Author: பதாகை

அணங்கும் பிணியும் அன்றே

தன்ராஜ் மணி

இன்று என் படுக்கையில் ஒரு ஆண் வேண்டும். பல நாட்கள் ஆகிவிட்டது. முற்றிலும் அந்நியரான உங்களிடம் இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.  பழகியவர்களிடம் இத்தனை வெளிப்படையாய் பேச முடியாது.

நான் லின்சி, எனக்கு முப்பது வயதாகிறது, லண்டனில் ஒரு பிரபலமான வங்கியில் மென்பொருள் குழு மேலாளர் பணி. ஸ்டுவேர்ட் முறித்து கொண்டு போகும் வரை என் வாழ்வில் வெகு சில ஆண்களே இருந்தனர். என் தந்தை, அண்ணன், என் பள்ளி கால ஆண் தோழன் பென், கல்லூரி கால துணைவன் காரி, பிறகு ஸ்டுவேர்ட்.

ஸ்டுவேர்ட்டை காதலித்து தொலைத்து விட்டேன் . அழுது, கதறி புலம்பி, குடித்து , உண்டு ஒரு வழியாய் அவனை மறந்து வெளி வரும் போது ஒரு வருடம் கடந்து, இருபது கிலோ எடை கூடி ஆண்கள் வெறும் ஹாயுடன் அவசரமாக கடந்து செல்லும் பெண்ணாகிவிட்டேன்.

ஸ்டுவேர்ட்டை மறந்தாலும் அவன் விட்டு சென்ற கசப்பை என்னால் மறக்க முடியவில்லை. இந்த ஆண்களுக்கு மூளையற்ற மேனாமினுக்கிகள்தான் வேண்டும், அவர்கள் சொல்லும் சகிக்க முடியாத நகைச்சுவைக்கு சிரித்து, அவர்கள் விடும் கதைகளை நம்பிக் கொண்டு…

ஸ்டுவேர்ட்டும் ஒரு மேனாமினுக்கி பின்னால்தான் ஓடினான். ஆபாசமாய் அவனை திட்ட தோன்றுகிறது, இத்துடன் அவனை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்கிறேன், இல்லாவிட்டால் உங்கள் முன் இழிசொல் சொல்லி என் மதிப்பை இழக்க வேண்டியிருக்கும்.

இனி ஒரு ஆணை என்னால் காதலிக்க முடியாது. ஆனால் , ஆணின் உடல் எனக்களிக்கும் உவகை சொல்லில் அடங்காதது. என் அலுவலகத்தில் என் பெயர் ஆணுண்ணி. நான் வேலை பார்க்கும் இடத்தில் நான் துய்க்காத ஆணுடல் அநேகமாக இல்லை, ஒரு பாலர் சிலரை தவிர.

நான் ஓரிரு முறைகளுக்கு மேல் ஒரே ஆணுடலை உபயோகிப்பதில்லை, விலகி விடுவேன்.எந்த நிபந்தனைகளும் பாசாங்குகளும் இல்லாத அதி தூய ஊண் களியாட்டு மட்டுமே என்பதால் இதுவரை எனது ஊண் கொள்முதலுக்கு எந்த குறையும் இருந்ததில்லை. இலவசமாய் ,ஓரிரவுக்கு மட்டும் ,எந்த பின் விளைவுகளும் அற்ற ஓர் பெண்ணுடல் துய்ப்பை அவள் பேரிக்காய் போன்ற உடல்கட்டுடன் இருந்தாலும் எந்த ஆணும் மறுப்பதில்லை, அவளுடன் அன்றாடம் வாழத்தான் அவர்களால் முடிவதில்லை. அந்த ஓரிரவில் நான்தான் அவர்களுக்கு தேவதை. ஒவ்வொரு இரவும் நான் ஒரு தேவதை.., ஆஹா! எப்பொழுது நினைத்தாலும் கிறங்கச் செய்யும் எண்ணம்.

பல நிறம், பல இனம், பல நீள அகலங்களில் மூழ்கி களித்தும் தீரா பித்து இது. அவ்வளவு விரைவில் இது தீர்ந்து விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.

சரி இன்றைய விஷயத்திற்கு வருவோம். ஒரு மாதமாக இரவு பகலாக வேலை. கடினமானதொரு மென்பொருள் ஆக்கத்தை எனது குழு இந்தியாவில் இருந்து வந்திருந்த மற்றொரு குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக வடிவமைத்து , நேற்று பயணர் உபயோகத்திற்கு வெளியிட்டாயிற்று. இன்று அதை கொண்டாட ஒரு மது விருந்து. அதற்காகவே இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்.

இந்திய குழுவின் மேலாளனும் ஒரு இந்தியன்.இந்தியனாய் இருந்தாலும் என்னுடய காக்னி நகைச்சுவைகளை கூட புரிந்து கொண்டு ரசிக்கும் அளவுக்கு இங்கிலாந்துடன் பரிச்சியம் உடையவன். இந்த ஒரு மாதத்தில் இருவரும் ஒன்றாக மதிய உணவுக்கு செல்லும் அளவுக்கு நெருங்கிவிட்டோம். இன்றைய இரவை அவனோடு கழிக்கலாமென்றிருக்கிறேன்.  இந்த கறுப்பு நிற கையற்ற , முட்டியுயர சாடின் கவுனை அவனுக்காகவே அணிந்துள்ளேன்.

என் மார்பக பிளவை மிக எடுப்பாக வெளிக்காட்டும் வி வடிவ மேல் வெட்டை கவனியுங்கள்.
நான் அறிந்த வரையில் இந்தியர்களுக்கு பெண் மார்பின் மேல் ஒரு பெரிய மோகம், இந்த கவுன் மார்பை முன்னிலை படுத்துவதிற்கு உகந்தது. அது என்னவோ ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு அங்கத்தின் மேல் ஒரு மோகம் , வெள்ளையர்களுக்கு நீண்ட கால்களின் மேல், கருப்பர்களுக்கு உருண்டு திரண்ட பின் பக்கத்தின் மேல். விதிவிலக்காக ஒருவனைக் கூட நான் கண்டதில்லை. பழுப்பு நிறத்தில் , வெள்ளை நிற சட்டையும் , அடர்நீல நிற பாண்ட்டும் அணிந்து கையில் பியர் பைண்டுடன் உயரமாக வருபவன் தான் என்னுடைய இன்றிரவுக்கான நிகழ்ச்சி நிரல்.

“என்ன எஸெக்ஸ் பெண்ணே மதியத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டாயா?” என்றான் என்னருகில் அமர்ந்தபடி .

“சேம்பெயினை காலை உணவுடன் பரிமாறினாலும் நான் குடிப்பேன், இப்பொழுது தான் மூன்றாவது கோப்பை. இன்று அனைத்தையும் நிதானமாய் அனுபவித்து செய்வதாய் உத்தேசம்” என்றேன் கண் சிமிட்டியபடி.

அவன் கையில் இருந்த லாகர் பியரை ஒரு மிடறு விழுங்கிவிட்டு, என்னை நோக்கி புன்னகைத்தான். “உன் உதவிகள் அனைத்திற்கும் மிக்க நன்றி, நீ இல்லாவிட்டால் எப்படி இதை முடித்து கொடுத்திருப்பேனென்றே தெரியவில்லை” என்றேன்.

“இந்த உடையில் நீ வழக்கத்தைவிட அழகாக இருக்கிறாய்”, அவன் பார்வை இன்னும் என் கண்களில் தான் நிலைத்திருந்தது. நான் பேச்சை மடை மாற்றியது அவனுக்கு பிடிக்கவில்லை, சிரித்துக்கொண்டேன்.

