல அவன் பசியின் பிள்ளை.

“விடியும்வரை விழித்திருந்தேன். உறங்க முடியாமல்.
சினமிகுந்த அலைகள் கரையை மோதுகின்றன
தாழ்ச்சியுற்ற கப்பலோ முன்னும் பின்னும் தள்ளாடுகிறது
அனைத்தும் மேலிருந்து நோக்கப்பெறுகிறது”

கடவுளால் அல்லமனிதனால்அறிவு வளரும்விதம்

கதவு திறந்தது. கன்னங்கள் குளிரில் ஊதாநிறமாகத் தோன்ற, பனி அப்பிக்கிடந்த காலணிகளைத் தட்டி மிதித்தபடி வில்லியம் உள்ளே வந்தான். கொடுமையான குளிர்! என் முடிகூட நடுங்குகிறது என நினைக்கிறேன்.

குறிப்பேட்டை மூடிவிட்டு ஜூலியா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தலையிலிருந்த துண்டை அகற்றிக் கொண்டே கேட்டாள். தேநீர் அருந்துகிறீர்களா?

பனித்துகள்கள் தாடியில் மின்ன அவன் இன்னும் கதவருகே நின்றிருந்தான். மூடப்பட்ட குறிப்பேட்டைப் பார்த்துத் தலையசைத்து கொண்டான். அதுவொன்றும் நீ படிக்கும் மாதாந்திர பெண்கள் பத்திரிக்கை அல்ல, தெரியும்தானே?

ஜூலியா அமைதியாக இருந்தாள்.

ஈர தொப்பியையும் கோட்டையும் கழற்றிவிட்டு மேசையனருகே வந்து முதல் நாளிரவு அவன் எழுதியிருந்த குறிப்பை மீண்டும் ஒருமுறை அமைதியாகப் படித்தான் .

மன்னித்து கொள் வில்லியம், என் அன்பே, என்றாள் ஜூலியா. எனக்கொரு ஆர்வம். நான் உன்னைக் கேட்டிருக்கலாம்தான், ஆனால் அறிவிலி போல் உன் முன் தோன்ற விரும்பவில்லை. உன் ஆராய்ச்சிகளைப் பற்றி எனக்கு தெரியவேண்டும். தயவுசெய்து சொல்வாயா?

அவன் கண்கள் அந்தக் கவிதையைப் பார்ப்பதைக் கண்டாள்; நெற்றி சுருங்க கேட்டான், இதை எதற்கு நீ படிக்கிறாய்?

சொன்னேனே, ஒரு ஆர்வம். அந்தப் பையனைப் பற்றி, உன் ஆராய்ச்சிகளை பற்றி. இன்னும் உன் கவிதைகளைப்  பற்றி – நான் உன் அழகிய கவிதைகளைப் படிக்க விரும்பினேன்.

ஒரு கணம் அவன் முகபாவனை சாந்தமடைந்தது போல் தோன்றியது. குறிப்பேட்டை மூடிவிட்டு கடுப்பு தோன்ற கேட்டான் , என்ன ஆயிற்று உன் முடிக்கு?

நிறம் பூசியிருக்கிறேன், உனக்காக, என்றாள்  ஜூலியா.

நல்லது அன்பே. அவன் குரலைச் சரி செய்து கொண்டான். அது சிக்கலான விஷயம்.

சரி. கொஞ்சம் புரியும்படி சொல்ல முயற்சி செய்.

நனைந்த குழல் கற்றையொன்று அவள் தோளில் படிந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். மெதுவே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். பல கோட்பாடுகள் இருக்கின்றன. வயிறு ஓர் அரவை யந்திரம் எனச் சிலரும், அது ஒரு கொதிக்கும் கலன் எனச் சிலரும் கருதுகின்றனர். இன்னும் சிலரோ, அதுவொரு நொதிக்கும் பாத்திரம் போல செரிமானம் செய்கின்றது என்கின்றனர். யாருக்கும் உறுதியாகத் தெரியாது. நாய்களின் மீது சில சோதனைகள் நடந்திருக்கின்றன – ஆனால் இன்னும் எதுவும் உறுதிப்படவில்லை.

பையன் தான் உன் பரிசோதனை.

அந்தப் பையன் ஓர் அற்புதம், வில்லியம் சொன்னான், மேசையின் மீது நன்கு குனிந்து அவளை உற்று நோக்கி, உன்னால் உணர முடிகிறதா ஜூலியா? இன்னும் ஒரு கோட்பாட்டை எழுதத் தேவையில்லாமல் அவன் வயிற்றின் உள்நிகழ்வுகளைப் பார்க்க அவன் என்னை அனுமதிக்கிறான்.

