எழுத்து

ஆற்றுகை – சில குறிப்புகள்

பீட்டர் பொங்கல்

I

நாமெல்லாம் ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று ஏதேனும் ஒன்று சிக்கினால் அதைக் கவிதையாக்கப் பார்ப்பவர்கள். கணங்களைப் பகிரும் யுகம் இது. சாமானியர்கள் மொபைலில் போட்டோ பிடித்து போட்டால், கவிஞர்கள் சொற்சிலம்பம் ஆடப் புறப்பட்டு விடுகிறார்கள். நன்றாக எழுதப்பட்டால் இந்த ஸ்நாப்ஷாட்டுகள் ரசிக்கும்படியாகவே உள்ளன.

போட்டோவுக்கும் ஓவியத்துக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்று யோசித்துப் பார்த்தால் நிகழ்கணத்தை உறையச் செய்வதுதான் புகைப்படத்தின் தனித்தன்மை என்று தோன்றுகிறது- இங்கிருக்கும் புகைப்படம் அதற்கு ஒரு உதாரணம் The Falling Man. இங்கு காலம் உறைந்திருக்கிறது, இல்லையா? இது எத்தனையோ உணர்வுகளையும் எண்ணங்களையும் தூண்டுகிறது.

அது தவிர அழகான புகைப்படங்களும் இருக்கின்றன. பில்டர் சேர்த்தும் சேர்க்காமலும் நாம் பகிரும் புகைப்படங்கள் இப்படிப்பட்டவை, நம் ரசனை குறித்த அறிவிப்புகள். நம்மைப் பொறுத்தவரை இவையும் காலம் உறைந்திருக்கும் கணங்கள். ஆனால் பிறருக்கு வெறும் போட்டோவாக இருக்கலாம் – எல்லாரும்தான் அழகான போட்டோ எடுக்கிறார்கள். ஏன், அதற்கப்புறம் நூறு போட்டோ எடுத்து பகிர்ந்தபின் இது நமக்கும் சாதாரணமாய்ப் போய் விடுகிறது.

முக்கியமான ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று எதையாவது கவிதையாக எழுதும்போது அது ஒரு ஸ்னாப்ஷாட் என்ற அளவில் அப்போது நமக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் அது போன்ற எத்தனையோ நம்மிடமிருந்தும் பிறரிடமிருந்து எடுத்தடுத்து வரும்போது நமக்கே அதன் கூர்மை மழுங்கிப் போகிறது. அது, நான் அழகாய் இருக்கிறேன், என்று சொல்கிறது. அதற்கு மேல் எதுவும் பேசக்கூடியதாக இல்லை. காரணம், காலம் அதில் உறையவில்லை. புகைப்படம் போலவே இப்படிப்பட்ட கவிதைகளில் காலத்தைக் கைப்பற்றுவதில்தான் இருக்கிறது கலை.

ஸ்ரீதர் நாராயணன் அண்மையில் எழுதிய கவிதை, ஆற்றுகை.

துவக்கத்தில் வருவது ஒவ்வொன்றும் ஒரு கணத்தைக் கைப்பற்றுகிறது.

ஆனால் தொடர்ந்து வரும் வரிகள்தான் கவிதையின் இதயம்.

இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.

எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.

இப்படிப்பட்ட கவிதை ஒவ்வொன்றும் இது போன்ற ஒரு ஆற்றுகையின் துவக்க கணத்தில்தான் நிற்கிறது. அந்தக் கணம் தவறினால் காலம் தப்பி விடுகிறது, பத்தோடு பதினொன்றாகிறது.

அழகல்ல இக்கவிதைகளின் நியாயம் – அநிச்சயத்தின் கிளர்ச்சி. எளிமையாக இருக்கிறதோ, சிக்கலாக இருக்கிறதோ எது எப்படி இருந்தாலும், இந்த ஸ்நாப்ஷாட் கவிதைகளில் உள்ள சொற்களும் படிமங்களும் அர்த்தங்களும் நம் உள்ளத்தில் புரள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயிர்ப்பு நிலையில் காலத்தை உறையச் செய்திருப்பதே இக்கவிதையின் வெற்றி.