குழுவினர் எங்கள் மேஜையில் ஒவ்வொருவராய் வந்து குழுமினர். நான் இன்னும் சற்று நெருங்கி அமர்ந்தேன். பல பேச்சுக்கள், வெடிச்சிரிப்புகள் இன்னும் பல குவளை செம்பெயினுடன் இரவு என்னுள் வெதுவெதுப்பாய் படர்ந்திறங்கியது.

பாரில் இப்போது நிற்க இடமில்லாதளவிற்கு கூட்டம்.

பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் காதில் சொன்னால்தான் அவருக்கு கேட்குமளவுக்கு இரைச்சல்.
நான் அவன் மேல் என் உடல் படர சாய்ந்து அவன் காதுக்குள் “என்னைப் பிடித்திருக்கிறதா” என்றேன். என் மூச்சு அவன் கன்னங்களில் பட்டு சூடாக என் முகத்தின் மேல் பொழிந்தது. அவன் புஜங்களில் என் இடது மார்பு அழுந்திக்கொண்டிருந்தது. அவன் என் பக்கம் திரும்பாமல் புன்னகையுடன் “நீ என்ன நினைக்கிறாய்” என்றுவிட்டு ஒரு மிடறு பீரை வாயில் விட்டுக்கொண்டான். சிறு சிணுங்கலுடன் “நீ சொல்” என்றேன். என்னைப்பார்த்து முன்னால் இருப்பவர்களை நோக்கி கண் காட்டினான். “வா, ஆடுவோம்” என்று சொல்லி எழுந்து என் கையை பற்றினான், நான் என் விரல்களை அவன் விரல்களில் பின்னிக்கொண்டேன்.

இருவரும் நடன அரங்கின் கூட்டத்திற்குள் நுழைந்தோம். அவன் இடது கையால் என் இடையை சுற்றி பிடித்தான் , அவன் கண்கள் என் ஆடையின் வி வெட்டு பிளவில் நிலைத்திருக்க மெதுவாக

சில நிமிடங்கள் ஆடிக்கொண்டிருந்தோம்.

“நீ இன்னும் பதில் சொல்லவில்லை”

“நான் பிடிக்காதவர்களின் முலைகளைப் பார்ப்பதில்லை” சொல்லிவிட்டு அவன் மூக்கால் என் மூக்கை உரசினான். நான் வெடிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு என் மூக்கால் அவன் மார்பை செல்லமாய் முட்டினேன். அவன் கையை விட்டு விட்டு “நான் காதலில் விழுந்தேன்” என்று பாடிக்கொண்டு குதித்தேன். மீண்டும் என் இடையை வளைத்து இழுத்தான். நான் தவ்வி அவன் உதட்டை கவ்வினேன். அவன் சற்று தயங்கிவிட்டு என் மேலுதட்டில் அவன் நாவால் நீவினான். அவன் நாவை என் பற்களால் மெல்ல என் வாய்க்குள் இழுத்தேன். அவன் இதழ்கள் என் உமிழ் நீரை சுவைக்க தொடங்கியது. என் கண்கள் கிறங்க , இதயம் படபடக்க , கால்கள் நிலையிழக்க அவன் இதழ்களையும், நாவையும் சுவைத்தேன். சிறிது நேரம் கழித்து அவன் இதழ்களை பிரித்தெடுத்துவிட்டு என்னை வாஞ்சையோடு பார்த்தான். எனக்கு அங்கேயே ஆடை கலைந்து உறவு கொள்ள வேண்டும் போல் இருந்தது.

“என் வீட்டிற்கு போவோமா” என்றேன் குளறலாக.

“இன்று மட்டுமா இல்லை என்றென்றுக்குமா” அவன் பார்வையில் குறும்பிருந்தது.

“என்றன்றைக்கும்” என்றேன் பலமாக சிரித்தபடி.

“உன் என்றன்றைக்கும் பனிரெண்டு மணி நேர ஆயுள் மட்டுமே கொண்டது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” இப்பொழுதும் அவன் கண்கள் சிரித்து கொண்டிருந்தது, ஆனால் அதில் ஒரு சிறு கத்தி சொறுகி வைக்கப்பட்டது போல் என்னுள் ஒரு வலி.

அவன் கண்ணை தவிர்க்க அவன் மார்பில் தலை புதைத்தேன்.

என் தலையில் அவன் மென்மையாய் முத்தமிடுவதை உணர்ந்தேன்.

என் மோவாயை பற்றி என் முகத்தை தூக்கி என் இதழ்களில் முத்தமிட்டான். நான் கல் போல் கண் மூடி நின்றிருந்தேன். நான் அம்முத்தத்தில் இல்லை என அறிந்து இதழ் விலக்கினான்.

“எனக்கு ஒரு நாள் போதாது” என்றான், இப்பொழுது அவனிடம் துளியும் சிரிப்பில்லை.

” கால் வலிக்கிறது, போய் அமர்வோம்” அவனை இழுத்துக்கொண்டு எங்கள் மேஜைக்கு சென்றேன்.

“நல்ல ஆட்டமா லின்சி” என்றான் தரச்சோதனை குழுவின் தலைவன் க்றிஸ், இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டியபடி.

“ஆம், பாதி எடை குறைந்துவிட்டது” என்றேன்.சத்தம் போட்டு போலிச்சிரிப்பொன்றை உதிர்த்தான், நல்ல போதையில் இருந்தான்.மேலே எதுவும் பேசாமல் மேஜையில் சென்று அமர்ந்தேன்.
சிறிது நேரம் மற்றவர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தேன்.

என் இந்தியன் அனைவருக்கும் அடுத்த ரவுண்ட் மது வாங்க பாரை நோக்கி நடந்தான்.அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் , ஒரு சிந்தனையும் இல்லாமல்.

என்னையறியாமல் ஒரு கசப்பு என்னுள் எழுந்தது. என் முன்னால் மேஜை மேல் ஒரு குவளை செம்பெயின் இருந்தது, அதை கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் வி விடிவ வெட்டிற்குள் குவளையின் வாயை நுழைத்து , நிதானமாக ஊற்றினேன். முற்றிலும் கவிழ்த்து விட்டு அதை மேஜை மேல் வைத்தேன். நாடக பாணியில் யானை தும்பிக்கை தூக்குவது போல் நெற்றியில் கை வைத்து உரக்க ” ஓ! ஓஹோ! என் முலைகளுடன் என் ஆடையும் நனைந்துவிட்டதே, யாராவது ஒரு கணவான் தயை கூர்ந்து என் மேல் கைப்படாமல் சுத்தம் செய்ய முடியுமா” என்றேன்.

சிலர் அடக்க மாட்டாத சிரிப்புடனும், சிலர் அதிர்ச்சியில் வாய் பிளந்தும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

க்றிஸ் எழுந்தான். அவனும் நாடக பாணியில் இரு கைகளையும் விரித்து ” லின்சி , என்றும் உன் சேவையில்” என்று கத்திக்கொண்டு மேஜையை சுற்றி ஓடி என் அருகில் வந்து நின்றான்.
நான் திரும்பி என் முலைகளை நிமிர்த்திக் காட்டி ” தொடங்குங்கள் உங்கள் சேவையை கணவானே” என்றேன்.

க்றிஸ் தன் கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு நாவை என் மார்பிளவிற்குள் விட்டு துப்புரவாய் சுத்தம் செய்ய தொடங்கினான்.

