எழுத்து

நயாகரா

ஸ்ரீதர் நாராயணன்

Niagara

Niagara

தீரா விடாயுடன்
வாய்பிளந்து நிற்கும்
மலையிடுக்கில்
பொங்கி பிரவகிக்கிறது.

புளியேப்பக்காரர்கள்
துளிக்குறிப்புகளால்
நொடிக்கு எவ்வளவு நீர்
இடம்மாறுகிறதென
அளக்க முயல்கிறார்கள்

கிளிப்பிள்ளைகளின்
வாய்ச்சொற்களில்
அது எப்போதும்
மலைமகளின்
முகம் மறைக்கும் மணச்சீலை.

வெண்பனி நீர்த்துவாலை என்கிறார்,
வைரச் சொரிதல் என்கிறார்,
வானவில் வந்திறங்கும் நீர்மேடை என்கிறார்,
வண்ண ஒளிக்கற்றைகள் நடமிடும்
குதிரைக்குளம்பு என்கிறார்,

சொல் இல்லாதவன் என்னிடம்
புறங்கையில் உருண்டோடும்
சிறு திவலை,
அதன் பேரழகை
காட்டிச் செல்கிறது.

முகிலிடை மின்னல்

பானுமதி ந

lasara

அகம் கொண்ட தரிசனம் சொல்லில் கட்டுப்படாது. அது போடும் கோலத்தின் நுனியும், அடியும் பற்றி லாசராவின் ’தரிசனம்’ நடக்கிறது.

குங்குலியச் சுடர் போன்று’ குபுக், குபுக் ஸ்வரப் பந்துகள் குபீரிடுகின்றன, குவிகின்றன, குலைகின்றன, குழைகின்றன, குமைகின்றன. இந்த ராகமுமில்லை, அந்த ராகமுமில்லை, எந்த ராகமுமில்லை, ஆத்மாவின் ராகம் ஒரே ராகம், அவரவர் உடன் கொண்டு வரும் அவரவரின் சொந்த ராகம்.”

நம்பிக்கை இன்ன உருன்னு யார் கண்டது? நாமா நினைக்கிற உருவைத் தவிர அதுவா அவாவாளுக்குத் தக்கபடி சுயமா, தானா, தனியா எடுத்து அவாளே அறியாமல் அவாளைத் தாங்கற நிஜ உரு ஒண்ணு அதுக்கிருக்கே!” ‘தயா’வின் உரையாடல் இது. ”நம் துக்கம், தோல்வி, அழிவு இவைகளே நம் பக்க பலங்கள்”. இதுவும் சாதாரண வாக்கியம் இல்லை. பெண்ணைச் சூழ்ந்துள்ள இது அவளின் பலமும்கூட. அவள் வாழத் தேவையான வைராக்கியமும்கூட. ”இதென்ன அர்த்தம் பண்ணற அனர்த்தம்” (‘தோன்றுகிறதா?’)

வேஷம் போடுவதும், போட்டுக்கறதும் நாமாத்தான் என்பதற்கு அத்தாட்சி மாதிரி, வேஷம், வேஷம் என்று கொண்டே ஒரு நாள்  வேஷம் கலைந்த பின்னும் வேஷம் மாறாமல் இருந்தால் அப்போ அது வேஷமா? நிஜமா? அப்பவும் அது வேஷந்தானா, இல்லை வேறு ஏதாவதா? எது நிஜம்?” நாம் அனைவரும் நாடக மேடை நடிகர்கள் என்பதால் வேஷம் கலைந்த பின்னும் நம் வேஷம் மாறுவதில்லை- ஆள் தான் மாறி நடிக்கிறோம். புனைவுகள் தொடர்கின்றன. தயாவின் தவிப்பான கேள்வி அவளது  தவத்தின் வேஷம் நிஜமாகிப் போகும் இடம் வேஷம் நிலைக்கிறதா இல்லையா?

இந்த வேஷ வினோதம் ‘நேரங்களில்’ அழகாகத் தொடர்கிறது. ”ஒரு ஒரு வேஷமும் ஒரு ஒரு நிழல். ஒவ்வொரு நிழலும் ஒரு ஒரு வர்ணம். அவை ஆடுவதும், பூசுவதும், வருவதும், மறைவதும் சில சமயங்கள் தெரிவதுகூட இல்லை.”

நெருப்பு உருகி ஒழுகுவது போல் சுருதியோடிழைந்து குரல் உள் வழிந்து நிரம்பி மற்ற ஓசைகளின் உணர்வை அப்புறப்படுத்தியதும், நிதானமாய், படிப்படியாய், வேகமாய், அகாரங்கள் மேலே கொக்கிகளை மாட்டி, குழந்தையைக் குளத்தில் முழுகக் கையைப் பிடித்து இழுப்பது போல், அவை அனைத்தும் அத்தனைக் கைகளாய் அவனைப் பற்றி தோட்டத்திலிருந்து வீட்டுள் இழுத்தன.” “தும்பியின் இறக்கையின் நயத்துடன் சன்னமான சல்லாக்கள் அவனைச் சுற்றிலும் மேலும் மோதி அலைந்து மிதந்தன.” “இமைகளுக்கிடையில் விழிகள் விதைகளாய் விழித்துக் கொண்டிருந்தன” காற்றில் வரும் சுருதி- இங்கே கதாநாயகனின் மன நிலைக்கேற்ப நெருப்பாக உருகி வழிகிறது. சூழ்நிலைக் கைதியாய் வாழும் மானுட அவலம் கொக்கிகளாக மாட்டி அவனை அங்கே நிலை நிறுத்துகிறது. விலக முடியாத தவிப்பு சல்லாக்களால் பிணைக்கிறது. இமை மூடியும் தூங்கா கண் பாவை அவருக்கு விழித்திருக்கும் விதை! கதையை மட்டும் சொல்லவில்லை அவர், கதையைகூட சொல்லத் தேவையில்லை, சொல் சுமக்கும் கனம் நம்மையே கதைமாந்தர் எனச் செய்துவிடுகிறது. தளையும், விடுதலையும் மானிட வரம் அல்லது சாபமோ? இரண்டுமே தேவையோ, தேவையெனில் எம்மட்டில், இல்லையெனில் எப்பொழுதிலிருந்து?