II

முதல் நான்கு பத்திகள் காட்சி விவரிப்புகள். தராசு முள் சாய்வதற்கு முந்தைய கணத்தைப் போன்ற, ஆற்றலின் சாத்தியங்கள் அத்தனையும் கைகூடி நிற்கும் தருணம்- பல்லவி முடிந்து ஒலிக்கும் கார்வை அடுத்த இடத்துக்குப் போகப் போகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் பெண், குறுகிய கட்டைகளில் கைவிரித்து நடக்கிறாள்- அதிலிருந்து தாவிக் குட்டிக்கரணம் அடித்துப் பாயப் போகிறாள். அவநம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருப்பவர் மனம் மாறும் தருணம். வாண வேடிக்கைகளின் முதல் தீப்பொறி என்று நினைக்கிறேன், இனி அதன் ஒளி வானில் ஒரு சித்திரம் வரையும்.

“கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.”

இதுவரை வந்தது எல்லாம் வெற்றியை நோக்கிய முயற்சிகள் என்றால், இங்கு மட்டும் தோல்வியின் சாயை. கடற்கரை மணலில் எழுப்பும் கோபுரத்தை கடல் நீர் கொள்ளாமல் போனாலும் நாம் கொண்டு போக முடியாது, இல்லையா? ஒரு வியர்த்தச் செயல், இருந்தாலும் இதிலும் ஒரு காரியத்தைச் செய்து முடித்த சந்தோஷம்.

இத்தனைக்கும் அப்புறம்தான்-

“இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.”

நான் துவங்கும் முயற்சிக்கு இது ஒரு இனிமையான ஆரம்பம்தான், இக்கணம் என் மனம் உறுதியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் Poise என்று ஒரு சொல் உண்டு. ‘balance; equilibrium,‘ என்று ஒரு பொருள். தராசு முள் நிமிர்ந்து நிலையாய் நிற்கிறது. அதே சொல், ‘Poised for growth‘, ‘poised for success‘ என்று ஒரு வழக்காகவும் புழங்குகிறது- ‘ready for something; in the right position and waiting for something,’ என்ற அர்த்தத்தில்.

இனி வருகின்றன இந்த வரிகள்-

“எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

தமிழில் ஆற்றுகை என்றால் ஆங்கிலத்தில் performance- adventure sportsகளில் ஈடுபடுபவர்களின் த்ரில் என்ன? உயரத்தில் கட்டப்பட்ட கம்பி அறுபடலாம், நம் படகு காட்டாற்றில் கவிழலாம், கால் பிசகி நாம் கீழே விழலாம்- இந்த ஆபத்து ஒரு கிளர்ச்சியளிக்கிறது, இல்லையா? அந்தக் கிளர்ச்சியே என்னை ஆற்றுகையின் அடுத்த படிக்கும் கொண்டு செல்கிறது-

“அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

புதிய ஊர், புதிய உறவு, புதிய வேலை- பழக்கமில்லாத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்: நீர்ப்பரப்பின் அலைகளைத்தான் நான் அறிகிறேன், அதன் ஆழங்கள் எனக்குத் தெரியாது. ஆனாலும் என் முதல் அடியை இப்போது எடுத்து வைக்கிறேன்.

ஆற்றுகை.

உலர்ந்துருகும் வேனில்

சோழகக்கொண்டல்

இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்

இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை

இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்குகியபடி

இத்திசை
எரிந்துகொண்டே இருக்கிறது
காணலின் கைவெப்பம் தொடும்
துளிர்களையெல்லாம் கருக்கியபடி

இப்பயணம்
நீண்டுக்கொண்டே  இருக்கிறது
நேரமோ பாதமோ நெருங்காதபடி
நெடுந்தொலைவில் உறையும்
ஒரு நினைவின் நதியைத்தேடி

இக்கனவும்
அமிழ்ந்துகொண்டே  இருக்கிறது
ஒவ்வொருகணமும்
ஊழி ஊழியாய்
நீண்டபடி

இன்றிரவும்
முடியத்தான் போகிறது
முதல்மீன் முளைக்கும் இருளின் கரையில்
இந்த முற்றத்தில் படியும்
வெற்றுப் புழுதியோடு.