வண்ணக்கழுத்து 17ஆ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அன்றைக்கு ஒரு பயங்கரமான செய்தி மடாலயத்தை வந்தடைந்தது. லாமா குறிப்பிட்ட அதே கிராமத்தை சில நாட்களுக்கு முன்னர் ஒரு காட்டெருமை தாக்கியிருக்கிறது. ஊருக்குப் பொதுவாக இருந்த கதிரடிக்கும் களத்திற்கு அருகில் நடந்த ஊர்ப் பெரியவர்களின் கூட்டம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பேரை, முன்தினம் மாலை அங்கு வந்த காட்டெருமை கொன்றிருக்கிறது. தலைமை லாமாவைச் சந்தித்து அந்த விலங்கை அழிக்கவும் அந்த முரட்டு மிருகத்தைப் பீடித்திருந்த துராத்மா நீங்குவதற்காக பிரார்த்தனை செய்யவும், தலைமை லாமாவை கேட்டுக் கொள்வதற்காக கிராமத்தவர்கள் ஒரு குழுவை அனுப்பியிருந்தார்கள். இருபத்து நான்கு மணிநேரத்தில் அந்த மிருகத்தை கொல்லக்கூடிய வழிவகையைச் செய்வதாக லாமா சொன்னார். “எல்லயற்ற கருணையின் அன்புக்கு பாத்திரமானவர்களே, அமைதியோடு வீட்டிற்குச் செல்லுங்கள். உங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும். அந்தி சாய்ந்த பின் வீட்டிற்கு வெளியே வராதீர்கள். வீட்டிலேயே இருந்து, அமைதியையும் துணிவையும் தியானம் செய்யுங்கள்”. அங்கே இருந்த கோண்ட் அவர்களிடம், “இந்த மிருகம் எவ்வளவு நாட்களாக உங்கள் கிராமத்தில் தொல்லை கொண்டிருக்கிறான்?” என்று கேட்டார். அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவருமே அந்த மிருகம் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு இரவும் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். அது அவர்களுடைய வசந்தகாலப் பயிரில் கிட்டத்தட்ட ஒரு பாதியை சாப்பிட்டுவிட்டிருந்தது. மீண்டும், அந்த காட்டெருமையை அழிக்கவும் தம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை வேண்டிவிட்டு, அவர்கள் கிராமத்தை நோக்கி கீழே இறங்கினார்கள்.

அந்தக் குழு சென்ற பின்னர், அருகில் நின்று கொண்டிருந்த கோண்டை நோக்கி, “வெற்றியால் தேர்வு செய்யப்பட்டவனே, இப்போது நீ குணமடைந்துவிட்டதால், அங்கே போய் அந்தக் கொலைகாரனை அழித்துவிடு” என்றார்.

“ஆனால்… குருவே”

“இனியும் பயப்பட வேண்டியதில்லை, கோண்ட். உன்னுடைய தியானங்கள் உன்னைக் குணப்படுத்திவிட்டன. இவற்றிலிருந்து என்ன பெற்றாய் என்பதை, இந்த வாய்ப்பை வைத்துக் கொண்டு காட்டிற்குப் போய் சோதித்துப்பார். தனிமையில் மனிதர்கள் பெற்ற சக்தியையும் சமநிலையையும் ஜனத் திரளில் சோதித்துப் பார்ப்பது கட்டாயம். இப்போதிலிருந்து இரண்டு சூரிய அஸ்தமனத்திற்குள் நீ வெற்றியோடு திரும்ப வேண்டும். உன்னுடைய வெற்றியின் மீது எனக்கு இருக்கும் மாறாத நம்பிக்கைக்காக இந்தப் பையனையும் அவனுடைய புறாவையும் உன்னோடு அழைத்துப் போ. உன்னுடைய சக்தியின் மீதோ இந்தக் காரியத்தில் உன்னுடைய வெற்றியின் மீதோ எனக்கு சந்தேகம் இருந்திருந்தால் ஒரு பதினாறு வயதுப் பையனை உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல சொல்லியிருக்கமாட்டேன். அந்தக் கொலைகாரனை நீதிக்கு முன்னால் நிறுத்து” என்றார் தலைமை லாமா.

அன்று மதியம் நாங்கள் காட்டுக்குக் கிளம்பினோம். மீண்டும் ஒரு இரவை காட்டில் கழிக்கப்போவாதை நினைத்து நான் உற்சாகமடைந்தேன். முழுமையானவர்களான கோண்டுடனும் வண்ணக்கழுத்துடனும் காட்டுக்கு, மீண்டும் ஒரு காட்டெருமையைத் தேடிச் செல்வது எத்தனை இன்பம். இது மாதிரியான ஒரு வாய்ப்பை வரவேற்காத சிறுவனும் இந்த உலகத்தில் இருப்பானா?

ஆக, நிரம்பி வழியும் உற்சாகத்துடன், கயிற்று ஏணி, ஒரு சுருக்குக் கயிறு, கத்திகளை எடுத்துக் கொண்டு, வண்ணக்கழுத்தை என் தோளில் ஏற்றிக் கொண்டு நாங்கள் கிளம்பினோம். ஆங்கிலேய அரசாங்கம், சாதாரண இந்திய மக்கள் நவீன ஆயுதங்கள் தரிக்க பயன்படுத்த தடை போட்டிருப்பதால், நாங்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளவில்லை.

மதியம் மூன்று மணி சுமாருக்கு மடாலயத்திற்கு வட மேற்கே இருக்கும் அந்த கிராமத்தை அடைந்தோம். அந்த எருமையின் கால்தடத்தைக் கண்டுபிடித்தோம். அடர்ந்த காட்டுக்குள்ளும், அகன்ற பாதைகளிலும் அதைத் தொடர்ந்தோம். அங்குமிங்கும், ஓடையை கடக்கவும், கீழே விழுந்திருந்த ராட்சத மரங்களைத் தாண்டவும் வேண்டியிருந்தது. காட்டெருமையின் கால் குளம்புகளின் தடங்கள் அசாதாரணத் தெளிவுடனும் ஆழமாகவும் தரையில் பதிந்திருந்தன.

கோண்ட் சொன்னார், “இங்கே எவ்வளவு கடுமையாக இந்த மிருகம் உழன்றிருக்கிறது என்று பார். அது மரண பயத்தோடு இருந்திருக்க வேண்டும். மிருகங்கள் அச்சமில்லாத நிலையில் மிகக் குறைவான தடங்களையே விட்டுச் செல்லும். ஆனால், மிரண்டு விட்டால், சாவு பயம் ஒட்டுமொத்தமாக தங்கள் உடலை அழுத்துவதைப் போல நடந்து கொள்ளும். இவனுடைய கால் குளம்புகள், அவன் போன இடங்களில் எல்லாம் ஆழமாகவும் தெளிவாகவும் இறங்கியிருக்கின்றன. ரொம்பவே மிரண்டு போய் இருக்கிறான்.”

கடைசியில் நாங்கள் கடக்க முடியாத ஒரு ஆற்றை அடைந்தோம். கோண்டைப் பொறுத்தவரை அதனுடைய ஓட்டம், அதில் இறங்கினால் எங்கள் கால்களை உடைத்துவிடும் அளவிற்கு கூர்மையானவை. அந்த எருமையும் கூட அதைக் கடக்க முயற்சிக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அதனால், நாங்கள் அந்த மிருகத்தை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு நதிக்கரையில் அதன் கால் தடங்களைத் மேலும் தேடினோம். இருபது நிமிடங்களில் அந்தக் காலடித்தடங்கள் ஓடையின் கரையில் காணாமல் போய், கரியைப் போல இருண்ட அடர்ந்த காட்டிற்குள் சென்றது, இப்போது மணி மாலை ஐந்து கூட ஆகியிருக்கவில்லை. எந்த வயதுடைய காட்டெருமைக்கும் கிராமத்திலிருந்து இவ்வளவு தூரம் வர அரை மணிநேர ஓட்டமே போதும்.

