பூமணியின் அஞ்ஞாடி – 2: இருட்டில் நிகழும் மோதல்கள்

– என். கல்யாணராமன் –

கட்டுரையின் முந்தைய பகுதி – பூமணியின் அஞ்ஞாடி – 1: அறிமுகம்

தான் அஞ்ஞாடி எழுத நேர்ந்த சுவாரசியமான கதையைச் சொல்கிறார் பூமணி. அவர் குழந்தையாய் இருந்தபோது, கட்டை விரல் இல்லாத ஒரு முதியவரைத் தன் கிராமத்தில் ஒரு மரத்தடியில் பார்த்திருக்கிறார். அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். 1899ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, அருகிலிருந்த சிவகாசி டவுனுக்குள் கூட்டம் கூட்டமாக மக்கள் புகுந்து நாடார்களின் வீடுகளை சூறையாடியபோது தன் கட்டைவிரலை இழந்ததாக அந்த முதியவர் கூறியிருக்கிறார். நாடார்கள் தங்கள் ஊரைப் பாதுகாத்துக் கொள்ள பயங்கரமாய் பதிலடி கொடுத்திருக்கின்றனர். முதியவர் தன் கையிலிருந்த ஈட்டியை வீசுவதற்குள் நாடார்கள் எறிந்த கல் ஒன்று அவரது வலது கையைத் தாக்கி, அவரது கட்டைவிரலை நசுக்கி விட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய நிகழ்வு ஒன்றை நேருக்குநேர் எதிர்கொண்ட அனுபவம், சிவகாசி கலவரம்பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை பூமணியின் மனதில் தூண்டிற்று.

தன் வளரும் பருவத்தில், தன்னைச் சுற்றி இருந்த மக்களின் வாழ்க்கையில் சிவகாசிக் கலவரத்தின் தடங்கள் இன்னும் முற்றாக மறைந்துவிடவில்லை என்பதை பூமணி கண்டறிந்தார். ஒரு பழங்கால நினைவாகவும், முன்னேப்போதோ நிகழ்ந்தவற்றைக் காலத்தில் பதிந்து வைக்கும் நாட்குறிப்பாகவும், மரணம், இழப்பு, மானுடத் தன்மையற்ற குரூரம் ஆகியவற்றை ஒரே தருணத்தில் உள்ளடக்கிய கதையாகவும் சிவகாசிக் கலவரம் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்பட்டது. கலவரம்பற்றி வாசிக்கத் துவங்கியபின்னரே, சிவகாசி நகர்மீது நாடார் அல்லாத பிற சாதியினரின் கூட்டணி நாடார்களின்மேல் நிகழ்த்திய இந்த திட்டமிட்ட தாக்குதல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, தன்மானத்தையும் சமூகநீதியையும் வேண்டி நாடார் சாதியினர் நடத்தி வந்த போராட்டத்தின் இன்னுமொரு கட்டம்தான் என்பதைப் புரிந்து கொண்டார். கலவரத்துக்குமுன் திட்டமிடுதலும் தயாரிப்பும், கலவரத்துக்குப்பின் விளைவுகளும் அரசு நடவடிக்கைகளும் நிகழ்ந்திருந்தன. நாடார்கள் அப்போது புதிதாய் அடைந்திருந்த பொருளாதார வளர்ச்சி குறித்த பொறாமையே சிவகாசி தாக்குதலுக்கு காரணமாக இருந்தது. அந்த ஊரில் இருந்த சிவன் கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி, நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் நாடார்கள் போராட்டங்கள் நிகழ்த்தி வந்ததன் எதிர்வினையாகவும் இந்தத் தாக்குதல் அமைந்தது. இதற்குமுன், 1895ஆம் ஆண்டு கழுகுமலையில் கிருத்தவ நாடார்களும் சாதி இந்துக்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன. கழுகுமலை முருகன் கோவிலுக்குள் இந்து நாடார்கள் நுழையக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்ததும் பிரிட்டிஷ் மிஷனரிகள் அப்பகுதிக்குள் நுழைந்தபின் நாடார்களிடையே கிருத்தவர்கள் ஒரு பெரிய சமூகமாய் வளர்ந்ததும் இந்த மோதல்கள் நிகழக் காரணங்களாய் இருந்தன. இந்த இரு கலவரங்களும் மற்றும் இவை தொடர்பான சிற்சிறு மோதல்களும் சுற்றுப்புற சிற்றூர்களிலும் கிராமங்களிலும் பல மரணங்களுக்கும் சொத்துக்கள் சூறையாடப்பட்டதற்கும் காரணமாயிற்று. மேற்கொண்டு மோதல்கள் நிகழாமல் தடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது, ஆனால் குற்றவாளிகளுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் அதிகத் திருப்பங்கள் கொண்ட மிகக் கடினமான பாதையில் பயணித்ததால் நீதி வழங்குதல் முழுமையாக நடைபெறவில்லை. அனைத்து சாதியினரும் கோவிலினுள் நுழையும் உரிமை குறித்த பிரச்சினையும் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் காலனியாதிக்க அன்னியர்களையும் உயர் சாதியினரையும் கொண்ட நீதிமன்றங்கள், அனைவருக்கும் சமநீதி வழங்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளைக் கடைபிடிக்கத் தவறின.

