பானுமதி ந

அலைகளுக்கப்பால்

பானுமதி. ந

அலைகடலில் மிதவைகள் கனவைச் சுமந்து செல்கின்றன. அலைகளை எதிர்த்தும் அவற்றுடன் இசைந்தும்,செல்லும் அவைகள் ஒளிக்கதிரில், புரிந்தும் புரியாமலும் புன்னகைக்கின்றன.

வண்ணக் கொடிகள் கட்டிய என் ஓடம் தனித்துத் தெரிகிறது. அதைக் காற்று சீண்டும்போதெல்லாம் கொடிகள் சீறுகின்றன, நிலைக்கு வருவதற்கு தவிக்கின்றன. பறக்காத கொடியில் பார்வை இலயிப்பதில்லை.

இதனுள் மூன்று பெட்டகங்கள் இருக்கின்றன. எல்லாம் உன் பொருட்டுத்தான்; ஒருக்கால் என் பொருட்டாகவும் இருக்கலாம். சொல்லவும், சொல்லாமல் சொல்லவும் எனக்கு நிறைய இருக்கிறது. உனக்கும் இருக்கலாம்? பின்னரும் அக்கரை போனது ஏன்?

மல்லியும், முல்லையும் சேர்ந்து பூத்த அதிசயம் நம் நட்பு. மாதவிப் பந்தல் மேல் பல்கால்  குயிலினங்கள் கூவின காலை. நீ எதிர் வந்தாய். நான் உன் எதிரில். ஆனால், எதிரியாக வரவில்லை. ஒரு தயக்கப் புன்னகை; தலையசைப்பில் நாம் மீண்டும் எதிரெதிர்.

எனக்குச் சிறு சபலம். என்னுடன் வருவாய் என. நடந்த பாதையில் மீண்டும் பயணிக்க மாட்டாயோ? அப்படியென்றால் அப்பால் அலைகள் தழுவும் கரையை நோக்கி ஏன் சென்றாய்? எனக்கு எதிர்த்திசை என்பதாலா? இந்தப் பிரிவினைகள் நமக்கு இல்லை என்று சொல்ல நான் தவித்தேன். நான் நீயாக நினைத்தபோது நீயும்         நானாக நினைத்திருப்பாய். அது நமது வெற்றி. அதன் நினைவாகத்தான் அந்த பச்சைப் பெட்டகம்.ஆனால் அது நிறையவேயில்லை. இருந்தும் அதிலுள்ள பவள மணிகளை நான் எண்ணிப் பார்க்கையில் என்னுள் உணரும் இன்பம் உன்னிலும் வருகிறதா என இந்தக் கடல் கேட்டு வந்து என்னிடம் சொல்லும்.

எனக்கோ நிறங்கள், ஆசைகள், ஆவல்கள். உனக்கு பிடித்தது வெள்ளை அல்லவா?அதனால்தான் இரண்டாம் பெட்டகத்தில் முத்துக்கள். அது என் இயல்பின் வெளிப்பாடு என்பதும் உனக்குப் பிடிக்கும் என்பதால்தான். நீ வெண்முத்துக்களைச் சேர்த்து உன் மார்பில் அணைப்பதை என் வெண்கொடி நிச்சயம் வந்து சொல்லும். எனக்குத் தெரியும், உன்னால் அனைவர் எதிரிலும் அதை எடுத்து அணிய முடியாதென்று. ஆனாலும் என் வெள்ளைக்கொடி உன் கைவிரல்கள் அதை அளைவதை என்னிடம் மீண்டு வந்து சொல்லும்.

ஏனோ, நாம் அன்றொரு நாள் தற்செயலாக நின்றிருந்த சிறு குளக்கரையோரம் மீண்டும் சென்றேன். அதில் மண்ணெடுத்து கோபி சந்தனமெனக் குழைக்கிறார்கள். வாசனைத் துளி ஏதுமில்லை. கலாபச் சந்தனத்தின் விழைவு இல்லை. மண்ணனிந்த நெற்றி அல்லது நெற்றி அணிந்த மண்ணா?

கோபிகைப் பெண்கள் கூட்டமாக மரணித்த குளம். உனக்குச் சொல்ல நினைத்த அந்தக் கதை இன்னமும் சொல்லப்படவேயில்லை.அந்தக் குறையாத அன்பை வார்த்தைகளால் நான் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் உன் கண்கள் என்னைக் கெஞ்சும்-சொல்லிவிடாதே, நான் மரணப்பட்டுப் போவேன் என்று.

வெராவலில் கண்ணனின் காலில் அம்பு பட்டுவிட்டதாம்; அவன் என்னமோ சிரித்துக்கொண்டுதான் இருந்தான். அவன் குழல்தான் காற்றில் மிதந்து அவர்கள் உயிரை உருக்கியது. அவன் இல்லாமல் போவதைத் தாங்காத அந்தப் பெண்கள் இறந்த கோபி தலாபில் உன்னை நினைத்துக் கொண்டு,ஏதோ தோன்றி இந்தக் கடலின் கரைக்கு வந்து அலைகள் மூலம் தோணியில் என் கனவுகளை உனக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

நீ ஏன் இங்கு வந்தாய்? என்ன கற்றுக் கொள்ள வந்தாய்? கேத்தி பந்தாரின் மௌனச் சந்துகளில் ஓடியோடி உன்னை அழைத்த குரல் எது? எந்தக் காற்றின் உயிரோசையாய் அதை நீ இனம் கண்டாய்? துறந்தும், மறந்தும், துடிப்பும், தவிப்புமாய் அந்தக் கண்களில் நான் கண்ட துயரம்தான் என்ன? அதை நான் எப்படி உணர்ந்தேன்? அந்தத் துயரை நீ அணை தேக்கிப் பாதுகாப்பது உன் வெற்றி என்று யார் சொன்னார்கள்? தன் வாதையை முழுதும் மௌனமாக சகித்துக் கொள்ளும் வனமிருகமா நீ?

உன் கோட்டைக் கதவுகளை நான் தட்டித் தகர்த்தெறிய உண்மையாக முயலவில்லை. அதன் சிறு பிளவொன்றில் கால் நுழைத்து, உடல் நுழைத்து ஒரு சிலிர்ப்பாக உன் உளம் நிறைக்க விழைந்தேன். யாசகன் கேட்காத உணவை கைகள் கோர்த்து இருத்தி வைத்துக் கொடுக்க ஏன் இந்த விழைவு என என் தன்மானம் தடுத்தது. வண்ணங்களின்  உலகை உனக்குக் காட்ட ஆசைப்பட்டேன்.

