எழுத்து

கலைந்த நினைவு…

மோனிகா மாறன்

 

முடிவிலா தார்ச்சாலை..,.
மௌனத்தை ரீங்கரிக்கும் வண்டுகள்
சலனமற்ற நீர்ப்பரப்பு.,
பனியில் ஒளிரும் நிலாக்கிரணங்கள்…
இதம்தேட வைக்கும் வாடை….
முழு நிலவொளியிலும்
தன்னை வெளிப்படுத்தா நிழல்கள்….
உயிர்த்துடிக்கும் உன் அழுகை…
என் இயலாமை
உதிரம்…வலி…
உயிர்ப்பிண்டமாய்
என்னுள்ளிருந்து உன்னை
சுரண்டி எடுத்த அக்கணம்..
மயக்க ஊசியை மீறித் திறக்கும் என் விழிகளில்
உதிரத்தில் பொதிந்த உயிர்ச்சதை…
எந்த நொடியில் நீ தோன்றினாய் என் கருவறையில்
மூன்றாம் மகவாய்…
உனைக் கருவருக்க
ஆயிரம் காரணங்களைக் கூறினோம்….
என் சொல்வேன் பதில் நான்..
உலகறியா உன் சுவாசத்திற்கு
நீ மகனா? மகளா?
அறியவில்லை
நிச்சயம் உணர்கிறேன்
பிறந்திருந்தால்
சாய்ந்திருப்பேன் என் இறுதிநாட்களில் உன் தோள்களில்…
அறுத்தெரிந்தாலும்
மரணம் வரை எனைத்
தொடரத்தான் போகிறாய்
ஏன் அம்மா என்ற
ஒற்றைச் சொல்லுடன்…
என் இரவுகள் கரையத்தான் வேண்டும்
உன் உன்மத்த நினைவுகளுடன்..
இனி வருமா என் கனவுகளில்
கவிதைகளும்…மழலைகளும்…

கவியின்கண்- “வேண்டாம்”

எஸ். சுரேஷ்

வேண்டாம்

எனக்கு மிகவும் வயதாகி விட்டது என்பதால் அல்ல,
மிகவும் கிழடு தட்டி விட்டது என்பதால் அல்ல-

வேண்டாம் என்று நான் சொல்வது,
ஆம் என்பதால் எதுவும் கிடைக்காமல்
மேலும் உக்கிர தனிமைதான் மிஞ்சும்
என்ற அச்சமே காரணம்

– சீமாட்டி கி னோ வாஷிகா

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – கிரெய்ம் வில்சன்

காதலைச் சொல்லியபின் பதிலுக்கு காத்திருத்தல் ஒரு வாதையாக இருக்க வேண்டும். எனக்கு அது பற்றி நேரடியாக எதுவும் தெரியாது, காதலைச் சொன்ன அனுபவம் இல்லை.. ஆனாலும்கூட ஒன்று நிச்சயம். தன் காதலைத் தெரிவித்து சம்மதத்துக்குக் காத்திருக்கும் ஒருவன் உன் நண்பனாக இருந்தால் உனக்கும் காதல் ஒரு வாதையாக இருக்கும். ஓரிரு நண்பர்கள் விஷயத்தில் இந்த அனுபவம் இருப்பதால் இது உண்மை என்று தீர்மானமாய்ச் சொல்ல முடியும்.

பிரச்சினை என்னவென்றால், காதலைச் சொன்னவன் கணக்கில்லாத சூழ்நிலைகளைக் கற்பனை செய்து கொள்கிறான்- அவற்றை உண்மையாக எடுத்துக் கொண்டு தன் நண்பர்களிடம் தொடர்ந்து தீர்வு கேட்க ஆரம்பித்துவிடுகிறான். இப்படிதான் ஒரு முறை நான் ஒரு நண்பனிடம், நீ கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள், என்று அறிவுரை சொன்னேன். அதனால் அவன் மிகவும் வருத்தப்பட்டு அடுத்த சில நாட்கள் தனிமையில் சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தான். ஆனால்கூட அவனால் ரொம்ப நாளைக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியவில்லை. மனதில் புதிய கற்பனை உதித்ததும் அந்த மாதிரி நடந்து விடுமா, அப்படி நடந்து விட்டால் நான் என்ன செய்வேன், என்று கேட்டுக்கொண்டு ஓடி வந்துவிட்டான்.