“உனக்கு இந்த தண்ணீரின் பாடல் கேட்கிறதா?” என்றார் கோண்ட். பல நிமிடங்கள் கவனித்துக் கேட்ட பின்பு, தண்ணீர் கோரைப் புற்களையும் அதற்கு பக்கத்திலேயே இருக்கும் மற்ற புற்களையும் முத்தமிட்டபடி எழுப்பும் கல கல ஒலியையும் முனகல் ஒலியையும் கேட்டேன். அந்த நதி ஓடி இறங்கும் ஏரியிலிருந்து இருபது அடி தொலைவில் இருந்தோம். “அந்தக் கொலைகார எருமை இந்த இடத்திற்கும் அந்தக் காயலுக்கும் நடுவில் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை தூங்கிக் கொண்டிருக்கலாம்”, என்றார் கோண்ட். ”அங்கிருக்கும் இரட்டை மரங்கள் ஒன்றில் தங்குவோம். இருட்டிக் கொண்டு வருகிறது. சீக்கிரமே அந்த மிருகம் கண்டிப்பாக இங்கே வரும். அது வரும் போது, நாம் காட்டின் தரையில் இருக்கக் கூடாது. அந்த மரங்களுக்கு இடையே நான்கு அடி கூட இடைவெளி இல்லை.”

வேதாளத்தின் மோதிரம்

காலத்துகள்

நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு அதிஅத்தியாவசமாக வேதாளத்தின் மோதிரம் தேவைப்பட்டது. நான் பல நேரங்களில் கோபப்படுபவன் தான் என்றாலும் இன்றுவரை யாருடனும் கைகலப்பில் ஈடுபட்டதில்லை. அத்தகைய மூர்க்கம் எனக்குள் ஒருவேளை எழுந்தாலும், அதற்கான தைரியம் எனக்கு கிடையாது என்றே நினைக்கிறேன். ஆனால் ‘சாது’ என்று பட்டம் கொடுக்கப்படும் பலரைப் போல என் மனவுலகில் சாகஸக்காரனாகவே உலவினேன்.

நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த காலி மனை, சில நேரம் போர்க்களமாகும், சில நேரம் கொள்ளையர்களின் கப்பல் பயணிக்கும் கடலாக மாறும். இப்படி அந்த இடத்திலிருந்து வீட்டை, பள்ளியை, ஏன் உலகையே எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பேன். எனவே தீயவர்களை அழிக்கும் நாயகர்கள் பால் நான் ஈர்க்கப்பட்டது ஆச்சர்யமில்லை. அதிலும் தான் குத்து விடும் தீயவர்களின் முகத்தில் மண்டையோட்டு முத்திரையை பாதிக்கும் மோதிரம் கொண்ட வேதாளம் (phantom) என்னை அதிகம் ஈர்த்தார். அவர் வைத்திருந்ததைப் போல ஒரு மோதிரத்தை – நிஜத்தில் நான் குத்து விட யாரும் இல்லாவிட்டாலும் அந்த காலி மனையின் உலகில் என்னிடம் அடி வாங்க பல நாசகார சக்திகள் காத்திருந்தன – வாங்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். என் வீட்டிலும் அதை வாங்கித்தருவதாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்படியொரு மோதிரம் கிடைக்காது என்று அவர்கள் சொல்லி இருந்தால் நான் அன்றிருந்த மனநிலையில் அதை நம்பியிருக்க மாட்டேன் தான்.

மோதிரம் கிடைக்குமா கிடைக்காதா என நான் ஏங்கி இருந்தபோது தான் மணி என் தெருவிற்கு குடி வந்தான். ஒரே வகுப்பு என்றாலும், வேறு வேறு பள்ளிகளில் படித்து வந்தோம். காமிக்ஸ் ஆர்வம் எங்களை இணைத்தது. அவனிடம் வேதாளத்தின் மோதிரம் பற்றி நான் சொல்ல, கடைத்தெருவுக்கு சென்று பார்க்கலாம் என்று அவன் கூறினான். எங்களிடம் காசு இல்லாவிட்டாலும், எந்தக் கடையில் அது கிடைக்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாமே என்பது அவன் வாதம். ஒரு சனிக்கிழமை காலை மோதிரத்தை தேடி கிளம்பினோம்.

80களில் பரிசுப் பொருட்களுக்கென்றோ, குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கென்றோ தனிப்பட்ட கடைகள் எதுவும் கிடையாது. ‘பேன்சி ஸ்டோர்’ என்ற பெயரொட்டோடு இருக்கும் சில கடைகளில் மட்டுமே மோதிரத்தை தேட வேண்டும். பஜாரில் நாங்கள் நுழைந்த முதல் கடையில், ‘வேதாள மோதிரம் இருக்கா’ என நாங்கள் கேட்க எங்களை கடைக்காரர் பார்த்த பார்வை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. ஏதேனும் மந்திரவாதியின் அடிப்பொடிகளான குட்டிச்சாத்தான்கள் என எங்களை அவர் கருதி இருக்கக் கூடும் என்று நினைத்தோம். அடுத்த இரு கடைகளில் எங்களை வம்பு செய்ய வந்தவர்கள் என்று கருதி, ‘கடை தொறந்தவுடனேயே தரித்திரங்க வந்துடுச்சு’ போன்ற வசவுகளோடு துரத்தி விட்டார்கள். யாரும் நாங்கள் அப்படியொரு மோதிரத்தை தேடுகிறோம் என்பதை நம்பவே இல்லை. இன்னும் ஓரிரு கடைகள் மட்டும் பார்ப்போம் என்று முடிவு செய்து நாங்கள் நுழைந்த கடை தான் கணேசன் அண்ணனுடையது. நாங்கள் சொல்லியதைக் கேட்டதும் அவர் முகத்தில் தோன்றிய புன்னகையில், நக்கலோ, கிண்டலோ இல்லை. அத்தகைய மோதிரம் கடையில் இல்லையென்று சொன்னவர், ‘இதை பாருங்கள்’, என்று சில காமிக்ஸ் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். அண்ணனும் காமிக்ஸ் ஆர்வலர். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தந்தைக்கு துணையாக கடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மோதிரம் கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் ஏற்பட்ட தொடர்பு எங்களுக்கு உற்சாகமளித்தது (அவர் படிக்கத் தந்த புத்தகங்களும், பத்திரிக்கைகளும்தான்). ஒவ்வொரு சனி, ஞாயிறும் காலையில் சில மணி நேரம் அவர் கடையில் இருப்பதை பழக்கமாக்கிக் கொண்டோம். சில பல ஆண்டுகள் பழமையான (பெரும்பாலும் தமிழ்) காமிக்ஸ் புத்தங்களை அவர் வைத்திருந்தார். கடையில் வாடிக்கையாளர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஓரத்தில் அமர்ந்து அவற்றை படித்துக் கொண்டிருப்போம். யாருமில்லாத ஒரு நாளில் டார்ஜானுக்கும் வேதாளத்திற்கும் சண்டை வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று அவருடன் படு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் நுழைந்தார். வெளியே கிடந்த புத்தகங்களையும், எங்களையும் பார்த்து விட்டு, ‘நீ கெட்டது போறாதுன்னு இவங்களையும் கெடுக்கறையா”, என்று அண்ணனிடம் சண்டை பிடித்தார். நாங்கள் பயந்து ஓடி விட்டோம். ஓரிரு வாரங்கள் அந்தப் பக்கம் போகவில்லை. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செல்ல, கடையில் அண்ணன் மட்டுமே இருந்தார்.

