கட்டுரை

ஆதவனின் ‘அந்தி’

வெ. சுரேஷ்

சிறு வயதில பாட்டி தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களின் சண்டையை ரசிப்பதில் பெரும் ஆனந்தம் அடைவதுண்டு.  அவை, மேசை மின்விசிறியை யார் பக்கம் திருப்பி வைப்பது, யாருக்கு வாய் குழறல்,  மறதி, கை  நடுக்கம் அதிகம் போன்ற தீராத விவாதங்கள். இறுதியில் எப்போதும் பாட்டிதான் ஜெயிப்பார். தாத்தா சில சமயம் பெருந்தன்மையுடனும், பல சமயம் அசட்டுச் சிரிப்புடனும் தோல்வியை ஒப்புக் கொள்வார். அதில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் என் குடும்பத்தில் பிரபலமான,  குறிப்பாக என் தம்பிக்கு மிகவும் பிடித்த ஒரு கதை. அவனை விட்டுவிட்டு நானும் என் அண்ணனும் தாத்தா பாட்டியுடன் மதுரை சென்று  வந்தபோது, தாத்தா எங்களுக்கு அங்கு ஒரு  ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ரூம் போட்டு விட்டதனால் பாட்டி அவரை, ‘திட்டிண்டு திட்டிண்டு’ படி ஏறினார் என்ற அந்தப் பகுதியை கேட்கும்போதெல்லாம், என் தம்பி பரவசம் அடைவான். அவனை விட்டுவிட்டுப் போன தாத்தா நல்ல திட்டு வாங்குகிறாரே! தாத்தா அந்தத் திட்டுகளை ரசித்து ஏற்றுக் கொண்டார் என்பதே என் நினைவு.

நான் பார்த்த இவர்கள் இப்படித்தான் இருந்தார்கள், ஆனால் தாத்தா பாட்டியைப் பற்றிய பழைய கதைகள் முற்றிலும் வேறானவை. தாத்தா ஒரு பயங்கர முன்கோபி, பாட்டி அவரைப் பார்த்தாலே நடுங்குவார். இருவரும் ஒருவருக்கொருவர் நேராகப் பேசிக்கொண்டுகூட என் அம்மா, சித்திகள், மாமாக்கள் பார்த்ததில்லை. தாத்தாவுடன் பேசுவதென்றால், மூத்தமகளான என் தாயார், அல்லது கடைக் குட்டியான எங்கள் கடைசி மாமா இவர்களால்தான் முடியும். வார்த்தைகள் அதிகமற்ற, ஹூம்,ம்ஹூம், என்பது போன்ற உருமல்கள்தான். எப்போதும் வாயில் வெற்றிலை, கையில் செல்லம், இல்லையென்றால் புத்தகம். Sslc சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வரும்படி என் தாயார் அழைத்தபோது, “நீ Sslc முடிச்சிட்டயா?” என்று கேட்குமளவு வீட்டின் மேல் கவனம்.அவரா இவர்? என்று நாங்கள் சிறுவர்கள் நம்பமாட்டோம்.

அவர்களின் ஏறத்தாழ, 50 வருட தாம்பத்திய வாழ்வின் இறுதி ஐந்தாறு வருடங்களே நாங்கள் பார்த்தது. நான் பார்த்த தாத்தா பாட்டியிடம் நிகழ்ந்திருந்த மாற்றங்கள்  (என் பிற உறவினர்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கும்போது) எத்தகையவை, அவற்றுக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என நான் புரிந்து  கொள்ள தொடங்கியது, என்  இருபதுகளில் ஆதவனின் ‘அந்தி‘ சிறுகதை  படித்தபின்தான் .

அந்தி‘ சிறுகதையின் கதைசொல்லி, தன் மனைவியின் மிக வயதான, தங்கள் கல்யாணத்துக்கு கூட வர இயலாத, தாத்தா பாட்டியின் வீட்டுக்கு  மனைவியுடன் சென்று வரும் நிகழ்விலும், பின்னர் அந்தப் பாட்டியின் மரணச்  செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களை பற்றி நினைத்துக் கொள்வதிலும் விரிகிறது. இளம் தம்பதியினர், தாம்பத்திய வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர்கள், அதன் அந்திப் பொழுதில் இருப்பவர்களைச் சந்திக்கின்றனர் என்பது இந்தக் கதையின் நெகிழ்ச்சியான பின்புலம். கதையும், இளம் மாப்பிள்ளையின் பார்வையில்தான் சொல்லப்படுகிறது. அதன் முக்கிய பகுதி அவர்களின் தாத்தா பாட்டி வீட்டு விஜயம். தாத்தாவைப் பற்றி கதைசொல்லி கேள்விப்பட்டிருந்தது எல்லாம் அவர் ரயில்வேயில் ஸ்டோர்ஸ்  சூப்பிரென்டெண்டாக இருந்து ஓய்வு பெற்றார் என்பதுதான் (அங்கு ஒரு பஞ்ச் வைக்கிறார் ஆதவன்,அது சூப்பிரென்டெண்டுகளுக்குக் கூட  சுய மரியாதையோடு இருந்த காலம் என்று). கூடவே, அவர் அபாரமான ஆங்கில அறிவு கொண்டவர். ஆபீஸையே முதல் மனைவியாகக்  கொண்டவர்.  கண்டிப்புக்கும், கறார்த்தன்மைக்கும்,முன்கோபத்துக்கும் பேர் போனவர்; (என் தாத்தாவைப் போலவே) பாட்டி பொறுமையின் சொரூபம், தாத்தாவின் எந்த உதவியும் இல்லாமல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர், தாத்தா முன் ஒரு சொல்லெடுத்து அறியாதவள்என்ற புறத்தகவல்கள்தான்.