சரக் கொன்றை, கொன்றைச் சரம்

பானுமதி. ந

பசு நாக்கு போல் முன் மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது”. இவ்வரி கதாபாத்திரத்தின் இயல்பையும் உருவையும் மிக இயல்பாக “கஸ்தூரி“யில் சொல்லிவிடுகிறது. முனைந்து திணிக்காமல் இயல்பாகக் பூக்கும் கொன்றை.

ஆனால், திடீரென சொல்லுக்கும், செயலுக்கும் இடைக்கோடு உன் ருத்ரத்தில் அழிந்ததும் ப்ரளயம் புரண்டெழுந்து ஒரு கணம் என் மேல் மூடி…” எப்பொழுது மலர்ந்தது இது? மலர்கையிலே பார்த்தவர் உண்டா?

கல்லருகில் சிற்றலைகள் தத்தம்தோள்களை இடித்துச் சிரித்துக் கொண்டிருந்தன. சிரிக்கும் சரம்.” (தரங்கிணி)

என் எண்ணங்களை நானே நூற்று என்மேலேயே பின்னிக் கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது, அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.”

எனக்கும் உனக்கும் நமது நமது என எதை எனக்கு எனக்கென கொண்டோமே? ஆனாலும் உன்னிலும் என்னிலும் உன்னையும் என்னையும் இன்றி கண்டது பின்னையும் என்? கண்டதும் வேண்டாம் கொண்டதும் வேண்டாம் உன்னையும் என்னையும் நம்மிலிருந்த நான் நான் எனது என விண்டதும் வேண்டாம்” (மாற்று- இதழ்கள்)

வளைவாகத் தொடுத்து காட்சி தரும் கொன்றைச் சரத்தில் வெளி வட்டம், உள் வட்டம் காட்டி மயக்கி நடுவில் காணும் ஒற்றைச் சூனியமாக எழுத்தில் தொடுக்க எப்படி முடிந்திருக்கிறது இவருக்கு!

அலைகள் “ என்னென்ன சொல்லும்?

வருடங்களின் பின்ணணியில் புதைந்து போன நினைவின் மொத்தமான அரூபம் புகுந்து புறப்படுகையில், ஒளிச் சிதர்களாய் ரூபம் பிரிகின்றது.

மடித்த விசிறி திடிரென விரிந்தாற் போல், பஞ்ச வர்ணக் கிளி சிறகு விரித்துப் பறந்தாற் போல், கோடை மழையில் வானவில் வளைந்தாற் போல், காலடியில் மழைத் தேக்கத்தில் ஜால வர்ணங்கள் தோய்ந்தாற் போல், சுண்டிய தந்தி தன் விதிர்விதிர்ப்பில் எட்டுத் தந்திகளாய் விசிறினாற் போல், மந்தர ஸ்தாயியில் குரலின் கனத்த கார்வை போல், நான் ஒண்டியில்லை. எத்தனை எத்தனையோ பெயர்கள், பெயர்களின் ஓசை, ஓசைகளின் சாயை. சாயையிலிருந்து மறுபடியும் ததும்பும் பெயர்கள், பெயர்களைத் தாங்கும் உயிர்கள், உயிர்களின் தனித்தனி வாழ்வுகளாய்ப் பிரிந்துவிட்டாய்.

எந்தத் தனிமையின் முள் நிரடி, ஒன்று பலவாய், பலதும் பலவாய், உயிர் எனும் சரட்டில் கோர்க்கப்பட்ட சாயை தோற்றும் கொன்றைச் சரமோ?

சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகி விடும்போது அதில் சாவுக்கும், உயிருக்கும் பிரமாத இடமில்லை.” (கொட்டு மேளம்). இலை மறைவில் பூத்த கொன்றை. ஆனாலும் நினைவை அழிக்கும் வாசம் வீசும்; அல்லது அழிக்கச் சொல்லி வீசும்.