பூமணி, தான் பிறந்த நிலப்பரப்பின் சரித்திரம் குறித்து ஆய்வு செய்யத் துவங்கினார். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட சங்கிலித் தொடராய்ப் பின் செல்லும் நிகழ்வுகளில் 1899ஆம் ஆண்டு கலவரம் ஒற்றைக் கண்ணி மட்டுமே. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மதுரையின் நாயக்க மன்னர்களின் சார்பில் இந்தப் பகுதியை ஆண்ட பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டம்; பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே நிகழ்ந்த ஆட்சி அதிகாரப் போர்கள்; கன்னியாகுமரியில் நாடார்கள்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையும் அவர்கள் திருநெல்வேலிக்கும் அதன் அருகிலுள்ள பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்தது; ஆலய நுழைவு, பல்லக்கு தூக்கி ஊர்வலத்தில் பங்கு பெறுதல் என்று தங்கள் உரிமைகளுக்காக அவர்களின் தொடரும் போராட்டங்கள்; வருவாய் ஈட்டும் பயிர் விவசாயம் மற்றும் வணிகத்தில் ஈடுபடுவதன் காரணமாக அவர்களுடைய வளரும் செல்வநிலை; 1877-78ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம் அப்பகுதியின் பிற மக்களைச் சீரழித்து, நாடார்களை மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவு வலுவானவர்களாய் விட்டுச் சென்றது; கிருத்தவத்தின் வருகை, நாடார்கள் மற்றும் பிற சாதியினரை அது மதம் மாற்றியது, பரவலான கல்வியறிவு, நாடார்களுக்கு எதிராகப் பிற சாதியினர் மத்தியில் அதிகரிக்கும் காழ்ப்பு, நாடார்களின் உரிமைகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தயக்கம் – இவையனைத்தையும் உள்ளடக்கியது அந்த நிலப்பகுதியின் வரலாறு.

சமயங்கள், சாதி ஒடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்த பூமணி, அப்பகுதியில் சமய வன்முறைகளை வளர்த்ததில் மதங்களின் பங்கு என்ன என்பதை ஆய்ந்தார். எட்டாம் நூற்றாண்டில் அரசகுடியினரின் ஆதரவுடன் தமிழகத்தில் வளர்ந்த பௌத்தமும் சமணமும் இந்து சமயத்தினரின் எதிர்தாக்குதலுக்கு ஆளாயின. பௌத்த விகாரங்களைச் சூறையாடி பௌத்த துறவியரைப் படுகொலை செய்வதற்கான முகாந்திரத்தை ‘பக்தி இயக்கம்’ அளித்தது; ஆயிரக்கணக்கான சமண முனிகள் கழுவேற்றப்பட்டனர், சமண மடாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கழுகுமலையின் ஆதரவற்ற சமண குகைக் கோயில்கள் பின்னர் மதுரை மன்னரால் முருகன் கோவிலாக மாற்றப்பட்டன.

