Author: பதாகை

The Kingfisher

நகுல் வசன்

image1

 

The sky was clear and blue
barring the clouds gathering in the South.
No sooner the unruffled pond
entered my thoughts than the waves began;
A frog hopped into the water.
To appreciate the lotus flower, apparently.
At the sky, vacantly I stare. Ha!
Just then, out of the sky, headlong,
accursed Menaka falls,
and falls.

Dazzling with the seven colors of Indra’s Realm
her garment unfurling in the sky,
into the pond headlong Menaka falls.
No one else but me.

I waited for Menaka to rise,
into the air a Kingfisher rose.
A fish in its beak, seeking
a shadowed haunt it flew.
Clear and blue, yet again, the sky.

  • மரங்கொத்தி, ஞானக்கூத்தன் (ஆங்கில மொழியாக்கம்)

 

ஒரு நாள்

ஸ்ரீதர் நாராயணன்

one_day

சுடுசொல் வீசியவர்
கொஞ்சிப் பேசியதும்
சிரிக்கும் குழந்தையின்
ஆசிர்வாதம் போல,

விடுத்த சொல்லும்
அது கொண்டு சேர்த்த பொருளும்
முரணாகி நிற்கும்
அபத்தம் போல,

தாடையில் ஒரு
குமிழ்கம்பி குத்தியிருந்த
தாடி இளைஞனின்
‘நாளை சந்திப்போம்’ என்ற
பிரிவுபசார முகமன் போல

கோலுயர்த்தி நிற்கும்
இரும்புத்தலையரெதிரே
தாள்பணியாது நிற்கும்
கலகக்காரரின் சுயவாதையைப் போல

தீராப்பசியுடன்
தெருவை விழுங்கும்
சக்கரங்களிடையே
ஓடிக் கடக்கும்
அணிற்பிள்ளையைப் போல,

ஒரு நாள் குமிழியிட்டு மறைகிறது.

திருமிகு. பரிசுத்தம்

நரோபா

Thirumigu Parisuttam

ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது. எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்.

பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.

திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ட்யூஷனுக்கு விட வேண்டும் எனக் கோரிய பதின்ம வயது பெண்ணையும் அவள் தந்தையையும் கோரிக்கையின் நியாயத்தின் பொருட்டு வரிசையில் அவருக்கு முன் அமர இடமளித்தார். பின்னர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வந்த, சட்டைக்கு பொருந்தாத நிறத்தில் டை கட்டியிருந்தவரையும் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் அவர் மனைவிக்கு வருத்தம். “இத நிறுத்தத்தானே வந்திருக்கோம்” என முணுமுணுத்தாள்.

ஆனால், நொடிக்கு மூணு முறை செருமிக்கொண்டிருந்த அந்த முதியவர் அவர்கள் இருந்த நாற்காலிக்கு அருகே வந்தபோது அவள் அத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டிய தேவையில்லை. “இவருக்கு சுகர்… மயக்கம் வந்துடும்,” என்றாள் அவரைக் காண்பித்து. முதியவர் சற்று நேரம் செருமிவிட்டு வரிசையின் கடைசிக்குச் சென்றார்.

திருமிகு. பரிசுத்தம் அவர்களின் அறைக்குள் நுழைந்ததும் ஒரு புராதன நெடி நாசியில் நுழைந்தது.  திருமிகு. பரிசுத்தம் கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி, ஹிட்லர், புஷ், ஒபாமா, செங்கிஸ்கான், ஒசாமா மற்றும் நான்கைந்து அடையாளம் தெரியாத கனவான்கள் உட்பட பலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சுவற்றை அலங்கரித்தன. பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே மாட்டப்பட்டிருந்தது. அப்பழுக்கற்ற வெள்ளுடை அணிந்திருந்த திருமிகு. பரிசுத்தம், தனது கண்ணாடியை மூக்கின் மீது விரலால் தள்ளிவிட்டுவிட்டு, அவரது கோப்பை ஆராய்ந்து நோக்கினார். அவரது பெயரின் பொருட்டு வேறு பலரும் குழம்பியது போல், திருமிகு. பரிசுத்தமும் குழம்பியிருக்க வேண்டும்.

“இந்துவா? முசல்மானா?’

“பவுத்தன்”

“ரொம்ப வசதி… குறைய ஒப்ஷன்ஸ் உண்டு” என்றார் தனது டைரியில் குறித்தபடி.