என் நண்பன் தன் காதலைச் சொன்ன கணத்திலிருந்து அவனது காத்திருப்பு நீண்டுகொண்டே சென்றது (கடைசியில் அவள் சம்மதித்தாள்). ஆனால் இப்போதெல்லாம் காதலர்கள் சுலபத்தில் உணர்ச்சி வசப்படுவதில்லை- ஆற அமர யோசித்துதான் முடிவெடுக்கிறார்கள். என்னோடு வேலை செய்திருந்த ஒருவருடன் சமீபத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது அவர் தன் மகன் அமெரிக்காவில் இருந்த காலத்தில் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதாகவும், அதை வெகுகாலம் மறைத்து வைத்திருந்ததாகவும் சொன்னார். நீ எந்தப் பெண்ணையாவது காதலிக்கிறாயா, என்று பலமுறை அவர் கேட்டிருக்கிறார், நீ அவளைத் திருமணம் செய்து கொள், பிரச்சினையில்லை என்றுகூட சொல்லியிருக்கிறார். ஆனால் மகன், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றே சாதித்து வந்திருக்கிறான். அப்புறம் கடைசியில் ஒரு வருஷம் போனபின், தான் காதலிக்கும் விஷயத்தைச் சொல்லி, அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்லியிருக்கிறான். இத்தனை நாள் இதை ஏன் சொல்லவில்லை, என்று என் நண்பர் கேட்டதற்கு, திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று இருவரும் யோசித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னானாம் அவன்.

அந்தக் காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சில காலம் பழகியவுடன் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வார்கள், அல்லது உறவை முறித்துக் கொள்வார்கள். அப்படிச் செய்யாவிட்டால் ரகசியமாகச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட அவசியம் இல்லை. பொதுவாக அப்போதெல்லாம் காதலைச் சொன்னால் சரி என்று பதில் வரும் என்று நம்ப முடிந்தது. இருவரில் ஒருத்தருக்காவது திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. இதில் தயக்கம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் தனிப்பட்ட காரணமாக இருப்பதைவிட சமூகம் சார்ந்த விஷயங்களாகதான் இருக்கும். திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புக் கொள்வார்களா, கல்யாணம் நல்லபடி நடக்குமா, உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருந்தது. எனக்குத் தெரிந்து ஒரு ஜோடி ஏழு வருடம் காதலித்த பின்னரே கல்யாணம் செய்து கொள்ள முடிந்தது. எப்போதோ அவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாராகி விட்டனர், ஆனால் தத்தம் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்க ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!

ஆனால் இப்போதெல்லாம் இளைய தலைமுறையினர், பிடித்திருந்தால், எல்லா இடங்களுக்கும் சேர்ந்தே போகின்றனர், ஆனால் திருமணம் செய்து கொள்வது குறித்து மௌனம் சாதிக்கின்றனர் என்பது பெற்றோருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இங்கே யாரும் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிப்பதும் இல்லை, காத்திருப்பதும் இல்லை. நாம் ஒருவரையொருவர் விரும்புகிறோமா இல்லையா என்று இருவரும் சந்தேகப்பட்டுக் கொண்டு, இந்த இணக்கம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று பார்த்துவிட்டு, அதற்குப் பின்னரே தனக்கு தகுந்த துணையாக இருப்பார்களா என்று முடிவெடுப்பதுபோல் தெரிகிறது.

இளைஞர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதை அடைவதற்கான பொருளாதார சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. முன்னெல்லாம் ஒருவர் வருமானத்தில் குடும்பமே வாழ வேண்டியிருந்ததால் இது போன்ற சுதந்திரம் இருந்ததில்லை.. இப்போது இந்தப் பொருளாதாரச் சுதந்திரம் போதாதென்று பணியிடத்தில் வளர்ச்சியடைவதற்கு திருமணம் குடும்பம் போன்ற பந்தங்கள் முட்டுக்கட்டையாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள். எப்போது திருமணம் செய்வது, யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பதை முடிவு செய்வதில்கூட வேலை வாய்ப்பு வசதிகள் கணக்கில் வருகின்றன. எனவேதான் நிரந்தர உறவு பற்றி எந்த முடிவும் எடுக்காமல் சுமுகமாகப் பழகும் ஜோடிகளை நாம் அதிகம் பார்க்க முடிகிறது. “ஓ காதல் கண்மணி” படத்தில் மணிரத்னம் இது போன்ற உறவுகளைச் சித்தரிக்க முயன்றார்.