மணியொலித்தது.

இரு.

வில்லியம் பின்னால் சாய்ந்துகொண்டான். புன்னகைத்தவாறு சொன்னான். அன்பே, அவன் உடல்நலமின்றி இருக்கிறான்.

தயவுசெய்து வில்லியம். அவனொன்றும் உடல்நலமின்றி இல்லை.

மறுபடி மணியொலித்தது. பிறகு ஏதோ கோபமாக முனகுவது கேட்டது.

நீ போய்விட்டபிறகு அவன் அறைக்குள் நடக்கிறான். பகல் வேளைகளில் மணியடித்து என்னை அழைக்கிறான். சென்றால் ஒன்றும் பேசாமல் ஒரு திமிரான சிரிப்பு வேறு.

அவன் ஒரு சிறுவன் என்று  உனக்கு நினைவுபடுத்த வேண்டுமா?

அவன் சிறுவனில்லை.

வில்லியம் ஜூலியாவின் நெற்றியில் முத்தமிட்டான். குறிப்பேட்டை மேசையறைக்குள் வைத்துவிட்டு பையனின் அறைக்குள் மறைந்து போனான்.

தேநீரை எரியும் அடுப்புக்குள் வீசிக் கொட்டிவிட்டு, காலிக் கோப்பையை மேசை மீது சட்டென்று வைத்தாள். முட்டாள் பையன் – அவன் முட்டாள் சிரிப்பும் அவன் நாடோடி நாற்றமும். அவன் வலி உயிர் போவது போல் நடித்துக்  கொண்டு கட்டிலில் கிடப்பதாகவும் வில்லியம் அவன் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டே அவனது குழறல் புகார்களைக் கேட்பது போலவும் கற்பனை செய்து பார்த்தாள் . எப்போது வில்லியம் அவள் பேச்சைக் கேட்டிருக்கிறான்? டெட்ராய்ட்டில், அவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த சமூக மன்ற நடனத்தில் அவள் கூறிய, மருத்துவர்கள் வானின்று வீழ்ந்த தேவதைகள், என்ற அந்த வரியைக் கேட்டதற்குப் பிறகு அவள் கூற எதைக் கேட்டிருக்கிறான்?

அமுங்கிய சிரிப்பொலி அறைக்குள்ளிருந்து கேட்டது. ஜூலியா கூர்ந்து கவனித்தாள்.

என்  முதல் பருவம், நாங்கள் ஒட்டாவா ஏரியில் படகு வலித்துக்கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து கிராண்ட் போர்ட்டேஜ், பிறகு ரெய்னி ஏரி, இறுதியாக கோட்டைக்கு. இங்கெல்லாம் குளிரென்றா நினைக்கிறீர்கள்? அங்கெல்லாம் சிறுநீர் நடுக்காற்றில் உறைந்து போகுமென்றால் பாருங்கள்.

வில்லியம் சிரித்தான். அப்படியா?

மங்கேயூர் குழு போர்ட்டேஜ் போனது போதும் என்று திரும்பி விட்டார்கள். நானிருந்த ஹேவர்னன்ட் குழு, ஒரு எழுபது பேரிருப்போம்,அந்தக் கோட்டைக்குள் முழுப் பனிக்காலமும் மாட்டிக் கொண்டோம். எனக்கு அப்போது பதினாறு வயது. நான் தினமும் காலையில் உறுப்பைக் கையில் பிடித்துக் கொண்டுதான் விழிப்பேன். இரவுணவுக்கு பிறகு ஒருவர் வயலின் வாசிப்பார், யாராவது ஒரு பாத்திரத்தில் தாளம் போட, ஆட்டம்தான். சிலர் கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைச் சுற்றிக் கொள்வார்கள், அவர்கள் பெண்களை போல ஆட. ஆண்களுக்குள் தகராறாக இருக்கும் யார் அடுத்து இந்தப் பெண்ணாக நடிக்கும் ஆண்களுடன் ஆடுவது என்று.  எவ்வளவு தனிமையாக இருந்திருக்கும் என்று புரிகிறதா? ஒரு நாள் காலை படுக்கையில் அருகில் அந்த ஆணிலொருவன் படுத்துக் கிடந்ததும் நடந்தது.

மேலே சொல்.