மண்ணையே பார்த்துக் கொண்டு இருக்கும் உனக்கு விண்ணைக் காட்ட வேண்டும். புல் வேய்ந்த குடிசையில் ஒரு வாரமேனும் உன் ஸுஃபி பாடல்கள் என் ஆத்மாவை துளைக்க வேண்டும். ஆகையால்தான் நீல வானை மட்டுமே காட்டும் வெற்றுப் பெட்டகமும் இதில் வைத்துள்ளேன். நீ அதை நிரப்பி அணுப்புவாய் என. நீ சிரிக்கிறாய் என நினைக்கிறேன். வரமாட்டாய் எனத் தெரிந்தும் என் மிதவைகள் பயணப்படுகின்றன.

சிந்து நதியின் மேற்பரப்பில் பட்டுத் தெறித்து நலுங்கும் நிலாக் கதிர்கள் இன்று மாலை அரபிக் கடலின் மேல் படர்ந்து அடர்ந்து சிவந்து அடங்கிய சூரியனின் கதிர்களல்லவா? இந்தக் கடலலையும் மீறும் அந்த துப்பாக்கி குண்டுகளை நீ இயக்கவில்லை என்று சொல்வதற்காகவாவது வருவாயா?

 

பொம்மை

                          பானுமதி ந

‘ரோஜாவைப் போல் இருந்தான். நீலமும், பச்சையும் கலந்த கண்கள். உன்னைப் போல் முகமெல்லாம் மூக்கு. எவ்வளவு மென்மையான காதுகள்! அவன்- ‘ம்—மா’ என்று கூப்பிட்டான். அவன் எங்கே, பிரின்ஸ்? எனக்கு அவன் வேண்டும்’

இவள் இப்பொழுதெல்லாம் கனவுகளை உண்மையென நம்புகிறாள். இருள் பிரியவில்லை இன்னமும். பனிக்காற்று அதிகம் வீசுகிறது. உறைந்த நதிகளின் கரைகளில் இருந்த நாணல்கள் என்னவாயின? கூம்பி நிற்பதாக மனதில் எழும் அந்தப் பைன் மரக் கிளைகளில் விளையாடிய அணில்கள் எந்தக் கூட்டுக்குள் சென்றன? என் மூன்று வயது மகள்  உறங்கும் கல்லறையில் அவள்  எழுந்து வருவாள் எனக் காத்திருக்கிறதோ?  லில்லி மலர்களும் அவளுடனே தூங்கச் சென்று விட்டன போலும்.வெறுமையான வெண்பனிதான் இடறிக் கொண்டிருக்கிறது.

ஜான் எதைச் சொன்னாலும் கேட்காமல் பனியில் விளையாடுவான். உருட்டி உருட்டி பொம்மைகள்- ஆறு வயதில் அவனுக்கு எவ்வளவு கற்பனை! அதிகமும் குல்லாய் போட்ட ஏசு. என்னடா இது என்றால் ‘எனக்கு குல்லா, சாமிக்கும்- அவருக்கும் குளிரும்,” என்பான். முடிவில் எங்களை விட்டுப் போய்விட்டான்.

பனியில் கானலின் வெம்மையில் நாங்கள். தலையால் கவ்விக் கொண்டு வாலால் பிணைத்துக் கொண்டு எங்களை விழுங்கும் தனிமை. எலும்புகள் நொறுங்கும் வாதை. ’எஸ்தர், சற்றுத் தூங்கு’

நான் கண் விழிக்கையில் அவள் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒரு சோகம் கவ்வியது என்னை. தன்னிலை மறந்த அவளும் விட்டுப் போய் விடுவாளோ? நான் தலையைக் குலுக்கி சிலுவையிட்டுக் கொண்டேன்.

மிகச் சூடான சுவையான மசித்த உருளை பான் கேக் காலை உணவிற்கு. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது- இயல்பு நிலை வந்துவிட்டதென்று. எஸ்தர் ஆலிவ் பச்சை வண்ணத்தில் காஷ்மீர கதகதப்பு ஆடைகள் அணிந்து ஒரு பூங்கொத்தினைப் போல் இருந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாலும் அவள் கண்களும், உதடுகளும் எதையோ சொல்லத் தவித்தன. மீண்டும் குழந்தையைப் பற்றி சொல்லப் போகிறாள் எனத் தெரிந்தாலும் தவிர்க்க முடியாதல்லவா?

‘அவன் பால் வாசனையோடு சிரிக்கிறான் பிரின்ஸ். உன்னைப் பார்த்தால் உடனே என்னைப் பார்த்துக் கொள்கிறான். நான் ‘டாடிடா’ என்றால்தான் அரை மனதோடு உன்னிடம் வருகிறான்.ஒரு சிட்டுக் குருவியைப் போல் வாயைக் குவித்து ம்-மா என்கிறான்.’

“எஸ்தர், போதும் இந்த விளையாட்டு. உண்மையை உணர்ந்து கொள்.’ என் குரலின் கடுமையும் அதன் ஆயாசமும் அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

‘பிரின்ஸ், நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது’

‘எஸ்தர், அது உயிரோடு இருக்கப் போவதில்லையே’

‘என்னால்தானே, எல்லாமும். அதை நான்தானே சரி செய்ய வேண்டும்’

நான் சிரிக்கப் பார்த்தேன். வெறும் ஒலி தான் எழுந்தது.

‘நீ கடவுளின் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று எழ முயன்றேன்.

அவள் ஓடி வந்து என் மடியில் உட்கார்ந்து விட்டாள். ‘என்ன, இன்று ரொமான்ஸ் இப்பொழுதே!’ அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டேன். மிக நளினமாக விடுவித்துக் கொண்டாள்.

‘நாம் இன்று ஒரு புதிய மருத்துவரை பார்க்கப் போகிறோம் ஒரு மணிக்கு. அவர் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்பவராம். நெட்டில் எல்லா விவரமும் பார்த்தேன்’

நான் நிஜமாகவே சிரித்தேன்.’ தெருவிற்கு இரண்டு இருக்கிறது இப்பொழுது’

‘இது வேறு, பிரின்ஸ்’

‘தத்து எடுக்கப் போகிறோமா? இல்லை, வாடகைத் தாய், தந்தை என ஏதாவது?’