இன்னொரு விஷயம். எல்லாரும் தனிக்குடித்தனம் என்பதால் அம்மா அப்பாவைச் சம்மதிக்க வைத்தால் போதும் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இதற்குப் பழகிப்போய் விட்டார்கள், தம் பிள்ளைகள் காதலிப்பது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் திருமண தயக்கம்தான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. வேறென்ன, உறவு முறிந்தால் பிள்ளைகள் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலைதான். காலம் போய் விடும், ஆண்டொன்று கூடி வயதாகிவிடும். சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரம் குழந்தைகள் பெற்றுக்கொண்டு குடும்ப உறவில் நிலைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னம்கூட இருக்கிறது. எனவே திருமணம் தாமதமாவது கவலைக்கு இடம் கொடுக்கிறது. இதில் வெளியே சொல்ல முடியாத கவலை, காதல் முறிவு திருமணச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய பின்னடைவுதான்.

ஆனால் இந்த விஷயத்தில் நாம் மெல்ல மெல்ல மேற்கத்திய சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு இது நகரிலுள்ள உயர்குடியினரில் ஏற்பட்டுள்ள மாற்றமாக மட்டும் இருக்கிறது என்பது உண்மைதான். பெற்றோர் மனநிலை முழுமையாக மாற வேண்டும். நாம் நம் குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனில் நம்பிக்கை வைக்க வேண்டும். இக்கால இளைஞர்கள் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக, சரியான முடிவெடுப்பார்கள், காதல் முறிவைத் தாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த முடிவெடுத்தாலும் பெற்றோரின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் அம்மா அப்பாவுக்கு சரியான பெண்ணாகவோ பிள்ளையாகவோ இருக்கக்கூடும் என்றெல்லாம் பொருத்தம் பார்த்து ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது நினைத்துப் பார்க்க கடினமான விஷயம்தான். குழந்தைகள் சுயநலமானவர்கள் என்று பல பெற்றோர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல.

அதற்காக இப்போதெல்லாம் பெரியவர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்யும் வழக்கம் போய் விட்டது என்று அர்த்தமில்லை. நம் சமூகச் சூழலில், கல்லூரியிலோ வேலை செய்யும் இடத்திலோ, நம் மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது இன்றும் சுலபமில்லை. எனவே, சம்பிரதாய திருமணங்களின் அவசியம் இருக்கவே செய்கிறது. ஆனால் அவற்றின் நடைமுறை மாறிவிட்டது. இப்போதெல்லாம் காதலித்த பெண்ணும் பையனுமே சம்பிரதாய திருமணம் செய்து கொள்கின்றனர். தங்களுக்கு ஏற்ற துணையை திருமண தகவல் தளங்களில் தேடுகின்றனர், பேசிப் பார்க்கின்றனர், மேலே செல்லலாமா என்று முடிவு செய்கின்றனர். அதன்பின் பெற்றோரிடம் சொல்லி ஏற்பாடுகளை முடித்துக் கொள்கின்றனர்.

முன்னெல்லாம், ஜாதகம், குடும்பப் பின்னணி என்று தேடுவார்கள், அல்லது, “எனக்குப் பிடித்ததுதான் வேண்டும்,” என்று சொல்வார்கள். ஆனால் இப்போது இளைஞர்கள் தெளிவாகி விட்டார்கள் என்று நினைக்கிறேன்- நம் நட்பு வட்டத்தில் சரியான துணை கிடைக்காதபோது நவீன வசதிகளைப் பயன்படுத்தி மரபுச் சூழலில் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறார்கள். இது தவிர டிண்டர் போன்ற ஆப்புகள் வேறு இளைஞர்களுடன் கைகோர்க்க வந்து விட்டன.

ஏதோ இளைஞர்களின் காதல் ஏற்பாடுகளும் திருமணமும் அறிவார்ந்த செயல்திட்டங்கள் என்பது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன், இது கதையின் ஒரு பகுதிதான். உண்மையில், முடிவெடுப்பதில் உணர்ச்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தக் கவிதையில்கூட சீமாட்டி கி னோ வாஷிகா சொல்வது போல், “மேலும் உக்கிர தனிமையே மிஞ்சும்” என்பதால்கூட ‘சரி’ என்று சொல்லத் தயங்கி, ‘மாட்டேன்’ என்று சொல்லலாம். இத்தனை குறைவான சொற்களில் இவ்வளவு உக்கிரமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் இதுபோன்ற கவிதைகள் மிக அரியவை. இளைஞர்களுக்கு என்னென்ன இலட்சியங்கள் இருந்தாலும், அவர்கள் எத்தனைதான் யோசித்து தீர்மானித்தாலும், பல முடிவுகள் உணர்ச்சிவசப்பட்டு செய்யப்படுபவை. இதனால்தான் எப்போதும் இருப்பதைப் போலவே இப்போதும் மகத்தான இல்லறம், மனமொத்த இல்லறம், சாதாரண இல்லறம், முறிமணம் என்று பலவற்றைப் பார்க்க முடிகிறது.