நியாயம் பொதுச் சொத்து, தனிச் சொத்து இல்லை. நியாயத்தின் தன்மை சமயத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரு சமயத்தின் நியாயம் இன்னொரு சமயத்தின் நியாயமாயிருக்கணும்னு அவசியமில்லை. அனியாயமாகவே இருக்கக்கூடும்.” (இதழ்கள்-1). என்ன ஒரு வசீகரம் இந்தப் பதிவில். சட்சட் என்று கோர்க்கப்படும் மாலை. ஆனால் நமக்குத் தெரியும்-தனித்தனி பூக்களால் ஆனது என்று- நியாயம் சமயத்தின் பூ. நீதி? ”உலகம் ஒரு உண்மை. ஆயினும் அதன் தனித்தனி ஞாயம் வெவ்வேறு.”

அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாகப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.”(பாற்கடல்) அக்கினி ஒன்று கரங்கள் பல, தீட்டும் உருவங்கள் பலதாக, அழித்தழித்து ..பூ, பூக்கள், சரம் வாடல், மலர்தல்.

அச்சமயம் என்னை என்னிலிருந்து பிரித்து என்னெதிரில் நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்டு என்மேல் என்னை நான் துப்பிக் கொண்டிருந்தேன். தன்மீது தான் வைத்திருக்கும் பாசத்திற்கு மிஞ்சியது இல்லை. அதே போல் தன்னைதானே வெறுக்கும் பயங்கரம் போல் எதுவும் இல்லை. தன்னை வெறுக்கையில் தான் வெறுக்காதது எதுவும் இல்லை.”

ஜலம் கோபக்கண்ணின் அடிச் சிவப்புடன் வண்டல் மண்ணைக் கரைத்து காலடியில் சுழித்து ப்ரளயமாய் ஓடிற்று. வானம் எதிர்த்துச் சீறிற்று.

மனம் ஒன்றில் அது எதுவாயினும் சரி- ஒன்றில் ஒன்று பட்டு அவ்வொன்றன்றி மற்றெல்லாம் மறந்து, அல்லது மற்றவையினின்று விடுபெற்று அவ்வொன்றின் நினைவும் அடங்கி, நினைவு என்று ஒன்று இருந்தால் ஒன்று என்று நினைவு குறித்த அது அந்நினைவும் இன்றியதால், அதுவும் அழிந்துவிடின், பிறகு அது என்று எது?” ’ப்ரளயம்’ கொணரும் கொன்றை இது. சுழிப்பில் சரமெனத் தோன்றி தனி எனக் கண்டு அதையும் விட்டுவிடும் நினைவறுந்த சரப்பூக்கள்.

அடுக்கு மலர்ச்சரமாக இதைப் பாருங்கள்: ”அந்த வெள்ளி மணிக்குரல், உயிரின் பிரிவாற்றாமைத் தவிப்பு ஆதிமூல அலறலாகவே மாறி பூமியையே பட்டை உரித்துக் கொண்டு, அப்பாணம் நாத பிந்துக்களை உதிர்த்துக் கொண்டு வான் மண்டலத்தை நோக்கி ஏறுகிறது.”

மலர்களைப் பார்க்கிறோம், சரங்களைப் பார்க்கிறோம், நாசியால் வாசத்தையும் உணர்கிறோம். கண்களுக்கு வாசமாக, இந்தக் குற்றால அருவியைப் பாருங்கள்.

“அந்தத் தண்சுழிப்பிலிருந்து மூன்று மதத்த சடைகள் விரிந்து தளையவிழ்ந்து, சரிந்து பொங்குமாங்கடலுள் விழுந்து… பர்வதராஜகுமாரி தன் கூந்தலை அருவியில் அலசுகிறாளா அல்லது அவள் கூந்தல்தான் அருவியாய்ப் பாய்கிறதா? எத்தனை எத்தனை உவமைகள் உற்பத்தி ஆயினும், உன்னை எட்ட எத்தனை எத்தனை உயரம் பறந்தாலும் அத்தனையும் உன் ஒரு கால் சுவடு தீண்ட த்ராணியற்று, நீர்த்து உதிர்கையில் புவனமே ஜல் ஜல் என உன் கால் சதங்கையினின்று கழன்ற கிண்கிணி மணி. நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக் கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுக்கள், வாக்கியங்கள், வார்த்தைகள்,பதங்கள், பத-சரி-க-சா-ம-த ஸ்வரங்கள், ஓசைகள் ஒலிகள், மோனங்கள், திக் திக் திகில்கள், திமி திமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நக்ஷத்ரயிருட்டில் கருங்குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளைச் சிலிர்த்துக் கொண்டு தங்கத் துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும்- குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன், கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது” (தேவி)

ஒன்றையொன்று நெருங்கி ஒற்றைச் சரமாக காட்சியளித்து ஏமாற்றும் சரக் கொன்றை.