ஆனால் இங்கு அவர்  காணும் காட்சியே முற்றிலும் வேறானது. பாட்டி அதிகம் பேசுவதில்லை. தாத்தா சமையல் அறை நிபுணராக இருக்கிறார். காபி போடுவது அவர்தான். ஓயாமல் சமையல் அறையிலும் மேடையிலும் வேலைகளை சுலபமாக்குவதற்கும், சமையலைறைப் பாத்திரங்களை இலகுவாக அலம்புவது குறித்தும் தான் செய்திருக்கும் மாற்றங்களையுமே  பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரயில்வே ஸ்டோர்ஸ் சூப்பிரென்டெண்டுஅங்கு இல்லவே இல்லை. ஆனால், அவர் ஒரு ஐந்து நிமிடம் பால் வாங்க வெளியே சென்றிருக்கும் சமயம், பாட்டி கதைசொல்லியிடம், திடீரென்று அக்ஷரம் பிசகாத அழகிய ஆங்கிலத்தில் பழங்காலத்து ரயில்வே விஷயங்களை பேசத் துவங்குகிறார். தாத்தா உள்ளே வந்தவுடன் அந்தப் பேச்சு அடங்கிவிடுகிறது. இப்படி ஒரு பகல் நேரம் அங்கே இருந்துவிட்ட, குழம்பிய மனநிலையுடன் இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்கின்றனர் இவர்கள். அங்குதான் தெரிகிறது அவர்களுக்கு, பாட்டிக்கு சில காலமாகவே சித்த சுவாதினம் இல்லையென்றும் திடீர் திடீரென்று இப்படி ஆங்கிலப் பேச்சில் புகுந்து விளையாடுவதுண்டு என்பதும். அப்படியென்றால் அவர் தன்னிடம் பேசியதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தாத்தா பேசிய ஆங்கிலத்தின் எதிரொலிகளா, என்று பிரமிப்பில் ஆழ்கிறார் கதைசொல்லி. பிரமிப்பு  விலகாத மனநிலையுடன் ஊர் திரும்புகின்றனர் புதுமணத் தம்பதியினர். சில மாதங்கள் கழித்து, பாட்டி இறந்த செயதி வருகிறது. வருத்தத்தில் மூழ்கும் கதைசொல்லி, தான் அவர்களது வீட்டில் கண்ட காட்சிகளுக்கு அர்த்தம் தேடுவதில் முனைகிறார்.

மிக நீண்ட காலம் மணவாழ்க்கையில் இணைந்து வாழும் தம்பதியினர், ஒருவரது பிரிவை இன்னொருவர் எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள்? நான் என் தாத்தா பாட்டியிடம் கண்டதும், இங்கு இந்தக் கதைசொல்லி தன் மனைவியின் தாத்தா பாட்டியின் நடவடிக்கைகளிலும்  கண்டதும்  ஒரு role reversal என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவரது இழப்பை இன்னொருவர் தாங்குவதற்கு மிகச் சிறந்த உபாயமாக அவர்களது ஆழ்மனம் தங்கள் துணையின் பாத்திரங்களைத் தான் ஏற்று நடிக்கத்  தொடங்குகிறது. இங்கே, பாட்டியின் பாத்திரத்தை தாத்தா ஏற்று நடிப்பது, பிரக்ஞாபூர்வமாக- ஆனால் பாட்டி நடிப்பதில்லை. அவர் சித்தம் தாத்தா அருகிலில்லாதபோது அவராகவே மாறி  விடுகிறது. என்றோ எப்போதோ கேட்ட ஆங்கில வாக்கியங்கள் அவரை அறியாமல் அவரது வாயிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதை அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் காண முடியும்- குறிப்பாக கணவன் – மனைவி இருவர் மட்டுமாய் இணைந்து வாழ்பவர்களின் பேச்சே மாறிவிடுகிறது, அவர்களது குரல்களின் ஏற்ற இறக்கங்கள்கூட ஒருவரையொருவர் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. என் தாத்தாவைப் போலவே சர்வாதிகாரியாக தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த ஆண்கள் தம் இறுதிக் காலத்தில் முழுக்க முழுக்க மனைவிகளிடம் முற்றடங்குவதும், அடங்கி போதலே சுபாவம்  என்றிருந்த பெண்கள் ஒரு கட்டத்தில் தம் கணவர்களை வழிநடத்துபவர்களாகவும் மாறி  இருப்பதைக் காண முடியும்.

முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில்  படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின்  நிழல்  இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது. கதைசொல்லி, தனக்கு ஏன் முதியவர்களை எப்போதும்  பிடிக்கிறது என்று தன்னைத்தானே ஆராய்ந்து கொள்ளும் இடங்களில் ஆதவனின் கசந்த நகைச்சுவை மிளிர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இந்த கதையை இப்படி முடிக்கிறார்-

“பாட்டி இறந்த செய்தியைக் கேட்டவுடன், சட்டென்று தாத்தா பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. முன்னை விடவும் தீவிரமாக அவர் சதா சமையலைறையில் முனைந்து கிடைக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது. இன்னொன்றும் தோன்றுகிறது, அவர் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தியிருக்கக் கூடும்.”

         இக்கதையை படித்த பிறகு, நான் பார்க்கும் ஒவ்வொரு முதிய தம்பதியினரிடமும் இந்தக் கதையின் தாத்தா பாட்டியின் சாயல்களைக் கண்டு கொண்டேயிருக்கிறேன். என் தந்தை தனது  முதுமையில் எப்படி இருந்திருப்பார் என்றறிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இன்று மேலே சொன்ன  என் தாத்தா பாட்டி என் நினைவில் எழும்போதெல்லாம் முதுமையில் இருந்திருக்கக்கூடிய என் தந்தையின் நடவடிக்கைகளை ஊகிப்பது சுலபம் என்றே தோன்றுகிறது. கூடவே எனது முதுமையும். அதுவே ஆதவனின் இந்தக் கதை நம் மீது செலுத்தும் ஆழ்ந்த பாதிப்பின் அடையாளம். அவரது கலையின் வெற்றி.

மேலும், என்னவொரு பொருத்தமான தலைப்பு.

அசோகமித்திரனின் ‘துரோகங்கள்’

ஆர்.அஜய்

18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன்     செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம்.  பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட   அ.மியின் பாத்திரங்களில்  (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன்  மாறுபட்டிருக்கிறார்.

பெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி  ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு  வீட்டிற்கு வரக்கூடாது என்றும்  நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு  இந்த  தைரியம் எப்படி வந்தது என்பதற்கு  எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான  சூழலோ  கதையின் போக்கில்    இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும்  பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.

ரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள்  வாசகனுக்கு ஆசுவாசமளிக்க  வேண்டும் என்று திணிக்கப்படவில்லை.  உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன்  பின்னால்  அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.

சிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம்  மெட்ராஸ் வருகிறது.   அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல,  அவன் அவர்களைத்  துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்;  சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை  நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார்.   ‘அவனுடைய  பெற்றோர் முகம் கூட  மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில்  முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக  பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில்  பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.

நீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த  வயதான பெண்ணொருவர்  அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு  ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு   செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை  உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும்  இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத  காலத்தின் பிணைப்பில்  இருந்து  நீலகண்டனும் தப்பவில்லை   என்று  மீண்டும் புரிகிறது.  அவர்  பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.

நடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும்,  நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது  வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து  எழும்  கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும்  என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.

 ரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை.  ‘எனக்கு உன்னோட  ஆன கல்யாணம்தான்டா’ என்று  ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப்  பற்றி  பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர்  அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான  இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய  அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு.    அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும்    மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான  ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால்  – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும்  தேவைப்படுவதும் இல்லை என்பதால் –  ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது  எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது.  ஒரு சில மேலதிக  தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள்  மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக்   கூடும்.

நீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க,  ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு  என்ற விமர்சனம்  எழலாம்  ஆனால் ,  ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன்  லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின்  நீட்சியாகவும்  ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை? தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள்! எவ்வளவு விடாமுயற்சி! எவ்வளவு நம்பிக்கை!’  என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல.  ‘இனி வேண்டியதில்லை’ கதையும்  சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.

ரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு,  அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை   வைத்து அவர்  கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து  ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே.  நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை,  ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான்  இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று  சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே   முடித்து விடுகிறார்.   1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல்  இங்கும்  ரஞ்சனி  நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில்  ஏற்படுகின்றன  என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).

சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில்  ஒரு அதிர்வை அளித்து  – தான்   யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால்  அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும்  – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன்  முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது  எடுக்கும் முடிவையும்  ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன்  ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு  இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம்  மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.

‘அகந்தை’ – ஆதவன் சிறுகதை குறித்து

வெ.சுரேஷ்

“ஒரு கலைஞன் தன் சாதனைகளின் கூறுகளை உணர்ந்து, அது குறித்து நியாயமான கர்வம் கொள்வதில் தவறில்லைதான். அதே சமயத்தில், தன் சாதனையின் பரிமாணங்கள் குறித்த பூதாகரமான பிரக்ஞையும் அவனுக்கு நல்லதில்லை. இந்தப் பிரக்ஞையின் பளு இல்லாத வரையில்தான் பணிவுடன், யதேச்சையான, இளமையான, ஒரு மனப்பாங்குடன் அவன் தன் கலையைப் பயிலவும் பேணவும் முடியும்”

மேற்காணும் வரிகள் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையில் வருபவை. ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? அல்லது இரண்டுமே ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவைப்படுமோ?

இந்தக் கேள்விதான் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையின் அடிப்படை  என்று சொல்லலாம். மத்திய அரசு அளிக்கும் விருது ஒன்றினைப் பெற்றது முன்னிட்டு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் வெங்கடேஸ்வரனுக்கு பாராட்டு விழா. அவரது பிரதான சிஷ்யன் கல்யாணமும் ஒரு பேச்சாளர். தன்  முறை வரும்போது, அவரின் கலையைப் பற்றிய தன்  நுணுக்கமான அவதானிப்புகளை- அவர் பாடும் முறையின் தனித்துவத்தை, இதுவரை எவரும் தொட்டுப் பேசியிராத சில தனித்த அம்சங்களை, விரிவாக எடுத்துரைத்துப் பாராட்டக் காத்திருக்கிறான். ஆனால் அதற்கு முன் மேடையில், அந்த ஊரின் கலெக்டர் பேசுகிறார். இசை ரசனை ஏதுமற்ற, வழக்கமான, அரசு அதிகாரிக்குரிய தோரணையோடு ஆற்றப்படும் உரை, மேலும் அதையடுத்து இன்னும் சில சமத்காரமான உள்ளீடற்ற பேச்சுக்கள் என்று போய்க்  கொண்டிருக்கிறது. இந்த வெற்று உரைகளை வெங்கடேஸ்வரன் கிண்டலாகவே அணுகி, மேடையிலிருந்தாலும் தன்னிடம் கண்ஜாடையில், குறும்புச் சிரிப்பில் அதிருப்தியைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்த்திருக்கும் அவனுக்கு வெங்கடேஸ்வரன் அந்த உரைகளை ரசித்து அமர்ந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கடைசியில் உங்களுக்கும் இதுதான் வேண்டியிருக்கிறது என்று வெறுப்போடு  நினைத்துக் கொள்கிறான்.

அவனது முறை வரும்போது, தான் தயாரித்து வந்ததைப் பேசாமல் அவர் எப்படி எவ்வளவு எளிமையானவர், தன்னைப் போன்றவர்களின் முட்டாள்தனத்தையெல்லாம் எப்படி மன்னித்து அருள்பவர் என்றெல்லாம் ஒரு விதூஷக வேஷம் கட்டிப் பேசுகிறான். கூட்டம் ஆரவாரிக்கிறது. வெங்கடேஸ்வரன் அகந்தை கொண்டு விட்டதாகவே நினைக்கிறான். தான் அங்கு உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறான். வெறுப்போடு வீடு திரும்பியவன், பிறகு வெங்கடேஸ்வரன்   வீட்டுக்குப் போவதையே பல நாட்களாக தவிர்க்கிறான்.

அவருக்குத் தன் வித்தையைப்  பற்றிய அகந்தையும் புகழில் ஆசையும் வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான். அப்போது ஒருநாள் வெங்கடேஸ்வரன் பாடிய ஒரு பழைய  கச்சேரியை வானொலியில் கேட்டு மனமுருகி, தரையில் அமர்ந்து அந்த ‘ராம பக்தி சாம்ராஜ்யம்‘ கீர்த்தனையைப் பாடுகிறான். மனம் நிர்மலமானதைப் போல் இருக்கிறது.

அடுத்த நாள் அவன் அதுவரை அறியாத ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நேற்று அவன் பாடிய கீர்த்தனையை வெகுவாகப் பாராட்டி, பாட்டில் இருந்த நுணுக்கங்களைக்  குறித்து விரிவாக உரையாடுகிறார். அவன் வீட்டின் மாடியில் குடியிருப்பவர் அவர். பின் இந்தப் பழக்கம் தொடர்கிறது. அவருக்காக இவன் பாடுகிறான். நுணுக்கமான அவரது அவதானிப்புகளுக்கு ஈடு கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் மேலும் நுணுக்கங்களுக்காக முயன்று என்று போகிறது நாட்கள்-, ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நுட்பமான அவதானிப்புகளும் ரசனையும் அவனுக்குச் சலிக்கத் தொடங்குகிறது.  அவரைத் தவிர்க்கத்  தொடங்குகிறான்.

அப்போதுதான் மேலே மேற்கோளில் சொன்ன அந்தச் சிந்தனை தோன்றுகிறது அவன் மனதில். அந்த ரசிகர் தனக்கு, தன்  பாடும் திறன் மீது, பூதாகாரமான ஒரு பிரக்ஞையை உருவாக்கித் தன்  கலை அப்பியாசத்துக்கு தடையாவதாகத் தோன்றும் அதே சமயம், வெங்கடேஸ்வரனின்  நினைப்பும் வருகிறது கல்யாணத்துக்கு. நுணுக்கமான ரசனை வெளிப்பாடுகளால் தன்  கலை குறித்த பூதாகரமான பிரக்ஞையை மறைக்க அல்லது தவிர்க்கத்தான் அன்று அவர் பல வெற்று உரைகளை ரசித்தாரோ? அல்லது, அவற்றை ரசிப்பது போலக்  காட்டிக் கொண்டாரோ, என்று நினைக்கும்போதே அப்படித்தான் என்று தோன்றுகிறது  அவனுக்கு.

இசையின் நுணுக்கங்களை அறியாத எளிய பாமர ரசிகர்களை ஊக்குவித்து தன்னை அவர் உதாசீனப்படுத்தியதாகக் கருதியதும் தவறோ  என  நினைக்கிறான் அவன். மாறாக, நுட்பமான ரசிகர்களின் மதிப்பீடுகளினால் தன் கலைக்கு ஏற்படும் இடையூறுகளை உணர்ந்துதான் எளிமையான ரசிகர்களை நோக்கி ஓடியிருக்கிறார் அவர் எனவும் நினைக்கிறான். மறுநாளே மனைவி குழந்தையுடன் வெங்கடேஸ்வரனைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போகிறான். இப்படி முடிகிறது கதை.

ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதிலும் மனித வாழ்வின் தவிர்க்கவியலா புற காரணிகள், சம்பவங்கள் உருவாக்கும் பாதிப்பைவிட,  மனநிலைகளின்  முரண்கள் உருவாக்கும் பாதிப்புகளே அலசப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனின் மனநிலையை தனது சுய அனுபவத்தின் மூலமாக ஏற்படும் ஒரு திறப்பின் வழியாக புரிந்து கொள்வது விவரிக்கப்படுகிறது. ஒரு கலைஞனுக்கு உவப்பளிப்பது என்ன என்ற கேள்வியும் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில், கலை குறித்தான அவதானிப்புகள், விமரிசனங்கள் கலைஞனின் மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் விவாதிப்பதாகப் பார்க்கலாம். அவை பாராட்டாக இருந்தாலும், குறை கூறலாக இருந்தாலும், அதில் நுணுக்கங்கள் மேலிட மேலிட ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சியைவிட, ஒருவித இறுக்கத்தையே (Discomfort) ஏற்படுத்துவதை சிலரிடத்தில் கவனித்திருக்கிறேன். முக்கியமாக, இந்தக் கதையில் வருவதைப் போல், இசைக்கலைஞர்களிடம் அதை மிகத்  தெளிவாகப் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சி தொடரில் மிக விரிவாக நேர்காணல் செய்யப்பட்டார். அவரது இசையமைக்கும் முறையும், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ராகத்தை தேர்ந்தெடுக்கும் காரணத்தையும் விளக்கும்படி கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் நேரடியாக பதில் சொல்லவேயில்லை. சற்றே  கூச்சத்துடன், அது அப்படி வந்தது அப்படி பண்ணினேன், என்பது போன்ற மிக எளிமையான ஒரு வரி பதில்களாலேயே அந்தக் கேள்விகளை எதிர்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்தில்கூட, கபில்தேவ் போன்றவர்கள் தம் திறமைகளைக் குறித்த நுணுக்கமான கேள்விகளை தவிர்த்து விடுவதையே கண்டிருக்கிறேன். A Genius can never  explain his genius என்று அந்த நேர்காணல்களை காணும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இந்தச் சிறுகதை வேறொரு கோணத்தை திறக்கிறது. தன் படைப்பின் நுணுக்கங்களை விவாதிப்பதை ஓரளவுக்கு மேல் ஒரு கலைஞனால் விரும்ப முடியாதோ என்ற கேள்வியை முன்  வைக்கிறது. அதே போல ஒரு ரசிகனுக்கு ஏற்படக்கூடிய, தன் ரசனையின் நுட்பத்தின் மேன்மை குறித்த ஒரு பெருமிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. உதாரணமாக, வெங்கடேஸ்வரனின் போக்கு குறித்து தொடர்ந்து சிந்திக்கும் கல்யாணம், ஒரு கட்டத்தில், மேன்மையான, நுட்பமான ரசிகன், சமரசமற்ற கலைஞனை மட்டுமே கொண்டாடுபவன் என்ற அகந்தை தனக்குத்தான் இருக்கிறதோ என்றே நினைக்கிறான்.