“கிரிக்கெட் பாப்பீகளா?”

“பாப்பேன்”

“ஆராக்கும் பிடிச்ச பிளேயர்?”

“இன்சமாமும் டிசில்வாவும்”

சற்றுநேரம் யோசித்த பின்னர் தனது கட்டை மீசையை நீவியபடி “எந்த சினிமா நடிகர பிடிக்கும்? ரஜினியா கமலா? இல்ல எம்ஜிஆர், சிவாஜி, விஜய், அஜித்… இப்புடி யார வேணாலும் சொல்லலாம்” என்றார்.

“மார்கன் ஃப்ரீமேன்”

மெல்ல டைரியிலிருந்து தலை தூக்கி கண்ணாடிக்கு மேலிருந்து நோக்கினார். அவர் மனைவியிடம் திரும்பி,

“உங்களுக்குள்ள சண்ட ஏதும் உண்டா?”

“நான் போடுவேன், ஆனா அவர் எப்போதும் போட்டதில்ல… நகந்து போயிடவும் மாட்டார்… முழுசா திட்டுறத பொறுமையா கேட்டுட்டுதான் நகர்வார்” என்றாள்.

“வயசு பருவத்துல ஏதும் காதல் தோல்வி, விரக்தி, கோபம்? ஏதுமுண்டா?”

“அப்போ நான் அனுமார் உபாசகன்”

“அப்ப இந்த கல்யாணத்த பண்ணதுக்காக அப்பன் மேல கோபமுண்டோ?”

“இல்ல. அவரு நல்லதுக்குத்தான செய்வார்”

“ஆபீஸ்ல குற ஏதும் உண்டோ? மேலதிகாரியோட தொந்தரவு… சகாக்களோட பிணக்கம் ஏதும்?”

“நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன் சார்”

“பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது.

“சார் உங்க வண்டிய வேகமா இடிச்சிட்டு, இண்டிகேட்டர ஒடச்சிட்டு, இல்லன்னா கண்ணாடிய ஒடச்சிட்டு போறவங்க கிட்ட சண்ட போட்டதில்லையா?’ என்றார் சற்றே வேகமாக.

“இல்ல சார்… நான் நடந்துதான் போவேன்… நடந்துதான் வருவேன்”

“சில்லற தராம போகும்போது, பஸ்ல இடிக்கும்போதுகூட கடுப்பானதில்லையா?” அவருடைய குரல் மேலும் உயர்ந்தது. முகம் சிவந்து வியர்க்க எழுந்து நின்றார்.

“இல்லையே சார்… பாவம் அவுங்களுக்கு என்ன கஷ்டமோ”

வேகமாக எழுந்து அவரது சட்டையை உலுக்கியபடி, “எழவெடுத்தவனே, உனக்கு எது மேலையும் வெறுப்பே இல்லையா?”

அவரது மனைவியின் உடல் நடுங்க துவங்கியது.

“இல்லையே சார்” என்றார் பாவமாக.

அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே வானத்தில் பறந்து கொண்டிருந்தவளை நோக்கியபடி திகைத்து அமர்ந்திருந்தார் அவர்.

இராகப் பெண்கள் – 1. வசந்த பைரவி

பானுமதி ந

இணை இராகம்         

இருபதாம் நூற்றாண்டில்  தமிழில் மிகவும் வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட  இரு மாபெரும் எழுத்தாளர்கள் திரு. ஜானகிராமன் (தி ஜா.)  திரு. லா.ச.ராமாமிர்தம்(லா.ச ரா)

இருவரும் ஆழ்ந்த கவனம் உடையவர்கள்.. சொல்லிலே அணி செய்தவர்கள்.-  ஒருவர் அதன் மீது மட்டும் பார்வை மிகுந்தவர். மற்றவர்அதை வெளிப்படையாகச்    சொல்லவில்லை.

எத்தனை பெரிய மாளிகை ஆனாலும்  கதவும் ஜன்னலும் திறந்திருக்கும் – அது தி ஜா . ஒரு சிறு ஜன்னல் திறந்திருந்தால் அது லா ச ரா.

லா.ச ரா அக்டோபர் 30, 1916-ல் பெங்களூரில் பிறந்தார். அவரது ”சிந்தா நதி” சாகித்ய அகாதெமி விருது பெற்ற        நூல். தன்னைப் பற்றி சொல்கையில், “நான் ஒரு “சரித்திரிகன்”” என்கிறார்.

