Author: பதாகை

என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்

– சிகந்தர்வாசி – 

 

என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்

என் செவிகள் பழுதாகிவிடவில்லை நண்பா,
என் காதுகளை நானேதான் மூடிக் கொண்டிருக்கிறேன்
கண்களால் இன்னும் கூர்மையாய் கேட்கலாம் என்று
இப்போது சொற்கள் என்னிடம் தெளிவாகப் பேசுகின்றன
உனக்கு சொற்களின் ஓசைதான் தெரியும்
நான் அவற்றின் மௌனத்தை அறிகிறேன்
எனக்கு வேண்டாம்
நடிக்கத் தெரியாதவர்களின் அரைகுறை வசனங்கள்

நண்பா, நன்றாகச் சிரி

கம்பனின் சொற்கள் என்னுடன் நேரடியாகப் பேசுகின்றன.
ராமனின் மென்மையான குரல்,
ஜாம்பவானின் உறுமல்,
மந்தாரையின் கீச்சுக்குரல்,
ராவணனின் முழக்கம்
உன்னால் கேட்க முடியாது நண்பா

சிரி நண்பா, இதற்கும் சிரி

ஸ்வரப்படுத்தபட்ட இசைக்குறிப்பை
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு துல்லியமாய் ஒலிக்கிறது மோகனம்
உனக்கோ எதிலும் எதிர்படும் அபஸ்வரங்கள்
நான் சாகித்யகர்த்தாவின் இதயத்தை உணர்கிறேன்
நீயோ மானுட முயற்சிகளோடு போராடுகிறாய்

நீ சிரித்தால் என்ன நண்பா,
நாமிருவரும்தான் நகைக்கிறோம்

நீ நிகழ்கணத்தைக் கேட்டு
நான் காலங்களைக் கண்டு –
இதோ இங்கு ரிஷிகளின் வேதகோஷங்கள், அதோ,
ஏவாளிடம் ஆதாம் ஆப்பிளுக்கும் ஆசைப்படாதே என்கிறான்
அலெக்ஸாண்டரிடம் பேசுகிறானே போரஸ்,
அவன் குரலில்தான் என்னவொரு கம்பீரம்
சாக்ரடீசும் பிளாட்டோவும் பேசிக்கொள்வதைக் கேட்கிறேன்
கலிங்கத்துக்குப்பின் அசோகனின் புலம்பல்
மார்ட்டின் லூதரின் அறச்சீற்றம்
ஹிட்லர் குரலுடன் முசோலினியின் குரலும்
இவர்களுடன் ஸ்டாலினும் சங்கமிக்கும் கோரஸ்
சஹாராவில் ரோம்மல் தலைமையில் டாங்கிகளின் கர்ஜனை
சர்ச்சிலின் எழுச்சி உரைகள்
காந்தியின் சன்னக் குரல் –
உன் காதில் இவை விழுகின்றனவா?

சிரி நண்பா,
அறியாமல் சிரி.

கடந்த காலத்தின் சொற்கள்
எதிர்காலச் சொற்களை எதிரொலிக்கின்றன
உன் தலைவன் பேசப்போவதை நான் அறிவேன்
அரசியல்வாதியின் பரப்புரையில் புதிதாய் என்ன இருக்கும்?-
நாளை முதுமையில் நீயும் உன் பிள்ளைகளிடம்
சொல்லப் போவது அத்தனையும் எனக்குத் தெரியும்
புத்தகத்தைப் புரட்ட புரட்ட
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என காலங்கள்
என்முன் வரிசையாகச் செல்கின்றன

நான் எப்போதும் என் புத்தகங்களில் இருக்கிறேன் நண்பா
என் செவிகள் சொற்களை நாடுகின்றன
அவற்றின் மணத்தை சுவாசிக்கின்றன, அவற்றின் சுவையில்
கரைகின்றன, சொற்களை உண்டு செரிக்கிறேன்
நான் வாழ்வது சொற்களில்தான் நண்பா
ஏதும் கோராத தோழமையில்
எல்லாம் எனக்கென அளிக்கும் புத்தகங்கள்
என் சிலச் சொற்களைப் பெற்றுச் செல்கின்றன
அவை உனக்கில்லை நண்பா

இப்போது நீ என்னை பார்த்து சிரிக்கலாம், நண்பா-
நான் எப்போதும் வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்கிறேன்

 

image credit: Pintores y Pinturas

குருதிச் சோறு 3

நரோபா

அன்று சிரமட்டார் காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள், பிராமண மண்டகப்படி. வைத்தியர் வீடு திமிலோகப்பட்டது. வைத்தியர் குடும்பத்து பங்காளிகள் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிக் கிருத்திகை அன்று ஊருக்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் அன்று அவர்கள் குடும்ப தெய்வமான அன்னசௌரக்ஷாம்பிகைக்கு நோன்பு நோற்பது வழக்கம். அதன் பின்னர் அனைவரும் கலந்துகொள்ளும் சமபந்திபோஜனம் நடைபெறும். அதிசயமாக இந்த முறை இரண்டு திருநாள்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டன.