‘இது மிகவும் புதியது. நம் குழந்தைக்கு மூன்று பெற்றோர்கள்’

‘என்னது? உன் கற்பனைகள் எல்லை தாண்டிப் போகின்றன, எஸ்தர், நான் உன்னையும் இழக்க விரும்பவில்லை. நீ இப்படியே இருந்தால் உன் மனம் பாதிக்கப்படும். விடு இந்தப் பேச்சை’

‘ப்ரின்ஸ், எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. நாம் டாக்டர். லீயைப் பார்ப்போம். நமக்கு சரிவராதெனில் விட்டுவிடலாம். ப்ராமிஸ், இதுவும் இல்லையென்றால் நான் குழந்தையைப் பற்றி பேசவே மாட்டேன்’

சாலைகளில் பனியை அகற்றி பாதை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் பனி பொழியும், ஆனாலும் பாதை சீராக்கப்படத்தான் வேண்டும்.

டாக்டர். லீயின் க்ளினிக் அமைதியாக இருந்தது. அவரது வயதே அவரது அனுபவம் என்று சொல்லத்தக்க தோற்றம். புரியாத ஓவியங்களைப் பார்ப்பது போல் இருந்தது அவர் அறையில் மாட்டப்பட்டிருந்த ஜெனோம் சார்ட்டுகள்.

சிறு புன்னகையுடன் ஒரு கைகுலுக்கல். இரண்டு மணி நேரம் எங்களின் பழைய மருத்துவ அறிக்கைகளைப் பார்வையிட்டார்.

‘இரு குழந்தைகளை இழந்த உங்களுக்கு என் அனுதாபங்கள். இம்முறை நாம் செய்யப் போவது உங்களுக்கு ஒரு வரமென அமையலாம். ஆமாம், ஏன் மூவர் மூலம் செயற்கைக் கரு உருவாக்கக் கூடாது?’

‘மிஸ்டர். லீ?’

‘1990 முதல் இது ஒவ்வொரு வகையாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலே எம்ஆர்டி வரையறைக்கு முன்னால் 17 குழந்தைகள் இம்முறையில் பிறந்துள்ளனர். அதில் இன்றைக்கு 13 குழந்தைகள் பற்றி இரகசியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. ஆனால், இம்முறை இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறவில்லை.  இம்முறையில் கரு தரிப்பது தாய்க்கு ஆபத்தில்லை’

‘மிஸ்டர். லீ,எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. நான், எஸ்தர்  இருவர் தானே, மூன்று என்றால்?’

‘எஸ்தரின் ஊண் குருத்துகள் (mitochondria) பழுதாகி உள்ளன. இது அவருக்கு எந்த உடல் குறைபாட்டையும் ஏற்படுத்தாது. அவரது 37 ஜீன்களில் ஏற்படும் தன் பெருக்கமானது அவரது குழந்தைகளுக்கு கடத்தப்படுவதால், புதிய உயிர்கள் செல் சக்தியைப் பெற இயலாது சிறு வயதிலே இறந்து விடுகின்றனர்.’

‘ஆம், எங்கள் மருத்துவரும் அதைச் சொன்னார்’

‘இதைச் சரி செய்வதற்குத்தான் மூன்றாவது நபர்’

எஸ்தர் முதல் முறையாக, ‘எப்படி?’ என்றாள்.

‘உங்கள் கரு முட்டையின் மையம் ஸ்பிண்டில் நுட்பம் மூலம் அணுகப்படும். அதன் திசுக்கள், ஊண் குருத்துகள் மட்டும் நீக்கப்பட்டு உங்கள் கரு மையம் கொடையாளரின் மையக் கருவிற்குள் செலுத்தப்படும். உங்களுடைய மரபணு மாறாது. கொடையாளரின் நலமான ஊண் குருத்துக்கள் இப்பொழுது உங்கள் கரு முட்டையில். பிரின்ஸின் விந்தினை இணைத்து கருமுளையை உங்கள் கர்பைப்பையில் வைத்துவிடுவோம். கரு வழக்கம் போல் வளரும். உங்கள் வாரிசு, உங்கள் குறைபாடில்லாமல்.’

‘இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாக இருக்குமா? அதாவது மனிதனாக?’ என்றேன் நான்.

‘சில்லி கொஸ்டின். மனிதக் கரு, மனித விந்து. பின்னர் பிறப்பது என்னவாக இருக்கும்?’

‘இதற்கு பதிலாக நாம் ஏன் வேற்று கருமுட்டையைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடாது?’

‘செய்யலாம். உங்கள் மனைவியின் அழகோடும், ஆற்றலோடும் உங்களுக்கு வாரிசு வேண்டாமா?’

‘எங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்’

‘நாளைக்குச் சொல்லுங்கள்’ என்றார் லீ சிரிக்காமல்.

என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆபத்தில்லையென்றால் இந்த செயல்பாட்டிற்கு ஏன் சட்ட அனுமதி இல்லை? யூகேயில் அனுமதிக்கப்பட்டதாக  லீ சொன்னாரே. இதை ஒத்துக் கொண்டு அவளையோ, குழந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து விட்டால்? நான் அவளுக்குச் சொல்ல காரணங்கள் தேடிக்கொண்டிருந்தேன். அவள் அமைதியாக குழந்தைக்கான காலுறை செய்து கொண்டிருந்தாலும் அவளும் சிந்தனையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

‘பிரின்ஸ், உனக்கு கேத்ரினை நினைவு இருக்கிறதா?’ என்றாள்

‘உன் கஸின் தானே, அவளுக்கு என்ன இப்போ?’

‘அவள் வாடகைத் தாய் ஒருத்தி மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால், பார் அந்த பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு இவளின் கனவும் அழிந்தது.’

‘ஏதோ ஒருத்தருக்கு நடந்ததை வைத்து இப்படிப் பேசுவது என் புத்திசாலி மனைவிக்குப் பொருந்தவில்லை’

‘பொய்ப் புகழ்ச்சி. நான் சொல்வது ரிஸ்க் என்பது எதிலும் இருக்கிறது’

‘ஆனால், அதைத் தவிர்க்கவும், இல்லையெனில் அதன் விசையைக் குறைக்கவும் நாம் முடிந்ததை செய்கிறோம் அல்லவா?’