தி ஜா. ஜூன் 28,1921-ல் தேவங்குடியில் பிறந்தார்.இவரது”சக்தி வைத்தியம்” சிறுகதை தொகுப்பு சாகித்ய அகாதெமி விருது பெற்றது.இவருக்கு நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம்.

“தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய்… நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர்விட்டு, விஷயம் மெருகேறி, பிறகு நம் இரத்தத்தில் தோய்ந்து, நம் மனதையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியமாகிவிடுகிறது.” லா.ச ராவின் சொல் காட்டும் நிறப்பிரிகை– இது

நெருடாத நடை. இயல்பான  நிகழ்வுகள், பழக்கத்தில் உள்ள வார்த்தைகள், அழகை ஆராதிக்கச் செய்யும் நளினமான நாகரிக  வர்ணனைகள். ஊடு பாவாக மனச் சிக்கல்கள், அந்தரங்க ஆழங்கள், தவிப்பும் தவிர்ப்புமாய் மனிதர்கள், அவர்களின் வெளிவேஷங்கள், நிமிடங்களில் யுகத்தின் தவிப்பும்,தொலைவிலோ, அருகிலோ இணைந்து பரவும் சங்கீதமும் தி ஜா.

அழகைச் சொல்லும்போதெல்லாம் நடப்பும், கனவும் இணையும் ஒரு ரசவாதம். குறிப்பாகக் கூட சொல்லாமல். உணர்வைக் கடத்தும் அதிசயம். “பால்கனியில் நின்று தலைமுடியைக் கோதும் பெண் “ என்ற சொல்லாடலில் லா.ச.ரா  அழகை  நம்மிடமே விட்டு விடுகிறார். ஈரப் புடவையுடன் படியேறும் பெண்கள் அவர் கதைகளில் அழகின் வீச்சு.

எழுத்தில் அப்பட்டமான வர்ணனைகளை  தவிர்த்த நாகரிகம்.

தாகம், மனித மனத்தை பாதித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உளச்சிக்கல்கள் மானுட நியதிகளை மீறி நம்மை அந்த கதாபாத்திரங்களை நெருங்க வைக்கிறது அவர்கள் வெற்றி பெறாவிடில், அழ வைக்கிறது. கதைகள் காவியங்களாகும் நொடி அது

இக் கட்டுரையில் இருவரின் இரு பெண் கதாபாத்திரங்களை எடுத்துக் கொள்வோம்.

 

வசந்த பைரவி

வசந்தம் இனிமை . பைரவியோ கம்பீரமானவள். இரண்டுமே உருக்கொண்டு திரண்டு எண்ணங்களின் வடிவாய்த் தவழ்ந்து தளிர் நடையிட்டு, பார்க்கும்போதே வளர்ந்து, நெக்குருக்கி, நம்மை அலைக்கழித்து ஒரு மோனப் பரவசத்தில் சொல்லில்லா திகைப்பில் கொண்டு சேர்த்துவிடும்

முதலில் அபிதா!

அக்ஷரங்களைப் பிரித்து, நீட்டி கற்பனைக்கும், கனவிற்கும், நனவிற்குமான எழுத்தாளரின் லாகிரி. உள்ளே இருப்பதே தெரியாமல் , அதன் நினைப்பே இல்லாமல், ஒட்டாமல் ஒட்டியும்,  இணையாமல் இணைந்தும் தன் மனைவியுடன் வாழும் கதாநாயகன்..

அவர்களுக்குக் குழந்தை இல்லை. இருவரும் ஒருவரையொருவர் சகித்து வாழும் நிலை. இதிலும் அவன் மனைவி அவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறாள் . அவன் அவளுக்கென அமைந்தாகிவிட்டது. இதை ஒப்புக்கொள்ள அவள் தன்னை பக்குவப் படுத்திக் கொண்டு விட்டாள். தன்னை மட்டம் தட்டும்போது சிலிர்த்துக் கொள்கிறாள்; பிறகு சகித்துக்  கொள்கிறாள் . ஆனால் இவளல்ல கதையின் நாயகி. அவள் இவன் மனதின் ஆழத்தில் புதைந்து இருக்கும் சகுந்தலா. செல்லமாக சக்கு. பெயர் வைப்பதில் என்ன ஒரு தேர்வு! உள்ளே மறைந்து பின்னரே வெளிப்படும் காளிதாச மகாகவி காவியம், கன்னி சகுந்தலை அல்லவா?