அவரை அன்று திட்டியது அவர் அப்பாவாம். தன்னைக் குறித்தும், தன் ஆசைகள் குறித்தும் அண்ணன் அப்போதுதான் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். சின்ன வயதிலிருந்தே அவருக்கு கதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம். அவர் தந்தைக்கு அதெல்லாம் வீண் வேலை என்ற எண்ணம். படிப்பு முடிந்த பின் ஏதேனும் அரசு வேலைக்கு மகன் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசை. அண்ணன் செங்கல்பட்டிலேயே ஒரு வேலை பார்க்க வேண்டும் அல்லது கடையை நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்தார். அவரைப் போல செங்கல்பட்டை அங்குலம் அங்குலமாக சுற்றி வந்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ‘பழைய பஸ்ஸ்டாண்ட்’ என்று அழைக்கப்படும் செங்கல்பட்டின் ஒரு எல்லையில் இருந்து, இன்னொரு எல்லை என்று சொல்லக்கூடிய கலெக்டர் ஆபீஸ்ஸை தாண்டி இருக்கும் பிள்ளையார் கோவில் வரை சைக்கிளில் சென்று திரும்புவார். (இந்த பிள்ளையார் கோவில் பிரசத்திப் பெற்றது. அந்த வழியே செல்லும் தொலைதூர வாகனங்கள் அங்கு நின்று தேங்காய் உடைத்துவிட்டுச் செல்வது வழக்கம். 60 களில் தமிழில் வெளியான ‘பஸ்’ முக்கிய பாத்திரமாக வரும் படம் -ரோட் மூவி என்று அதை வகைப்படுத்தலாமா என்று தெரியவில்லை – ஒன்றில் பஸ் இங்கு நின்று தேங்காய் உடைத்து செல்வதாக ஒரு காட்சி வரும். இதை 80களிலும் பெருமிதத்தோடு குறிப்பிட ஒரு சிலர் இருந்தார்கள்). இதிலும் ஒரே பாதையில் செல்லாமல், வேறு வேறு தெருக்களில் நுழைந்து வருவார். பெரியமணியக்காரத் தெருவில் நாங்கள் வசித்தோம் என்று சொன்ன போது , அதன் அருகில் இருந்த ‘டப்பா ஸ்கூல்’ என்று அழைக்கப்பட்ட, அதிகமும் -பல பள்ளி, கல்லூரி மாணவர்களாலும், – விளையாட்டு மைதானமாகவே உபயோகப்படுத்தப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி பள்ளி, ராமர் கோவில், மிகவும் மாசுபடுத்தப்பட்ட கோவில் குளம் எல்லாவற்றையும் சரியாக குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, “உங்க தெருல ஒரு வீட்ல ஆளோட சிலை ஒண்ணு இருக்கும்ல” என்று கேட்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

அது நான் குடியிருந்த வீடு தான். அந்த மார்பளவுச் சிலை வீட்டின் சொந்தக்காரருடையது தான். அவர் மகன் தந்தை நினைவாக அதை வீட்டில் எழுப்பி இருந்தார். உயிருடன் இருக்கும் வரை தந்தையும் மகனும் அடித்துக் கொண்டதெல்லாம் வேறு கதை. வீட்டிலேயே சிலை வைத்தது அந்நாட்களில் எங்கள் தெருவில் பரபரப்பை கிளப்பிய விஷயம். ‘ செல இருக்கற வீடு தானே’ என்றே குறிப்பிடுவார்கள். என் நண்பர்கள் அதை வைத்து என்னை கிண்டல் செய்வதும் உண்டு. இப்போதும் நண்பர்களுடன் செங்கல்பட்டு நாட்களை பற்றி பேசும் போது, நான் குடியிருந்த வீட்டை ‘அந்த சிலை வீடு தானே ‘ என்று தான் குறிப்பிடுகிறார்கள். எங்கள் தெரு என்றில்லை, செங்கல்பட்டில் எந்த இடத்தை, தெருவை சொன்னாலும் அங்குள்ள அல்லது அருகிலுள்ள ஏதேனும் குறிப்பிடத்தக்க அடையாளச் சின்னத்தை அவரால் துல்லியமாக சொல்ல முடியும். ரயில் நிலையமருகே இருந்த- 60களில் அரசு மருத்துவமனையாக இருந்து கைவிடப்பட்ட – பாழடைந்த கட்டிடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்று, “இங்கு எத்தனை பேர் பிறந்திருப்பாங்க, இறந்திருப்பாங்க, எவ்வளவு பரபரப்பரா இருந்திருக்கும்” என்பதாக ஏதோ சொல்லி வந்தார். அப்போது பெரிதாக புரியாவிட்டாலும், வரலாறு (கடந்த காலம்) என்பது அரசர்கள், போர் என்பது மட்டுமே அல்ல, சிதிலங்கள் தோல்வியின் இடிபாடுகள் மட்டுமல்ல, கைவிடப்பட்ட முயற்சிகளின் மிச்சங்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தை என்னுள் அவர்தான் விதைத்தார் என்று நினைக்கிறேன். வெற்றியோ தோல்வியோ, அல்லது எதிர்கொள்ளத் தவறிய யுத்தங்களோ, காலம் தன் முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை.

இத்தகைய மனநிலையில் இருந்தவருக்கு சொந்த ஊரை விட்டு பிரிய மனசே இல்லை என்பது இயல்பான ஒன்றுதான். அரசாங்க வேலையென்றால் பணியிட மாறுதலால் உள்ளூரில் தொடர்ந்து இருக்க முடியாது என்று அவர் நினைத்தார். வேலைக்கு போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கில்லை. செங்கல்பட்டில் தனியார் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமில்லை என்பதால், தினமும் சென்று திரும்பும்படி சென்னையில் வேலை தேடினார், தனியார் நிறுவனமொன்றில் ஒரு வேலை கிடைத்தும் அரசு தேர்வுக்கு தயாராகவேண்டுமென்று அவர் தந்தை அதில் சேருவதிலிருந்து தடுத்து விட்டார்.

அவர்கள் கடையையேகூட வங்கியிலோ அல்லது தனியாரிடமோ கடன் வாங்கி விரிவாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. சென்னைக்கு சென்று அங்கு எந்த மாதிரியான புது பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றெல்லாம் கூட பார்த்து வந்தார். தன் மற்ற ஈடுபாடுகளுக்கு இடையேயும் வேலை, தொழில் குறித்து யோசித்துக் கொண்டு தான் இருப்பார். எங்கள் ஊரில் தசரா பண்டிகையின் இறுதி நாட்களில் சந்தை ஒன்று நடக்கும். ராட்டினம், (பொம்மை) துப்பாக்கி வைத்து சுடுதல், வளையத்தை எறிந்து அது எந்தப் பொருள் மீது விழுகிறதோ அதை சொந்தமாக்குதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன், நிறைய கடைகளும் போடப்படும். மேட்டுத் தெரு என பொதுவாக அழைக்கப்பட்ட பாதையில் 2-3 கிலோமீட்டர் வரை விரிந்திருக்கும் சந்தையின் ஒரு எல்லை எங்கள் வீட்டிற்கு அருகிலேயும் (ராமர் கோவில் குளத்தை ஒட்டி உள்ள தெருவில்) இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு மிக எங்கள் வயதைக் கருதி தனியாக அனுப்ப மாட்டார்கள் என்பதால், நாங்கள் நினைக்கும் அளவிற்கு அந்தச் சந்தையில் சுற்றித் திரிய முடியாது. அந்த வருடம் எங்களை அழைத்துச் செல்வதாக அண்ணன் கூறினார். எங்களை இரவில் தனியாக அனுப்ப வீட்டில் முதலில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நானும் மணியும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்று கூறி சமாதானப் படுத்தி விட்டோம். பெரியவர்களின் அதீத கட்டுப்பாடு இல்லாமல் நாங்கள் கண்டு களித்த முதல் தசரா சந்தை அதுதான். பல கடைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றவர், பேன்சி பொருட்கள் விற்கப்படும் இடங்களில் அதிக நேரம் கழித்தார். என்ன மாதிரியான பொருட்கள் அதிகம் விற்கின்றன என்று கவனித்தவர், அவற்றை சந்தை முடிவதற்குள் தானும் கொஞ்சம் கொள்முதல் செய்யப்போவதாக சொன்னார்.