சைதன்யா (மூன்றாவது) – அருண் கொலாட்கர்

தமிழாக்கம்:  காஸ்மிக் தூசி

europe1-0601

சைதன்யா
தொலைவில்
தெரிந்தபோது
புராணிகர் கூட்டம் ஒன்று
மலைச்சரிவில்
மேய்வதை நிறுத்திவிட்டு
நிமிர்ந்து பார்த்தது.

சைதன்யா
அவ்வழியே சென்றபோது
மலைகள்
அசையாதிருந்தன.
சைதன்யா
பார்வையில் இருந்து
மறைந்தபோது
கழுத்து மணி
குலுங்கி ஒலித்தது.
பிறகு புராணிகர் கூட்டம்
மேய்ச்சலுக்குத் திரும்பியது.

 

000

 

ஒளிப்பட உதவி – https://alexnberra.files.wordpress.com

இரு துப்பறிவாளர்கள்

அஜய் ஆர்

poe

ஷெர்லாக் ஹோம்ஸ் குற்றப்புனைவு இலக்கிய வானில் தோன்றிய முதல் நாவலான ‘A Study in Scarlet’ல், அவருடைய துப்பறியும் ஆற்றலைப் பார்த்து வாட்ஸன், ஹோம்ஸ் போவின் (Poe) அகஸ்ட டுபானை (C. Auguste Dupin) தனக்கு நினைவுபடுத்துவதாகக் கூற, அதற்கு-

‘Sherlock rose and lit his pipe. ‘No doubt you think you are complimenting me in comparing me to Dupin, he observed ‘Now in my opinion, Dupin was a very inferior fellow. That trick of his of breaking in on his friends’ thoughts with an apropos remark after a quarter of an hour’s silence is really very showy and superficial. He had some analytical genius, no doubt; but he was by no means such a phenomenon as Poe appeared to imagine.’

என்று ஹோம்ஸ் பதில் அளிக்கிறார். மூன்று வழக்குகளை மட்டுமே துப்பறியும் டுபான் குறித்து இவ்வாறு ஹோம்ஸ் ஏன் கூறுவதாக ஆர்தர் கானன் டோயல், ஹோம்ஸின் முதல் வருகையிலேயே அமைக்க வேண்டும்?

இதில் பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை என டோயல்,

“Edgar Allan Poe, who, in his carelessly prodigal fashion, threw out the seeds from which so many of our present forms of literature have sprung, was the father of the detective tale, and covered its limits so completely that I fail to see how his followers can find any fresh ground which they can confidently call their own. “

என்று ஒரு கட்டுரையில் சொல்வதின் மூலம் அறியலாம்.

போ இந்த வகை எழுத்தின் முன்னோடி என்பதால் மட்டுமே அவரைக் குறிப்பிடுகிறார் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் முன்னோடி எழுத்தாகவே இருப்பினும் அதைச் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை அந்த முன்னோடி எழுத்தின் தரம்தான் ஏற்படுத்த வேண்டும். இதை “covered its limits so completely” என்று டோயல் சொல்வதின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இதை ‘ஹோம்ஸ்’ என்ற பாத்திரம் ‘டுபான்’ என்ற இன்னொரு பாத்திரத்தின் மீது வைக்கும் விமர்சனத்தின் உள்சென்று தேட வேறொன்றும் இல்லை என்றும் கடந்து செல்லலாம்தான். ஆனால் டுபான்/ ஹோம்ஸ் இருவர் வரும் கதைகளை ஒருசேரப் பார்ப்பது, பெயர் குறிப்பிடப்படாத டுபானின் தோழர்/ வாட்ஸன் கதைசொல்லிகளாக இருப்பது, (குற்றப்புனைவுகளில் இரட்டையர்களின் கூட்டணி -ஒருவர் துப்பறிபவர், இன்னொருவர் உதவியாளர் – என்ற மோஸ்தர் இங்கிருந்தே ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது), காவல்துறை அதிகாரிகள் துப்பறிவாளர்களின் புலனாய்வு முறைகளை அவநம்பிக்கையோடு பார்ப்பது என சட்டென்று தெரியும் ஒற்றுமைகளைத் தவிர வேறு சில திறப்புக்களையும் அளிக்கக்கூடிய விஷயம் இது.