அவ்வளவுதான். அந்த சண்டையில்தான் என் பற்கள் போனது, அவனுக்கு இன்னும் அதிகமாக.

ஒரு பெருமூச்சில் முடியும் தளர்ந்த சிரிப்பு. ஜூலியா அவளுக்கு தட்டையும் முள்கரண்டியையும் மேசை மீது எடுத்து வைத்துக் கொண்டாள். அவர்கள் பள்ளிக்கூடச் சிறுவர்கள் போல் சேர்ந்து சிரிக்கட்டும், அவள் எண்ணிக்கொண்டாள். அந்த அறைக்குள் இரவு முழுதும் இருக்கட்டும்.

(தொடரும்)

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

 

தக்காளிக் காதல்

காஸ்மிக் தூசி

இன்றைய மாலையின்
என் காதல் முழுக்கவும்
குளிர்சாதன பெட்டியிலிருந்து
இல்லாமல் போன
ஒரு மிகப்பெரிய
தக்காளிப் பழத்தின் மீது.

என்ன இருந்தாலும்
ஒரு எளிய பழத்தை குறிக்க
காதல் என்ற சொற்பிரயோகம்
மிகைதான் என்பீர்,
தெரியும்.

மென்மையான சதைக்குள்
பிரியத்தால்
வீங்கி புடைத்து வரியோடிய
பெரிய பாட்டியின்
முகத்தையும்

பிறந்த குழந்தையின்
பாதத்தையும்

புன்னகைக்கும் புத்தரின்
கன்னத்தையும்
நினைவுறுத்தி

தன்னுள்
அத்தனையையும் பதுக்கிக் கொண்டு
அமைதியாய் இருந்தது.

துவரம் பருப்பின்
சொரணையின்மையை
மூடி மறைத்து

வறுத்த வெங்காயத்தை
மேலும் இனிப்பாக்கி

முள்ளங்கி கத்தரி
முருங்கையையும்
தன் மென்புளிப்பால் ஊடுருவி,
வாழ்நாள் முழுக்கவும்
தன் இருப்பில் கசந்து,
வெட்டும் பலகையிலிருந்து
தவறுதலாக வந்து சேர்ந்து விட்ட
சில துண்டு பாகலையும்
தன் பிரியத்தால் நிறைத்து விட்டது.

ஒரு தட்டின் சாதம்
ஒரு கோப்பையின் சாம்பார்
ஒரு கரண்டி –
விருப்பமான ஒரு நாக்கு –

என்னவொரு தியானம்!
என்னவொரு கொண்டாட்டம்!

செல்வசங்கரனின் ‘பறவை பார்த்தல்’

வான்மதி செந்தில்வாணன்

கவிஞன் என்பவன் காலம் முழுக்க மனதில் கருவைச் சுமந்து திரிவதோடு, தன் கருவை ஊட்டமுடன் உருப்பெறச்செய்து , பிரசவித்து, சிலாகித்து மகிழும் கொண்டாட்டக்காரன்.

அனுதினப் பொழுதுகளில் நமக்குத் தோன்றுவனவற்றையெல்லாம் ஒரே மூச்சில் எழுதித் தள்ளிவிடலாம். ஆனால், எழுதும் அவ்வளவும் தனிச்சிறப்பு பெறும் வாய்ப்புகளை வென்றெடுக்கின்றனவா? இல்லை. எழுதவென எவ்வளவோ நிகழ்வுகள் மனதின் ஆழத்தில் அடுக்கடுக்காய்த் தேங்கியிருப்பினும் உள்ளிருந்து வெள்ளமென ஆர்ப்பரித்தெழும் நிகழ்வு மட்டுமே ஒரு வெற்றிகரமான படைப்பை உருவாக்க இயலும்.

கவிதை என்பது அவரவர் ஆழ்மன இருப்பின் கிளர்ந்தெழுதலின் சிறப்பு. பூமியிலிருந்து நோக்குகையில் காட்சிக்குத் துளியளவு தென்பட்டாலும் மிகுந்து ஒளிர்பவை வானில் மிதக்கும் நட்சத்திரங்கள். அதுபோல் அளவில் சிறிதாக இருப்பினும் பளிச்சென்ற வரிகளால் ஆழ்மனதினை வெகுவாய் அசைத்து சிலிர்ப்பூட்டுபவை கவிதைகள். நொடிப்பொழுதில் ஆழமான உணர்வுகளை நம்முள் கடத்திவிடுபவை அவை. எவ்விதமனோநிலையிலும் ஒரு படைப்பாளிக்கு கவிதை என்பது எழுச்சி பெறலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் உயிரின் ஆழமான வேர்ச்சரடுகள் மலரும் தருணமது. ஒரு படைப்பாளிக்கு தன்னியல்பு மற்றும் மெனக்கெடல்கள் மூலம் தரமானதும் ஆத்மார்த்தமானதுமான படைப்புகள் கிட்டுகின்றன. ஒருவரது உணர்வுகளின் உந்துதல் வழி வடிவமைப்பு பெறும் கவிதைகள் ஆத்மார்த்தமானவை.

