எழுத்து

ஜாம்

எஸ்.சுரேஷ்

சில்க் போர்டு டிராபிக்கில்
சிக்கிகொண்ட பூனை ஒன்று
கார் போனட் மேல் ஏறியது

காரில் அமர்ந்திருந்த ஐடி தம்பதியைப் பார்த்து
“இன்னிக்கி ஜாம் அதிகம்
நடுவுல ரெண்டு மாடு வேற படுத்திருக்கு
இதுங்களுக்கு வெவஸ்தையே இல்லை”
என்று கூறிவிட்டுச் சென்றது

சற்று நேரம் கழித்து
இரண்டு மாடுகள் காரை தாண்டி சென்றன
தம்பதியை பார்த்த காளை மாடு-
“என்ன முறைக்கறீங்க
எங்களுக்கும் ஜாம்தான்”

ஆதவன் எழுதிய ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்– 

தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது என்பது பல சமயங்களில் புற உலக வசீகரங்களிலிருந்தும் உறவுகள் மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்ட வாழ்க்கை விசைகளிலிருந்தும் நம்மை விலக்கிக் கொள்வதாகவே உள்ளது. இது படைப்பாளிக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் கூடத்தான் பொருந்துகிறது. இலக்கிய ருசி கண்டபின் பிற விஷயங்கள் முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. உதாரணமாக, பழைய பள்ளி நண்பர்கள் சேர்ந்து உருவாக்கும் வாட்ஸப் குழுக்கள் எல்லாமேகூட பொருளிழந்து விடுகின்றன- அவற்றில் இலக்கிய விவாதங்கள் இடம் பெறாவிடில். அவர்கள் எல்லாரும் ஓரிடத்தில் நின்றிருக்க நாம் எங்கோ நகர்ந்தாற்போல், அல்லது அவர்கள் வேறு திசையில் சென்றுவிட, நாம் தனித்து நிற்பது போன்ற ஒரு இடைவெளியை உணர முடிகிறது.

வாசகன் நிலையே இப்படி என்றால், லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?

ஆதவன் எழுதிய சிறுகதை, ‘புதுமைப்பித்தனின் துரோகம்‘ விவாதிப்பது இதைத்தான். வேணு ஒரு தீவிர இலக்கிய எழுத்தாளன். ராம் அவனது பழைய நண்பன், இப்போது வெற்றிகரமான வணிகன். நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கும் இருவரும் ராம் தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். வேணுவுக்கு இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவின் ருசியே பிரதானமாக இருக்கிறது. அந்த உணவின் ருசிக்கு கூடுதல் சுவை சேர்க்க, தற்போதைய புரவலராக தன் முன் அமர்ந்திருக்கும் ராமுக்கும் தன் இலக்கியவாதி பாவனையின் பிரசன்னத்தை உருவாக்க முயல்கிறான் வேணு. அதற்கு ஏற்றாற்போல், தான் புழங்கும் வட்டங்களில் வேணுவின் எழுத்துக்கு உள்ள வரவேற்பை, குறிப்பாக பெண்களிடத்தில் அவன் எழுத்து வாசிக்கப்படுவதைச் சொல்லி வேணுவை மகிழ்விக்கிறான் ராம்.

பேச்சு வளர வளர, தான் புதிதாக அடைந்திருக்கும் இலக்கிய ரசனையை வேணுவின் இலக்கிய ஹோதாவின் மீது தீட்டிப் பார்க்கும் ஆர்வம் ராமுக்கு வருகிறது. புதுமைப்பித்தனைப் பற்றி போகிறது பேச்சு. புதுமைப்பித்தனின் சில கதைகளை இருவரும் விவாதிக்கிறார்கள். வேணுவுக்கு இப்போது ராமின் நோக்கத்தின் மீது சந்தேகம் வந்துவிடுகிறது. ராம் புதிதாக அணிந்திருக்கும் இலக்கிய ஆர்வலன் வேஷம் தன் ஒரே ஒரு தனித்துவத்தையும் கழற்றி அம்மணமாக்கும் செயல் என்று எண்ணத் தொடங்குகிறான் வேணு. அதனால், புதுமைப்பித்தன் கதைகள் மீதான ராமின் வாசிப்பினை கடுமையாக நிராகரிக்கத் தொடங்குகிறான் அவன்.