எதையும் உணர்ந்தும், உணராமலும் இருக்கும் பருவத்தில் நட்பும், காதலுமாக (சொல்லா) கதையின் அடிநாதம். அதன் அலைக்கழிப்பில் நாயகி தன் உயிரையும் துறக்கிறாள். நாயகனோ ஊரை விட்டு சிறு வயதில் ஓடி விடுகிறான். அவன் இளமை  பணியில், அதன் வழியே ஏற்பட்ட கல்யாணத்தில், மனைவியுடன் மோதலில், சொல்லமுடியாத வெறுமையில் கழிகிறது.  தன் இள முதுமையில் மனைவியுடன் பிறந்த ஊருக்கு வருகிறான். இவ்விடத்தில் எழுத்தாளர் மறைந்து போகிறார். வர்ணனைகள், நிகழ்வுகள் எல்லாம் தாமே  நடத்திச் செல்கின்றன.

லா .ச. ரா மொழியில்  இது காட்சிமொழி, தனியானது, சுவை மிக்கது.

தன் உறவுகளை சந்திக்கிறான், சிந்திக்கிறான், பின்னர் திகைக்கிறான்- இள வயது சக்குவைப் பார்த்து. காலம் மாற்றாத இளமை என வியக்கிறான். பின்னர் புரிந்து கொள்கிறான் இவள் அபிதா என்று; சக்குவின் பெண் என்று. மயக்கம் தரும் மனது. வானமும், பூமியும் சரி இரு பாதியாய்  பிரிந்து ஒன்றையொன்று  கவ்வப் பார்க்கின்றன அவனளவில் மட்டுமே. அபிதா, அவனிடத்தில் மரியாதை கொள்கிறாள், உபசரிக்கிறாள்,. தன் அழகை உணராத பேதை என இருக்கிறாள். நம் நாயகன், அபிதாவிடம் பிறர், குறிப்பாக, இள வயுது ஆண்கள் பேசுவதை பொறுப்பதில்லை .தனக்கு எவ்விதத்திலும் பொருத்தம் இல்லாத, கைகூட முடியாத அந்த நினைப்பு  மனிதர்கள் சந்திக்கும்  ஒரு மகத்தான விபத்து. அறிவு மறைந்து மனம் மேலெழும் தருணம். இதைக் காமம் என்று சொல்வதைவிட உயிர் வாதை எனச் சொல்லலாமோ?

அபிதா  திருவண்ணாமலை அம்பாளின் திருப்பெயர். அவள் உண்ணாமுலையாள்.  ஆனால் அவளேதான் “தோடுடைய செவியன்” என்று சிறு குழந்தை பாடுவதற்கு முன் சீர்காழியில் பால் ஊட்டிய அன்னை.பெயரிலே கதை சொல்லத் தெரிந்த லா.ச ரா. அதன் ரகசியத்தை  குறிப்பால் உணர்த்துவதில் வல்லவர். கதையும், நடையும், மொழியும் பாத்திரங்களும், கன்னியாகுமரியைச் சுட்டுவதோ?

இனி, மோகமுள் யமுனா. புன்னைகையின் மர்மம், பேசாத பொருள். எங்கோ தூரத்தில் கேட்கும் இசை. இரவும் பகலும் சந்திக்கும் சாயறக்ஷை(சாயறட்சே). பெயர் தெரியாத ராகம். மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீர். யமுனையின் அடர்த்தியாய்  மடுவும், ஆழமும். அப்பா இருக்கும் வரை செல்வாக்கு. பின்னர் நடைமுறை யதார்த்தம். பெண் பார்க்க யார் வந்து போனாலும் பற்றின்மை. ஆனாலும் எந்தப் பெட்டியில் இடம் கிடைத்தாலும் அவள்  ஏற்றுக் கொள்வாள்., ஏறிக் கொள்வாள். மனதை மறுக்கும் நிஜம் புரிந்தவள் அவள். ஆனால் அவள் மனதில்——— தான் ஒன்றுமில்லையே. இங்கே தான், இந்த முரண்பாட்டில் தான்  தி. ஜா.  வெற்றி பெறுகிறார்

பாபு மட்டுமே காதலிக்கிறான். அதை அவன் புரிந்து கொள்ளவே வருடங்கள் ஆகின்றன. மனம் லயிக்கும் மோகத்தினைப் புரிந்து கொள்ள  அவனுக்கு ஏற்படும் அனுபவம்.  அதை எழுத்தாளர் சொன்ன விதம் உள்ளே பிசைந்து கொண்டே இருக்கிறது.