 

ஏதுமற்று

சரவணன் அபி

மத்திய ஜாவாவின்
யோக்யகர்த்தா நகரில்
விரைந்து சாயும்
மழை அந்திகளின்
முன்மாலைப் பொழுது

தொலைவில் எரிந்தடங்கும்
ஒளியின் முன்
விண்ணைத் தீண்டக் கிளம்பும்
மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்
பிரம்பனான் கோவிற் சிகரங்களை
நோக்கி
மது அருந்திக் கொண்டிருக்கிறேன்

கருமையும் அடர்த்தியும்
கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே
தெருவின் இரைச்சலைப் பின்விட்டு
விடுதியின் சாளரத்தில்
தனித்து அமர்ந்திருக்கும்
என்னெதிரில் அமர்கிறாள் அவள்

சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்
உதிர்க்கும் பறவைபோல்
நீவிக்கொள்கிறாள்

இந்தியனா என்கிறாள்
எனக்குத் தெரியும்
இதையும் இதற்கடுத்த
எந்த இரு கேள்விகளையும்
நான் எதிர்பார்க்கலாமென

ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு
பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா
என்று வினவுகிறாள்

மழையின் ஓசை
ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது

பதிலாக அவள் அருந்த
என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்

இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்

சொல் எழில், எழிற்ச்சொல்                      

ந. பானுமதி

மொழி என்பது என்ன? மொழியும் எண்ணங்களா? எண்ணங்களே மொழியானதா? குரலின் ஏற்ற இறக்கத்தோடு மொழி பொருள் கொள்கிறதா? அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது? பழமொழி, உவமான உவமேயங்கள், அவை பேச்சிற்கு மட்டும் இல்லாமல், எழுத்திற்கும் துணை நிற்கின்றன. லாசராவின் எழுத்தில் அவர் கையாளும் உவமைகள், அவராலேயே அனுமானிக்கப்பட்டவை, ஆழ்ந்த பொருள் கொண்டவை.

ராஜாளி தன் சிறகுகளை விரித்துக் கொண்டு பாறையினின்று எழுவது போல, காலை வேளையில் கதிரவன் தன் கிரணங்களை வீசிக் கொண்டு எழுகையில்…”(மஹாபலி). இந்த உவமை சூழலின் கனத்தைக்  எப்படிக் கூட்டுகிறது பாருங்கள். ”அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்திற்குத் தயாராக இருந்தன.”

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்” என்றான் பாரதி. ‘காயத்ரி’யில் லாசரா சொல்கிறார், ”நீல மெத்தையில் வைர நகை புரண்டாற் போல”. இத்தனை சுவையுடன் சொல்ல இவரால் தான் முடியும். இதே கதையில் மீண்டும் ஒரு காட்சி “உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூய வெண்மை”. தேங்காய் உடைக்கும்போதெல்லாம் நினைவில் மின்னும் இந்த வரி.

அந்தரத்தில் நின்றாடும் ஒரு ஸ்வரம்- நம் மன இழையைப் பின்னி லயிக்க விடும். இவருக்கோ, ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்ரி). ஒரு ஸ்வரம்- பல இறக்கைகள்!