புதுமைப்பித்தன் கதைகளில் மனைவி பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறாமையில் அவரது தோல்வியடைந்த மண வாழ்க்கை வெளிப்படுகிறது என்ற ஒரு கோணத்தை ராம் சொல்ல, அப்படியெல்லாம் எளிமைப்படுத்த முடியாது என்று மறுக்கும் வேணு, ‘செல்லம்மாள்’, ‘காஞ்சனை’ கதைகளைக் குறிப்பிடுகிறான். ஆனால் ராம், அந்த இரு கதைகளிலுமே மனைவி பாத்திரங்கள், ஒன்று இறந்து போகின்றன அல்லது கொல்லப்பட இருக்கின்றன என்கிறான். இதை far-fetched என்று நிராகரிக்கிறான், வேணு. அதற்கு பதிலாக ராம், அப்படியும் இருக்கலாம், ஆனால் இந்தக் கோணத்தை க.நா.சு.கூட ஒப்புக்கொள்கிறாரே என்றதும் வேணுவின் வாய் அடைத்துப் போகிறது. க.நா.சுவின் இலக்கிய ஹோதா தன்னை ஏற்குமா என்று ஏங்கும் ஒரு இளம் எழுத்தாளன் அவன். தன் நண்பன் க.நா.சுவுடன் சகஜமாக இலக்கியம் பேசக்கூடியவன் என்று அறிந்தவுடன், அந்த இனிய மாலைப் பொழுதின் ஒளி அவிந்து விடுகிறது. பிறகு கடனே என்று பேசிக்கொண்டிருந்துவிட்டு ராமின் காரிலேயே தான் இருக்கும் குறுகலான, திருவல்லிக்கேணி சந்திற்கு வெளியிலேயே இறங்கி கொண்டு சோர்வாக வீடு திரும்புகிறான்.

அங்கு தன் ஆற்றாமையை, தான் பட்ட அவமானத்தை, மனைவியிடம் எரிந்து விழுந்து தணித்துக் கொள்கிறான். அதன் பின், கை கால் முகம் கழுவி உள்ளே நுழைகையில், தான் ஒரு சராசரி நடுத்தர வர்க்க கணவனாகவே நடந்து கொண்டிருப்பதை நினைத்துக் கொள்ளும்போது புதுமைப்பித்தனின் இன்னொரு கதை, ஆபிசில் சாதாரண குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவும் விளங்கும் ஒரு நடுத்தர வர்க்க கணவன் பற்றிய கதை, நினைவுக்கு வருகிறது. ,உடனே அவனுக்கு புதுமைப்பித்தன் மீது வெடித்துக் கிளம்புகிறது கோபம்- உனக்கென்ன வேண்டியிருந்தது, இந்த நடுத்தர வர்க்கம் மீதான satire, ராம் போன்ற சோஃபிஸ்டிகேடட் வாசகர்களின் அங்கீகாரத்துக்காக உன் வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்த துரோகி, என்று மனதார புதுமைப்பித்தனைத் திட்டித் தீர்த்தவுடன் அவன் மனதில் ஒரு சாந்தம் தோன்றுகிறது, அன்பான குரலில் மனைவியிடம் காபி கொண்டு வரச் சொல்கிறான். இப்படி முடிகிறது கதை.

ஆனால் நம் கேள்விகள் தொடங்குகின்றன. வேணு விரும்புவது எதை? பொருளியல் பிரச்னைகளில் சிக்குண்டு, அதிருப்திமிக்க, ஆனால் இலக்கியவாதி எனும் ஒரு அடையாளத்தோடு வாழும் இந்த வாழ்வா, அல்லது செல்வந்தனான, இலக்கியமும் ரசிக்கக்கூடிய ராமின் வாழ்வா? புதுமைப்பித்தனை வேணு நிஜமாகவே திட்டுகிறானா? (அது அவர் மீதான செல்லச் சிணுங்கல் அல்லவா?) ஒரு கோணத்தில் ‘புதுமைப்பித்தனின் துரோகம்,’ எழுப்பும் கேள்வி, எப்படிப்பட்ட வாழ்வு உயர்ந்தது- அர்ப்பணிக்கப்பட்ட, அதனால், கோபதாபங்கள் மற்றும் பொருளியல் பற்றாக்குறைகள் மிகுந்த வாழ்வா, அல்லது லௌகீக வாழ்க்கையில் வெற்றி பெற்றது போதாதென்று கலைஞனின் ரசனையிலும் கை வைக்கும் dilettante என்று சொல்லப்படக்கூடிய பணக்கார வாழ்வா?