விரசம் இல்லாத ரசம். விரகம் தொட்ட ரகம். மாங்கனி போல் சுவையும், மணமும், திரளும் பொருந்திய நடை. தூரிகையில்லாது வரைந்த ஓவியம். வாசகனை இலக்கியச் சுவையில்ஆழ்த்தி, ரசானுபவத்தை அளித்து, நுண்ணிய பார்வையால்அவன் யூகத்தை வழிநடத்தி, யமுனாவைப் போன்ற பெண்களைப் படைத்து அவளை நிஜ வாழ்வில் வாசகர்கள் தேட வைத்த தி.ஜா.வை மறக்க முடியுமா?

நாவலின்  சுனாதமே யமுனா தானே ! உயிர் இசைந்த ஒத்திசைப்பில் பாபுவின்  நாதமே  மீண்டதல்லவா? பாபுவின் அவஸ்தைகளை யாரும் அறியலாம். ஆனால், தன்னைக் கொடுத்த யமுனா –அதிலும் குற்ற உணர்ச்சி இல்லை, தியாக மனப்பான்மை இல்லை, தன்னை உயர்ந்தவள் எனக் காட்டிக் கொள்ளவில்லை. செஞ்சோற்றுக் கடன் என்ற கடமையில்லை, சரியா, தவறா என்று வாதிடவில்லை .

யமுனா ஒரு வகையில் அபிதா; அபிதா  ஒரு வகையில் யமுனா.

இவள் கன்னிகா பரமேஸ்வரி, அவள் கன்னியாகுமரி.

இவள் எதையும் விளைவிக்கும் பூமி; அவள் அள்ளித்  தரும் ஆழ்கடல்.

வசந்தா: ச ம க ம த நி ச        ச  நி த ம க ரி ச

பைரவி: ச க ரி க ம ப த நி ச     ச நி த ப ம க ரி ச

வசந்தபைரவி:       ச ரி க ம த நி ச   ச நி த ம ப ம க ரி ச

லா ச ராவின் மொழியில் முடிக்க நினைக்கிறேன்.

“உணர்ச்சிகளைத் தனித்துப் பார்க்கையில் ஆசைகள், குரோதங்கள், கோபங்கள், தாபங்கள், நிறைவுகள், பங்கங்கள், சஞ்சலங்கள், அமைதிகள் எனப் பலப் பல கோணங்கள் தென்பட்டாலும், உண்மையில் அவை லோகஸ்ருதியின் இடையறா, முடிவிலா இயக்கத்திலும், அதனின்று தோன்றித் தெரிந்து, திரும்ப அதிலேயே மூழ்கிவிடும் அதனுடைய பிம்பங்களே”

இந்த இருவருக்காக அந்த இருவரையும் வணங்குகிறேன்.

 

 

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 6

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம் 6

karl

அடுத்த நாள் காலை தனது அலுவலக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஹெண்டர்சன் பால்பாய்ண்ட் பேனாவினால் தனது காப்பியை கலக்கிக் கொண்டார். இன்னும் 7 மணி ஆகவில்லை; வால்டர் H லேய்ட்டன் கணித ஆராய்ச்சிக் கட்டிடம் இன்னும் அமைதி கலையாமல் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவர் அலுவலகத்திற்கு இதற்குமுன்னர் வந்ததில்லை; அந்த ஆழ்ந்த, உன்னதமான அமைதி தனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என அவர் வியந்து கொண்டார். இன்னும் சிறிது நேரத்தில், ஷேவ் செய்யாத, நேற்றைய சமையலின் வாசம் இன்னும் வீசும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் வர ஆரம்பிப்aபார்கள். அடுத்து 8 மணி வகுப்புகளுக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் வருவார்கள்; .அடுத்து, அலுவலக பணியாளர்கள், மற்றவர்கள்… என கட்டிடம் கொஞ்ச நேரத்தில் தனது வழமையான  பரபரப்புக்கும், அவசரத்துக்கும் தாவி விடும். காப்பியை உறிஞ்சியவாறு ஹெண்டர்சன்  தனது மேசை மேல் சரிந்திருந்த, தூசித்துகள்கள் மின்னும் கதிர்க்கற்றைகளை   கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாவிட்டால், அவரது இந்த அலுவலக அறையை  விட்டுவிட வேண்டியிருக்கும் என்பது வருத்தத்தை அளித்தது. மொத்தக் கல்லூரியிலும் அவரது இந்த அறையில் மட்டுமே தனது இயல்போடு, நிம்மதியாக இருந்திருக்கிறார்.