‘இன்று காலை உணவு எப்படி இருந்தது?’ என்றாள் சம்பந்தமில்லாமல்.

குழந்தை, ட்ரீட்மென்ட் இதை விட்டுவிட்டு இவள் ஏதோ பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. ’டேஸ்டி, வெரி டேஸ்டி’

‘மதியம் வெளியில் சாப்பிட்ட லன்ச்?’

‘அது சுமார்தான்.’

‘நல்ல உணவகம். மேஜைகள் சிறப்பாக செட் செய்யப்பட்டிருந்தன. விலையும் அதிகம், மெனுவும் அதிகம். ஆனாலும் நம் பான் கேக்கிற்கு ஈடில்லை’ என்றாள் சிரித்துக் கொண்டே.

இவள் எங்கே வருகிறாள் என்று புரியாமல் பார்த்தேன்.

‘பணம் கொடுத்து பொருள் வாங்குகிறோம், ஆனால் அதை நம் பக்குவத்தில் செய்கிறோம். நமக்கே நமக்கென. அதில் அன்பு கலந்து விடுகிறது. பணம் கொடுத்து வெளியில் உண்பது நம் பக்குவத்தில் இருப்பதில்லை’

‘இது பொதுவான வாதம்’

‘பிரின்ஸ், என் உடல் நலமாக இருக்கிறது. என் கர்ப்பைப்பை நம் உயிர் தாங்கும் ஒரு அனுபவம், அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கருமுளையின் ஒவ்வொரு வளர்ச்சியும் என்னுள் திறக்கும் கதவுகள் தேவன் கோயிலின் வாசல்கள். நான் உன்னை நினைத்துக் கொண்டே அதனுடன் பேசுவேன். என் பாடல்களை இரகசியமாக சொல்லித் தருவேன். கடவுள் நம் பங்கில் கொடுக்க நினைப்பதை வாங்க கைகளை ஏந்துவோம்’

‘உணர்ச்சிகரமாக இருக்கிறது. எதற்கும் நாம் நம் பாதிரியாரைக் கேட்போம். இதில் மதத்திற்கு எதிரான, இயற்கைக்கு மாறான செயல் இருக்கிறது’ என்றேன்.

‘கடவுள் மனிதனுக்கு இன்பங்களை மறுப்பதில்லை. ஆனால், கடவுளைக் காட்டுவதாகச் சொல்லும் சில மனிதர்கள் மறுக்கக்கூடும்’ என்றாள் அமைதியாக.

எனக்கு அதிர்ச்சிதான். எந்த ஞாயிறும் தேவாலயம் தவறாதவள், இரு வேளை ஜெபிப்பவள், பிரசங்கக் கூட்டங்களில் கண்களில் ததும்பும் நீருடன் இருப்பவள், இவள் தேவ மைந்தனுடன் வசித்திருக்கிறாள். நான் அறியா எஸ்தர்.

நாங்கள் டாக்டர் லீயைப் பார்த்தோம்.

ரோஜாவைப் போல் இருந்தான் எங்கள் மகன்.

 

 

 

 

ஸ்டீஃபன் வில்லியம் ஹாகின்

பானுமதி ந

‘நான் முதலும் முடிவுமாக ஒரு அறிவியல் ஆய்வகன். என் உடல் குறைகளைப் பேசுவதை நான் விரும்பவில்லை. அவைகளை நான் குடும்பத்திடம்கூட சொல்வதில்லை.’

உடலின் செயல்பாடுகள் நரம்பு இயக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் இயற்பியலிலும், பிரபஞ்ச ஆய்வியலிலும் தனக்கென தனியிடம் தேடி அடைந்தவர் ஹாகின்.

ப்ரிட்டன் இவ்ரது தாயகம். குவாண்டம் விசையியலிலும், பொது சார்பு தத்துவத்திலும், பிரபஞ்ச கோட்பாடுகளில் உலகின் 100 விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.

21 வயதிலேயே இறக்கக்கூடும் என்று கணிக்கப்பட்ட ஒருவர் இன்று 75 வயதில் ‘கடவுள் துகள்’ பற்றி பேசுகிறார், எழுதுகிறார். அத்தனையும் ஒரு சக்கர வண்டியில் அமர்ந்து கொண்டே. மனிதன் தன் அறிவால், உடலை வென்று சாதித்த சரிதம் இவருடையது.

08-01-42ல் பிறந்த இவர், இயற்பியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். ALS எனப்படும் Motor Neuron Disease இவரது 21 வயதில் தொடங்கிவிட்டது. சிறிது சிறிதாக இவரது நடை, இயக்கம், பேச்சு தடைபட்டது. சக்கர நாற்காலியில் செயல்படவேண்டிய நிலை. ஆனால் அறிவுத் தளம் முற்றிலும் வேகமாக இயங்கியது. எந்நிலையிலும் சாதித்துக் காட்ட மனிதனால் இயலும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு இவர்.

தன்னுடன் படித்த ‘ஜேன் வைல்ட்’ என்பவரை 1965-ல் திருமணம் செய்தார். 1995-ல் விவாகரத்து நடந்து, பின்னர் 2005ல் இருவரும் குடும்பத்துடன் சேர்ந்தனர். ’எலைன் மேசென்’ என்பவரை 1995-ல் திருமணம் செய்து பின்னர் 2006-ல் விவகரத்தும் நடந்தது. ’மேசென்’ இவரை கவனித்துக் கொள்ள செவிலியாக வந்து, அவருடன் பின்னர் நெருக்கமாகி, கல்யாணமும் செய்து கொண்டு, ஹாகின்னை மிகவும் உடல் துன்பத்திற்கு உள்ளாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஹாகின் எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்லவில்லை, காவல் துறையின் உதவியையும் நாடவில்லை. முதல் திருமணத்தின் மூலமாக இவருக்கு 2 ஆண்குழந்தைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர்.

ஹாகின் உலகின் மிகச் சிறந்த 22 அறிவியல் பதாகைகள் பெற்றுள்ளார். மிகவும் எளிய நடையில் சிக்கலான அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் திறமை படைத்தவர். அவரது  ‘A Brief History of Time’ பண்டிதர் முதல் பாமரர் வரை  போற்றிய ஒரு நூல்.