ஒரு எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஒரு உண்மையான, நேர்மையான கலைஞன் தனக்கும் தன் வர்க்கத்துக்கும் விசுவாசமாக இல்லாமல் உரித்துப் போடும் போலித்தனங்கள் பிழைக்கத்தெரிந்த ரசிகர்களால் சுவீகரித்துக் கொள்ளப்படும்போது அவனே நகைப்புக்கிடமாகிறான் என்றாலும், அவனது முதல் தேர்வும் லட்சியமும் வாழ்க்கை குறித்த, உண்மை குறித்த ஒரு நேர்மையான விசாரணைதானே? இதில் தன் வர்க்கம், பிறர் வர்க்கம் என்று பார்ப்பதற்கு இடமுண்டா என்ன?

அகம்

    நித்ய சைதன்யா

”கிழட்டுத் தாயோளி உயிர வாங்குதானே” என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டே பன்னீர் பாட்டில்கள் அடங்கிய சாக்குப்பையை தோளில் துாக்கிவைத்தேன். உருவத்திற்குப் பொருந்தாமல் பஞ்சைப்போலிருந்தது .

”பேபி ஸ்டோர்ல குடுத்துட்டு. உங்கக்காவுக்கு ரெண்டு தேங்கா வாங்கிக்கோடா மாப்ள” என்றது கிழம். கோமணம் மீறி விதைப்பை ஒன்று வெளித்தெரிந்தது.   எண்ணெய்க் குவளையால் பன்னீரை மொண்டு வெள்ளைப்பிளாஸ்டிக் பன்னீர் பாட்டிலில் புனல்கொண்டு ஊற்றினார். எனக்கு எப்போதும் அவர்மீது ஒருவித ஏளனம் கலந்த எரிச்சல்தான். குடும்பத்தின் சவால்களுக்குப் பயந்த பெருங்கோழை.

அந்த அறையெங்கும் பன்னீரின் நறுமணம். வாசலில் நிற்கும்போதே அதுவரை மனதில் இருந்த எரிச்சல் மறைந்து ஒரு புன்னகை மலரும். எத்தனை வெறுப்புவந்தாலும் தாத்தாவின் அறைக்கு மீண்டும் மீண்டும் என்னை வரச்செய்யும் மாயம்.

நினைவுதெரிந்த நாளில் இருந்து தாத்தாவின் கோலம் இதுதான். நன்கு வெண்மை ஒளிரும் கூந்தலும் தொப்புளைத் தொடும் தாடியும். எப்பவும் இடுப்பில் மட்டும் கதர் வேட்டி துளி அழுக்கின்றி. வெகுதொலைவில் கண்கள் இருப்பதைப்போன்று காட்டும் சோடாப்புட்டி கண்ணாடி. நரைத்த வெண்ணிற ரோமங்கள் உடம்பெங்கும் அடர்ந்திருக்கும்.

அதிகாலையில் எழுந்து பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். கண்ணாடியற்று கலைந்திருக்கம் வெண்தாடியில் அவரின் முகம் குழந்தையினுடையதைப் போலிருக்கும். கதர்கடை பார்சோப்பினை துண்டில் சுருட்டி நாராயணப்பேரிக்கு குளிக்கக் கிளம்புவார். இளவெயிலில் இடுப்பில் துண்டைக்கட்டியபடி தலைக்குப்பின்னால் கைகளால் ஏந்திப்பறக்கவிட்ட வெள்ளைக்கதர்வேட்டி சடசடத்து ஒலிக்க வீடு திரும்புவார். மழைக்காலங்களில் கூட மாறாத காலைக்கடமை அது.

ராயகிரியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் திடீரென வழியில் தோன்றுவார். “ஓய் மாப்ள எங்கவே ஓடுறீரு..உங்கக்காட்ட பால்குடிக்கவாடே”என்பார் ரோட்டில் நின்றபடி.  நாணிக்குறுகி தயங்கி நிற்பேன். மஞ்சள்பையில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டோ கடலை மிட்டாய் பாக்கட்டோ எடுத்துக்கொடுப்பார். ஒருநாளும் வீட்டிற்கு வருவதில்லை. நானும் ஒருபோதும் அம்மாவைப்பாக்க வீட்டுக்கு வாங்க என்று அழைத்ததுமில்லை. அம்மாவிடம் போய்ச் சொன்னால் சட்டென்று அவள் முகத்தில் ஒருகுழைவு தோன்றும். முந்தானையால் கண்களை ஒற்றிக்கொள்வாள். அம்மா பிறந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சண்டை நாறும். அம்மாவின் வாயில் இருந்து தெறித்துவிழும் வார்த்தைகளால் தாத்தா நடுங்கிப்போவார். ”நீச முடிவான் பாழுங்கிணத்துல என்னெக்கொண்டு தள்ளிப்போட்டானே.  இந்தப்பிஞ்சுக்காக நான் இன்னும் உயிரோட இருக்கேன்” அம்மாவின் பெருமூச்சு அன்றெல்லாம் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். தாத்தாவின் மீது கரிய இருள் படியத்தொடங்கியது அவ்வாறுதான்.

தெருவில் சாக்குப்பையோடு நடந்துசெல்வது கூச்சமாக இருந்தது.. சாந்தியின் வீட்டில் யாராவது வாசலில் நிற்கிறார்களா என்று நோட்டமிட்டேன். கருத்த பன்றியொன்று அதன் காலிடுக்கில் குமுறிஒலித்த இரண்டு குட்டிகளோடு நுரைத்தோடிய சாக்கடையை கிளறிக்கொண்டிருந்தது. அருணாக்கயிற்றில் இறுக்கியிருந்த கைலி நழுவி விழுந்துவிடும் போலிந்தது. ஏறுவெயில் ததும்பி தெருவெங்கும் பொன்னுருகிய மினுக்கம்.

சந்தையில் இருந்து காய்கறிப்பையோடு திரும்பிக்கொண்டிருந்த அக்கா என்னைப்பார்த்து நின்றாள். நெற்றியில் வெள்ளித்துளிகளென வியர்வையின் முத்துப்புடைப்பு. முந்தானையால் ஒற்றியபடி”அந்தமானிக்கு ஊர்சுத்த போயிராத. வீட்டுக்குவா. ஒருமணியானா சாப்பாடு கொடுக்க உன்னை உலகமெல்லாம் தேடணும்.” என்றாள். நான் ம் என்று தலையாட்டினேன்.

தாத்தாவும் அக்காவும் -என் சாதியில் அம்மாவின் அம்மாவை அக்கா என்றழைப்போம் -ஒரே வீட்டிற்குள் வாழ்ந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் நேருக்குநேராக பேசிக்கொள்வதில்லை. இருபதாண்டுகளாக இப்படித்தான் இருந்து வருகிறார்கள். நாற்பதைத்தாண்டிய தாத்தா ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடிப்போனார். ஆறுமாத காலம் எங்கெங்கோ தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள ஆசிரம் ஒன்றில் சிரைக்காத தாடியும் வெள்ளைத்துண்டுமாக அவரைக்கண்டறிந்த சீனியாபிள்ளை வந்து சொல்லவும் அக்கா தன் மூன்று பெண்மக்களோடு ஆசிரமம் சென்றாள். அதன்பின் வீடு திரும்பியவர் யாரோடும் பேசுவதில்லை.  அவர் அறிந்து வைத்திருந்த பன்னீர் ஊதுபத்தி தயாரித்து கடைகளுக்குச் சென்று கடனுக்குப் போட்டுவருவார்.  கிடைக்கும் பணத்தை பத்திரப்படுத்திக்கொள்வார். குடும்பத்தின் செலவுகளில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. எப்போதாவது  தேங்காய்களோ பத்து நாட்டு வாழைப்பழங்களோ சிறுபருப்பு அரைக்கிலோ என தோன்றியதை வாங்கிக்கொடுப்பார்.  அவற்றை நான் கொண்டு கொடுக்கும் ஒவ்வொருமுறையும் அக்காவின் முகம் கோபத்தில் விரியம். ஆனாலும் ஒருநாளாவது அதுவேண்டும் இதுவேண்டும் என அக்கா என்னிடம் கேட்கச்சொல்லியதே இல்லை. யார் இறந்த துஷ்டியிலும் தாத்தா கலந்து கொள்வதில்லை. பத்துத்தறிகள் போட்டு இரண்டு ஜவுளிக்கடைகளை நடத்திவந்தவர் திடீரென இப்படி மாறிப்போனது ஆச்சரியம் என்று ஊரே வியப்போடு பேசியது. ”கொட்டப்பெலம் இல்லாதவன்” என்று அம்மா காறித்துப்புவாள். அக்கா தாத்தாவைத்திட்டி ஒருசொல் அவள் உயிரோடிருக்கும் வரை சொன்னதில்லை. தாத்தாவின் மீது என்றுமே மாறாப்பிரியம் அவளுக்கு.