பக்திக் காலகட்டத்தில் பௌத்தம் மற்றும் சமண சமயங்களுடன் நிகழ்ந்த மோதல்களைப் பதிவு செய்யும் வரலாற்று ஆவணங்கள் இல்லாத நிலையில் இவற்றை மீளுருவாக்கம் செய்ய கடைச்சங்க இலக்கியங்களைத் தரவுகளாகப் பயன்படுத்திக் கொண்டார் பூமணி. காலனிய காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் மாற்றங்களை அறிய, கொடைக்கானலில் உள்ள செண்பகனூர் ஜெசூயிட் ஆவணக் காப்பகம், எட்டயபுர எஸ்டேட் ஆவணங்கள், தமிழ்நாடு ஆவணக் காப்பகம், சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட் நூலகங்கள், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்ட கெஜட்டுகள் முதலிய இடங்களில் திரட்டிய பல்வகைப்பட்ட ஆவணங்களை கவனமாகப் பயின்று பயன்படுத்திக் கொண்டார் பூமணி. கூடுதலாக, புது தில்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம், லண்டனில் உள்ள இந்தியா ஆபிஸ் லைப்ரரி முதலான இடங்களிலும் ஆதார தரவுகளைச் சேகரித்தார்.

அஞ்ஞாடி எழுதுவதற்கான முதற்கட்ட முயற்சிகள் பிரம்மாண்டமான அளவில் பயணம், ஆய்வு மற்றும் அவதானிப்பைக் கோரின. இப்படிப்பட்ட ஒரு முனைப்பில் வெற்றி பெறத் தேவைப்படும் சான்றாவணங்கள் இந்திய மொழியில் எழுதும் படைப்பாளிக்கு பொதுவாகக் கிட்டுவதில்லை. பங்களூருவில் உள்ள இந்தியன் பவுண்டேஷன் ஆப் த ஆர்ட்ஸ் என்ற அமைப்பு 28 மாத காலத்துக்கு ஆய்வு செய்வதற்கான உதவித் தொகை அளித்த காரணத்தால்தான் இந்தச் சாதனை சாத்தியப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு துவங்கி 170 ஆண்டுகால நிகழ்வுகளை விவரிக்கும் பிரதான கதைக்களம், கலிங்கல், கழுகுமலை, சத்திரப்பட்டி, வேப்பங்காடு, சின்னையாபுரம், சிவகாசி என்று இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் குறிப்பிட்ட சில குடும்பங்களின் வாழ்வையும் ஏற்றத்தாழ்வுகளையும் மையமாய் கொண்டிருக்கிறது. இந்தக் குடும்பங்கள் பல்வேறுபட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் (பள்ளர்கள், வன்னியர்கள், பனையேறி நாடார்கள், நாயக்கர்கள், தேவர்கள்), பல்வகைத் தொழில்கள் செய்பவர்கள் (குடியானவர்கள், வண்ணார்கள், கள் இறக்குபவர்கள், நில உடைமையாளர்கள், மறவர்கள்). இக்காலகட்டத்தின் முதல் நூறாண்டுகள் எங்கும் சமூகச் சச்சரவுகளும், மீண்டும் மீண்டும் நிகழும் கொடிய வன்முறையுமாக இருக்கின்றன. இந்நாவலின் முக்கியப் பேசுபொருளாக விளங்கும் இந்த மோதல்கள் சாதி விரோதங்களின் காரணமாக அவ்வப்போது வெடிப்பவை.

தமிழ்நாட்டில் வெவ்வேறு சாதியினர், தாய் என்று சொல்ல வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த நாவலின் மையமாய் உள்ள கலிங்கல் கிராமத்தில் உள்ள பள்ளர்கள் அஞ்ஞா என்று சொல்கின்றனர் அவர்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எழும் பல்வேறு உணர்வுகளின் குறிப்பானாக அஞ்ஞாடி என்ற சொல் வெளிப்படுகிறது – ஆசுவாசம், ஆச்சரியம், களைப்பு, விரக்தி என்று பல உணர்வுகள் – நாவலுக்குச் சரியாகப் பொருந்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு இது.