கேள்விகள்.. பதில் இருந்தும் பயப்படும், பயப்படுத்தும் கேள்விகள். ’மாயமான்’ சற்று தள்ளி நின்று பதில் சொல்கிறது. ”செயல் எனும் சிலந்திதான் என் கடவுள். செயலின் ஒடுக்கம்- புலனின் ஒடுக்கம், புலனின் ஒடுக்கம்- மனதின் ஒடுக்கம், மனதின் ஒடுக்கம்- உயிரின் அமைதி“.

இருளில் கண்கள்  தொடர முடியா அந்த ஓசையின் வளைவுகளை, வளைவுகளின் நுட்ப அழகுகளை செவியால் எப்படிப் பளிச்சென்று பார்க்க முடிகிறது, பருக முடிகிறது! தம்பூரை மீட்டினாற் போன்ற உருகோசையில் நினைவு ஒன்றுபட்டு அந்தத் தேடலின் தவிப்பில் நெஞ்சு முங்கி முங்கி எழுகையில், தன் தன்மையே துலங்கித் தனிப் பரவசமடைந்தான். தானும் அத்துடன் அதன் தேடலோடிழைந்தான்.” காதுகள் இன்னிசையில், அதைவிட உயிர் நிரப்பும் ஓசையில் அவர் எழுத்தில் கண்களுமாகி விடுகின்றன.

தான் உண்டாக்கிய நெருப்பில் நான் திருப்பித்திருப்பி தன்னயே காய்ச்சிக் கொள்கிறது. நாம் இறக்கவில்லை. ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது எப்படியோ ஏனோ பிறந்துவிட்டது. பிறந்தபின் அதனால் இறக்க முடியவில்லை. இருந்து தான் ஆக வேண்டும்.”

தட்டில்லாது சுடர் ஒன்று அஞ்சலியில் அவளை வட்டமிட்டு அந்தரத்தில் நீந்திற்று. கம்மென்று அகில் மணம் புகையின்றிக் கமழ்ந்தது.” ”செயலளவில் ஒன்றும் நேர்ந்து விடவில்லை, எண்ணமும் செயலே என்பது தவிர. பூக்கள் மணப்பதற்காகப் பூக்கவில்லை. தம் இயல்பில் பூக்கின்றன, அதனால் மணக்கின்றன.” (ஏகா)

செவியின் நுட்பம் இவரை வியப்பிற்குள்ளாக்குவது வியப்பில்லை இசையின், ஒலியின், கூவல்களின், கேவல்களின், மெளனம் போடும் நிசப்த சப்தத்தின் உபாசகர் வேறு எப்படி இருப்பார்? ’சப்தவேதி’ சொல்கிறது- ”கற்பனை என்பது ஆபத்து. கட்செவி போன்று, அதிசன்னமான ஓசைகளைப் பெறும் செவியையும் படைத்து, பிறகு அவ்வோசைகளின் உள்ளர்த்தங்களைக் கண்டுபிடிக்க, அவ்வழியே கற்பனையும் ஓட்டிவிட்டால் அப்புறம் தசரதனின் சப்தவேதி சமாசாரம்தான்”. “இரவில்தான் சப்தங்களின் சக்தி வலுக்கிறது. ஒளி மங்கியதும் ஒலி ஓங்குகின்றது.” ”அவளுடைய தரிசனத்தின் இன்பமே, ஒரு சகிக்கவொண்ணா துன்பம்

மின்னல் வானத்தை வெட்டும் பொழுதெல்லாம், வானம் அடிபட்ட விலங்கு போல் அலறியது

ஜதியின் ஸ்வரம் நாம் அறிவோம். சிந்தனையின் ஸ்வரம்? ’ஆஹூதி’- “அம்மாவின் கூந்தல் முடிச்சில் தாழம்பூ மடல் தகதகவென கமகமக்கும் அல்லது கமகமவென தகதகக்குமா? கம கம தக தக சிந்தனையின் ஸ்வரம் எப்படி மணக்கிறது?

அதிநுட்பமாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றைச்சரம்தான் மின்னல் என ஒளி காட்டி கண்ணைப் பறிக்கிறது.

கண் திறந்தால் ஒளி. மூடினால் இருள். மூடியும் திறந்தும் உழன்றால் உயிர் என எனக்கு நானே பெயர் வைத்துக் கொண்டு  செயல் வகுத்த நிலை முந்திய கர்ப்ப வெளியில் நானற்று நிறைந்திருக்கிறேன். எத்தெய்வமும் அடியூன்றிய ஆகாச கோசம் நான்.”

லாசராவின் எழுத்துக்கள்- எண்ணங்கள் முற்றுமாக ஏறி, அதன் பின்னரும் வாசகர் தன் எண்ணத்தைக் கண்டடைய  வழி வகுக்கும் வசீகரம் சொல்லில் அடங்காது. தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும், காட்சிகளையும், பேச்சுக்களையும் தரிசனமாக்கும் வித்தைக்காரர். இதில், வாசகருக்கு கிட்டும் அனுபவம் அவரவர் வார்ப்பிற்கு ஏற்றபடி.