படைப்பாளிகள் தங்கள் வாசிப்பில் ஆழம் செல்லச் செல்ல அவர்களின் எண்ணக்கிடங்குகள் உருப்பெற்று, அவை உயிர்ப்பிக்கும் அசாதாரண படைப்புகள் தனித்துவம் பெறுகின்றன. ஒரு படைப்பாளியின் முதற்போதை அவனது மூச்சு போன்ற வாசிப்பு. இரண்டாம் பட்சம்தான் எழுத்து. எழுதியாகவேண்டிய கட்டாயமென்பது இங்கு எவர்க்கும் இல்லை. ஒரு படைப்பானது தன்னளவில் தனக்கே உரிய தனித்தன்மையுடன் அப்படியேதான் இருக்கிறது. அதை அணுகுவதற்கான முழுப்பொறுப்பும் வாசகனைச் சார்ந்ததே.

கவிஞர் செல்வசங்கரன் அவர்களின் முதல் தொகுப்பு “பறவை பார்த்தல்”. பல வருடங்களின் திறனார்ந்த சேகரிப்பு இவரது கவிதைகள். இத்தொகுப்பில் இவரது மன உணர்வுகள் மிக நேர்த்தியான ஒரு பாங்குடன் வடிவமைப்பு பெற்றிருப்பதுடன் தனித்தன்மை பொருந்தியகவிமொழி கையாளப்பட்டுள்ளது. எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி வரிகளில் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் செல்வசங்கரன்.எண்ண அலைகளின் விரிவு, அன்றாடஅகவய மற்றும் புறவய நிகழ்வுகளை உரசிச்செல்லும் நினைவுகள் போன்றவற்றை நுணுக்கமுடனும் நுட்பம் வாய்ந்த சொற்தேர்வுகளுடனும்வெகு சுவாரஸ்யத்துடனும் இருக்கும்படி இத்தொகுப்பினை மிகவும் கவனமாகச் செதுக்கியுள்ளார். சுருங்கச் சொல்லவேண்டுமாயின் ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம், சரியான சொற்கோர்வை மற்றும் அழகியல் கொண்டு கட்டமைக்கப்பட்ட சிறப்பான தொகுப்பு இது.

கவிதைகள் சற்று நீளம் கொண்டவையாக இருப்பினும், வாசிப்பின் மூலம் சுவாரஸ்யமான வரிகளை மென்மையாய்ப் பற்றிக்கொண்டு ஒரு செழிப்பான நீரோட்டம்போல் பக்கங்களை திருப்திகரமாய்க் கடக்க முடிகிறது.

1.

“கடல்” என்பது எப்போதும் அனைவரின் பார்வையில் ஒரு பிரம்மாண்டமாகவே இருந்திருக்கிறது. இவரைப் பொறுத்தமட்டில்

“கடல் அருகாமையில்
உபரி வெளிச்சமும்
பின்பு கடலுமே இருந்தது”

என்ற தனது அசாதாரண பார்வையில் பிரம்மாண்டமான கடலை சாதாரணப்படுத்துகிறார். இத்தொகுப்பின் முதல்கவிதை இது.

“பிள்ளை விளையாட்டில்
வசிக்காமற் சென்ற
மணல்வீடுகள் சில
சற்றுக்கு முன் அதனோடிருந்தன”

பிள்ளைகள் கடற்கரையில் மணல்வீடு கட்டி விளையாடுகிறார்கள். அவர்கள் வசிக்காமல் விட்டுவிட்டுப்போன அவ்வீடுகளில் தான் வசித்துவிடும் முயற்சியில் அவைகளை முற்றிலும் கரைத்துவிட வருகுகின்றன கடலலைகள். இவ்வரிகள், நம்மை அவ்வீடுகள்மீது ஒருவித ஏக்கப் பார்வையினை மெலடியாய் வீசச் செய்கின்றன.
முடிவில்

“எப்பொழுதும் கடலென்பது
பரசிய மண்ணும் உப்பு நீரும்
சில பூச்சிகளுமே”

என்ற வரிகள் மூலம் தனது பார்வை விரிவை இவ்விடம் பதிவு செய்கிறார்.