‘கருந்துகள்கள் வெளியிடும் கதிர்வீச்சு’ இவரது புகழ் பெற்ற பிரபஞ்ச கோட்பாடு.இன்றளவும் ‘Penrose-Hawking Theorems’ இயற்பியலில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

‘பிரபஞ்சத்தை யாரும் (கடவுள்) உருவாக்கவில்லை. காலவெளியின் ஒருமையும், அதன் ஜியோமிதியும் இதை ஏற்படுத்தின. விஞ்ஞான சட்டங்களுக்கு உட்பட்டு உருவாகிய இந்த அகிலத்தில் சொர்க்கம், நரகம் என ஏதுமில்லை. இந்த பிரும்மான்டத்தில் வேறு உலகங்களும், அவற்றில் உயிரினங்களும் சாத்தியமே. ஆனால், நம் நோக்கம் அவர்களை கண்டுபிடிப்பதல்ல. இந்தப் புவியில் என்னேரமும் திடீரென அணு ஆயுதப் போர் நிகழும் வாய்ப்பு இருப்பதால், விண்வெளி குடியேற்றங்கள் மிகவும் தேவை. அதற்கு மிக மிக மேம்பட்ட உன்னதமான செயற்கை அறிவும் தேவை. அறிவியல், சட்டங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு தன்னை வளர்த்துக் கொள்கிறது. தன்னை நிரூபிக்க அது தவறுவதில்லை. தத்துவங்கள் தேக்க நிலையில் உள்ளன. மனிதனின் இன்றைய தேவையும் அறிவியலே”, என்கிறார் இவர்.

உடல் இயக்கத்தில் அவர் பிறரை நாட வேண்டிய நிலை- மிக இளமையில் இருந்தே பிறரை சார வேண்டி இருந்தாலும் தன் குறையால் அவர் வாழ்வை வெறுக்கவில்லை. சக்கர வண்டியை இயக்கினார்; கைகள் செயலிழந்தபோது பேச்சின் மூலம் கட்டளைகள் பிறப்பித்து செயலாற்றினார் .’Intel’ நிறுவனம் அவரது மூளையின் சிந்தனைகள் மற்றும் முகபாவங்களை படிக்கும் கணினியை அவரது சக்கர நாற்காலியில் இணைத்து உதவியது. இன்று பேச இயலாத நிலையில், அவர் கன்னத்தின் ஒரு தசை மட்டும் இயங்கும் நிலையில் அதைப் படிக்கும் கணினி கொண்டு அவர் அறிவியல் சிந்தனைகளைப் பகிர்கிறார். அரசியல், மற்றும் சமுதாய நடப்புகளிலும் ஆர்வம் மிக்கவர். வியட்னாம் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.. ஒருங்கிணைந்த ப்ரிட்டனை ஆதரிப்பவர். தன் குறைகளைக் காட்டி ஆதாயம் தேடாமல் அறிவால் தன் ஆற்றலை நிரூபித்தவர். தாழ்வு மனப்பான்மை அற்றவர்.

என்ன குறை இவருக்கு? ஒன்றும் குறையில்லை.

கனல்

                                    பானுமதி. ந

வளர் பிறையின் பன்னிரண்டாவது நாள். முழுமை அடையும் வேகத்தில் சந்திரன் பொலிந்து கொண்டிருந்தான். முன் ஜாமம். ஒளியைப் பாதி ஆடையெனப் புனைந்து கங்கை ஒயிலாக நடந்து கொண்டிருந்தாள்.

அடி ஆழத்து மீன்கள் எல்லாம் மனித வாடை இல்லாததால், துள்ளி மேலே குதிப்பதும், கடல் கன்னி என நீந்துவதும், நீருக்குள் ஒரு வானவில்லென பல வண்ணங்களில் பேருவகை கொள்வதுமாக விளையாடின.

காட்டில் பெருக்கெடுப்பது கங்கையின் விருப்பம். மலையரசி. எப்படி காட்டை விடுவாள்? அவிழ்த்த சடையிலிருந்து அவள் கொண்ட மோகம்தான் வேகம்! அவன் கருணைப் பெரும் துளியில் அவள்  மானிடரின் முதல் உயிர்த்துளி. உலகின் காமக் களியாட்டங்களை அவள் அறிவாள். அவர்களின் ஆறாப் பெருந்துயர் அவள் உணர்வாள். அவள் காலத்தின் பெரும் சாட்சி. பனிச் சிகரத்தின் நிலா நடைத்துளி.

அன்று மாலை. கௌரவர்களும்  கர்ணனுமாக  அவள் மீது விளையாடினார்கள். எத்தனை உல்லாசம். எத்தனை உற்சாகம். அவளும் அவர்களுடன் ஓடினாள். போக்கு காட்டினாள். சிறு சுழல் காட்டி பயம் ஊட்டினாள். தணிந்து தணிந்து குளிர்வித்தாள். நேரம் ஆனதென்று கடைப் பயல் கூவியவுடன் அவர்கள் மனமில்லாமல் கரை சேர்ந்தனர். ஆனால், கர்ணன் காட்டில் இருளில் பயிற்சி செய்துவிட்டு  வருவதாகத் தங்கிவிட்டான். ஒளியின் மானுட குழவி. இருளில் என்ன வேண்டும் அவனுக்கு? கங்கை ஓடிக்கொண்டிருந்தாள்.

குதிரையைத் தளரவிட்டு கர்ணன் மெதுவாகச் சென்றான். ஓங்கி வளர்ந்த காடு. அதில் இரவு உயிர்களின் ஓசை எழுந்து கொண்டிருந்தது. சந்திரனின் கிரணங்கள் பட்ட மரங்களின் மேல் கிளைகள், தாம் வேறு மரம் வேறாகக் காட்சி அளித்தன. காற்றின் தழுவலுக்கேற்ப அவை வளைந்து உரசும் ஒலி கேட்டது. அருகே அருகே நெருங்கி விலகி விலகிச் செல்வதாக மரங்களும், செடிகளும், புதர்களும் காணக் கிடைத்தன. காட்டிற்கே உண்டான வாசம் நாசியை நிறைத்தது.