இழவு விழுந்து பண்டிகைகள் இல்லாத ஆண்டுகளிலும்கூட இந்த பூஜையும் சமபந்தி போஜனமும் நிச்சயம் உண்டு. சபரியின் தாத்தாவிற்கு விபரம் தெரிந்ததிலிருந்து வருடம் தவறாமல் இது நடந்துவருகிறது. முதலில் லலிதா சஹஸ்ரநாமம் கூட்டாக பாராயணம் செய்வார்கள். பாலிலும் தேனிலும் தயிரிலும் பஞ்சாமிருததிலும் அபிஷேகம் செய்துவிட்டு மஞ்சள் குங்குமத்தில் அலங்காரம் செய்து பட்டுநூல் சார்த்தி, சிவப்பு அவல் பாயசம் நைவேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்டுவார்கள். நோன்புக் கதையை வீட்டின் மூத்த சுமங்கலி சொல்லக் கேட்டுவிட்டு வீட்டுப் பெண்களெல்லாம் கையில் தோரம் கட்டிக்கொள்வது வழக்கம். (more…)

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

யாருக்கோ

– அதிகாரநந்தி –

 

கீழே போய்க் கொண்டிருப்பதில் எனக்கும் சம்மதம்தான்
பார்த்ததையே பார்க்க வேண்டியிருக்கும்
இன்னும் மேலே போக வேண்டும்
உனக்கு இதெல்லாம் புரியுமா தெரியவில்லை
நாம் ஆசைப்பட்டதைத் தான் செய்யப்போகிறேன்

நாம் அறிந்த வழியில் அல்ல
எல்லோரும் இசைந்து இன்புற்று
நம்முடைய பாதையை விட்டு விலகிவிடுவார்கள்
என்பது முட்டாள்தனம்
வலி, தவிர்க்க முடியாததாகி விட்டது
மற்றவர்களுக்கும் எனக்கும்
நான் இன்னும் மேலே போக வேண்டும்
சுபிட்சத்திற்காக அல்ல
என்னைத் தெரிந்து கொள்வதற்காக
என் எல்லையைத் தெரிந்து கொள்வதற்காக

 

image credit: link2universe

மொழிபெயர்க்கப்பட முடியாத சொற்களின் அகராதி

ராஸ் பெர்லின் எழுதிய கட்டுரையின் பகுதி இது:

பிரெஞ்சிலிருந்து புதிதாய் மொழிபெயர்க்கப்பட்ட The Dictionary of Untranslatables என்ற நூல்… 11 ஆண்டு கால செயல்திட்டத்தின் விளைவு. 150 பங்களிப்பாளர்களின் 400 பதிவுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அகராதியைப் பார்க்கும்போது திலோனின் முதல் கலைக்களஞ்சியத்தின் ஒன்பதாம் நூலோடு இதை ஒப்பிட முடியுமென்ற எண்ணம் எழுகிறது. “அறியப்படாத ஒரு கோளுக்குரிய முழு அளவு சரித்திரத்தின் பரந்த, வகைமைப்படுத்தப்பட்ட துணுக்கு” என்று அந்தக் கலைக்களஞ்சியத்தை விவரித்திருக்கிறார் போர்ஹெஸ்.

‘கான்டினென்டல் தத்துவம்’ என்று நாம் வழக்கமாகக் குறிப்பிடுவதுதான் இந்த அகராதியில் பேசப்படும் கோளாக இருக்கிறது. நம் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலோ அமெரிக்க பகுப்பாய்வுத் தத்துவம் எலும்பு வரை உலர்ந்ததாய் எதையெல்லாம் கற்பித்துள்ளதோ அவையெல்லாம் இதுவல்ல: வாழ்வின் பொருள், சிந்தனைகளின் வரலாறு, மானுடத்தின் கதி முதலான இன்ன பிற விஷயங்களைக் குறித்த ஊகம் கலந்த சிந்தனையின் கிறுகிறுக்க வைக்கும் உலகம் இது. (more…)