The Murders in the Rue Morgue“ல் கதைசொல்லியும் / டுபானும் ஓர் இரவு, நகர வீதிகளில் வலம் வருகின்றனர். 10-15 நிமிடங்கள் பேசிக்கொள்ளாமல் நடந்த நிலையில், கதைசொல்லி அந்தக் கணம் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை டுபான் சரியாகக் குறிப்பிடுகிறார். ஹோம்ஸ், வாட்ஸன் இருவரும் அவர்கள் அறையில் அவரவர் வேலையில் ஆழ்ந்திருக்க, திடீரென்று ஹோம்ஸ் வாட்ஸன் நினைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி சரியாக கூறும், வாட்ஸன் வெளியே எங்கேனும் சென்று வந்தபின் அவர் எங்கு சென்றிருந்தார் என்று சரியாக யூகிக்கும், பல நிகழ்வுகளை நாம் ஹோம்ஸ் கதைகளில் காண முடிகிறது.

‘Now, brought to this conclusion in so unequivocal a manner as we are, it is not our part, as reasoners, to reject it on account of apparent impossibilities. It is only left for us to prove that these apparent ‘impossibilities’ are, in reality, not such.’ (“The Murders in the Rue Morgue”)

என்ற டுபானின் கூற்றிற்கும்

‘How often have I said to you that when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth?’ (-The Sign of Four)

என்ற ஹோம்ஸின் கூற்றிற்கும் கருத்தளவில் அதிக வித்தியாசம் கிடையாது இல்லையா?

“The Murders in the Rue Morgue”/ ‘A Study in Scarlet‘ இரண்டின் முடிவையும் பார்ப்போம். இரண்டிலும் குற்றத்திற்கு காரணமானவர், குற்றம் நடந்த இடத்தில் தனக்கு மிக முக்கியமான ஒன்றைத் தொலைத்து விடுகிறார். துப்பறிவாளர் அதைப் பற்றியும் குற்றத்தின் பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டு துப்பறிந்தபின், குற்றவாளி தொலைத்தது தன்னிடம் உள்ளதாக நாளிதழில் விளம்பரம் செய்கிறார். அதைப் படித்து அங்கு வரும் குற்றவாளி பிடிபடுகிறார்.

இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால், டோயல் போவை நகல் எடுத்தவர் என்ற ஒற்றைத்தன்மையான விமர்சனத்தை வைக்கலாமா? ‘The Purloined Letter‘/ ‘A Scandal in Bohemia‘ கதைகளில் சில விடைகள் கிடைக்கின்றன. இரண்டு கதைகளின் களமும் ஒன்றுதான். அரச குடும்பத்தில் முக்கியமான ஒருவர் (ஒரு கதையில் ஆண் இன்னொன்றில் பெண்) மட்டுமின்றி, அரசே பெரிதும் பாதிக்கப்படக்கூடிய கடிதம் எதிராளியிடம் சிக்கி விடுகிறது. எதிராளி யார் என்று தெரிந்தாலும், என்ன தேடினாலும் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம் துப்பறிவாளர்களிடம் வருகிறார்கள். இதுவரை இரு கதைகளும் கிட்டத்தட்ட ஒரே பாதையில் செல்கின்றன. கடிதத்தைக் கண்டுபிடிக்கும் முறை எப்படி இருக்கிறது?

கடிதத்தை ஒளித்து வைத்தவன் தேடுபவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு, அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வான் என்ற கருத்தின்படி டுபான் செயல்பட்டு கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். ”Counter-intuitive‘ என்று டுபானின்/ எதிராளியின் மனவோட்டத்தைச் சொல்லலாம். ஆனால், ஹோம்ஸ் என்ன செய்கிறார்? தனக்கு முக்கியமான ஒன்றைக் காக்க முனையும் மனித மனத்தின் இயல்பான சுபாவத்தின்மீது நம்பிக்கை வைத்து கடிதத்தின் இருப்பிடத்தை இன்னொரு வழியில் கண்டுபிடிக்கிறார். ஒப்பீட்டளவில் எளிமையாக/ நேரடித்தன்மையுடன் இருந்தாலும், தனக்கென தனிப் பாதையை உருவாக்கும் ஹோம்ஸைப் பார்க்கிறோம். “Where does a wise man hide a pebble?” என்று G.K. Chestertonன் ‘The Sign of the Broken Sword‘ (1911ஆம் ஆண்டு வெளிவந்தது) கதையில் வரும் கூற்றையும், அவரின் ‘The Invisible Man‘ கதையையும் இந்த இரு கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவற்றிலும் ஒத்த கூறுகளைக் காணலாம்.