அவரது யூனிக்ஸ் டெஸ்க் டாப்பில் புது அஞ்சல் மின்னியது: அனுப்புனர்: சோக்லோஸ், நேரம்: அதிகாலை – 2.17

அன்புள்ள ஜான் – படிக்க ஆரம்பித்த ஹெண்டர்சன் ஒரு கணம் தயங்கினார், அன்னியோனியமான அந்த விளி அவரைத் தாக்கியது – உனக்கு நன்றி தெரிவிக்க வேண்டி எழுதுகிறேன். மரியாவை மகிழ்ச்சியடைய செய்து விட்டாய்; ஆதலால் என்னையும் மிக்க சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டாய். அவள் மனதிலிருந்து பெரும் பாரம் அகன்று விட்டது. ஓர் அற்புதமான குறுநகையுடன் தனித்தமர்ந்து மே மாதத்தில் நடக்கப் போகும் எங்கள் திருமணத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களை அவள் பட்டியலிட்டுக்கொண்டிருக்கும் காட்சி அரியது. என் வார்த்தைகளில் வடிக்க முடியாதது. நிச்சயம் உனக்கு அழைப்பு வரும்நீ வருவாய் என நம்புகிறேன்.

 J.A.M –இன் ஆசிரியர் சில்கோவ்ஸ்கியின் தேற்றம் குறித்த தவறான புரிதல்திருத்தப்படுவது குறித்து ஒரு விளக்கம் டிசம்பர் மாத இதழில் பிரசுரிக்க ஒத்துக் கொண்டுவிட்டார்இது என்னை வருத்தத்துக்குள்ளாக்குகிறது. பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுக்கு தனது Ph.D பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி மரியா  ஒரு கடிதம் எழுதப் போகிறாள். இறுதியில், இதை என்னால் தடுக்க முடியவில்லைமிக வருந்துகிறேன்.

நீ பெருங்கருணையுடையவன் என்று மரியா நம்புவதை நான் உன்னிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். அது உண்மையல்ல என்று நான் அவளிடம் சொன்ன போதிலும். நீ இதைப் புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். ஏனென்றால், அது உண்மையல்ல, அல்லவா? நீ கருணையுடையவன் அல்ல. சமீபத்திய உன்னுடைய பெருந்தன்மை உன்னில் நிலைகொண்ட நற்தன்மையின் சாட்சி என்று மரியா கருதுகிறாள். என்னால் அதற்கு பதிலொன்றும் கூற முடியவில்லை. இருக்கலாம் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை.

மேற்கொண்டு எழுத அயர்ச்சியாக இருக்கிறது. நீ செய்தவற்றுக்கு மீண்டும் நன்றி. நீ ஏன் அதைச் செய்தாய் என்று முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் உனக்கு என் நன்றிகள்.

 உன் நண்பன்,
மிக்லோஸ்

ஹெண்டர்சன் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு மின்னஞ்சலை  அழித்தார். கணினியை அணைத்தார். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். என்ன செய்தாரோ, என்ன நடக்க அனுமதித்திருக்கிறாரோ –  அவற்றைப் பற்றி அவர் நிம்மதி கொள்ளலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், அவர் நிம்மதியாக இல்லை. அவர் செய்தவற்றின் விளைவாக, இறுதியாக, யார் பயனடைவார்கள்? மரியா, நீட்சியாக சோக்லோஸ்.