2.

மூக்கினுள்ளிருந்து நீண்டு வளர்ந்திருக்கும் ஒரு முடி பற்றிய அற்புதமும், சுவாரஸ்யமும் கலந்தநினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“கண்ணாடி முன் நின்றுஎனது
மூக்கை வெகு அருகாமையில்
பார்த்த அன்று
மூக்கினுள்ளிருந்து ஒரு முடி
நீண்டு வளர்ந்திருந்தது
லேசாகச் சுருண்டிருந்தது
நெளிவின் நுனி பிடித்து
மெதுமெதுவாய் இழுக்க
உள்ளிருந்து ஒரு அதிர்வு கிளம்பி
நினைவு பிசகியது”

எனத் தொடங்குகிறது இக்கவிதை.

“ குறுகுறுப்பை, ஒரு மாதிரியான
நினைவுச்சுருக்கை
வேண்டுமளவிற்குப் பெற்றுக்கொண்டேன்”

எனும் இடைவரியின் நினைவுச்சுருக்கில் அகப்பட்டுக்கொள்கிறது மனம்.

“வீரியத்தினை மட்டுப்படுத்த
கத்தரியை உள்ளே துழாவிய அன்றிலிருந்து
குறுகுறுப்புடன் உச்சத்தில் வலி புரட்டியெடுத்தது.
அன்று எனது மூக்கை அறுத்துக்கொண்டிருந்தேனென
நம்பத்தகுந்த சிலர் கூறினார்கள்”

இவ்வாறு மனதினுள் சுவாரஸ்யமான குறுகுறுப்பை இக்கவிதை உண்டு செய்கிறது. இத்தொகுப்பில் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கவிதை இது. இவ்விடம் அம்முழுக்கவிதையினையும் உங்களுக்கு அறியத் தருகிறேன்.

நினைவுச்சுருக்கிலிருந்து நீண்ட குறுகுறுப்பு

“கண்ணாடி முன் நின்று எனது மூக்கை
வெகு அருகாமையில் பார்த்த அன்று
மூக்கினுள் விருந்து ஒரு முடி
நீண்டு வளர்ந்திருந்தது
லேசாக சுருண்டிருந்தது
நெளிவின் நுனி பிடித்து
மெதுமெதுவாய் இழுக்க
உள்ளிருந்து அதிர்வு கிளம்பி
நினைவு பிசகியது
காட்சி மயக்கில் ஒருவித குறுகுறுப்பினை உணர்ந்தேன்
மயிர்க்காலை இழுத்து இழுத்து
குறுகுறுப்பை ஒருமாதிரியான நினைவுச்சுருக்கை
வேண்டுமளவிற்குப் பெற்றுக்கொண்டேன்
ஒற்றை மயிர் கையோடு வந்த பின்பு
குறுரோமங்களை
சிரமத்துடன் இழுத்துக்கொண்டிருந்த நாட்களில்
அதிலொன்று சற்று நீண்டு வளர்ந்திருந்தது
எப்பொழுதும் குறுகுறுப்பிலே கிடந்தேன்
தும்மல் கட்டுக்கடங்காது போக
வீரியத்தினை மட்டுப்படுத்த
கத்தரியை உள்ளே துழாவிய அன்றிலிருந்து
குறுகுறுப்பின் உச்சத்தில் வலி புரட்டியெடுத்தது
அன்று எனது மூக்கை அறுத்துக்கொண்டிருந்தேனென
நம்பத்தகுந்த சிலர் கூறினார்கள்.”

இக்கவிதையானது ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம் நிறைந்து காணப்படுகிறது. வாசிக்கும்போது மூக்கினுள்ளிருந்து சிறிது நீட்சியுடனிருக்கும் ஒரு முடியைப் பிடித்திழுத்து கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சி மயக்கு, நினைவுச்சுருக்கு இவற்றை அனுபவிக்கவென அனிச்சையாய் மூக்கினுள் நுழைகிறது கைவிரல்.

3.