மூன்று பெண்மக்களையும் அக்காவே மாப்பிள்ளைப்பார்த்து கட்டிவைத்தாள். குடியிருக்க ஒருவீட்டைத்தவிர மற்ற அனைத்தும் குமருகளை கரையேற்றியதில் கரைந்து போனது. மிச்சமிருந்த பணத்தை அக்கா வட்டிக்கு விட்டிருந்தாள்.

பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு அக்காவின் வீட்டில் தங்கி வேலை தேடிக்  கொண்டிருந்தேன். ராயகிரியில் இருந்தவரை நித்தமும் சில்லறைச் சண்டைகளும் அடிதடியும் என்னால். மதிக்கு நான்கொடுத்த எட்டுப்பக்க காதல் கடிதத்ததால் இரண்டுமுறை ஊர்க்கூட்டம் நடத்தவேண்டியதாயிற்று. முருகேசனோடு சேர்ந்து பீடிபுகைக்கவும் பழகியிருந்தேன். சட்டைப்பையில் ஒருகட்டு செய்யதுபீடியைப் பார்த்த ஒருநாள் அம்மா பிடறியில் அறைந்தாள். நான் அரளிவிதைகளைத்தேடி மந்தைக்குப்போனேன். முறுக்கும் அதிரசமும் கொஞ்சம் அரிசியும் கொண்டுவந்த அக்காவின் கைகளில் என்னைப் பிடித்துக்கொடுத்து” இவன ஊருக்கு கூட்டிட்டுப்போ. அவங்க அப்பனமாதிரி இப்பவே அரளிக்கொட்டையை அரைச்சுக்குடிச்சிடுவேன்னு மிரட்டுறான்.“ என்று அம்மா அழுதாள்.

வந்த முதல்நாளே தாத்தா என்னை இழுத்துவைத்துக்கொண்டார். பிரபல பிராண்டின் ஊதுபத்தி டப்பாக்கள் பளபளப்போடு  நறுமணம்உமிழ தாத்தாவின் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நான்கு கட்டுகள் கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் காரைவீட்டில் தாத்தா தெருவோர முதல் அறையை எடுத்துக்கொண்டிருந்தார். தாத்தாவின் அறையைத்தாண்டி சமையலறை. அடுத்த அறைக்குள் அக்காவின் உலகம் மரக்கட்டில் ஒன்றும் சில பித்தளைப்பாத்திரங்கள் ஈயப்பாத்திரங்கள் சுவரில் தொங்கும் ரவிவர்மாவின் சரஸ்வதிதேவி சாமிப்படம் என்றும் பரந்து கிடக்கும். சமையல் நேரம்போக மற்றநேரமெல்லாம் அக்கா அசையா விழிகொண்டு தரையை வெறித்திருப்பாள். பனையோலை விசிறியை வலதுகை தன்னிச்சையாக அசைத்துக்கொண்டிருக்கும்.

கைகளில் கரிபடிய தாத்தா பலகையொன்றில் ஊதுபத்திக்குச்சிகளின் மீது மணக்கும் எஜென்ஸை பரவலாக ஊற்றி குலுக்கி அறைந்து சேர்த்துக்கொண்டிருந்தார். வெள்ளைரோமங்களுக்கிடையில் மார்புகள் குலுங்குவது பார்க்க ஆர்வமாக இருக்கும். தரையில் விரித்துவைத்திருந்த தாளில் வாசனை நனைத்த குச்சிகளை பத்துப்பத்தாக எண்ணி வைக்கும்வேலை எனக்கு.

”மும்மலம்னா என்னன்னு தெரியுமாடே உனக்கு” சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல் சட்டென்று பேசஆரம்பித்தார் என்னிடம். இருண்ட கிணற்றுக்குள் மிதக்கும் நிலவைப்போன்று தாத்தாவின் கண்கள் எனக்கு திகில் நிறைந்த அனுபவத்தை ஊட்டின. தாத்தாவிற்கு இரண்டு விசயங்களில் மட்டுமே அதீத ஆர்வமிருந்தது. எப்போதும் அதைப்பற்றியே அவரைச்சந்திக்கும் அத்தனை பேரிடமும் பேசுவார். ஒன்று பெண்கள் மற்றொன்று துறவு. பெண்களைப்பற்றி அவரின் வார்த்தைகளைக்கேட்கும்போது அந்தக்கணமே துறவியாக மாறிவிடத்தோன்றும். பட்டினத்தாரின் பாடல்களைத் தொடாமல் அவருடைய எந்தப்பேச்சும் நிறைவடைவதில்லை.

நான் தினத்தந்தியின் வண்ணப்பக்கத்தில் தெரிந்த தசைமுகடுகளின்மேல் எண்ணிய பத்திக்குவியலை வைப்பதில் கவனம் செலுத்தினேன். ”போயா நீரும் உம்ம உலக்கத் தத்துவமும். குடும்பத்த வெச்சு காப்பாத்த வக்கில்ல. பெரிசா ஞானிகணக்கா பேச்சைப்பாரேன்“ என்று இளக்காரம் வழிய தாத்தாவை முறைப்பேன். அம்மாவின் வார்த்தைகள்  அப்போதெல்லாம் வெறிகொண்டு பொங்கிப்பொங்கி வரும்.

”ஆணவ மலம்தான் மனுசன சுலபமா விட்டுப்போகாது.கேட்டியா மாப்ள. நான் பெரிய அறிவாளி.  பணக்காரன்.  நிறைய சொத்துபத்து வெச்சுருக்கேன். இப்படி எதாவது ஒருவிதத்துல நம்மை ஆணவமலம் அழுக்காக்கிக்கிட்டே இருக்கும்.” தாத்தா தொடர்ந்து பசு பதி என சைவசித்தாந்தத்தின் தத்துவநெறிகளை விளக்கிக்கொண்டு பத்தி உருட்டுவார். ஒருமணிக்கு அக்காவின் நிழல் முற்றத்தில் தெரிந்ததும் எழுந்து ஓடுவேன். அக்காவின் சமையல் ருசி என்னை அவளுக்கு அடிமையாக்கி வைத்திருந்தது. ஆவிபறக்க சாப்பாட்டுத்தட்டை தாத்தாவின் அறைக்குள் கொண்டுவைத்துவிட்டு அந்த அறைப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேன். எப்படியும் வாரத்தில் இரண்டுமூன்று நாட்கள் தாத்தாவிடம் வசக்கேடாகச் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அந்தநாட்களில் ஊதுபத்தியின் வாசமும் சைவசித்தாந்தமும் என்னை போதையில் ஆழ்த்தும்.

வெக்கை உறைய வெயில் தேங்கிய மதியம். ஆஸ்பெட்டாஸ் கூரையிலிருந்து அமிலம் வழிந்தது. தெரு ஆள்நடமாட்டம் குறைந்து சவலைப்பிள்ளை போலிருந்தது.

”பிரம்மஸ்ரீ சுவாமிகளின் வீடுதானே” என்றது வாசல் குரல். கட்டிலில் படுத்திருந்த அக்கா மாதநாவலில் உச்சமடைந்திருந்த என்னிடம்”யாருனு போய்ப் பாருல“ என்றாள். நரேந்திரன் வைஜெயந்தியின் பெருத்த மார்பகங்களை முறைத்தபோது நாவலைத்தரையில் கவிழ்த்து வைத்து எழுந்தேன். விரித்திருந்த போர்வையை காலால் சுருட்டி உதைத்தேன்.

 

மத்தியானச் சோர்வில் தாத்தா ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார். மதியம் துாங்கும் பழக்கம் இல்லாதவர். தாடியை ரசனையோடு வலதுகைவிரல்களால் சிக்கெடுத்து நீவி கண்களை மூடியிருந்தார். மரநாற்காலியின் மீது கட்டிஅட்டையில்  திருவாசகம்.