ஆனால் ஹெண்டர்சன்? எப்போதும் போல், ஏமாற்றப்பட்டு, கீழ் நிலையில், வருத்தத்துடன். துயரம் கலக்காத மகிழ்ச்சியை அதன் பரிசுத்த நிலையில் அடைவது சாத்தியமா? சில சமயம் முடியலாம்  என்று தோன்றியதுண்டு என்றாலும், பல நேரங்களில்  அது சாத்தியமேயல்ல என்றுதான் ஹெண்டர்சன் உணர்ந்திருக்கிறார்.  மகிழ்ச்சி என்பது ஒரு ஸீரோ-ஸம் விளையாட்டு; ஒருவர் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் கட்டாயம் வருத்தப்பட்டே தீர வேண்டும். பல காலமாக, ஹெண்டர்சன் இந்தச் சமன்பாட்டின் தவறான பக்கத்திலிருந்து கொண்டிருக்கிறார்.

மனதை இந்த எண்ணம் நிறைக்க, ஹெண்டர்சன் மேசை அறையிலிருந்து கடித உறையொன்றை எடுத்தார். சோக்லோஸின் அலுவலக விலாசத்தை எழுதி உறைக்குள் மரியாவின் இரு ஊதாநிற உள்ளாடைகளை இட்டு மூடினார்.

வெளியே, கணினியியல் துறை கட்டிடத்திற்கு மேல் சூரியன் எழுந்து விட்டது. இளந்தென்றல் புதிதாக விழுந்திருக்கும் இலைகளினூடாக சலசலத்துக் கொண்டிருந்தது. நான்கு மாணவர்கள்  – ஒரே போல் நீல நிற டீ ஷர்ட்டுகளும் காக்கி அரைக்காற்சட்டைகளும் அணிந்துகொண்டு, இலையுதிர் காலத்தின் குளிரையோ, அது கொண்டு வரப்போகும் கல்விகுறித்த கவலைகளோ இன்றி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். புது வருடம்; புது விரிவுரையாளர்கள்; பணிநீட்டிப்பு விவாதங்கள்; புது வரவுகள்; நீக்கங்கள்; அவர்களின் கவலையற்ற உற்சாகத்தை ஒரு கணம் பொறாமையுடன் பார்த்த ஹெண்டர்சன், மறு கணம் கார் நிறுத்துமிடம் நோக்கி விரைந்தார்.

நகரின் குறுக்காக காரை செலுத்திய ஹெண்டர்சன் ரேடியோவை இயக்கினார் – எந்தவொரு நிலையத்தையும் குறிப்பாக வைத்துக்கொள்ளும் கவனம் இல்லாமல். சோக்லோஸ் பணியாற்றிய கல்லூரியின் கணிதத்துறை அருகே காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே இருந்த பல்கலை வளாக அஞ்சல்பெட்டியை அடைந்தார். மரியாவின் உள்ளாடைகளின் கனமொன்றும் அவ்வளவாக இல்லாத அந்த உறையை அஞ்சல் பெட்டியின் வாயில் நுழைத்தவண்ணம் ஒரு கணம் தயங்கினார்.  பின் உள்ளே உறையை போட்டுவிட்டு அது பெட்டியின் உள் விழுந்ததை உறுதி செய்து கொண்டார். அனுப்புனர் விலாசம் இல்லை; அஞ்சல் முத்திரை இல்லை; வெறும் பெறுநரின் பெயர் மட்டுமே.  சோக்லோஸ் யார் அனுப்பியிருப்பார்கள் என்று சந்தேகிக்கக் கூடும், ஆனாலும் ஒருக்காலும் உறுதியாக கண்டுபிடித்துவிட முடியாது. நல்லது, குழம்பட்டும் என்று  எண்ணிக்கொண்டார் ஹெண்டர்சன்.

விரைந்து காரை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை விட்டு நீங்கி, அழுக்குப்படிந்த வீடுகள் நிறைந்த போர்த்துகீசியர் குடியிருப்பை தாண்டி செலுத்திக் கொண்டு போனார். திடீரென்று ஓர் எண்ண உந்துதலில், சருகுகள் பரவிக் கிடந்த, ஆளரவமற்ற ஓர் சந்துக்குள் காரை திருப்பி நிறுத்தினார். ஏதோவொரு தவறு செய்ததுபோல் உறுத்தல்; கழிவிரக்கம் போல் ஏதோவொன்று குடைந்தது. மனதிலிருந்து எடுத்தெறிந்து விட்டு நடந்தார். சலவையகம், வங்கிக்கட்டிடம், மீன் சந்தை…

சந்தின் எதிர்புறம் இருந்தது அந்த தேவாலயம். வண்ணங்கள் பளிச்சிடும் கண்ணாடிசன்னல்களின் கீழ் திறந்த பெரு வாயிற்கதவுகளை நோக்கி அகன்ற படிகள் மேலேறிச் செல்லும் கருங்கல் கட்டிடம். படிகளில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்த வீடற்ற ஒருவனின் அருகே சிறிய அறிவிப்பு – ‘இயேசு காக்கிறார் – சனிக்கிழமை  6 ஞாயிறு 9 1030 1215’.