ஆழ மூச்சினை இழுத்து கர்ணன் தன் வேதனையை வெளிப்படுத்தினான் .”நான் செய்வது சரியா? ஏன் எனக்கு குழப்பங்களே எஞ்சுகின்றன? நான் எதைத்தான் வேண்டுகிறேன்? பதவியா, அதனால் வரும்  மதிப்பா, மதிப்பு தரும் தன்னிறைவா, அது கொண்டு வரும் மலர்ச்சியா, கொடுப்பதால் முழங்கப்படும் பெயரா, வரலாற்றில் நிற்கும் ஆசையா, அரசு கட்டில் தரும் போதையா, அதையும் தானே நடத்த இடம் கொடுக்காமல் பின்னின்று இயக்கும் அனைவரின் மேல் உள்ள காட்ட இயலா கோபத்தின் உள் ஊனமா, வீட்டில் காட்டப்படும் அலட்சியமா, போராடிப் போராடி முழுதாக வெற்றி பெற இயலாத சூழலா, தன் முதுகின் பின்னே கேட்கும் சிரிப்பொலிகள் காதில் விழாதது போல் தான் நடிக்கும் நாடகத்தின் வேதனையா, எது என் அமைதியைக் குலைக்கிறது?”

கர்ணன்  குதிரை கனைப்பதைக் கேட்டு  தன் அம்பினை கையில் எடுத்தான். ”அங்க தேசத்து அரசரே, வில்லிற்கு இப்பொழுது தேவையில்லை” என்றது ஒரு பெண் குரல். காட்டில், இந்த நேரத்தில், ஒரு பெண் என்பதே அவனை  வியப்பூட்டியது. அவள் கையில் எரிதழல். இவன் முகத்திற்கு எதிராகப் பிடித்திருந்தாள். அவளது உருவம் ஒரு கோடாகத் தெரிந்ததே தவிர முகம் தெளிவாகத் தெரியவில்லை.

“யார் நீ?’ என்றான் அதட்டும் குரலில்.

“துரியன் தந்த அரசை ஆள்பவனுக்கு இத்தனை ஆணவமா?” என்று அவள் சிரித்தாள்.

முதலில் அங்க தேசம் என்றாள், இப்பொழுது அந்த அரசு வந்த வழியையும் சொல்கிறாள். இவள் நம்மைப் பற்றி அறிந்து கொண்டே சீண்டுகிறாள்.

“சொல், இந்தக் காட்டில் உனக்கு இந்த நேரத்தில் என்ன வேலை? உன் தீப்பந்தத்தை சற்றுக் கரம் மாற்றி உன் முகத்தைக் காட்டு.” என்றான் அவன் கடும் குரலில்.

அவள் அப்படியே நின்றிருந்தாள். ”பெண்ணே, உன்னைக் கொல்வது எனக்கு எளிது. உன்னைக் கொல்லாமல் சிறை பிடிப்பதும் எனக்கு முடியும். “

“அப்படிச் சொல், அஸ்தினாபுரியின் உணவல்லவா உள்ளே செல்கிறது உனக்கு. பெண்ணைக் கொல்வது உனக்கு வழி முறை சொத்தல்லவா? உங்கள் பிதாமஹரின் கொடை”, கசப்புடன் சிரித்தாள் அவள்.

“என்னைப் பழித்தாய்; இப்பொழுது எங்கள் அரசை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ?  எந்தப் பெண்ணை எங்கள் பீஷ்மர் கொன்றார்?”

அவள் சிரித்தாள். ”உயிரைக் கொன்றால்தான் கொலையா? மனதைக் கொன்றாலும், காதலை அழித்தாலும் அதுவும் கொலைதான். என்னைப் பார், இப்பொழுதும் நான் யாரென்று தெரியவில்லை அல்லவா?” என்றாள் அவள்.

கரம் மாற்றி அவள் பிடித்த பந்தத்தால் இப்பொழுது பார்க்க முடிந்தது. மரவுரி தரித்திருந்தாள் முகத்தில் கடும் தவத்தின், பழியின், செஞ்சுடர் கூத்தாடியது. தீயின் சுடரில் அவள் முகம் மனதின் எரிதழலைக் காட்டியது. பெண்ணின் நளினமற்று, இறுகக் காய்ந்த தவ உடல்.தசைகளின் முறுக்கும், தினவும் அவளின் போர்ப்பயிற்சியைக் காட்டின. சடை விழாத அவள் செம்பட்டைக் குழலும், அவள் குரலும், கண்களும்தான் அவளைப் பெண் எனக் காட்டின. அவளைப் பணிய தன் உள்ளம் ஏங்குவதை கர்ணன் அதிசயித்தான்.

“நான் தனித்து உன்னிடம் பேச நினைத்தேன். நீங்கள் அனைவரும்  நீர் விளையாடுகையில் உன்னை  எப்படி தனித்து அழைப்பது என்று தவித்தேன்.”

“சொல்லுங்கள். என்னிடம் என்ன பேச வேண்டும்? நீங்கள் யார் என்று அறிந்தால் அல்லவோ நான் ஏதும் செய்யக் கூடும்?” என்றான் கர்ணன்.

“கர்ணா, உன் குருவிடம் நான் ஒரு நீதி கேட்டேன். அதன் பயனாக ஒரு உயிரும் கேட்டேன். ஆனால் அவரால் அது இயலவில்லை. உன்னால் முடியும். உன் பேர் சொல்லும் நிகழ்வாக அது இருக்கும். உன் வீரத்தைப் போற்றிக் கொண்டே இருக்கும், நீதிக்காக பாட்டனை வதைத்தவன் என்று”

“அம்மா, நீங்கள் சொல்வது பரசுராமரையும், இருங்கள், இருங்கள் பீஷ்மரையுமா? பீஷ்மர் எனக்கு தாத்தாவா? அது எப்படி? குலம் அற்று மனம் நொந்து வாழுகிறேன்- என் பிறப்பை நீங்கள் அறிவீர்களா? என் தாய் யார் அம்மா?”

“பார்த்தாயா, என்னைப் பற்றி விட்டுவிட்டாய். உன் பிறப்பின் நிழலை நீ வெட்டி எறியப் பார்க்கிறாய். நான் சிகண்டி. அந்த பீஷ்மன் உலகிற்கே பிதாமஹன் அல்லவா?”

“அப்படியென்றால் நீங்கள் அரசி அம்பையா? என்ன தவம் செய்தேன் உங்களைப் பார்ப்பதற்கு? அம்மா, சொல்லுங்கள் என் தாய் யாரென்று?” கர்ணன் அவள் காலடியில் பணிந்தான்

அவன் தோள் தொட்டு ஆசி வழங்கிய அம்பை,” கர்ணா நான் இப்பொழுது சிகண்டி. அம்பையின் பழி தீர்க்க வந்த சிகண்டி. என் அவிசை அளிப்பவன் யார்? என் மனதைக் குளிர்விப்பவன் யார்? காட்டிலும் ,மேட்டிலும் திரியும் ஒரு அனாதை நான்”

“அம்மா, இப்பொழுதே என்னுடன் வாருங்கள். என் அரண்மனையின் இராஜ மாதா நீங்கள். உங்கள் ஒரு சொல்லிற்கு அனைவரும் கட்டுப்படுவோம்.”