சுதந்திரத்துக்கு முன்னும் அதற்குப் பின்வரும் காலகட்டத்திலும் மக்களின் வாழ்வில் தொடரும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் நாவலின் இறுதிப் பகுதிகள் விவரிக்கின்றன. புதிய நூற்றாண்டில் பல பத்தாண்டுகள் சென்றபின்னரே ஆலயங்களில் அனைத்து சாதியினரும் வழிபட முடிந்தது. உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பைக் கடந்தே இது சாத்தியமானது. நாம் பிரிவினையின் ரத்த வெள்ளத்தையும் மகாத்மா காந்தி படுகொலையையும் புதிய குடியரசின் அரசியல் இயங்குதளத்தையும் நாவலில் எதிர்கொள்கிறோம். சில நாயக்கர்கள் மற்றும் நாடார்களின் வாழ்வில் வளம் சேரும்போது விரயமும் சீரழிவும் சேர்ந்தே வருகிறது. அனைவரும் சமம் என்று நிலைநிறுத்தும் புதிய அமைப்பில், ‘மீறல்கள்’ நிகழ்கின்றன; சாதி மற்றும் இல்லறத்தின் ஒழுக்கங்கள் சோரம் போகின்றன. பணக்கார நாடார் ஒருவர் தன் முதல் மனைவியைக் கைவிட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார், இரண்டே தலைமுறைகளில் தன் புதிய குடும்பம் அந்தஸ்தாலும் மிகைகளாலும் சீர்குலைவதைப் பார்க்கிறார். நிலாச்சுவான்தாராய் இருக்கும் ஒரு நாயக்கரின் விதவைப் பெண், தன் தந்தையிடம் பண்ணையாளாய் ஊழியம் செயபவனுடம் தொடர்பு வைத்துக் கொள்கிறாள்; முரட்டு வழிமுறையிலான கருக்கலைப்புகளில் தன் உயிரைப் பணயம் வைக்கிறாள். பண்ணையில் உள்ள குழந்தையற்ற ஒரு பள்ளரின் மனைவி கருத்தரிக்க நாயக்கர் சாதியைச் சேர்ந்த பண்ணையாள் காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளும் துன்பியல் முடிவை எய்துகின்றன.

மதச்சார்பற்ற மக்களாட்சிச் சட்டகத்தின்கீழ் எளியவர் சுரண்டப்படுதைத் தடுக்க முடியாத, பழைய சாதிக் கட்டுமானங்களை விடாப்பிடியாய்ப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் புதிதாய்த் தன்னறிவு அடையத் துவங்கும்போது எதிர்கொள்ளும் குழப்பங்கள் தலைமுறைகளின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வெளிப்படுகின்றன. இந்தச் சமுதாயத்தின் வன்முறை மேற்பரப்பின் வெகு அருகே இருக்கிறது. “சமூகத்தின் துன்பியல்” வாழ்வின் யதார்த்தமாக இருக்கிறது. ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கைக்குப் பழி வாங்கும் வகையில் ஒரு சீக்கிய பாதுகாவலன் இந்திரா காந்தியை அக்டோபர் 1984ல் கொலை செய்ததைத் தொடர்ந்து கொடூரமான படுகொலைகளும் சூறையாடல்களும் நிகழ்வதை விவரிக்கும்போது கதை நிகழ்காலத்துக்கு வருகையில், அஞ்ஞாடி ஒரு நீண்ட சங்கிலித் தொடராய்த் தொடரும் வன்முறையைக் குறிக்கிறது என்பதை நாம் உணர்கிறோம்; இனியும் இது தொடர்வதைத் தவிர்க்க தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், பழைய கதையே மீண்டும் நிகழும் என்பதையும் உணர்கிறோம்.

இந்த நாவலை எழுதப் பயன்பட்ட இரண்டாம்நிலைத் தரவுகள் பெரும்பாலும் மேலை ஆய்வாளர்களாலும் உயர்சாதி இந்துக்களாலும் எழுதப்பட ஆய்வேடுகள். ஏறத்தாழ அவை அனைத்துமே பொது மனித அனுபவத்துக்கு முரண்பட்ட, ஒருதலைப்பட்ச மனச்சாய்வை வெளிப்படுத்துவன. உண்மையை முதல்நிலை தரவுகளைக் கொண்டே நிறுவ இயலும். அதற்கு, நாவலில் விவரிக்கப்படும் நிகழ்வுகளின் சமகால ஆவணங்களே சரியான ஆதாரமாக இருக்க முடியும். எனினும், இந்த ஆவணங்கள் (ஆணைகள், தீர்ப்புகள், அறிக்கைகள்), அந்தந்த நிறுவன அமைப்பின் நலனையும் தேவையையும் பிரதிபலித்தன; நடந்தது என்ன என்ற உண்மையை இவை வெளிப்படுத்துகின்றன என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. காட்டாக, நீதிமன்றத்தில் அளிக்கப்படும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்படுகின்றன, இதில் சாட்சியமே பொய்யாய் இருக்கலாம். சிவகாசி கலவரத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ராமசாமித் தேவர் சம்பவ தினத்தன்று சிவகாசியில் இல்லவே இல்லை; அன்று அவர் விருதுப்பட்டி சப் மாஜிஸ்ட்ரேட் ஸ்ரீனிவாச ஐயங்கார் முன்னிலையில் ஒரு வழக்கு விசாரணையில் இருந்தார். என்றாலும் வழக்கு விசாரணையின்போது, சப் மாஜிஸ்ட்ரேட் தன் சாட்சியத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்; அதனால் ராமசாமித் தேவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அருவெருப்பின் காரணமாக ராமசாமித் தேவர் தன் மனைவி மக்களோடு கிருத்தவ மதம் தழுவி, ஒரு பிராமணனை எப்போதும் நம்பக் கூடாது என்று அறிவித்துவிட்டுத் தூக்குமேடை ஏறினார். இதுபோன்ற சிக்கலான வரலாறுகளை வெளிக்கொணர அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதாது. புனைவு கொண்டு செய்யப்பட்ட மீளுருவாக்கங்களைச் சரிபார்க்க, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்துக்கும் பூமணி சென்று, அங்கிருந்த மக்களைச் சந்தித்து உரையாடி, வெவ்வேறு மக்கள் குழுவினரின் நினைவுத் தொகுப்பில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் சரித்திரங்களைச் சேகரித்து, கதைசொல்லலுக்குத் தேவையான சமநிலையைத் தன் உள்ளத்தில் தகவமைத்துக் கொண்டார்.

தனது விவரிப்பில், கலவரங்கள் மற்றும் சச்சரவுகள் என்று குறிப்பிட்ட நிகழ்வுகளின் காலவரிசையைத் துல்லியமாய் அமைக்க, கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்துக்கும் பல முறை பூமணி சென்றார். அதன் நிலவியல் குறித்த வரைவுருவம் ஒன்றை அவர் தன் மனதில் வடிவமைத்துக் கொண்டார். 1895ஆம் ஆண்டு கலவரம் நிகழ்ந்த கழுகுமலைக்குப் பல முறை சென்று அங்கு ஆண்டுதோறும் நிகழும் பங்குனி உத்திரத் திருவிழாவையும் நேரில் பார்வையிட்டார்.

சமய மோதல்களைப் பக்கச்சார்பு இல்லாமலும் உணர்வுகளைக் காயப்படுத்தாமலும் விவரிப்பது நாத்திகரான பூமணிக்கு இன்னும் பெரிய சவாலாக இருந்தது. சமய உணர்வுகளை நம்பத்தக்க வகையில் நினைத்துப் பார்த்து எழுத, தன் நாத்திக மனப்போக்கைச் சற்றே விலக்கி வைத்து சமய நடவடிக்கைகளில் கவனத்தைச் செலுத்தினார். இதற்காக, புகழ்பெற்ற கிருத்துவ தேவாலயங்களுக்கும் இந்து ஆலயங்களுக்கும் சென்றார்; பூசாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் மதபோதகர்களுடன் விவாதித்தார்; மூன்று சமயங்களின் புனித நூல்களையும் கற்றார்; பாரம்பரியச் சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் பழக்க வழக்கங்களை உள்வாங்கிக் கொண்டார்.

பூமணி தான் எழுதத் துவங்கிய நாட்களில் பயன்படுத்திய உத்திகளையே அஞ்ஞாடி எழுதும்போதும் பயன்படுத்திக் கொண்டார். எப்போதும் சாமானிய மக்களின் பார்வையில் கதை சொல்வது; கருத்துருவச் சிந்தனைகளின் வெளிப்பாடாக இல்லாமல், உணர்ச்சிகளின் வெளிப்பாடாக எழுதுவது; அனைத்து சமூகத்தினரின் பிரச்சினைகளையும் செயல்பாடுகளையும் விவரிப்பது; அக உரையாடல்களால் அல்லாமல் சொற்களாலும் செயலாலும் உணர்வுகளைச் சுட்டுவது; சமூகக் கட்டமைப்பு, கலாசார விழுமியங்கள், வாழ்வுமுறைகள் மற்றும் மரபுகளைக் கதையினுள் ஊடுபாவாகக் கொள்வது ஆகிய உத்திகளை அஞ்ஞாடியின் உருவாக்கத்தில் பயன்படுத்தினார்.