இவரது கவிதைகளில் பெரும்பாலும் சில தொடர்நிகழ்வுகள் உள்ளடக்கம் பெற்றிருப்பதால் வரியமைப்பு நீள்தன்மை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. ஆகையால்தான் குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் முக்கியமென எடுத்தெழுதஇயலவில்லை.

இன்னும் நன்றாகத் தட்டுங்கள்

“விழா நாயகர்களென செல்லமாக அழைக்கப்படும்
உங்கள் கைகளை நன்றாகக் தட்டுங்கள்
சிறிதும் இடைவெளி விட்டுவிடாதீர்கள்
அவரது மனையாளின் முன்னால்
அவருக்குக் கூச்சத்தை வாரி வழங்குங்கள்
அவர் எழுந்து போகும்போது
கண் அகலாது பார்த்து
அவரது உடலைக் கூனிக் குறுகவையுங்கள்
சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவை வாங்கித் திரும்பி
உங்களை நோக்கி வணங்கும்போது
அவர் வழிவதை தாராளமாகப் பாருங்கள்
மேடையின் நடுவே அப்படியே நிறுத்தி
தாளமுடியாத அளவு சங்கோஜத்தைத் தந்து
அவரது கண் பல் உதடு எல்லாவற்றையும் துடிக்க விடுங்கள்
நா தழுதழுக்கட்டும்
அப்படியும் விட்டுவிடாதீர்கள்
எல்லோரும் ஒன்றுகூடி இன்னும் நன்றாகத் தட்டுங்கள்
இன்னும் பற்றைக்குள் கீழிறங்கிவிடுவார்போல
கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு
தட்டிக்கொண்டேயிருங்கள்
ஓங்கி ஓங்கி தட்டுங்கள்
அவர் பாவமென்ற நினைப்பு மட்டும்
உங்களுக்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாது
செல்வங்களே
நீங்கள் இன்னும்
மண்டை கனத்த எத்தனையோ பேரை
சொறிந்துவிட வேண்டியிருக்கிறது.”

இன்றைய சூழலில் , மண்டை கனத்த மனிதர்கள்தான் கைதட்டல் பெறுகிறார்களா? அல்லது கைதட்டல் பெறுபவர்கள் மண்டை கனத்தவர்களா? எனும்படியான வினாக்களில் சிந்தனை நுழைவதில் முனைகிறது.

எப்போதும் ஏற்றம் என்பது படிப்படியாகவே நிகழும் ஒன்று. ஆனால் இறக்கம் என்பது தடாலடியாக சறுக்கி விழுவது. ஒரு நபருக்கான சொறிதலை (பாராட்டு, புகழ்ச்சி) முன்னிருத்தி அவர்களது படைப்புகளைமுடிவுசெய்துவிட இயலாது. ஆகையால்தான் ,சொறிபவர்கள் சொறிவதை நிறுத்திவிட்டு செறிவில் கவனம் செலுத்தவேண்டுமென்ற எண்ணத்தை இக்கவிதை நம் மனதில் அழுந்த ஊன்றி விதைக்கிறது.

4.

ஒரு கவிதையானது எல்லோர்க்கும் ஒரே கோணத்தில் புரிய அவசியமில்லை. ஒரு கவிதை பற்றிய புரிதல் வெவ்வேறு அடர்த்தியில் வெவ்வேறு கோணங்களில் வாசகர்களுக்கு அமையப்பெற்றிருப்பதை அவசியம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
உதாரணமாக,

“வேண்டுமென்றே
பல்லை இந்தச் சுத்தியல் கொண்டுடைத்து
கதற முடியும்
இப்பொழுது
சுத்தியலைக் கீழே வைத்துவிட்டு
அந்தக் கடையில் போய்
டீ குடித்து வரலாம்
அடித்துவிட்டால்
கண்டிப்பாக உட்கார்ந்து அழவேண்டும்.”

இக்கவிதையினைக் குறிப்பிடலாம். அவரவர் உணர்விற்கேற்பமேற்கண்ட கவிதையின் ஆழ்வரிகளைப் புரிந்துகொள்ளலாம்.

நேர்மையான எண்ணங்கள் கலவையாய்க் கலக்கப்பெற்று , தரமான அடித்தளத்துடன் கவனமாகக் கட்டமைத்து பொருத்தமான வண்ணங்கள் பூசப்பட்ட நேர்த்தியான வீடென இத்தொகுப்பைக் குறிப்பிடலாம்.

தொகுப்பு- பறவை பார்த்தல்
ஆசிரியர் – செல்வசங்கரன்
வெளியீடு – மணல் வீடு.