அதென்ன, கரியின் கறுப்பு உயிரோடு மூச்சு விடற மாதிரி அப்படியிருக்கு?” “சுடர் சீறிக் குதித்தது.நான் என்னுள் என் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அழித்துவிட்ட தூய இருளில் நான் இழைந்து போனேன்.” “அவள் விரல் நுனிகளினின்று மின்னல்கள் நீலத்தில் திகுதிகுத்தன”. (காயத்ரி)

நீரில் நாம் வழிவழியாய் மலர்களை, தீபத்தை, உணவை, அஸ்தியை சமர்ப்பிக்கிறோம். ”காத்திருந்த கை போல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணீர்த் திரையூடே கண்டேன்.” இதில் “காத்திருந்த கை” என்ற சொற்றொடர் இல்லையெனில் அந்த உணர்வு நமக்குக் கிடைக்குமா? ”ஓரிரண்டு நட்சத்திரங்கள் வானில் மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன. திரையிறங்கி வரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்பு சிரித்தது.” (அஞ்சலி )

இதழ்கள்-1’ மணம் மற்றும் மனம் கமழும் சொற்களைப் பாருங்கள்

தங்க விமானத்தின் உறை கழன்று விழுந்தாற் போல், குழந்தை தூளி மடிகளிலிருந்து வெளிப்பட்டான்.”

புகையிலைக் காவியேறிய வாய் தக்காளியரிந்த மாதிரி செவேலென்றது.

பூவின் மேலே பனித்துளி நிற்பது போல் அவள் விழிகளில் நிறைந்தன.

பல வர்ணங்களில் சர்க்கரை குழல்கள் ஒன்றுக்கொன்று கோத்துக் கொண்டு சுழித்தன.”

கணுக்களி‘ல்-

நாசூக்கான பேச்சு என்பதைச் சொல்ல வருகையில், ”மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சில்

பிறரிடம் வேலை வாங்கிக் கொண்டே தான் செய்தது போல் காட்டிக் கொள்ளும் மனிதர்களை கிண்டல் செய்கையில், “யானை சுமந்து வர, பின்னால் நரி முக்கிக் கொண்டே வந்ததாம்

கொதிப்பதில் கமழும் மணம், ”கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி”. படிக்கையிலேயே பால் காயும் வாசம் வருகிறது. (கொட்டு மேளம்)

இது முன்னோட்டம்- வரும் நிகழ்வின் அறிகுறி என்பதை “ஆண்டாளு”வில் இப்படிச்  சொல்கிறார்- “வெடித்து விட்ட அவுட்டு வாணம் இன்னும் சற்று நேரத்தில் பாளை பாளையாய்க் கக்கவிருக்கும் நட்சத்திரக் கூட்டம் போல”. “ஆனால், ஆண்டாளு இப்படி அழுகையிலேயே, அவள் கண்ணீரின் பாசனத்தில் புதுப் புது சிரிப்புகள் அவளுள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன.

மணிக்கூண்டில் ஒளிக்கதிர் போன்று கழுத்துக் குறுகலை கணக்குப் பார்த்து நெஞ்சின் ஆழத்தை கணிக்க முடியுமா?” (மாற்று)

புத்ர’-

கிழக்கு நீர்த்த சாம்பல் மாதிரியிருக்கிறது. என் நீர்ப்பா? விடியலின் நீர்ப்பா?” “ திக்கற்ற சோகத்தின் கோபம் மூண்டது

காண்பது சுடரின் நீலமா? விஷத்தின் பச்சையா? விஷம் பச்சையா, நீலமா?

தாழ்வாரத்திற்கு விடியாமல் கூடத்திற்கு விடியாது

வார்த்தை நாக்கினின்று புறப்பட்ட அப்போதே வாயிலிருந்து ஒரு பக்ஷி இறக்கையடித்துக் கொண்டு பறந்து சென்றாற் போல்

சந்தனம் கரைத்து அலம்பிய கை போல

நாம் அறியாத அல்லது எதிர்பாராத இழப்புக்களைப் பற்றி சொல்கையில், “குழந்தைக் கை பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி” (பாற்கடல்)

அடுப்பிலாடும் நெருப்பு இவரது பார்வையில் தனி எழில் கொள்கிறது. ”அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும் அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, வித விதமான உருவங்களையும், முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.” (பாற்கடல்)

பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர் மறுப்புகள் ஒன்று இழைந்து ஒரு உண்மை. மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கலவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்துகொண்டே இருக்கும் பல கோடி, கோடானுகோடி உயிர்ச் சுக்கல்கள் நாம்.” பாற்கடலின் உயிர் கடையல் இது.