டுபானை முன்வைத்து மூன்று கதைகளை மட்டுமே எழுதி இருக்கிறார் போ. போவின் கதைகளில் சரடாக ஓடும் இருண்மையின் சாயலை ‘The Murders in the Rue Morgue‘ல் உள்ள குற்றம் நிகழ்ந்த இடம் மற்றும் இறந்தவர்கள் சடலங்கள் பற்றிய முகத்திலறையும் அப்பட்டமான வர்ணனைகளில் காண முடிகிறது. டுபானின் இருள் மீதான ஈர்ப்பைப் பற்றிச் சொல்லும்-

“It was a freak of fancy in my friend (for what else shall I call it?) to be enamored of the Night for her own sake; and into this bizarrerie, as into all his others, I quietly fell; giving myself up to his wild whims with a perfect abandon. The sable divinity would not herself dwell with us always; but we could counterfeit her presence. At the first dawn of the morning we closed all the messy shutters of our old building; lighting a couple of tapers which, strongly perfumed, threw out only the ghastliest and feeblest of rays. By the aid of these we then busied our souls in dreams –reading, writing, or conversing, until warned by the clock of the advent of the true Darkness.”

என்ற பத்தியிலும் இருண்மையின் அம்சம் உள்ளது. இதில் போவின் பிற வகைமைக் கதைகளின் தாக்கத்தைக் காணலாம்.

இதற்கு மாறாக, டுபான் வரும் மூன்றாவது/ இறுதி கதையான ”The Purloined Letter‘ல் இருண்மையான அம்சங்கள் இல்லாததோடு, அது வேறெந்த வகையின் பாதிப்பும் இல்லாத ‘அறிவுசார்’ விளையாட்டாக / துப்பறியும் கதையாக உள்ளது. ஒருவேளை போ டுபானை முன்வைத்து இன்னும் பல கதைகள் எழுதி இருந்தால், நமக்கும் டுபானைப் பற்றிய இன்னும் தெளிவான சித்திரம் கிடைப்பதோடு, ‘macabre‘ அம்சங்கள் இல்லாத ‘தூய’ குற்றப்புனைவுகளும் உருவாகி இருக்கக்கூடும். அதை டோயல் செய்கிறார்.

ஹோம்ஸும் தனிமை விரும்பி, விசித்திர பழக்கவழக்கங்கள் உடையவர்தான், ஆனால் அவற்றில் இருண்மையைக் காண முடியாது, ‘eccentric‘ என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். ஹோம்ஸை வைத்து டோயல் 56 சிறுகதைகளுடன் 4 நாவல்களும் எழுதியதால் அந்தப் பாத்திரத்தை சிற்சில நிகழ்வுகள் மூலம் இன்னும் விரிவாக்க முடிகிறது. வாட்ஸனுக்கு ஆபத்து எனும்போது ஹோம்ஸ் அடையும் பதைபதைப்பைச் சுட்டிவிட்டு சட்டென்று விலகி விடும் இடங்கள் ஓர் உதாரணம். இவை ஹோம்ஸ் என்ற துப்பறியும் இயந்திரத்தின் உள்ளே உள்ள இதயத்தை சுட்டுகின்றன.

The Hound of the Baskervilles‘ நாவல், “The Adventure of the Devil’s Foot”,”The Adventure of the Lion’s Mane” சிறுகதைகளில் அமானுஷ்ய/ bizarre செயல்கள் இருந்தாலும் இவை வாசகனுள் குறுகுறுப்புடன் கூடிய பரபரப்பை உண்டாக்குகின்றனவே தவிர இவற்றை இருண்மை /ஹாரர் அம்சங்கள் கொண்டவை என்று சொல்ல முடியாது. பணம்/ பகை/ பொறாமை இவற்றுக்கான கொலை/ திருட்டு என்று மட்டுமில்லாமல், அரசியல் சார்ந்த பின்னணியிலும் (முக்கிய ஆவணங்கள் திருட்டு போவது) கதைகளை அமைத்து, வகைமைகளின் சாயல் இல்லாத மரபார்ந்த குற்றப்புனைவுகளுக்கு டோயல் வித்திடுகிறார்.