அஞ்ஞாடியில் ஒரு சமூகம் ஒரு உயிரியைப்போல் ஒரு நூற்றாண்டு காலப் பரப்பில், அதன் சமூகப் பிரச்சினைகள், சச்சரவுகள் ஊடே நகர்வதை மாபெரும் சுவரோவியமாக வரைவதுபோல் பதிவு செய்திருக்கிறார். இந்த ஓவியம், மிகுந்த தேர்ச்சியோடு வரையப்பட்டிருக்கிறது. ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைச் சுற்றி நெய்யப்பட்ட புனைவுமொழிக் கதைகூறல்; தொன்ம நிகழ்வுகள்; நாட்டுப்புறக் கதைகள்; பண்ணையாட்கள், வண்ணார்கள், பனையேறிகள், கிருத்தவ மிஷனரிகள் என்று வெவ்வேறு சமுதாயங்களால் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்கள்; பேய்க் கதைகள்; பக்திப் பாடல்கள்; செவ்வியல் இலக்கியப் பிரதிகளில் ஒரு தொடர்நிகழ்வாகச் சித்தரிக்கப்பட்டவற்றை எடுத்தாண்டு அமைக்கப்பட்ட காட்சிகள் ஆகியவற்றை இந்த ஓவியத்தில் நாம் காணலாம். ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட முழுமையான உருவாய், பல்வகைப்பட்ட முரண்கூறுகள் அனைத்தும் சிறிதும் பிசிறின்றி இந்நாவலில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

அஞ்ஞாடியில் பூமணி பல்வேறு சாதியினரின் பேச்சு மொழிகளை மட்டுமல்ல, பல்வேறு காலகட்டங்கள், சமயங்கள், வட்டாரங்களின் வழக்குகளையும் தன் மொழிநடையில் வேறுபடுத்திச் சித்தரிக்க வேண்டியிருந்தது. எட்டாம் நூற்றாண்டு சமண துறவியர் படுகொலை முதல் நாடார்களிடையே கிறித்தவ மிஷனரிகள் மதப்பிரச்சாரம் செய்வதும் உயர் சாதியினரின் தடித்த ஆணவமும் என்று பூமணி ஒவ்வொரு சூழலுக்கும் பொருத்தமான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நம்பகமான மொழியைப் பயன்படுத்துகிறார். மேலும், ஊர், நதி, ஓடை, மூலவர், சாதி என்று ஒவ்வொரு பெயர்க்காரணமும் நம்பிக்கையும் உள்ளூர் வரலாற்றைக் கொண்டு, கதையோட்டத்தில் எந்த தடையும் ஏற்படாத வகையில் விரிவாக விளக்கப்படுகின்றன.

அதிகாரத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளும் தந்திர உத்திகளும் துல்லியமாகவும் நம்பகமான வகையிலும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அதிகாரத்தில் இருப்பவர்களின் புரிதல்களிலும் செயல்களிலும் உள்ள இரட்டை அறநிலை வாசகர்மீது தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. காவல்துறையினர், அரசு அதிகாரிகள், எஸ்டேட் நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிபதிகள் என்று அனைவரும் அழிவு நிச்சயம் என்பதை அறிந்திருந்தும் வன்முறைக் குற்றங்களைச் சாதி சார்ந்த இணக்க உணர்வுகளோடு அணுகுகின்றனர். இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளைப் பார்க்கும்போது சமகால நிலையை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. தற்கால நிர்வாக அமைப்பு அதன் தோல்விகளுக்கும் சமநிலையற்ற அணுகல்களுக்கும் பொறுப்பேற்பதில்லை.