வாசலில் நின்றிருந்தவர் தாத்தாவைப்போல தாடிவைத்து இடுப்பில் காவிவேட்டி கட்டியிருந்தார். தாடியும் தலைமுடியும் மார்புரோமங்களும் நல்ல கருப்புநிறத்தில் இருந்தன. காவிக்கலரில் தோள்ப்பை ஒன்று அவரின் வலதுபுஜத்தில் வீ்ங்கித்தொங்கியது.

”பிரம்மஸ்ரீ மாணிக்கம் சுவாமிகளின் வீடு இதுதானே” என்றார். அவர் கேட்டதொனியில் மிக பண்பட்ட ஒருமனோபாவம் இருந்தது. நான் ஒருகணம் அதிர்ந்து மறுகணம் பீறிட்டெழுந்த சிரிப்பை மென்றுதின்று ”உள்ள வாங்க” என்றேன். மனம் நம்பமுடியாமல் வியப்பில் ஆழ்ந்தது.

”தாத்தா“ என்றேன் அறைமுன் நின்று. ”என்ன..யாரு” என்று பதறிவிழித்தவர். என்னைக்கண்டதும் ஆசுவாசம் அடைந்தார். விலகியிருந்த வேட்டியை சரிப்படுத்திக்கொண்டார்.

”உங்களத்தேடி ஆளு”

”வரச்சொல்லு”

அதற்குள் அவர் தாத்தாவின் அறைக்கு வந்திருந்தார். வாசலில் நின்று இரண்டுகைகளையும் இணைத்துக்கூம்பி புருவமத்தியை இரண்டுகட்டைவிரல்கள் தொடும்படி வணங்கினார். தாத்தாவும் அப்படி வணங்கியபின் ”வாங்க “ என்று வரவேற்றார். நான் இரும்பு நாற்காலியை கொண்டுவந்து போட்டேன்.

வந்தவர் நாற்காலியில் அமராமல் தாத்தாவின் காலருகே பயபக்தியோடு தரையில் அமர்ந்தார். நான் தாத்தாவின் முகத்தைப்பார்த்தேன். அதுவரை நானறியாத புதுபாவனை அவர் மீது வந்து இறங்கியிருந்தது.

உள்ளாடைகள் எப்போதும்

மஜீஸ்

 

உள்ளாடைகள் எப்போதும்
அவமானத்தின்
குறியீடுகளாகவே மட்டும்
பழக்கப்பட்ட அவளுக்கு
முப்பது தாண்டியும்
உள்ளூரில் எந்த முடவனும்
கரம் பிடிக்க தயாரில்லை யென்றதும்
சம்பிரதாயங்களும், நிர்பந்தங்களும்
கழுத்து நீட்டச் சொல்ல
ஓசைகள் பெருத்த நகரத்து
அழுக்கனின் அந்தப்புரத்திற்கு
அடிமையாக வேண்டியாயிற்று
கண்ணீரால் லௌகீகக் காயங்களை
கழுவிக்கொள்ளும் நகரத்து
மனை வாழ்க்கையின்
நீட்சியில்
அவள் பழகிக்கொண்டதும்
மாற்றிக்கொண்டதும்
கொங்ரீட் காடுகளில் கசியும்
வெயிலுக்கு ஏதுவாக
கட்டப்பட்ட கொடியில் எந்த வித
சங்கோஜமுமின்றி துவைத்த
உள்ளாடைகளைக் காயப்போட
மட்டுமே.

தத்துவம்- தத் + த்வம்

பானுமதி. ந

நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம்.” “கங்கா” முன்னுரையில் ஒரு சரமாக நெளியும் எழுத்தாளரின் தன்னுணர்வு.