The Murders in the Rue Morgue‘ கதையில் பாரிஸ் நகரின் மாலை/ இரவு நேரக் காட்சிகள் மற்றும் அதன் தெருக்களின் வர்ணனைகள் இருந்தாலும், அந்நகரம் கதைகளிடமிருந்து பிரிக்கமுடியாத அளவிற்கு ஒன்றவில்லை. (இதற்கும் அவர் மூன்று கதைகளே எழுதியது முக்கிய காரணம் என்றாலும், நமக்கு கிடைத்துள்ள கதைகளை வைத்து இந்த முடிவுக்குத்தான் வர முடிகிறது).

மாறாக மூடுபனி படர்ந்த லண்டன் நகரம், அதனூடாக கடகடக்கும் குதிரை வண்டிகளின் சத்தம், மூடுபனியை ஊடுருவ முயன்று சிறிய வெற்றியையே பெறும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சம் என பொதுவாகவே புறச்சூழலையும், குறிப்பாக லண்டன் நகரையும் ஒரு பாத்திரமாக ஆக்குவதில் டோயல் வெற்றி பெறுகிறார். ‘The Hound of the Baskervilles‘ல் அமானுஷ்ய சூழலை உருவாக்குவதில் (வாசகனுக்கு உண்மை தெரிவதற்கு முன்னால்) மக்கள் அஞ்சும் பயங்கர மிருகத்திற்கு மட்டுமின்றி, முக்கியப் பாத்திரம் வசிக்கும் ‘Baskerville Hall‘, அதன் அருகில் உள்ள moorன் வெறுமையான பெரும்பரப்பு, அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் இவற்றுக்கும் பங்கு உள்ளது.

டோயல் குற்றப்புனைவுகள் எழுத ஆரம்பித்த காலத்தில் போவின் தாக்கம் அதிகமிருந்தாலும்,

“…On this narrow path the writer must walk, and he sees the footmarks of Poe always in front of him. He is happy if he ever finds the means of breaking away and striking out on some little side-track of his own.”

என்று போவைப் பின்தொடரும் எழுத்தாளர்களின் / துப்பறிபவர்களின் இலக்கு என்று அவர் குறிப்பிடுவதை ஹோம்ஸ் அடைந்து, தனக்கென புதுப்பாதையை வகுத்து, புதிய திசைகளில் பயணித்து, துப்பறிவாளர்களின் பிதாமகராக உள்ளார். அவரைக் கொண்டாடும் நேரத்தில், ‘முன்னத்தி ஏரான” டுபானை தவிர்க்க/ மறக்க முடியாது.

oOo

 

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

 

சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு

சுனில் கிருஷ்ணன்

suneel

எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறப்பிதழுக்கு பொறுப்பாசிரியர் எனும் முறையில் தவிர்க்க முடியாத (ஒருகால் சரியாக திட்டமிட்டிருந்தால் தவிர்த்திருக்கக்கூடிய) காரணங்களால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு இதழுக்கு பங்களிப்பளித்த எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். எனினும் நேர்காணலையும் கட்டுரைகளையும் வாசித்தபோது காலதாமதத்தை மீறி மிகுந்த மன உவகை அளித்தது.

பதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழின் மிக முக்கிய அம்சம், அதில் இடம்பெறும் எழுத்தாளரின் மிக விரிவான நேர்காணல் தான். நாஞ்சில் நாடன் அனேக முறை நேர்காணல்கள் அளித்திருந்தாலும்கூட எந்த நேர்காணலிலும் பதிவாகாத பல தகவல்களும் கோணங்களும் பதாகை நேர்காணலில் பதிவாகியிருந்தன. வேணுகோபாலின் முதல் நாவல் நுண்வெளி கிரணங்கள் வெளிவந்து ஏறத்தாழ இருபது வருடங்கள் கடந்துவிட்டன. தமிழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான வேணுகோபாலுக்கு இதுதான் விரிவான முதல் நேர்காணல் என்பதில் பதாகைக்கு பெருமை என்பதை தாண்டி இது ஒரு அதிர்ச்சிகரமான சங்கடமாகத்தான் இருக்கிறது.