சிவகாசிக் கலவரத்துக்கு முன்நிலவி சூழலைக் கண்டறியத் தவறியதற்காகவும், கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களைக் கைது செய்யவும் தவறியதற்காகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்பெக்டர் சூரியநாராயண ஐயர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். கலவரத்தின்போது சிவகாசியில் இருந்த சாத்தூர் இன்ஸ்பெக்டர் மாதர் ஹுசேன் வேறு மாவட்டத்துக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். விருதுப்பட்டி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஐயங்கார் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

முன்சீப், கணக்காளர் போன்ற கிராம அதிகாரிகளும் தலையாரி, வெட்டியான் போன்ற ஊழியர்களும் இந்தக் கலவரத்துக்குத் துணைபோனது ஊரறிந்த ரகசியமாக இருந்தது. தங்கள் கிராமத்திலோ, அண்டை கிராமத்திலோ கலவரமும் சூறையாடலும் நிகழப் போகிறது என்பதை அறிந்திருந்தும் உயர் அதிகாரிகளை அது குறித்து எச்சரிக்காமல் இருந்தபின், கலவரங்களுக்குப் பின்னர் அதை மூடி மறைத்தல், அரைகுறையான, தவறான தகவல்களை அளித்தல், கலவரத்தின்போது விடுப்பில் செல்லுதல் அல்லது எங்கோ ஒளிந்து கொள்ளுதல், கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய காவல் துறைக்கு உதவாமல் இருத்தல், கலவரக்காரர்களுக்கு பாதுகாப்பான மறைவிடம் அளித்து அவர்களைக் காப்பற்றுதல் என்று இவர்கள் பல குற்றங்களையும் இழைத்தனர். கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டு கொள்ளையடித்த சிலர் கைது செய்யப்படாமல் தப்பித்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டெபுடி மாஜிஸ்ட்ரேட் ராகவையா இவர்களில் கிட்டத்தட்ட நூறு பேரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதித்தார். இது குறித்து கலெக்டர் பெட்போர்டு அரசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் விளைவாக பொதுமக்களிடையே நிலவிய அச்சம் மெள்ள மெள்ள குறைந்தது.

அதே போல, வேட்டையாடப்பட்டும், பலி கொள்ளப்பட்டும் இருந்த அதிகாரமற்றவர்கள், இயற்கையின் சீற்றத்தையும் மானுட துரோகத்தையும் மன உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த தருணங்களில் அவர்களுடைய உணர்ச்சிகளும் கதியும் மகத்தான கற்பனையாற்றலுடன் விவரிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நாவலை உருவாக்கிய அறிவார்ந்த, படைப்பூக்கச் செயல்பாட்டுக்கு நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை எந்த ஒரு முன்மாதிரியும் கிடையாது என்றே கூறலாம். ஏராளமான கதைகள் இன்னும் சொல்லப்படாதிருக்கும் நம் நாட்டில், சொல்லப்படும் கதைகளும் அதிகார நிலையிலிருந்தும் நேர்மையில்லாமலும் ஆதிக்கத்தின் மொழிநடையிலும் சொல்லப்படும் தேசத்தில், அஞ்ஞாடியும் பூமணியும் உருவாக்கியிருப்பது ஒரு புதிய பாதை. சாதியத்தின் அத்தனை கொடுமைகளுக்கும் ஒரே ஒரு சமுதாயம் மட்டுமே குற்றம் சாட்டப்படும் தமிழகத்தில், அஞ்ஞாடி அம்பலப்படுத்தும் கதைகள் ஒரு சுத்திகரிப்பை நிகழ்த்த வேண்டும் என்பது என் விருப்பம். 2012 ஜனவரி முதல் வாரத்தில் கிரியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட அஞ்ஞாடி என்ற மகத்தான படைப்பு பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அடித்தட்டு மக்களை அறிந்தவர்கள், அடித்தட்டு மக்களுக்காக பேசக்கூடியவர்கள் வாயிலாக இந்திய மொழிகள் அனைத்திலும் இதுபோல் இன்னும் பல கதைகள் பேசப்பட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அவையே புதிய, நுட்பமான வரலாறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, நமக்கே நம் தற்போதைய நிலையை உணர்த்தி, நம்மை விடுவிக்க இயலும்; “இவையெதுவும் இன்னும் பழங்கதையாய்ப் போகவில்லை” என்ற உணர்வை அளிக்கவும் இயலும்.

This is a Tamil translation of N. Kalyanaraman‘s article, Clashing By Night, published in Caravan, 1, February, 2012

தமிழாக்கம் – பதாகை (தமிழார்வம் மிக்க நண்பரொருவர் உதவியுடன் மெய்ப்பு பார்த்து 1.1.2015 அன்று இடுகையிடப்பட்ட திருத்த வடிவம்)

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.