“கர்ணா, எனக்கு வேண்டுவது ஒன்று தான்—அந்த பீஷ்மனின் அவமானம்— அவன் உயிர்.”

“தாயே, நான் அஸ்தினாபுரிக்கு கட்டுப்பட்டவன்.

அவர் அதன் அரியணை தாங்கும் சிம்மம். என் அன்பிற்குரிய துரியனின் பிதாமகர். அவர் நினைத்தால் மட்டுமே அவர் உயிர் பிரிய இயலும்.”

“அப்படியென்றால் அவரின் எந்த அநீதியையும் யாரும் கேட்க மாட்டீர்களா? பெண்ணின் அழிந்த வாழ்வு உங்களுக்கு ஒரு பொருட்டில்லை அல்லவா?”

“தாயே, உங்கள் நிலை கண்டு என் மனம் அழுகிறது. ஆனால்,உங்களுடைய இந்த நிலைமைக்கு தாங்களும் ஒரு காரணமில்லையா?” என்றான் அவன்

“என்ன சொன்னாய்? நான் காரணமா? அந்த பீஷ்மன் தருவதாகச் சொன்ன பிச்சை சோற்றை உண்டு வாழ்ந்திருக்க வேண்டுமா?”

“அம்மா, சினம் கொள்ளாதீர்கள். பிதாமகர் தெரிந்தே தவறு செய்யவில்லையே?’ என்றான் கர்ணன்.

“என்ன சொன்னாய்? உன் உயிர் மீது ஆசையில்லையா?”

“கோபித்துக் கொண்டாலும் உண்மை பொய்யாகி விடுமா? நீங்கள் சுயம்வரத்திற்கு ஏன் வந்தீர்கள்?”

“என் காதலனுக்கு மாலையிட”

“மணாளனைத் தேர்ந்தெடுத்த பின் சுயம்வர மண்டபம் வரலாமா?”

“என்ன சொல்கிறாய் நீ?”

“அம்மா, நீங்கள் உங்கள் தந்தையிடம் சொல்லி திருமணத்தை முடித்திருக்க வேண்டும். மாறாக, சுயம்வரத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு உங்கள் திருமணத்தை செய்யப் பார்த்தீர்கள்.”

“கர்ணா, சால்வன் பேரரசன் இல்லை. என் தந்தையிடம் சொல்வதை விட சுயம்வர மண்டபம் வந்து அவருக்கு மாலையிட நினைத்தேன்.”

“அதை அறியாமல் பீஷ்மர் தவறாக உங்களையும் கவர்ந்து வந்து விட்டார்.”

“நல்ல கதை. இதை அந்தக் கிழவன் சொன்னானா? ப்ரும்மச்சாரி என்று சபதம் செய்துவிட்டு அவன் சுயம்வரத்திற்கு வருவான். கன்னிகைகளைக் களவாடுவான். செய்த தப்பிற்கு பிராயச்சித்தமும் செய்ய மாட்டான். நான் அந்த  மண்டபத்திற்கு வந்ததுதான் தவறோ?”

“அம்மா, யாரும் எதிர்பாராமல் ஏதேதோ நடந்துவிடுகிறது. நான் சொல்ல வந்தது ஒரு சிறு விதி மீறலின் விளைவுகள் பற்றி. இன்றுவரை அது உங்களை பாடுபடுத்துகிறது, பீஷ்மரும் மனதளவில் மகிழ்வோடில்லை.”

சிகண்டி பெருமூச்சுடன் ”விதி” என்றாள்.

“அம்மா,போனது போகட்டும். இனியாவது அமைதி கொள்ளுங்கள். என்னுடன் வாருங்கள்.”

“இல்லை கர்ணா ஊழ் என்னைச் செலுத்துகிறது. என் பகையை அழிக்காமல் எனக்கு அமைதியில்லை. நீ என்னைப் புரிந்து கொள்வாய் என நினைத்தேன்; எனக்காக அந்தக் கிழவனை வதைப்பாய் என மனப்பால் குடித்தேன். பாண்டவர்கள் அவனை எதிர்க்கும் மனம் இல்லாதவர்கள். துரியனின் தந்தை எனக்காக பீஷ்மரை கொல்லத் துணியமாட்டான். நீ உனக்குப் பொருந்தாத இடத்தில் அமைதியற்று இருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் என நான் அறிவேன். உன் திறமைக்காக மட்டுமே  உலகம்  உன்னை மதிக்க வேண்டும் என விழைகிறாய். அரசின் மூலம் பெற்ற அங்கீகாரம் உன் இதயத்தை வாள் கொண்டு அறுக்கிறது. “வில்லுக்கு விஜயன்” என்ற புகழ் உன்னை ஏங்கச் செய்கிறது- ஏன் என் திறமை இவர்கள் கண்ணில் படவில்லை என கொதிக்கிறாய். எல்லாமிருந்தும் ஏதும் இல்லையென தவிக்கிறாய்”

“அம்மா, உண்மைதான் நீங்கள் சொல்வது”

“அதனால்தான் சொல்கிறேன். நீ அந்த பீஷ்மனுக்கு அறைகூவல் விடுத்தாயானால், அர்ச்சுனன் உன்னோடு மோதுவான். உன் கரம் வெல்லும். உன் பெயர் நிலைக்கும். உன் பிறப்பைப் பற்றி நான் அறிந்த ஒன்றையும் உனக்குரைப்பேன்”

“அம்மா, நான் இந்த வகையில் உங்களுக்கு உதவமுடியாது. துரியனுக்கு நான் கடமைப்பட்டவன். அவன் என்னைத் தோழனாக நடத்துகிறான், உயிரினும் மேலாக நினைக்கிறான். ஆனால் நான் அவனிடம் அந்த அளவு நட்பு கொள்ளாமல் ஒரு படி கீழே என்னை வைத்துள்ளேன். அவனுக்கு நான் செய்யும் நல்லதெல்லாம் அவன் சொற்படி கேட்பது என்றுதான் நினைக்கிறேன். இதிலும் எனக்கு மனப் போராட்டமே எஞ்சுகிறது. இந்த நிலையில் அவன் பிதாமகரை என்னால் எப்படி எதிர்க்க முடியும்?அம்மா, என் பிறப்பைப் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் பெயர் வெளிப்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“நீ புரிந்து கொள்வாய் என நினைத்தேன். இல்லை, உன்னால் அது இயலவில்லை நான் வருகிறேன்’

“அம்மா, பீஷ்மர் எனக்கு தாத்தாவா? உங்களுக்குத் தெரியுமா? என் குணமும், பிறப்பும் என்னை இரு திசைகளுக்கு இழுக்கின்றன.”