ஹெண்டர்சன் சந்தைக் கடந்து படிகளில் ஏறி, கனத்த கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தார். தூசியில் நனைந்த ஒளிக்கதிர்கள் உயரத்திலிருந்த சன்னல்களின்வழி வழிந்திறங்கி யாருமற்ற இருக்கை வரிசைகளில் மீது படிந்து கிடந்தன. காற்றில் தூபப் புகையும், ஈரக் கருங்கற்களும்  மணத்தன. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்ட ஹெண்டர்சன், நிமிர்ந்து மேற்கூரையின் அழகிய வடிவமைப்பை வெறித்துப் பார்த்தார். என்ன அழகான இடம்! இதன் வெறுமை, இந்த அமைதி, தோள்களில் ஒரு  போர்வையைப் போல் கவியும் வெதுவெதுப்பான அடர்த்தியான இந்தக் காற்று… எங்கோ தொலைவில் ஒரு  காரின் அலாரம் அலறுவது சர்ச்சுக்குள் ஒரு குகைக்குள் கேட்பது போல் ஒலித்தது.

கடவுளின் இருப்பை டிடெரோட்டுக்கு ‘நிரூபித்த’ ஆய்லரின் சமன்பாடு ஹெண்டர்சனுக்கு நினைவு வந்தது. முட்டாள்தனம். ஆனால் பாஸ்கலின் வாதம் ஒன்று உண்டு: ஆராயும் அறிவுள்ள மனிதர்கள் கடவுளை நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் சொர்க்கத்தின் அனுகூலங்கள் நரகத்தின் இடர்களை விட மிக அதிகம். கைகளை கோர்த்தபடி, கீழுதட்டை கடித்தவாறு ஹெண்டர்சன் அமர்ந்திருந்தார். பாஸ்கலுக்கு மட்டும் நிகழ்தகவு கோட்பாடு தெரிந்திருந்தால் ஒருவேளை தனது கடவுள் இருப்பு வாதத்தை நிலைநிறுத்தியிருக்க முடிந்திருக்கலாம். யார் கண்டது, எத்தகைய இழப்பு இதுவென்று.

ஓர் இளம் பாதிரி இருபுற இருக்கைகளியிடையே தந்தநிற மெழுகுவர்த்திகள்  இரண்டையேந்திக் கொண்டு நடந்து வருவதைக் கண்டார். பாதிரியின் கண்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார். ஓர் எண்ணம் – தான், ஜான் ஹெண்டர்சன் –    துறவியாகி விட்டால்? ஒரே நேரத்தில் அச்சமும், பரவசமும் மேலெங்கும் பரவ  அவரது உடல் நடுங்கியது. யார் விண்ணப்பித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் தானே, இல்லை ஏதாவது விதிகள் இருக்குமா? என்னைப் பாருங்கள் – முகம் கவிழ்ந்து மெதுவே நடந்து வந்து கொண்டிருந்த பாதிரியின் முகத்தைப் கூர்ந்து நோக்கியவாறு ஹெண்டர்சன் நினைத்துக் கொண்டார். துறவு பூண்டு, மதத்தையும், நம்பிக்கையையும் சிந்தித்துக்கொண்டு, மன்னிப்பை இறைஞ்சியவாறு  தன் நாட்களை கழித்து விடலாம்.  ஆம். திருச்சபையின் பிரார்த்தனைக் கூட்டத்தின் முன் நின்று தன் தனிமை நிறைந்த நாட்கள் எப்படி அச்சத்துடனே கழிந்தன என்று  அவரால் கூற முடியும். என்னைப் பாருங்கள், தயவுசெய்து என்னைப் பாருங்கள், ஹெண்டர்சன் மனதுக்குள் இறைஞ்சினார்.

 ஆனால் இளம் பாதிரி நீண்ட அங்கி மென்மையாக சரசரக்க கடந்து சென்றார்.

 நிறைந்தது

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3 

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின் முறையாக முன்னனுமதி பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT