ரா. கிரிதரன்

கல்லிடைப் பிறந்து கடலிடைக் கலந்து உயிரன உலாயதன்றே!

ரா கிரிதரன்

கடந்த வாரம் உணவு இடைவேளை நடைக்காக வழக்கமான தேம்ஸ் நதிக்கரையைத் தவிர்த்து கூழாங்கற்கள் பாவித்த சிறுதெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தேன். நடைபாதை ஓரத்தில் வயதான இரு தம்பதியினர் தொலைநோக்கி வழியாக சற்று தொலைவில் தெரிந்த டேட் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து செல்லும்வரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். தொலைநோக்கி வழியாகப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பார்வையைப் பகிர்ந்து சிரிப்பதுமாய் இருந்தனர். கடந்து செல்லும்போது அவர்களில் மூத்தவராகத் தெரிந்த பாட்டி `ஹாங்` என்று தேக்கிவைத்த சத்து எல்லாத்தையும் வெளிப்படுத்தினார். இருவரும் ஆரவாரமாய்க் கட்டிப்பிடித்துக்கொண்டனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. யாருமே இல்லாத சாலையில் நின்றபடி அப்படி என்ன யுரேக்கா கண்டுபிடிப்பு எனப்பிடிபடாமல் கேட்டேவிட்டேன்.

`சிட்டி ஃபால்கன் இஸ் ஃபீடிங் தி பேபிஸ்`, என்றார். வல்லூறு ஊட்டிவிடுவதில் என்ன ஆச்சரியம்?

`நகரத்தில் வல்லூறைப் பார்ப்பது கடினம். அப்படியே பார்த்தாலும் அவை கட்டிடங்களுக்கு உயரே தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றாது. தேம்ஸ் நதியைச் சுற்றியிருக்கும் பல தீவுகளிலுள்ள மரங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும். நான் நாற்பது ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். இப்போது டேட் மாடியில் குஞ்சுகளோடு வருகிறதென்றால் என்ன அர்த்தம்? ` (more…)

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்

ரா கிரிதரன்

அண்மையில், “உங்கள் கவிதைகள் எத்தகைய எதார்த்தத்தில் வேரூன்றி, எத்தகைய எதார்த்தத்தை நோக்கி விரிகிறது?” என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தார் ஒரு நண்பர்.. “போட்டு வாங்குவோம்”, என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட நண்பர் கேள்விகளைத் தூண்டில்களாக பாவிப்பதால், கவிதை எழுதாத என் திசையிலும் அது விழுந்து பலி கொள்ளாமல் விலகியது.

கவிதை ஏதாவது ஓர் இடத்தில் வேரைப் பற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அங்கேயே கிடக்காமல், எதையோ எட்டிப்பிடிக்கும் ஒரு தாவலையும் அது காட்ட வேண்டியுள்ளது. இந்த இரு நிலைகளையும் ரத்தினச்சுருக்கமாகவும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதே சமயம், இவற்றுக்கிடையேயான தூரமும் இரு துருவங்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டும். இதை ஒரு கவிதையை மட்டும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

ஆயுட்காலத்தில் ஒரு கவிஞன் எழுதும் சொல்வெளி தொடர்பற்ற அவனது சிந்தனைகளின் தொகை. ஆனால் அவன் அறியாமல் அவற்றினூடாக தறி போல ஓரிழை எல்லாவற்றையும் இணைக்கிறது. அவ்விழையை அவனது வாழ்க்கைப்பார்வை எனக்கொள்ளலாமா? அவன் பார்த்து அனுபவித்து அறிந்த காட்சியைக்கொண்டு நூலேணியை ஒரு திசை நோக்கி எறிகிறான். அவனது அனுபவம் என்பது கைக்கிளை. கவிதை புனையும் தருணம் வரை அதன் மறு கரையை அவன் அறிவதில்லை. அனுபவம் அவன் பற்றியிருக்கும் வேர். அங்கிருந்து எந்த நூலேணியைப் பிடித்து எங்கு செல்லும் என்பதை அவனது அறிதல் அவனுக்குப் புகட்டாது. கற்பனையும், பித்து உணர்வு நிலையும் அத்திசைக்காட்டிகள். (more…)

வேண்டுவது அறவை நெஞ்சத்தாயர்

ரா கிரிதரன்

பெனடெட்டோ மார்செல்லோவின் சுழற்தகடைச் சுற்றிவிட்டு சில கரகரப்புகள் முடிந்து இசை ஆரம்பிக்கக் காத்திருந்தேன். அட்டையில் அவரைப் பற்றி சிறு குறிப்பு வரைந்திருந்தார்கள். 1710இல் அவரது அண்ணன் அலெச்சாண்டோ மார்செல்லோ எழுதிய இசைக்குறிப்புகள் இவை. இந்த ஓபோ வாந்தியக்குறிப்பை 1717 ஆம் ஆண்டு தந்திக்கருவிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்துள்ளார் பாஹ். இளையராஜா ஏன் மீண்டும் மீண்டும் பாஹ் காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறார் என விளங்கும். நிற்க. இக்கட்டுரை இந்த இசைக்குறிப்புகளைப் பற்றியதல்ல. சுட்டியைத் தட்டிவிட்டு பின்னணி இசையாகக் கேட்டபடி மேற்கொண்டு படியுங்கள்.

நாஜிக்களின் திட்டமிட்ட அழித்தொழிப்பைப் பற்றி பல புத்தகங்களும், எண்ணிலடங்கா திரைப்படங்களும் வெளியாகியுள்ளன என்றாலும் ஒவ்வொரு புது வரவும் நமது மனதை ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்துவிடுகிறது. 1933இல் நார்மன் ஆங்கெல் War pays என தீர்க்கதரிசி மாதிரி சொன்னது நினைத்துப்பார்க்க முடியாதபடி இன்றுவரை பலனளித்துவருகிறது. The Book Thief வரை இது புத்தக சந்தைக்கும் திரைப்படங்களுக்கும் பொருந்தும். (more…)

ஞாபகம்

ரா. கிரிதரன்

soccer memoirs

எனது எதிர்வீட்டில் இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா கால்பந்து போட்டிக்காக இன்று பளபளா இங்கிலாந்து கொடியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரது செய்கை எனக்குக்கொஞ்சமும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. மழை பெய்தபின் பூக்களுக்குத் தண்ணீர் விடுவார், என் வீட்டின் தரையைச் சரிசெய்து முடித்த அன்று சாம்பிள்களை எடுத்து வந்தவர். ராணுவ அணிவரிசையைப் பார்ப்பது போல மெல்ல இடம் வலம் நடந்து கொடியைக் கோணலாகாமல் சுவரில் அடித்துமுடித்தார்.

`நேற்று இத்தாலி தோற்றுப்போச்சு, இருந்த ஒரே சான்ஸும் போச்சே பார்த்தீங்களா?` , எனச் சொன்னேன்.

அவரது பதில் தான் மிக முக்கியமானது. என்ன சொல்கிறார் என ஒரு முறை கேட்டால் தான் நகர்வதா, பேச்சைத் தொடர்வதா என முடிவு செய்வேன்.

`ஆர்.ஏ.எஃப் ப்ளைட்டுகள் வந்தபுதிதில் ஒரு பழக்கம் இருந்தது. நான் சொல்வது ஐம்பதுகளில். நான் அப்போதுதான் லிமரிக்கிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தேன். சைனா மார்க்கெட்டில் வாங்கிய இனிப்பை ருசித்தபடிப் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்ப்பது போல லண்டன் ப்ரிட்ஜ், லீடன்ஹால் மார்க்கெட்டை சுத்தி சுத்தி வருவேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஒரு கொடி கட்டின வண்டிகள் ரோந்து வரும். என்னிக்காவது நேரம் இருந்தா காட்டுறேன்.`

நான் கால்பந்து பற்றிப் பேசியது எனக்கே மறக்குமளவு எங்கேயோ சென்று நிறுத்திவிடுவார். இதுதான் வில்சன் தாத்தா. (more…)

ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ

 

 

நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை

வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.

– எஸ். சுரேஷ் (more…)