“கர்ணா, இந்த கங்கை அறிவாள் அதை. அதைப் போல் நானும் அறிவேன். யாரிடம் அவள் சொல்லியிருக்கிறாள், நான் சொல்வதற்கு?அந்த பீஷ்மன் யூகத்தால் அறிவான். துவாரகை அரசன் முற்றும் அறிவான். யார் அதைச் சொல்ல வேண்டுமோ அதை அவர்கள் உன்னிடம் சொல்வார்கள், காலம் கனிகையில். உன் கானல் கனல் அப்பொழுதுதான் அடங்குமோ என்னமோ?” சொல்லிக் கொண்டே அவள் காட்டில் மறைந்தாள். கர்ணன் சிலையென அமர்ந்திருந்தான்.

 

தத்துவம்- தத் + த்வம்

பானுமதி. ந

நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம்.” “கங்கா” முன்னுரையில் ஒரு சரமாக நெளியும் எழுத்தாளரின் தன்னுணர்வு.

ஆண்டவன் நம்மைக் கைவிடமாட்டான்; அவனை விட்டால் நமக்குக் கதியில்லை; நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை. எதற்கும் வேளை வரணும். வேளையேதான் தெய்வம். வேளை வந்தால் தெய்வம் வந்தது, தெய்வம் வந்தால் வேளை வந்தது. காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது”..(கஸ்தூரி)

கரையிலிருப்பவனுக்கு தன்னெதிரே விரிந்த கடலைப் பற்றி அதிசயிப்பு. கப்பலிலோ கட்டுமரத்திலோ கடலில் இருப்பவனுக்கு தான் மீளக் கரை இருக்கும் தெம்பு. தெய்வத்துக்கும், மனிதனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரமும் இதுதான் என்பது என் துணிபு. வந்தேன், பார்த்தேன் ஜெயித்தேன். இதை உலகில் யாத்திரையாகக் கொள்வோமா? ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா? முடிந்தால்தானே அது யாத்திரை? ஜெயித்தேன். ஜெயித்தபின் எங்கிருந்து வந்தேனோ அங்கு மீண்டேன். இது  உலகத்தின் கோள வடிவிற்கு ஒரு சான்றாய் நிற்பதோடு அல்லாமல் மனிதன் தெய்வமாகும் சரிதையும் அதுவேயாகும். கட்டிடம் முடிந்து கொண்டே வருகையில் ஓரொரு சாரமாய் தட்டிக் கொண்டே வரவேண்டியதுதானே? தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா?

நியாயம் அநியாயம் பாபம் புண்ணியம் நல்லது கெட்டது இவையெல்லாம் அப்புறம் அவையே இருக்கின்றனவோ இல்லையோ? என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது? அது எவ்வளவு தாங்கும்? அதுதான் முக்கியம அதுவேதான் அது அதுவன்றி எதுவுமில்லை எது அது, அதுதான் புரியவில்லை

“ஆண்டவனே! அவனைக் கூப்பிட்டுவிட்டால் அவன் வந்து விட முடியுமா? இல்லை, பக்தி வந்துவிடுமா? பக்தி வேண்டாம் அவன் வேண்டாம் எண்ணத்தின் வைராக்கியம்தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது? எவ்வளவு நீ தாங்குவாய்? நீ தேடுவது உன்னை வந்து அடையும்போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய்? உன் க்ஷேத்ரம் – பூமி எது? பூமிக்கேற்ற பயிர் பயிருக்கேற்ற பூமி உன் பூமியில் எது விளையும்?”(க்ஷேத்ரம்)

ஆண்டவனே, நீ என்னத்தை கீழே சிந்திவிட்டாய்? காலமும், யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ? ” ‘ஜமதக்னி’ கேட்கும் கேள்வி இது.

பூரணி’ சொல்லும் பதிலும் எண்ணங்களை அசைத்துவிடும். “தெய்வமா பெரிது? தேடுகிறதுதானே முக்கியம்?

மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விட மாட்டேன். மனிதன் மரண பயத்தில் எனக்கு நித்யத்தைத் தந்தான். உன்னில் என் அரூபம் அதன் சாயம் களைகிறது. உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவருக்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள்.”

சொல் அவருக்குப் பொருளாகவே கை கட்டி நின்றது. இருந்தும் சொல்லின் போதாமையை அவர் சுட்டிக் கொண்டேயிருந்தார். இறை என்பதை ஒத்துக்கொண்ட அளவிற்கு அவர் இறைவனை ஒத்துக் கொள்ளவில்லை. உயிரின் சுழற்சியும், தாகமும், பரிவும், பிரிவும், ஒளியும், ஒலியும் அவரது கதைகளின் உயிரோட்டம். மீனோட்டம் காட்டுவது போல் பாய்ந்து கொண்டே இருக்கின்றன மீன்கள். நதியின் துறைதோறும் பாயும் துளிகள்; எழுத்தின் சுவை. அதன் சூடும் இதுவே. “சத்யம் கடைசியில் ஜயிக்கலாம் ஆனால், சந்தேகத்துக்குத்தான் பவர் ஜாஸ்தி

யாகச் சொல்லால், சொல்யாகம் செய்தவர். சித்திரச் சொல்லால், சொற் சித்திரம் வரைந்தவர். எழில் சொல்லால் சொல் எழில் கூட்டியவர். சரக் கொன்றை எனத் தோற்றி  கொன்றைச் சரம் சூட்டியவர். தத் +த்வ்ம்- அது நீயே என வழி சொன்னவர். அதற்கான துணிவும் தெளிவும் கொண்டவர்.

லா. ச. ரா. – நினைத்துக் கொள்வோமே?

oOo