ஆனால் இதெல்லாம் அவர் தந்தையிடம் எடுபடவில்லை. மகன் அரசாங்க உத்தியோகத்தில் சேர்வது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. அண்ணன் வியாபாரத்தை கவனிப்பதையே அதிகம் விரும்பாதவர், அவர் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையோ, புத்தகங்கள் படிப்பதையோ எப்படி ஏற்றுக்கொள்வார், இதில் அவர் கதைகளும் எழுதுகிறார் என்றால் சும்மா விடுவாரா? அண்ணன் கதைகளும் எழுதுவார் என்பது எங்களுக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. கூச்சத்துடன் ‘பூந்தளிர்’ இதழ் ஒன்றை எடுத்து அதில் வெளியாகி இருந்த ஒரு சிறுகதையை காட்டினார். அது புனைப்பெயரில் அவர் எழுதியது. பல கதைகள் எழுதி, சிலவற்றை அனுப்பியுள்ளதாகவும் அவற்றில் இது ஒன்று தான் பிரசுரமாகியுள்ளது என்று சொன்னார். எங்களுக்கு கொண்டாட்டம் அதிகமாகி விட்டது. அந்த கோடை விடுமுறையில் நிறைய நேரம் அவருடன் கழித்தோம். அவர் மனதில் இருந்த கருக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார், நாங்களும் எங்களுக்குத் தோன்றியதை சொல்வோம். அந்த மே மாதம் பூந்தளிரில் வெளியாகிய அவருடைய ஒரு கதையில் என்னுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருந்தது என்பது இன்றும் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. நானும் ஒரு வகையில் அச்சு ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டேன் என்று எண்ணிக்கொள்கிறேன்.

சிறார் கதைகளைத் தவிரவும் வேறு சில கதைகளை அண்ணன் படிப்பார், எழுதுவார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. அவர் கடையில் தான் முதன் முதலில் ‘கணையாழி’ பத்திரிக்கையைப் பார்த்தேன். நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவார். நாங்கள் அவற்றைப் பற்றிக் கேட்டால், ‘நீங்கள் இதெல்லாம் கண்டிப்பா படிக்கணும், ஆனா இப்போ வேண்டாம்’ என்று சொல்லி விடுவார். “பெரியவங்க வேற மாதிரி படிப்பாங்க இல்ல அண்ணா ” என்று ஒருமுறை நாங்கள் கேட்க, ஒரு புத்தகத்தை எங்களிடம் காட்டி ‘நீங்க வேதாள மோதிரத்தை தேடி அலைஞ்சீங்க இல்ல, அதே போல் இந்த புத்தகத்துல வர பொண்ணு இருக்கற தெருவை தேடி சில பேர் கும்பகோணம் போறாங்க. விஷயம் வேணா வேறவா இருக்கலாம், ஆனா படிக்கறதுங்கறது ஒரே மாதிரியான கிறுக்கு தான் ” என்றார். என்னடா பெண்ணை தேடி போறாங்களே என்று அப்போது தோன்றினாலும் (பெண்களை கவனிக்காமல் இருப்பது தான் கௌரவம் என்ற பருவத்தில் அப்போது இருந்த எங்களுக்கு ,ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் பிழை தெரிந்து விட்டது என்பது வேறு விஷயம்) அந்தப் பெண் யார் என்பதும், அப்படி தேடித் செல்வது அந்தப் புத்தகத்தின் வாசகனைப் பொறுத்தவரை புனித யாத்திரையாக இருக்கும் என்பதும் நானும் கல்லூரி படிக்கும் காலத்தில் அந்த நாவலை வாசித்தபோதுதான் புரிந்தது.

அண்ணன் அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதது அவர் தந்தைக்கு மிகவும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பன்முக ஆளுமையும் ஆற்றலும் கொண்ட அவர் வேண்டுமென்றே தேர்வுக்காக பெரிதாக பிரயத்தனம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு சில வருடங்கள் கழித்து தான் சந்தேகம் வந்தது. அவர் தந்தைக்கு அது அப்போதே பிடிபட்டிருக்க வேண்டும். பெரும்பாலானப் பெற்றோர்களை போல ‘கால் கட்டு போட்டா சரியாகிவிடும்’ என்று முடிவு செய்து சொந்தத்திலேயே மணம் முடித்து விட்டார். திருமணம் செங்கல்பட்டில் தான் நடந்தது, அண்ணன் எங்களுக்குக்கூட பத்திரிகை வைத்தார். ஆனால் நாங்கள் செல்ல முடியாத சூழல். அண்ணனைப் பற்றியே வீட்டில் யாருக்கும் தெரியாத போது திடீரென்று எப்படி சொல்ல என்று போகாமல் இருந்து விட்டோம். திருமணம் முடிந்த ஓரிரு வாரங்கள் கழித்து கடைக்குச் சென்றபோது அவர் மனைவியும் அங்கிருந்தார். அண்ணன் எங்களை திருமணத்திற்கு வராததற்காக திட்டினார், பின் ‘நான் சொல்லல அந்தப் பசங்கதான்’ என அவர் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்கா என்று அவரை நான் முதலில் அழைக்க, ‘ஏண்டா நான் அண்ணன் இவ அக்காவா’ என்று சிரித்தபடி அவர் கேட்க, புரிந்தும் புரியாமலும் வெட்கமாகி விட்டது. பிறகு அவர் மனைவியை ‘மன்னி’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டேன். மன்னியும் அண்ணனை புரிந்து கொண்டது அவருடைய அதிர்ஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும். சொந்தமென்பதால் அண்ணனைப் பற்றி அவருக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும். மன்னி அண்ணனின் கதைகளின் முதல் வாசகியானார்.

எத்தனை முறைதான் மோசமாக தேர்வெழுத முடியும். அந்த வருடமே அவருக்கு அரசுப் பணி கிடைத்தது. தென் தமிழகத்தில் பணி. அண்ணியுடன் கிளம்பிவிட்டார். கிளம்பும் முன் அவரைப் பார்க்க கடைக்குச் சென்றிருந்த போது, சோர்வாகவே இருந்தார். “சீக்கிரம் ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துடனும்” என்று வேலைக்குச் சேரும் முன்பே பணியிட மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கே அது குறித்த அதிக நம்பிக்கை இல்லை என்று தெரிந்தது. நாங்கள் கிளம்பும்போது “படிக்கறத மட்டும் விடாதீங்க, அப்பப்போ கடைப்பக்கம் வந்து பாருங்க” என்று சொல்லியவர் ,சில காமிக்ஸ் புத்தங்களை அன்பளிப்பாக கொடுத்தார். பிறகு நாங்கள் அவ்வப்போது கடைப் பக்கம் சென்றாலும் அவரை பார்க்க முடியவில்லை. அந்த வருட கோடையில் மணியின் தந்தையும் பணி மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அது ஒரு சேர வருத்தத்தையும், அண்ணனும் இதே போல் மீண்டும் செங்கல்பட்டு வரக்கூடும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது.

அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த சில வருடங்களுக்கு அவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும், பஜார் பக்கம் செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம் அண்ணனின் கடைவழியே செல்வேன், அவர் தந்தை தான் எப்போதும் இருப்பார். பூந்தளிர்,கோகுலம் போன்ற இதழ்களில் அவர் பெயரில் ஏதேனும் கதைகள் வெளிவந்திருக்கின்றனவா என்று தேடுவேன். நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு மாலை ஏதோ வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் அவர் கடை வழியாகச் சென்ற போது அண்ணன் உள்ளே இருந்தார். அவரைக் கண்டதும் பரவசமாக இருந்தாலும், என்னை நினைவில் வைத்திருப்பாரா என்ற தயக்கத்துடன் உள்ளே சென்று என் பெயரைச் சொல்லி என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். பெரிய சிரிப்புடன் ‘டேய் எப்படி டா மறக்க முடியும்” என்று என்னை தழுவிக் கொண்டார். பரஸ்பர தகவல்களை பரிமாறிக்கொண்டோம். மணி வேரூருக்குச் சென்றதையும், சில காலம் கழித்து அவனுடனும் தொடர்பறுந்து போனதையும், அதுவரை அவன் எனக்கு அனுப்பிய கடிதங்களில் அவரைப் பற்றி விசாரித்ததையும் தெரிவித்தேன்.

அண்ணனுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. ” வீட்டுக்கு வந்து பாப்பாவையும் உங்க மன்னியையும் பாரு” என்றார். லீவில் வந்திருக்கிறாரா என்று நான் கேட்டதற்கு “ஆமாம்டா, கடைய விக்கப் போறோம். அப்பாவால தனியா பாத்துக்க முடியல” என்றவர் “வீட்ட கூட இன்னும் கொஞ்ச மாசத்துல வித்துட்டு போயிடுவோம்” என்று சோர்வுடன் சொன்னார். “என்னன்னவோ நெனச்சிருந்தேன்” என்று தனக்குள்ளேயே ஆயாசத்துடன் கூறிக்கொண்டார். எதுவும் சொல்லத்தோன்றாமல் அமைதியாக இருந்தேன். சூழலை இலகுவாக்கும் என்று நினைத்தாரோ என்னவோ “என்னடா இன்னும் மோதிரத்தை தேடறயா” என்று அவர் கேட்க, சட்டென்று கண்ணில் நீர் தளும்பியது போல் இருந்தது. பேசினால் அழுது விடுவேன் என்று தோன்ற, எதுவும் சொல்லாமல், தொண்டையில் திரண்டுக் கொண்டிருந்த அழுகையை அடக்கியவாறு அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். “உன்ன பாத்ததும் நல்லதா போச்சு, நாளைக்கு சாயங்காலம் கடைக்கு வா. வீட்டுக் அழைச்சிட்டுப் போறேன், நெறய காமிக்ஸ் இருக்கு. எல்லாம் எடுத்துக்கோ, இனி அதுக்கெல்லாம் எங்க எடம்” என்றார். தலையாட்டி விட்டு கிளம்பியவன் அடுத்த நாள் அங்கு செல்லவில்லை. ரெண்டு மூன்று வருடங்கள் சென்ற பின்பே மீண்டும் அந்தத் தெரு வழியாகச் செல்லும் மனநிலை ஏற்பட்டது. ஆனாலும், 15 வருடங்கள் கழித்து நாங்களும் ஊரிலிருந்து கிளம்பும் வரையிலும் கூட, அந்தத் தெரு வழியாகச் செல்வதை முடிந்தளவு தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தேன்.

வ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’

வ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்).

காவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர் நமக்குத் தெரிந்தமட்டில் விவரிக்காமல் விட்டு விட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்கள். நம் நாட்டு இலக்கண ஆசிரியர் பொருள் யாப்பு அணிகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அலங்கார சாஸ்திரத்தை நம் நூலாசிரியர் ஆழமாக ஆய்ந்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், காவிய சமக்ரத்தைப் பற்றின ஆராய்ச்சிகள் இதுவரை வந்திருக்கும் நூல்களில் விஸ்தாரமாகக் காணப்படவில்லை. பெருங்காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று இலக்கணங்களில் ஓர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம், என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் அரிஸ்தோத்தலன் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனியே கவனித்துக்கொண்டு வந்து அரணியத்தை மறந்து விட்டார்கள்; மேனாட்டவர் மரங்களை கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.

காவிய சமக்ர இலக்கணத்தை தாண்டி கவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிக அணியை வர்ணிக்கும் போது சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுகிறான். அரிஸ்தோத்தலன், ஓராஸியன், புவாலோ, வீதா, பெயின் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும். அவ்விலக்கணக்காரர்களுடைய பிரதான அபிப்ராயம் என்னவென்றால்,

ஓர் பெருங்காப்பியம், அனேக அவயங்கள் சேர்ந்ததாயினும் ஒரு ஜீவப் பிராணியைப் போல ஓர் தனிப்பிண்டமாயிருத்தல் வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்கிற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயமும் தன் தனக்கு முன்னே உள்ள அவயத்தோடும், பின்னேயுள்ள அவயத்தோடும் பிணைக்கப் பெற்று ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை, விக்ரமாதித்தன் கதை, மதன காமராஜன் கதை, அராபியக் கதை முதலிய கதைகளை ஒரு பக்கமும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம், ராமாயணம் முதலிய காவியங்களை ஓர் பக்கமும் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் மேற்காட்டிய இலக்கணத்தின் கருத்து விளங்கும். பின் சொல்லிய மூன்றிலும் ஒரே ஒரு வஸ்து தான் காவியமாக எழுதப்படுகிறது. இவற்றுள் அனேக உப கதைகள், வர்ணனைகள் உபாக்கியானங்கள் வருகின்றன என்பது வாஸ்தவம். ஆனால் இவை அனைத்தும் கதையின் மத்திய சம்பவத்துக்குத் துணையாக நிற்கின்றன. மத்திய சம்பவத்துக்கு வித்தாகவோ, மத்திய சம்பவத்தினின்று இயற்கையாக விளைந்த விளைவாகவோ விளங்குகின்றன.

முன் சொல்லப்பட்ட நூல்களோ அவை செய்யுள் நூல்கள் அல்ல என்பது ஓர் பக்கமிருக்க,, தனிக் கதைகளின் கேவலம் சேர்க்கையே ஆகும். அவைகளில் மத்திய சம்பவத்திற்கும் கதைகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக லேசானது – அதைச் சம்பந்தம் என்று கூட சொல்லத் தகாது. மகா காவியத்தின் பகுதிகளுக்கோ இத்தகைய ஒட்டின்மை இராது. அவற்றின் சம்பந்தம் ஜீவ சம்பந்தம். உபக்கியானங்கள் முதலிய புற அணிகள் பெருங்காப்பியத்தினுள் அளவுக்கு மீறி இரா, மற்ற உறுப்புகளெல்லாம் காவியத்துக்கு அகத்துறுப்புக்களாகவே விளங்கும்.

அவ்வுறுப்புகளில் எதை எடுத்து விட்டாலும் கதை ஊனமாகிவிடும்.

பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலினின்று எடுக்கப்பட்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டடத்தையோ கட்டுவதற்கு அனந்த கோடி ரீதிகள் உண்டு. ஆனால் சில ரீதிகள்  தாம் கட்டடத்துக்கு அழகு தரும். பெரும்பாலானவை வானத்தையும் சூரிய ஒளியையும் மூடுமே ஒழிய செளந்தரிய உணர்ச்சியை திருப்தி செய்யா. அப்படியே ஓர் காவியத்தைப் பல மாதிரி எழுதலாம். நள சரித்திரம், ராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய காவியங்களெல்லாம் அவ் அவ் ஆசிரியர்களின் மனோதர்மத்துக்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளன. சில சம்பவங்களைச் சிலர் விரிக்கிறார்கள். மற்றவற்றைச் சுருக்கி விடுகிறார்கள். வேறு சிலர் முற்சொல்லியவர்க்கு மாறாகச் செய்கிறார்கள். சிலர் சில சம்பவங்களை எடுத்து விட்டு புது சம்பவங்களைப் புகுத்துகிறார்கள். ரசிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்த கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும். சொல்லப்போனால் பெருங்காப்பியங்களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங்காப்பியங்கள் பெருமையுள்ளனவாகா.

காவிய ரசனையை மகா வித்துவான் ஒருவருடைய விஸ்தாரத்துக்கு ஒப்பிடுவோம். எல்லா வித்துவான்களும் ஏழு ஸ்வரங்களைத்தான் – அல்லது அர்த்த ஸ்வரங்களையும் சேர்த்துக்கொண்டால் இருபத்திரண்டு ஸ்வரங்களைத்தான் – கையாள்கிறார்கள். இந்த ஸ்வரங்கள் துவாரா நவரஸங்களைத்தான் ஊட்டுகிறார்கள். ஆனால் ஒரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும், இன்னொரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும் ஒரு பாடகன் ஒரு கீர்த்தனை பாடுவதற்கும் இன்னொருவன் அதே கீர்த்தனையைப் பாடுவதற்கும் எத்தனை பேதம்! ஒருவன் ராகத்தின் ஸ்வரங்களில் யாதொரு அபஸ்வரத்தையும் கொண்டு வந்து கலக்காமல் பாடி விடுகின்றான். ராகம் பிழையின்றி சாஸ்திரரோக்தமாகப் பாடப்பட்டிருக்கும். லயத்தில் யாதொரு பிசகும் இருக்காது. கேட்போர் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டும் சிரக்கம்பம் செய்து கொண்டும் கேட்பார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தில் யாதொரு சலனமும் ஏற்பட்டிராது. அலை வந்து மோதியும் அசையாத பாறை போல் அவர்களுடைய இருதயமும் அப்படியே இருந்துவிடும். இன்னொருவன் வருகிறான். அதே ராகத்தைப் பாடுகிறான். ஆனால், எல்லாரும் அமுத மழையில் சிக்கி அகப்பட்டவர்கள் போல் ஆகி விடுகிறார்கள். அவரவர்களுடைய சமஸ்காரத்திற்கேற்றபடி அவரவர்களுடைய இருதயம், மந்த மாருதத்தில் ஊசலாடும் பூங்கொம்பர் போலவும், சிற்றலைகளால் அசைந்தாடும் தாமரை போலவும், கருப்பஞ் சாற்றில் கரையும் கற்கண்டைப் போலவும், அக்னியின் நெகிழ்ந்து உருகும் மெழுகைப் போலவும் , தங்கத்தைப் போலவும் ஆகிவிடுகிறது.

அவர்களுடைய மனது புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுகிறது. மனோ லோகத்தில் சித்திரத்துக்கு மேல் சித்திரம் தோன்றிக்கொண்டே வருகிறது. அவர்கள் லயப்பட்டு, வயப்பட்டுப் போய் விடுகிறார்கள். இந்தக் கலைஞனுக்கும் முன் சொல்லப்பட்ட கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் இவனிடம் கனிவு இருந்தது, அவனிடம் அது இல்லை. ஆனால் அது மாத்திரமில்லை இவனுடைய பாட்டின் அமைப்பு மனோஹரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆவிருத்தமும் அதற்கு முன்னே பாடப்பட்ட ஆவிருத்தத்தனின்று இயற்கையாக வளர்ந்த வளர்ச்சியாகும்; அதே மாதிரி தனக்குப் பின்னே வரப் போகும் ஆவிருத்தற்குத் தோற்றுவாயும் ஆகும். ஒவ்வொரு ‘சங்கதி’யும் அந்தந்தப் பதங்களை அலங்கரிக்க விழுந்த அலங்காரமாகுமேயன்றி, பதங்களையே முழுக்கி மூடிவிடும் வெறும் சப்த சாலங்களாகா. ஒவ்வோர் ரசமும் போதிய அளவு விஸ்தரிக்கப்பட்டு இயற்கையான சோபானங்கள் வழியாக அதனோடு பொருந்தக்கூடிய வேறொரு சுவைக்கு வழிகாட்டிக் கொண்டு போகும். கடைசியாக எல்லா ஆவிருத்தங்களும் எல்லாச் சுவைகளும் இன்னலன் தெரிய வல்லாருடைய இருதயம் லயித்துப் போகும். ஓர் சமஷ்டி உணர்ச்சியை உண்டாக்கும்.

அதே மாதிரித்தான் ஒரு காவிய ரசனையும். காவியத்தின் தனித்தனிப் பாகங்களிலுள்ள இன்சுவை ஒரு பக்கமிருக்க, பாகத்தும் பாகத்துக்கும் உள்ள பொருத்தம் அழகாக இருப்பதோடு காவியமானது நம்ம சமஷ்டீகரணத்தைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இந்த சஷ்டீகாரம் அழகாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காவியமானது ரசிகருடைய இருதயத்தைக் கவர்ந்து எல்லாரும் விரும்பத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக்காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயத்துக்கும் மற்ற அவயங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும், அவயங்களுக்கும் அரண்மையின் சமக்ர அமைப்புக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக்காட்டும் விமர்சனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.

 

மகளின் சித்திரங்கள்

ஜிஃப்ரி ஹாசன்

சித்திரம் போல் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறாய்
எவரும் கண்டுகொள்ளாத
உன் ஓவியத்தில் உயிரோட்டத்தையும்
அன்பையும் காண்கிறேன்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும்
உன் கோடுகள் மீறியுள்ளன
இதயங்களை சுண்டி இழுக்கும்
நிறப் பூச்சுக்கள் அதில் இல்லை
எனினும் அதில் உன் துடிப்பான கனவுகளும்
வேட்கையுமுள்ளன
காகிதங்களில் பட்டாம்பூச்சிகளைப் போல்
நீ எதையோ கிறுக்குகிறாய்
நான் இப்போதெல்லாம்
நிஜப் பட்டாம்பூச்சிகளை இரசிப்பதே இல்லை
பூக்களை நீ வரைகிறாய்
காகிதங்களில் ஒரு நந்தவனத்தின்
வாசனை ஒட்டிக் கொள்கிறது
ஏதோ ஒரு மனித உருவைக் கிறுக்கி விட்டு
“தந்தையே, நான் உங்களை வரைந்துள்ளேன்“
என்கிறாய்
எனது புகைப்படத்தைக் காட்டிலும்
என்னை அது துல்லியமாய் காட்டுவதாக
உணர்கிறேன்
நம் வீட்டின் சுவர்களை
உன் கிறுக்கல்கள் அசிங்கப்படுத்தியிருப்பதாய்
சொல்லப்படும்போது
அவை அலங்காரங்கள் என
தயக்கமின்றிச் சொல்கிறேன்
நீ நினைக்கிறாயா?
உனது கிறுக்கல்களுக்கு
என்னைப் போல் ஒரு இரசிகன் கிடைப்பானென்று