நன்றி – தி இந்து

 

 

மடத்து வீடு

ராம் செந்தில்

ஆற்றின் கரையில் இருந்தது அந்த வீடு. ஆற்றங்கரையில் நிறைய வீடுகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போதென்னவோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில வீடுகளே இருந்தன.  ஒரு காலத்தில் இந்த வீடு நான்கு கட்டுகளுடன், பிரமாண்டமான மதில்களுடன் இருந்திருக்கவேண்டும். இப்போது ஏறக்குறைய வீட்டின் பின்பக்கம் முழுவதும் இடிந்து கைவிடப்பட்டிருந்தது. முன்பக்கமும் பல இடங்களில் விரிசல் கண்டு அதில் அத்திச்செடி முளைத்திருந்தது. எப்போதோ பூசிய மஞ்சள் சுண்ணாம்பு முழுவதும் உதிர்ந்திருந்தது. விரிசல்களில் திட்டுதிட்டாக பாசி படர்ந்து, அந்த பாசி தந்த கருமை நிறம் மட்டுமே மிச்சமிருந்தது. வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.

நாயக்க மன்னர்களிடம் பணிபுரிந்த செட்டியார்களுக்கு இந்த ஊர் முழுவதும் நிலபுலன்கள் இருந்தன. அவர்களில் ஒருவருக்கு தமக்குப் பிறகும் தர்மங்கள் தொடர்ந்து நிகழவேண்டும் என்று கவலை இருந்தது. தனக்கிருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை கொண்டு அறக்கட்டளை நிறுவி, தொடர்ந்து வழிப்போக்கர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்து, இன்ன பிற தர்மங்களையும் பரிபாலித்திட உயிலெழுதி மறைந்தார். அவருக்கு பிறகு வந்த வாரிசுகள் சில தலைமுறை வரை அதை சரியாக செய்தனர். பிறகு வந்தவர்கள் தமது தொழில்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர, எல்லாம் நின்றது. ஊரில் இருந்தவர்கள் குத்தகை என்ற பெயரில் ஆக்கிரமித்த நிலங்கள் போக மிச்சமானது இந்த வீடு ஒன்றுதான். இந்த வீடும் ஏதோ ஒரு தர்மத்துக்காக எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதால் அதை நிர்வகிப்பதில் எந்த நாட்டமும் இன்றி இடியவிட்டிருந்தனர். பிறகு தங்களிடம் காரியதரிசியாக இருந்து குத்தகை வசூலித்து தந்த சீனிவாசராவை அவரது குடும்ப சூழல் கருதி வாடகையில்லாமல் அந்த வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்திருந்தனர்.

ஆஸ்துமாவால் அவதிப்பட்டுவந்த சீனிவாசராவின் மனைவி ஒரு மார்கழிமாதக் குளிரில் இறந்துவிட்டதாகவும், சீனிவாசராவும் அவரது மூன்று பெண்களும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்றும் அருண் சொல்லியிருந்தான். அந்தப் பெண்களையும் ஓரிருமுறை நான் பார்த்திருக்கிறேன். அருண் அவ்வபோது ரேஷன் பொருட்கள் வாங்கிதருவது, மின்சாரகட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை அவர்களுக்குச் செய்து தருவான். அருணுக்கு ஊரின் எல்லா தெருக்களிலும் இப்படியான சிநேகம் இருந்தது.

கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண்.  மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.

ஆற்று பாலத்தை கடந்து மடத்து வீட்டை நெருங்கினோம். மாலைநேர காற்று சிலுசிலுவென்று வீசியது. வீட்டு வாசலில் உயரமான திண்ணை இருந்தது. அதிலிருந்து பார்த்தால் எதிரே ஆறு தெரிந்தது.. வீட்டின் கதவு கொஞ்சமாக மூடப்பட்டு இடைவெளி தெரிந்தது. நாங்கள் வீட்டின் கதவை நெருங்கியவுடனே ஒரு பெண் வெளியே தலையை நீட்டி, அருணை பார்த்து சிநேகமாக சிரித்து வா அருண் என்றாள். உள்ளே நுழைந்தோம். உள்ளே அழைத்த பெண் வெளிர்நீல கலரில் தாவணியும்,கறுப்பு பூக்கள் போட்ட பாவாடையும் அணிந்திருந்தாள்.

உட்காருங்க, எங்களை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி ஸ்டூலை காட்டினாள். தையல் மெஷின் எதிரிலிருந்த மற்றொரு ஸ்டூலையும் இழுத்து போட்டாள். தையல் மெஷினில் பாதியில் விட்டிருந்த ரவிக்கையை வாரி அறைக்கு கொண்டு சென்றாள். அருண் ஜன்னல் கட்டையிலேயே உட்கார்ந்தான். மற்றொரு ஜன்னல் கட்டையிலிருந்த, ரேடியோ எஃப்.எம்மில் “வசீகரா என் நெஞ்சினிக்க“ மெலிதாக ஒலித்துகொண்டிருந்தது.

வெளியே தெரிந்த வீட்டின் அளவுக்கும் உள்ளே இருந்த சூழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உள்ளே நுழைந்தவுடன் கூடம்,. கூடத்திலிருந்த அனைத்து உத்திரங்களையுமே கரையான் அரித்திருந்தது. அவை இரும்பு பைப்புகளாலும், மூங்கில் மரங்களாலும் முட்டுகொடுக்கப்பட்டு கூரையை தாங்கியிருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் அந்த அறை இருந்தது. அறை வாசலில் பூக்கள் எம்பிராயடர் செய்யப்பட்ட ஒரு பழைய திரைச்சீலை தொங்கியது. சமையல் கூடம், இரண்டாம் கட்டில் இருந்திருக்கவேண்டும். இரண்டாம் கட்டே முழுமையாக இடிந்துவிட்டிருந்ததால், கூடத்தில் இருந்து பிரிந்த நடையிலேயே சமையலுக்காக ஒரு பழைய பலகை போடப்பட்டு பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

இவன் என்னோட பிரெண்ட் ராஜேஷ். தஞ்சாவூரிலே படிக்கிறான். இது பிரசாத் நம்ம தெரு என்றான் அருண், என்னை பார்த்து. அவள் மையமாக பார்த்து புன்னகைத்தாள்.

எப்படி இருக்கே ராஜி, எங்கே ஜெயா இன்னும் வரலையா?

அவ, எங்கே இப்போ வருவா? டாக்டர் அவ்வளோ சீக்கிரம் விடுவாரா? எப்படியும் எட்டரை ஆகிடும் என்றாள்.

பெரிய மேடம் ஜெயா, டாக்டருக்கிட்டே வேலைபாக்குறாங்க..எதுனா ராங்க் காமிச்சா, ஊசி போட்டுடுவாங்க என்றான் அருண்.

ஏன் மாப்ளே, நானும்தான் ஊசி போடுவேன். அதுவும் வலிக்காம..  என்றபடி அருணை பார்த்து கண்ணடித்தான் ராஜேஷ்.

எனக்கு திகீரென்றது. ராஜியை பார்த்தேன். அவள் அந்த பேச்சை கவனிக்காததுபோல், புன்னகைத்தாள்..

உங்க வீடு போஸ்ட் ஆபிஸ் பக்கத்துலேதானே இருக்கு? என்றாள் என்னை பார்த்து.

நான் அவசரமாக இல்லையென்று தலையாட்டினேன். பிறகு கேட்டது உரைத்து ஆமாம் என்றேன். மெலிதாக சிரித்தாள் ராஜி. மாநிறம். முடியை அழகாக பின்னி, முன்பக்கம் சில முடிகளை எடுத்துவிட்டிருந்தாள்.. கைகளில் கண்ணாடி வளையல்கள். உதட்டோர மச்சம் கவர்ச்சியாக இருந்தது. எப்படியும் இருபத்தி ஐந்து வயதை தாண்டியிருப்பாள் என்று தோன்றியது. சிரித்தபோது அழகாகவே இருந்தாள். பாதி படித்த லட்சுமியின் நாவல் ஒன்று தரையில், பக்கம் மறந்துவிடாமல் இருக்க குப்புறகவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.

கொல்லைபக்கம் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டது. நான் அந்தப்பக்கம் பார்ப்பதை ராஜி, கவனித்தாள். என் சிஸ்டர் வித்யா துணி துவைக்கிறா.

சாந்தி தியேட்டர்லே இதுநம்மஆளு படம் வந்துருக்கு. நயன்தாராவை இன்னைக்கு பார்த்தே ஆகணும்ன்னு அடம்பிடிச்சான் ராஜேஷ். நாந்தான், இங்கே வந்து என்னோட பிரண்ட்ஸை பாருன்னு கூப்பிட்டுவந்துட்டேன் என்றான் அருண்.

ஓ, நயன்ன்னா ரொம்ப பிடிக்குமோ?

முன்னாடியெல்லாம் இல்லைங்க.. பில்லா படம் பார்த்தப்பதான் எனக்கு நயனோட அந்த முழு தெற..மையும் நல்லா தெரிஞ்சுது.. தெறமை என்ற வார்த்தைக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுத்தான் ராஜேஷ்.

நீ அந்த நீச்சல் தெறமையைதானே சொல்றே மாப்ளே என்றான் அருண்.

கன்னங்கள் சிவப்பேறி லேசாக வெட்கத்துடன் சிரித்தாள் ராஜி. எல்லா பேச்சையும், தான் நினைக்கும் முனைக்கே இழுத்து செல்கிறான் ராஜேஷ். முன்பின் அறிமுகமில்லாத பெண்ணிடம் இப்படி கொஞ்சமும் லஜ்ஜையின்றி பேசுவது நிச்சயம் இவனுக்கு முதல்முறையாக இருக்காது. அருணின் தோழி என்றவுடன் இப்படிதான் இருக்கும் என்று முடிவெடுத்துவிட்டானா? சட்டென்று அவள் கோபமானால், அசிங்கமாகிவிடுமே. இவனுடன் வந்திருக்ககூடாதோ. ஆனால் இங்கு வரும்போதே நானும் இதை உள்ளுர எதிர்பார்த்திருந்தேனோ..

கொல்லைகதவை திறந்தபடி வித்யா வந்தாள். மஞ்சள் நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட சுடிதாரின் டாப்ஸ் மட்டும் அணிந்து உள்ளே வந்தவள், எங்களை பார்த்தவுடன் அறைக்குள் சென்று பேண்ட் அணிந்து வந்தாள். அழகான பெரிய கண்களே முதலில் ஈர்த்தது.  யாரும் கேட்காமலே, ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கூடத்தில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த ராஜேஷிடம் முதலில் நீட்டினாள்.

ராஜேஷ் வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு கண்ணை சிமிட்டியபடி, என்ன, தண்ணி சுடுது? என்றான்.

ம்ம்ம்.. தண்ணி சுடலை. நீங்கதான் சூடா இருப்பீங்க.. புத்திசாலிதனமாக பேசுவதாக நினைத்துகொண்டு இவனிடம் வாய் கொடுக்கிறாளே அசடு..

அது என்னவோ உண்மைதான்.. கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.

நான் பேச்சை மாற்றும் பொருட்டு, நீங்க படிக்கிறீங்களா என்றேன்.

சின்னமேடம் கரஸ்லேயே பிகாம் படிக்கிறாங்க.. டியூசன் எடுக்குறாங்க.. நீயும் வேணா ஜாயின் பண்ணிக்கோ

நான் புன்னகைத்தேன். அப்போது திடீரென்று கூடத்து அறையில் இருந்து மெலிதாக இருமல் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்தது. எல்லோரும் அறையை பார்ப்பதை பார்த்த ராஜி, அப்பாதான், இரண்டு நாளா இருமல் ஓயலை. என்றாள்

இவ்வளவு நேரம் அவர் உள்ளேதான் இருந்தாரா? அவரை வைத்துகொண்டுதான் இப்படியெல்லாம் பேசினோமா, என்னவோ போல் இருந்தது. ராஜேஷின் முகமும் மாறியது போல் தெரிந்தது.

இருமலுக்கிடையே அவர் அழைத்தார். ராஜி உள்ளே போனாள். கதவுவிலகி, அவர் ஈசிசேரில் படுத்திருப்பது தெரிந்தது. வாய் குழறலாக ஏதோ பேசினார். அருணும் உள்ளே போனான்..இடது கையை நெஞ்சருகே வைத்திருந்த விதத்தில் வாதம் என்று தெரிந்தது. வலது கையை குடிப்பது போல் காண்பித்து லோலா.. லோ..லா என்றார்.

இது என்ன புதுப்பழக்கம்? சாயங்காலமானா சோடா வேணுங்குறது? உடம்புக்கு நல்லதா இது? பேசாம இருங்க.

சோடாதானே ராஜி, நான் வாங்கிட்டுவரட்டா?

இல்லை, வேணாம் அருண்

டெய்லி அஞ்சு ரூபா சோடா குடிக்க வேணும்னா எங்கே போறது ? வெந்நீர் போட்டுருக்கேன். பேசாம இருக்க சொல்லு ராஜி, என்றாள் வித்யா..

நீ பேசாம இரு வித்யா. நான் வாங்கிட்டுவாரேன்..பதிலை எதிர்பாராமல் அருண் வெளியே போனான்.

சோடாவை டம்ளரில் ஊற்றி கொஞ்சமாக கொடுத்தாள் ராஜி. குடித்தார். பிறகு மெதுவாக நாற்காலியை காட்டி “வாச போ “ என்றார். இல்லை..இங்கேயே இருங்கப்பா. அப்புறம் போய்க்கலாம்.

இப்போது குரலில் கடுமை தெரிந்தது. கையை நீட்டி நீட்டி “வாச போ” என்றார். கண்களை பெரிதாக்கி முறைத்தார். அருண், “வாசலுக்குதானே போகணுங்கறாரு?.. நாற்காலியை தூக்கி அங்கே போட்டுட்டு, அப்புறம் மெதுவா அழைச்சுட்டு போய் உட்காரவைச்சுடலாம்“ என்றான்.

இல்லை வேணாம் அருண்..நீ உட்காரு

“வாச போ” கத்தியபடி ஒரு கையில் இருந்த டம்ளரை தூக்கி எறிந்தார். அதில் மிச்சமிருந்த சோடா அறைக்கு வெளியே தெறித்தது. டம்ளர் சுவற்றில் ணங்கென்று மோதி சுழன்று விழுந்தது.

இப்போ எதுக்கு வாசலுக்கு போவணும்ன்னு துடிக்கிறாரு? செஞ்சதெல்லாம் பத்தாதா? ஆவேசமாக கேட்டாள் வித்யா..

வித்யா நீ தயவு செஞ்சு பேசாம இரு.. அதட்டினாள் ராஜி..

எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.

மெதுவாக வெளியே வந்து நடந்தோம்.. கொஞ்ச தூரம் யாரும் பேசவில்லை. சற்றுதூரம் போனவுடன் பெட்டிகடையில் சிகரெட் வாங்கினான் அருண். பற்றவைத்தவுடன், சரி விடு மாப்ளே.. படத்துக்கே போயிருக்கலாம்.. நைட் என்ன பிளான்? என்றான் அருண். எதுவும் பேசாமல், புகையை ஊதியபடி, தூரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்த அந்த வீட்டின் பொம்மைகளை வெறித்தான் ராஜேஷ்.

ஹெலன் சிம்ப்ஸன் கதைகள் பற்றி ஒரு சிறு குறிப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

41xpkc6xpdl-_sx331_bo1204203200_

மௌனம், பளிச்சென்றிருக்கும் சமையலறை மேடைகள், புது ஒளி- விழித்தெழுந்து வந்ததால் கண் துல்லியமாகப் பார்க்கும் என்பதால் இப்படி எல்லாம் தெரிகிறது போலிருக்கிறது, பாத்திரங்களைக் கழுவும் எந்திரத்திலிருந்து எடுத்த பளீரில் காஃபி ஃபில்டர்கள். தியானிக்க உதவியாக ஜன்னல் திரைகளை மேலே தூக்கி விட்டதில் இன்னும் பசேலென்று உள்ள தோட்டம், புல்வெளி. பற்பசையின் தாக்கத்தால், நாக்கு துழாவினால் சிறிதும் கொழ கொழப்பு இல்லாத சுத்தத்தில் பற்கள், வாடை இல்லாத வாய், தூய காற்றுக்குத் தயாராக உள்ள மூக்கு என்று உடல் இன்னொரு நாளைக்குத் தயாராக இருக்கிற நிலை.

அடிக்கடி விழிப்பு தட்டியிருந்தாலும்கூட, உறக்கமும் இரவில் கண்ட கனவுகளின் தடயங்களும் புத்தியில் இன்னமும் இருக்கும் பொழுது. நேற்று இரவு படுக்குமுன் சமையலறை மேஜையில் அமர்ந்து படித்த ஹெலன் சிம்ப்ஸனின் மூன்று கதைகள் புத்தியில் புரளும் காலை இன்று. இந்திய பெண்ணியம் மேலை பெண்ணியம் என்று பிரித்து நோக்க முனைந்தால் வேறுபாடுகள் தெரியும் அளவு வேறான எழுத்து. விக்கட் ஹ்யூமர் என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் உண்டு. அந்த வகை நகைச்சுவையைக் கையாள்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

இவருக்குக் கதை சரியாக அமையும் தருணங்களில், புள்ளி போன்ற காயத்தைக் கொடுத்து, ஆனால் உள் பாகங்கள் அனைத்தையும் துணித்து விட்டு வெளிவரும் மெலிய, உறுதியான கத்தி போன்ற நகைச்சுவையாக இருக்கிறது அது. அறுபடுவது ஆண் மையப் பார்வை மட்டுமா, அல்லது சமூக உறவுகளின் கேவலங்களா, அல்லது வாழ்வின் அவலங்கள் எல்லாமா என்று நாம் யோசிக்க வேண்டிய அளவு வீச்சு கொண்டது. அதே நேரம் மட்டுப்பட்ட களம், பாத்திரங்களின் விரிவட்டம், சொற்கூட்டம் என்று அடக்கி வாசித்து சஸ்திர சிகிச்சை செய்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

நேற்று வாசித்த மூன்றில் ஒன்று சாவையும் நோயையுமே மையமாகக் கொண்டு யோசித்து பயணப் பாதை பூராவும் வாசகரின் கண்ணில் நீர் வழியும் வரை சிரிக்க வைக்கும் கதை.  இரண்டாவது, முதியவர்களைப் பராமரிக்கும் நடுவயதுத் தலைமுறையினரின் அவசரங்களால் ஏற்படும் அவமானமும் அதிர்ச்சியும் பற்றிய கதை. மூன்றாவது, 30களில் நுழைந்திருக்கும் தம்பதியினரின் பிணக்கம் நிறைந்த உரையாடலை, சற்று மறைவில் இருக்கும் நான்கு பதின்ம வயதினர் கண்காணித்து, அந்த உரையாடலில் இருக்கும் சாதாரண நிலை ஒவ்வொன்றையும் ஒரு எஎறிகுண்டைப் போல உணர்வதைக் காட்டும் கதை. தம் எதிர்காலம் இப்படி எல்லாம் அமையக்கூடாது, அமைய விடமாட்டோம் என்று நினைக்கும் அந்த நால்வரும், அந்த ஆபத்தை உணரும் அதே நேரம் உள்ளில் எங்கோ இதிலிருந்து தாம் விடுபட வழியே இல்லை என்றும் உணர்வது போலச் சித்திரிக்கும் கதை. கதை முடிவில் ஒளிந்த நால்வர் ஓட வேண்டிய நேரம் வருகிறது. அவர்கள் ஓடுவதை ஒரு பத்தியில் வருணிப்பவர், என்னவொரு விடுதலை வேட்கை அந்த ஓட்டத்தில் என்பதைச் சுட்டி விடுகிறார்.

எல்லாம் உரையாடல்களும், இடைவெட்டும், அசரீரி யோசனையும் நடத்தும் கதைகள். உறவுகளே மையத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லாம் நம்மை விலகி நின்று கறாராகப் பார்க்க வைக்கின்றன. முடியும்போதுதான் கதைமாந்தர் வேறு யாருமில்லை நாமேதான், நாம் கடந்து வந்த பாதைகள் பலவும் இங்கு உள்ளன என்பது புரியும். ஆனால் உங்கள் வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்தப் பாதைகளில் நொடிக்காமல் ஓரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறதில் நீங்கள் ஆசுவாசம் பெற முடியலாம், அல்லது நொடித்துப் பாதியில் வீழ்ந்து போனதைப் புரிந்து கொண்டு கழிவிரக்கமோ, அல்லது சுயத்தைக் கனிவாகப் பார்ப்பதோ மேற்கொள்ளலாம். அல்லது இத்தனை இரக்கமின்றி அறுத்துச் சிகிச்சை செய்ய வேண்டுமா என்று எழுத்தாளரிடம் சற்றாவது பொருமலாம்.

டொமஸ்டிசிடி என்பது இந்தக் கதைகளின் கரு. இன் த ட்ரைவர்ஸ் ஸீட் என்ற கதைத் தொகுப்பு. அட்டைப் படத்தை இன்று காலை பார்த்தபோது பொருத்தமின்மை பார்வையைத் தடுக்கியது. இத்தனை நுட்ப புத்தி கொண்ட எழுத்தாளர் இந்தக் கதைத் தொகுப்புக்கு இப்படி ஒரு அட்டைப் படத்தைப் போட ஏன் ஒத்துக் கொண்டார் என்று யோசிப்பதால், இதில் வேறென்ன இருக்கும் என்றும் யோசிக்க வைத்தது. வெறும் மர நாற்காலி, பின்னே சுவரில் ஒரு வட்டமான கடிகாரம். அதிலும் கடிகாரப் படங்களில் எங்கும் காணும் வழக்கமான பத்து மணி, பத்து நிமிடங்கள் என்று நேரம் காட்டும் கைகள். பின்புலம் முழுதும் வெண் சாம்பலில் மிக இலேசான நீலம் பாவித்த நிறத் திரை போன்ற தோற்றம். நாற்காலியின் கால்கள் வளைந்து தரையில் பொருந்துவது கொஞ்சம் கோமாளித்தனமாக இருக்கிறது.

நிறைய கதைகளில் கார்களில் செலுத்தப்படும் பயணங்கள் வருகின்றன. ஆனால் படத்திலோ இருப்பது சாப்பாட்டு மேஜை நாற்காலி. இருக்கையில் குஷன்கூட இல்லை. ஒரு கதையின் தலைப்பு இன் த ட்ரைவர்ஸ் ஸீட். அதுதான் புத்தகத்திலேயே சிறிய கதை. ஆறு பக்கங்கள்தான். புத்தகமும் சிறிய அளவு புத்தகம்- உயர, அகல, கன பரிமாணங்களில் சிறியது. ஆனால் விண்ணென்று இழுத்துக் கட்டப்பட்ட கதை. கதை சொல்லும் பாத்திரம் இத்தனைக்கும் காரோட்டும் பாத்திரம் இல்லை. சரி, பொருத்தம்தான் என்று தோன்றியது.

இந்தப் படத்தால் நான் தண்டவாளத்தை விட்டு விலகி வந்திருக்கிறேன். மறுபடி பெட்டிகளைத் தடத்தில் ஏற்றினால், காஃபி போடும்போது, ஹெலன் சிம்ப்ஸனின் கதைகள் மனதில் இன்னும் உலா வந்து கொண்டிருந்தன. அவர் தன் பெண்ணியப் பார்வையில் இந்தச் சமூக அமைப்பு இப்படி பெண் எதிரியாக இருப்பதாகச் சித்திரிக்காமல், அதே நேரம் பெண் எதிர்ப்புத்தனம் அதில் ஊறி வருவதையும் மறுக்காமல் கதை சொல்கிறார். எப்படி பெண்கள் இந்த எதிரி நிலைக்குத் தாமும் துணை போகிறார்கள், அது எதனால் இருக்கும் என்பதையும் அவருடைய அறுக்கும் கத்தி பிளந்து பார்வைக்கு வைக்கிறது.

ஒளிப்பட உதவி- Amazon 

பாலை

காலத்துகள்

இரவுணவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, என்ன நேரம் என்று கவனித்தவளுக்கு வழக்கமான சஞ்சலம் உண்டாக, சமையலைத் தொடர முடியாமல் சமையலறை மேடை மீது கைகளை வைத்து கொண்டு நின்றிருந்தாள். “என்னமா ஆச்சு?” என்று தண்ணீர் எடுக்க வந்த ரோஹித் கேட்க, அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளித்தாலும் அவன் வீட்டின் சூழலை கவனித்து வருகிறான் என்ற சந்தேகம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அலைபேசியில் ஆனந்தியின் அழைப்பு வரவும், விடுபட்ட உணர்வோடு அவளுடன் பேசுவதற்காக படுக்கையறைக்குச் சென்றாள்.

தன் தெருவிற்குள் நுழைந்தவனின் கண்பார்வையில் அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தென்பட்டதும் நடையின் வேகம் அனிச்சையாக குறைய, எந்த அவசரமும் இன்றி அபார்ட்மெண்ட்டை அடைந்தான். தரைதளத்தில் நின்றிருந்த ராகவன், “ஸார், இந்த வீக்எண்டு வாட்டர் டாங்க் க்ளீன் பண்ணப் போறோம், ஆளுக்கு ஐநூறு ரூபாய் ஆகும், உங்க மிசஸ் கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார். “பண்ணிட்லாம் சார்,” என்றவன், சுத்தம் செய்யப்போகிறவர்கள் பற்றி, அங்கு நடப்பட்டிருந்த செடிகள் பற்றி, தெருவில் புதிதாக வைக்கப்பட்டிருந்த அரசாங்க குப்பைத் தொட்டியைப் பற்றி ராகவனிடம்- அவர் சொல்லும் பதில்களில் அதிக கவனம் செலுத்தாமல்- விசாரித்தபடி கொஞ்சம் நேரம் செலவிட்டான். பின்னர் லிப்டைத் தவிர்த்து, மெதுவாக நடந்தே மூன்றாவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து படுக்கையறைக்குள் நுழைந்தவன் அங்கே அவள் ஜன்னலருகே அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வெளியே செல்லலாமா என ஒரு கணம் யோசித்து, தன் அலைபேசியில் ஏதோ நோண்டுவது போல் படுக்கையில் அமர்ந்தான். ஓரிரு நிமிடங்களுக்குப்பின் அவன் இருப்பை உணர்ந்தவள் அறையை விட்டு வெளியேறவும், உடைகளைக் களைந்து குளித்து முடித்தவன் ஜன்னலருகே அமர்ந்திருக்கும்போது அவள் மீண்டும் உள்ளே வந்தாள்.

‘கிச்சன்ல குழா லீக்….’

‘ப்ளம்பர் நம்பர் இருக்…’

‘அவன்ட்ட பேசி, வந்து பாத்துட்டான். நாளைக்கு மாத்தரானாம், ஆயிரம் ருபாய் ஆகும்’

”ம்ம்ஹம்…’

‘வாட்டர் டாங்க்..’

‘வரும்போது ராகவன் சார் சொன்னார்’

அவள் அறையை விட்டு வெளியேறத் திரும்பியவுடன், ‘நாளைக்கு லேட்டா வருவேன்’

‘… நைட் சாப்பாடு?’

‘கலீக் ரிஷப்ஷன், நேத்து சொன்னேனே’

‘… ‘

எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.

‘சாப்ட வாப்பா’ என ரோஹித் கூப்பிடும்போதுதான் வெளியே வந்தான். பாத்திரங்கள் அவ்வப்போது நகர்த்தப்படுவதைத் தவிர வேறெந்த ஓசையும் இல்லாத இரவுணவின் அமைதியை தாள முடியாமல் தலையை தூக்க, அவள் தன்னை பார்த்தபடியே சாப்பிடுகிறாள் என முதலில் நினைத்தவன், அவள் தன்னை கவனிக்காமல் எதையோ யோசித்தபடி உண்கிறாள் என்பதைப் பிறகுதான் உணர்ந்தான்.

“ஸ்கூல்ல பி.டி.ஏ மீட்டிங் இந்த வாரம் இருக்கு”

பதில் சொல்லாமல் இருந்தவன், அவள் எதுவும் பேசாமல் இருக்கவே அவளை கவனித்தான். மீண்டும் தலையை குனிந்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ரோஹித் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நானும் வரணுமா?”

“எப்பவும் ஒருத்தரே வரக்கூடாதுன்னு ஸ்கூல்ல சொன்னாங்கன்னு சொன்னேனேப்பா”

“ம்ம், என்னிக்கு மீட்டிங்”

“சனிக்கிழமை, உங்களுக்கு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பி இருந்தாங்களே”

“வரேன்”

ரோஹித் ஏதோ பேசியபடி இருக்க, இருவரும் எதையோ யோசித்தபடி அவனுக்கு பதிலளித்தபடியும், கண்கள் சந்திக்கும் அசந்தர்ப்பமான கணங்களில் உடனே பார்வையை விலக்கியபடியும் சாப்பிட்டு முடித்தனர். இரவுணவு ஏற்படுத்திய கட்டாய அண்மையின் முடிவு இருவருக்குமே ஆசுவாசமாக இருந்தது.

படுக்கையறைக்குச் சென்று விளக்கை அணைத்தவன், மின்னொளியின் வெப்பம் இல்லாமலாகும் முதற்கணம் தரும் மெல்லிய குளிர்ச்சியை உணர்ந்தான். அறையின் இருளில் அலைபேசியில் நீல நிற ஒளிப்புள்ளி சுடர் போல் மினுங்கியது. திருவிழாக் காலம் ஆரம்பித்து விட்டதால், வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய ஆடைகளுக்கான விற்பாணைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன, அதற்கேற்றார் போல் சரக்கு அனுப்புவதில் குழப்பங்களும் தவிர்க்க முடியாத தாமதங்களும். அது குறித்ததாக இருக்கலாம் என்று எண்ணியவன் எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, வந்திருந்தது அழைப்பா அல்லது குறுஞ்செய்தியா என்று எதுவும் பார்க்காமல் அணைத்தான். சில கணங்களின் முழு இருட்டிற்குப் பின் தெரு விளக்குக்களின் ஒளியினால் அறை சற்றே துலங்கத் தொடங்கியது.

தொலை தூரத்தில் கலங்கரை விளக்கம் வழக்கம் போல் அதே சீரான இடைவெளியில் சுற்றி அவன் வீடிருக்கும் திசை பக்கம் திரும்பும்போது அறையின் சுவர்களில் அலை போல் வெளிச்சம் நெளிந்து மறைந்தது. இன்னொரு புறமுள்ள ஜன்னலில் வழியே தெருவில் செல்லும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள் அவ்வப்போது ஊடுருவின. அறையில் இருந்த மங்கலான ஒளியில் கைகளினால் சுவற்றில் நரி, மான், பாம்பு என வழக்கமான நிழலுரு வடிவங்களை- அவை ஒரே போல் தோற்றமளிக்கின்றன என்ற சந்தேகத்தோடு- உருவாக்கிக் கொண்டிருந்தான்.

மாடிக்குச் சென்று ஒரு சுற்று சுற்றி வந்தாள். அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்ககத்தின் காப்பாளர் பண்பலை கேட்டுக் கொண்டிருப்பது சன்னமாக ஒலித்தது. பிரதான சாலையில் இருந்த ஆடை, வீட்டுப் பொருள் விற்பனை கடைகள் ஒளிர்ந்து கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. மேற்கு திசையில் தான் வழக்கமாக அமரும் மேடையில் அமர்ந்து தெருவை கவனிக்க ஆரம்பித்தாள். சதுர, செவ்வக வடிவிலான ஜன்னல்களின் வழியே தெரிந்த அறைகளுக்குள் ததும்பி இருந்த வெளிச்சத்தில் உருவங்கள் மிதப்பது போல் தோன்றின. இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் சிறிய போர்ஷனொன்றில் குடியிருப்பவர் வராண்டாவில் அமர்ந்தபடி அன்றைய தினசரியை எப்பவும் போல் படித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் மனைவியும் வந்தமர, இருவரும் பேச ஆரம்பிப்பார்கள். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் அவர்களின் கல்லூரி செல்லும் மகள் சில காலமாக அவள் கண்ணில் படவில்லை என்பது நினைவுக்கு வர, வேலையில் சேர்ந்திருப்பாள் என்று நினைத்தவளுக்கு தானும் மீண்டும் வேலைக்குச் சென்றால் என்ன என்று சமீப காலமாக தோன்றும் எண்ணம் மீண்டும் ஏற்பட்டது. அது குறித்து யோசித்தவாறே, பள்ளியில் இருந்து மகளை- பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புக்கள் முடிந்து நேரங்கழித்து வருகிறாள் போல என இவள் யூகித்திருந்தாள்- அழைத்து வரும் பெண் எப்பவும் போல் தெருவைக் கடந்து செல்வதை கவனித்தாள்.

தெரு வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருப்பது ஆசுவாசமாக இருந்தது. குளிர் அதிகமாகவே, கீழே இறங்கியவள் ரோஹித்தை படுக்கப் போகச் சொன்னாள். அறைக்கு வெளியே பேச்சுச் சத்தத்தைக் கேட்டவன், ஜன்னல்களை மூடிவிட்டு சுவற்றை பார்த்தபடி பெட்டில் படுத்தான். வீடு பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு படுக்கையறை அருகே வந்தபின் ஒரு கணம் தயங்கியவள், உள்ளே விளக்கு எரியாததை உணர்ந்து கதவைத் திறந்து நுழைந்தாள்.