இரண்டு வண்ணாத்திப் பூச்சிகள் ஒட்டி, நாலு இறக்கைப் பூச்சியாய் புதருக்குப் புதர் பறந்தன. பூக்களிலிருந்துஅவற்றின் யக்ஷர்கள் எட்டிப் பார்த்தார்கள். மரங்களின் தேவதைகள் அஞ்சலியில் நின்றனர்.” ஒரு இயற்கை காட்சி எப்படி வண்ணம் கொண்டு மிளிர்கிறது! (வேண்டப்படாதவர்கள்)

சிரிப்பில், அட, மனிதர்களின் சிரிப்பில் வகைகள் உண்டு. இத்தனை எழில் சொற்களால் அதை சொல்ல இவரன்றி யார்?

“என் சிரிப்பு பற்றி ஓரொரு சமயமும் எனக்குப் புதிது புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள் தான் எத்தனை!

“ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதிர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதனின்று உதிர்கின்றன.

“இன்னொரு சமயம் நட்டுவாக்காலிகளும், குளவிகளுமாய்க் குதிக்கின்றன.

“ஒரு சமயம் பொன்வண்டின் றக்கையடிப்பு

“ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி.

“ஒரு சமயம் கண்ணீர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கிணிகிணி.

“கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்.

“அடித்த பஞ்சாகிப் பிறகு, அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடாரியின் கூர்முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள், கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.” (த்வனி)

என் சிரிப்பு சரம் போல் கேள்வியில் வளைந்து அதன் கொக்கியிழையில் துளித்த சொட்டு தடுத்து இடையில் அறுந்து தொங்கிற்று” (கஸ்தூரி)

இது ஒரு மஹா சிரிப்பு, உடம்புக்குள்ளேயே அடுக்கடுக்காய், தனித்தனி விள்ளலாய் குதிக்கிறது. விசிறியில் ஓலை மடிமடியாயிருக்கிற மாதிரி” (இதழ்கள்)

தன்னுள் முடங்கும் மனிதர்களை இவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்- “வாத்தியத்தின் தந்திகளுள் புதைந்த சங்கீதம் போல், தனக்குள் தான் பத்திரமாயிருக்கத்தான் அவளுக்கு இஷ்டம்” (கிரஹணம்)

காட்சிப்படுத்தும் நேரத்தில் இவர் உவமைகள் எழில் அதிகம் கொள்கின்றன. “இழுத்துப் பிடித்த மூச்சுப் போல் தண்டவாளம் ஒற்றைத்தன்மையடைந்தது. தன்னைத் தானே துரத்திச் சென்றது.” (குண்டலி)

சுண்டைக்காய் கடிபடும் தோசை நான் அறிந்தது இல்லை; “தோசையில் கடிபடும் சுண்டைக்காய் போல் ‘தறுக் தறுக்’கெனும் பேச்சு.” (ஆண்டாளு)

எத்தனை முறை ரயிலைப் பார்த்திருப்போம். இவர் பார்வையே தனி. “இரவு படைத்த ஒற்றை விழி போல ரயில் பாதையில் ஒரு பெரும் விளக்கு இடையிலிருக்கும் தூரத்தை விழுங்கிக் கொண்டே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.” (கங்கா)

பெண் எனும் அழகைச் சொல்கையில், “கங்கா சூரியனின்று கழன்று பூமிக்கு ஓடி வந்துவிட்ட பொற்கதிர்” (கங்கா)

பளபளப்பான தரைகளிலும், கட்டிடங்களே முளைத்திருக்கும் பூமியிலும் சாட்டை பம்பரம் சிறுவர்களுக்குத் தெரியாது. அப்படியெனில் இதை எப்படி புரிந்து கொள்வார்களோ? “பம்பரம் வண்டாய்க் கூவிண்டு கற்பூரமாய்த் தூங்கறது” (இதழ்கள்)

நீங்கள் நெஞ்சை உலுக்குகிறீர்கள்.எண்ணங்கள் உதிர்கின்றன” (ஷேத்ரம்)