கூடுதலாக, ஆதவனின் நகைச்சுவை உணர்வுமிக்க அவதானிப்புகள்- அந்தப்  பாராட்டு விழாவில் கலெக்டர் பேசி முடித்தவுடன் பேச வருபவர்களுக்கு, விழா நாயகரைப் பாராட்டுவதன் கூடவே, நமது கலெக்டர் அய்யா சொன்னது போல என்றோ, கலெக்டர் அய்யா அழகாகச் சொன்னார்கள் என்றோ கலெக்டர்  பேச்சையும் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது,   நீதிபதி, தலைமை ஆசிரியர் ஆகியோர் தத்தம் தொழிற் கோணத்திலேயே  பாராட்டுவது போன்ற இடங்களும்- குறிப்பாக, வெங்கடேஸ்வரனின் மனைவி குறித்த கல்யாணத்தின் மனைவியின் கூர்மையான அவதானிப்புகளும்- என்று பல விஷயங்களை ரசித்துப் படிக்கக்கூடிய சிறுகதை, ‘அகந்தை

தத்துவம்- தத் + த்வம்

பானுமதி. ந

நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம்.” “கங்கா” முன்னுரையில் ஒரு சரமாக நெளியும் எழுத்தாளரின் தன்னுணர்வு.

ஆண்டவன் நம்மைக் கைவிடமாட்டான்; அவனை விட்டால் நமக்குக் கதியில்லை; நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை. எதற்கும் வேளை வரணும். வேளையேதான் தெய்வம். வேளை வந்தால் தெய்வம் வந்தது, தெய்வம் வந்தால் வேளை வந்தது. காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது”..(கஸ்தூரி)

கரையிலிருப்பவனுக்கு தன்னெதிரே விரிந்த கடலைப் பற்றி அதிசயிப்பு. கப்பலிலோ கட்டுமரத்திலோ கடலில் இருப்பவனுக்கு தான் மீளக் கரை இருக்கும் தெம்பு. தெய்வத்துக்கும், மனிதனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரமும் இதுதான் என்பது என் துணிபு. வந்தேன், பார்த்தேன் ஜெயித்தேன். இதை உலகில் யாத்திரையாகக் கொள்வோமா? ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா? முடிந்தால்தானே அது யாத்திரை? ஜெயித்தேன். ஜெயித்தபின் எங்கிருந்து வந்தேனோ அங்கு மீண்டேன். இது  உலகத்தின் கோள வடிவிற்கு ஒரு சான்றாய் நிற்பதோடு அல்லாமல் மனிதன் தெய்வமாகும் சரிதையும் அதுவேயாகும். கட்டிடம் முடிந்து கொண்டே வருகையில் ஓரொரு சாரமாய் தட்டிக் கொண்டே வரவேண்டியதுதானே? தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா?

நியாயம் அநியாயம் பாபம் புண்ணியம் நல்லது கெட்டது இவையெல்லாம் அப்புறம் அவையே இருக்கின்றனவோ இல்லையோ? என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது? அது எவ்வளவு தாங்கும்? அதுதான் முக்கியம அதுவேதான் அது அதுவன்றி எதுவுமில்லை எது அது, அதுதான் புரியவில்லை

“ஆண்டவனே! அவனைக் கூப்பிட்டுவிட்டால் அவன் வந்து விட முடியுமா? இல்லை, பக்தி வந்துவிடுமா? பக்தி வேண்டாம் அவன் வேண்டாம் எண்ணத்தின் வைராக்கியம்தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது? எவ்வளவு நீ தாங்குவாய்? நீ தேடுவது உன்னை வந்து அடையும்போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய்? உன் க்ஷேத்ரம் – பூமி எது? பூமிக்கேற்ற பயிர் பயிருக்கேற்ற பூமி உன் பூமியில் எது விளையும்?”(க்ஷேத்ரம்)

ஆண்டவனே, நீ என்னத்தை கீழே சிந்திவிட்டாய்? காலமும், யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ? ” ‘ஜமதக்னி’ கேட்கும் கேள்வி இது.