ஆண்டவன் நம்மைக் கைவிடமாட்டான்; அவனை விட்டால் நமக்குக் கதியில்லை; நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை. எதற்கும் வேளை வரணும். வேளையேதான் தெய்வம். வேளை வந்தால் தெய்வம் வந்தது, தெய்வம் வந்தால் வேளை வந்தது. காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது”..(கஸ்தூரி)

கரையிலிருப்பவனுக்கு தன்னெதிரே விரிந்த கடலைப் பற்றி அதிசயிப்பு. கப்பலிலோ கட்டுமரத்திலோ கடலில் இருப்பவனுக்கு தான் மீளக் கரை இருக்கும் தெம்பு. தெய்வத்துக்கும், மனிதனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரமும் இதுதான் என்பது என் துணிபு. வந்தேன், பார்த்தேன் ஜெயித்தேன். இதை உலகில் யாத்திரையாகக் கொள்வோமா? ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா? முடிந்தால்தானே அது யாத்திரை? ஜெயித்தேன். ஜெயித்தபின் எங்கிருந்து வந்தேனோ அங்கு மீண்டேன். இது  உலகத்தின் கோள வடிவிற்கு ஒரு சான்றாய் நிற்பதோடு அல்லாமல் மனிதன் தெய்வமாகும் சரிதையும் அதுவேயாகும். கட்டிடம் முடிந்து கொண்டே வருகையில் ஓரொரு சாரமாய் தட்டிக் கொண்டே வரவேண்டியதுதானே? தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா?

நியாயம் அநியாயம் பாபம் புண்ணியம் நல்லது கெட்டது இவையெல்லாம் அப்புறம் அவையே இருக்கின்றனவோ இல்லையோ? என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது? அது எவ்வளவு தாங்கும்? அதுதான் முக்கியம அதுவேதான் அது அதுவன்றி எதுவுமில்லை எது அது, அதுதான் புரியவில்லை

“ஆண்டவனே! அவனைக் கூப்பிட்டுவிட்டால் அவன் வந்து விட முடியுமா? இல்லை, பக்தி வந்துவிடுமா? பக்தி வேண்டாம் அவன் வேண்டாம் எண்ணத்தின் வைராக்கியம்தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது? எவ்வளவு நீ தாங்குவாய்? நீ தேடுவது உன்னை வந்து அடையும்போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய்? உன் க்ஷேத்ரம் – பூமி எது? பூமிக்கேற்ற பயிர் பயிருக்கேற்ற பூமி உன் பூமியில் எது விளையும்?”(க்ஷேத்ரம்)

ஆண்டவனே, நீ என்னத்தை கீழே சிந்திவிட்டாய்? காலமும், யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ? ” ‘ஜமதக்னி’ கேட்கும் கேள்வி இது.

பூரணி’ சொல்லும் பதிலும் எண்ணங்களை அசைத்துவிடும். “தெய்வமா பெரிது? தேடுகிறதுதானே முக்கியம்?

மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விட மாட்டேன். மனிதன் மரண பயத்தில் எனக்கு நித்யத்தைத் தந்தான். உன்னில் என் அரூபம் அதன் சாயம் களைகிறது. உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவருக்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள்.”

சொல் அவருக்குப் பொருளாகவே கை கட்டி நின்றது. இருந்தும் சொல்லின் போதாமையை அவர் சுட்டிக் கொண்டேயிருந்தார். இறை என்பதை ஒத்துக்கொண்ட அளவிற்கு அவர் இறைவனை ஒத்துக் கொள்ளவில்லை. உயிரின் சுழற்சியும், தாகமும், பரிவும், பிரிவும், ஒளியும், ஒலியும் அவரது கதைகளின் உயிரோட்டம். மீனோட்டம் காட்டுவது போல் பாய்ந்து கொண்டே இருக்கின்றன மீன்கள். நதியின் துறைதோறும் பாயும் துளிகள்; எழுத்தின் சுவை. அதன் சூடும் இதுவே. “சத்யம் கடைசியில் ஜயிக்கலாம் ஆனால், சந்தேகத்துக்குத்தான் பவர் ஜாஸ்தி

யாகச் சொல்லால், சொல்யாகம் செய்தவர். சித்திரச் சொல்லால், சொற் சித்திரம் வரைந்தவர். எழில் சொல்லால் சொல் எழில் கூட்டியவர். சரக் கொன்றை எனத் தோற்றி  கொன்றைச் சரம் சூட்டியவர். தத் +த்வ்ம்- அது நீயே என வழி சொன்னவர். அதற்கான துணிவும் தெளிவும் கொண்டவர்.

லா. ச. ரா. – நினைத்துக் கொள்வோமே?

oOo