பூரணி’ சொல்லும் பதிலும் எண்ணங்களை அசைத்துவிடும். “தெய்வமா பெரிது? தேடுகிறதுதானே முக்கியம்?

மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விட மாட்டேன். மனிதன் மரண பயத்தில் எனக்கு நித்யத்தைத் தந்தான். உன்னில் என் அரூபம் அதன் சாயம் களைகிறது. உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவருக்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள்.”

சொல் அவருக்குப் பொருளாகவே கை கட்டி நின்றது. இருந்தும் சொல்லின் போதாமையை அவர் சுட்டிக் கொண்டேயிருந்தார். இறை என்பதை ஒத்துக்கொண்ட அளவிற்கு அவர் இறைவனை ஒத்துக் கொள்ளவில்லை. உயிரின் சுழற்சியும், தாகமும், பரிவும், பிரிவும், ஒளியும், ஒலியும் அவரது கதைகளின் உயிரோட்டம். மீனோட்டம் காட்டுவது போல் பாய்ந்து கொண்டே இருக்கின்றன மீன்கள். நதியின் துறைதோறும் பாயும் துளிகள்; எழுத்தின் சுவை. அதன் சூடும் இதுவே. “சத்யம் கடைசியில் ஜயிக்கலாம் ஆனால், சந்தேகத்துக்குத்தான் பவர் ஜாஸ்தி

யாகச் சொல்லால், சொல்யாகம் செய்தவர். சித்திரச் சொல்லால், சொற் சித்திரம் வரைந்தவர். எழில் சொல்லால் சொல் எழில் கூட்டியவர். சரக் கொன்றை எனத் தோற்றி  கொன்றைச் சரம் சூட்டியவர். தத் +த்வ்ம்- அது நீயே என வழி சொன்னவர். அதற்கான துணிவும் தெளிவும் கொண்டவர்.

லா. ச. ரா. – நினைத்துக் கொள்வோமே?

oOo

 

நினைவு முள் – ஜிஃப்ரி ஹாசன் கவிதை: ஒரு குறிப்பு

பீட்டர் பொங்கல்

hand-of-memory

பதாகையில் கவிதை எழுதுபவர்களில் றியாஸ் குரானா, ஜிஃரி ஹாசன், மஜீஸ் மூவருக்கும் ஒரு தனி மொழி அமைந்திருப்பது தன்னிகழ்வா அல்லது அப்படிப்பட்ட ஒரு கவிதை மரபின் வழியில் இவர்கள் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. மூவருக்கும் பொதுவாய் ஒரு தனி மொழி என்று சொல்வதில் ஒரு முரண்பாடு உள்ளது போல் தொனிக்கலாம். உண்மையில், இந்த மூவரின் கவிதைகளில் பலவும் ஒரு சிறுகதைக்குரிய இயல்பு கொண்டிருக்கின்றன.  ஒரு சில கவிதைகளை சிறுகதைகளாகவும் வளர்த்தெடுக்கலாம். ஆனால் இவர்கள் மூவரும் ஒரே மாதிரி எழுதுவதில்லை. றியாஸின் கவிதைகளில் உள்ள படிமத்தன்மை, நேர்க்கோட்டு மொழிதலின்மை பிற இருவரின் கவிதைகளிலும் இல்லை. ஜிஃப்ரி ஹாசனின் கவிதைகளில் உள்ள துயரம் நேரடியானது, அதைப் பிறரிடம் பார்க்க முடியவில்லை. மஜீஸ் வெகுச் சில கவிதைகளே பதாகையில் எழுதியிருந்தாலும் அவர் எழுதுவதிலுள்ள நுட்பமான நகைச்சுவை மிகவும் மதிப்பு மிக்கது என்று தோன்றுகிறது, அது இயல்பாய் வெளிப்படுவதாலும், அதை அதிகம் காண முடியாமையாலும்.

இவ்வாரம் ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஜிஃப்ரி ஹாசன் பதாகையில் எழுதிய கவிதைகளில் உள்ள ஆறுதலற்ற வலி இதில் இல்லை,  ஒரு நேர்மறைத்தன்மை கொண்ட காரணத்தால் அவர் எழுதியதில் வித்தியாசமான கவிதை.  அமைதியை நாடும் வகையில், துயரை விடுபடும் வகையில் எழுதியிருக்கிறார். வழக்கமாக, துயரில் மேலும் மேலும் ஆழ்த்துவதாகவே அவர் எழுதி வருகிறார். அவர் கவிதைகளில் ஏதோ ஓர் இடத்தில் துயர் மேலோங்கி பிறவனைத்தையும் விழுங்கி விடுகிறது.

இந்தக் கவிதையில் உள்ள ‘பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன’  என்பதில் உள்ள எளிய கவித்துவம் திரைப்பாடல்களுக்கு வெளியே மதிப்பிழந்து விட்டது என்று நினைக்கிறேன். அதில் ஒரு கற்பனைத்தன்மை இருக்கிறது. பாதையெங்கும் நினைவுகளின் நிழல் என் மேல் படிந்தது என்பதை இவ்வாறு உருவகப்படுத்தியிருப்பது அழகாக இருந்தாலும், இந்தக் கவிதை ஒரு பயணத்தைப் பற்றிய கவிதை என்பதால் அதற்கு இங்கு இடமில்லை என்று சொல்ல முடியாது.

எந்த இடத்தில் பிரிந்தோமோ/ அந்த இடத்தில் சேர்வோம்

என்பதைத் தொடர்ந்து அந்த வரி வருகிறது, அதன் பின் வரும் வரிகள்-

உங்கள் முகத்தில்/ நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்/ உங்கள் இதயங்களில்/ ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்/’

என்று செல்கின்றன.

முதலில் பிரிவு நேர்ந்த இடத்தில், அதற்கான காரணங்கள் உள்ள இடத்தில், ஒன்று சேர வேண்டும் என்ற விருப்பம். அடுத்து, பயணம், பாதை எங்கும் நினைவுகள். இவை பிரிதலின் நினைவுகள் என்பதால், ஒரு சிரிப்பும் நல்லெண்ணமும் மட்டும் போதும் என்ற இறைஞ்சுதல். இதையடுத்து, இதுவரை சொல்லப்பட்டதே மீண்டும் சொல்லப்படுகிறது-

நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை/ நம் சேரிடங்களாக்கி/ களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்

இதைக் கற்பனை கலந்த ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்று கொள்ளலாம். இலக்கியத்தில் கற்பனையின் இடம் என்ன என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. அவநம்பிக்கைகளை கற்பனை கொண்டுதான் கடந்தாக வேண்டும். எனவே புன்னகை விதைக்கப்படுகிறது (புன்னகை  மலர்தலால் நடுவோம் என்றாகும் போல)

இந்தப் புன்னகைக்குப் பின் என்ன நடக்கிறது? இனி, நம் சொற்கள் ஒவ்வொன்றும் நடந்து முடிந்த கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஒரு புன்னகை நம் சொற்களின் பொருளை மாற்றி விடுகிறது.

நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை /உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை/ ஒரு யுகப் பின்னடைவை/ இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன

இறுதி வரிகள்-

துயர் படிந்த ஒரு காலமும்/ அதன் குரூரக் காயங்களும்/ ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே

இப்போது நாம் இது என்ன பயணம் என்று கேட்டுக்கொண்டால், புன்னகையையும் நல்லெண்ணத்தையும் நோக்கிய பயணம் என்று சொல்ல முடியும், இல்லையா? நாம் இந்தப் பயணத்தை மட்டும் மேற்கொள்ள முடிந்தால் கடந்த காலம் இவ்வளவு துயரம் அளிப்பதாகவும், அதன் குரூரங்கள் இவ்வளவு வலி தருவதாகவும் இருக்காது.

இது ஒரு நம்பிக்கைதான். யதார்த்தத்தில் நடக்கும், நடக்காது போகலாம். ஆனால் ஒரு கவிதை என்று வரும்போது, அதில்கூட இது போன்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்த முடியாது என்றால் எப்படி? நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பனைதான் மெய்ப்பிக்க வேண்டும், இல்லையா?

அதை இந்தக் கவிதை செய்கிறது என்று நினைக்கிறேன். நினைவுமுள் என்ற தலைப்பு முதலில் ஒரு உறுத்தல், வலி என்பது போல் உள்ளது. அதன்பின் கடைசியில் கடிகார முள் போல் அதுவும் இடம் மாறக்கூடியதுதான் என்ற ஒரு நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது. நம் துயர நினைவுகள் எப்போதும் ஒரு முள்ளாய் நமக்கு வலிக்க வேண்டியதில்லை, புன்னகையை நோக்கிய ஒரு பயணத்தில் எல்லாம் மாறலாம். நினைவுமுள் துயரிலிருந்து நம்பிக்கைக்கும், கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்துக்கும் நகரக்கூடியதுதான்.

ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஒளிப்பட உதவி – cafepress.com