நாஞ்சிலுடன் நேர்காணல் செய்த த. கண்ணன், கோவை சுரேஷ், மற்றும் பல தியாகு புத்தக நிலைய நண்பர்கள் தான் வேணுகோபால் நேர்காணலையும் செய்திருக்கிறார்கள். உரையாடலைப் பதிவு செய்து அதை கேட்டு எழுத்தாக்கி, பின்னர் பிழை திருத்தி பலகட்ட திருத்தங்கள் செய்த பின்னர் அது தன் இன்றைய இறுதி வடிவத்தை அடைந்திருக்கிறது. மிகுந்த உழைப்பைக் கோரும் இப்பணியை த. கண்ணன் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நாராயண் தேசாய், நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் என அவருடைய நேர்காணல்களை வாசிக்கும் போது அவருக்கென நேர்காணல் பாணி ஒன்றை அடைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. வேணுகோபாலின் இளமைக்கால நினைவுகள், வேளாண்மையுடனும் மண்ணுடனும் அவருக்கிருக்கும் உறவு, தமிழாசிரியர் பணி என்று அவருடைய தனிவாழ்வின் ஏற்ற இறக்கங்களை இயல்பாக பதிவு செய்கிறது. தி.ஜா, லா..ரா, கு..ரா, கு.அழகிரிசாமி, போன்ற முன்னோடி ஆளுமைகளின் கதைகளை நுணுகி ரசித்ததை வாசிப்பது பரவசமாக இருக்கிறது. குறிப்பாக தி.ஜா மீது பெரும் மதிப்பிருக்கிறது. .நா.சு, ஜெயகாந்தன், தமிழினி வசந்தகுமார் என பல ஆளுமைகளைப் பற்றி வாஞ்சையுடன் பேசுகிறார். வேணு எதையுமே எழுதாத கல்லூரி காலம் தொட்டே தன்னை எழுத்தாளராகவே உணர்வதாகச் சொல்கிறார். அவர் வாசித்த மொழியாக்க நூல்களை பற்றி, தொகுக்கப்படாத அபுனைவு கட்டுரைகளைப் பற்றிச் சொல்கிறார். மிக முக்கியமாக அவருடைய படைப்புகளையும் அதன் உருவாக்கப் பின்னணிகளையும் பேசுகிறார். எல்லாவகையிலும் சு.வேணுகோபால் பற்றிய மிக முக்கியமான நேர்காணலாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சு.வேணுகோபால் இணையத்தில் புழங்குபவர் அல்ல. அவருடைய கதைகள் பலவும் இதழ்களில் வெளியாகாமல் நேரடியாகவே புத்தகங்களாக வெளிவந்தவை. கணிசமான எண்ணிக்கையில் நாவல்களாகவும் குறுநாவல்களாகவும் எழுதியதும் காரணமாக இருக்கலாம். வேணுகோபால் மீதும் அவருடைய படைப்புலகின் மீதும் இன்றைய இணைய வாசகர்களுக்கு பரிச்சயம் ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் இவ்விதழை உருவாக்க முனைந்தோம்.

இணையத்தில் வேணு சரியாகச் சென்று சேரவில்லை எனும் எங்கள் எண்ணத்தை உடைக்கிறது பாஸ்டன் பாலாவின் கட்டுரை. இணையத்தில் வேணுகோபால் பற்றிய தகவல்கள், கட்டுரைகள், விமர்சனங்களை தேடித் தேடி தொகுத்திருக்கிறார். ஜெயமோகன் துவங்கி மல்லிகார்ஜுன் வரை பல்வேறுபட்ட ஆளுமைகள் வாசகர்கள் வலைதளங்களிலும் சமூக வலைகளிலும் எழுதியவற்றை சுட்டிகளோடு அளித்திருக்கிறார். .மோகனரங்கன், செல்வேந்திரன், ராதாக்ருஷ்ணன், பத்மஜா, ஜ்யோவ்ரோம் சுந்தர் என பலர் எழுதியதன் மேற்கோள்களை கொலாஜ் போல் மேஜையில் பரப்பி வெட்டி ஒட்டி வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது. இத்தனை குறிப்புகளை வாசித்துவிட்டு பாஸ்டன் பாலா இறுதியில் அவைகளைப் பற்றி தன்னளவில் ஒரு மதிப்பீட்டையும் வைக்கிறார்.

சுவேணுகோபாலின் படைப்புலகத்தை பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையில்இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்” என்கிறார். வேணுவின் படைப்புலகிலிருந்து இரைச்சலின்றி உணர்வு உச்சம் கொள்ளும் தருணங்களை சுட்டிக் காட்டுகிறார்.

வேணுகோபாலின் ஏழு குறுநாவல்களை முன்வைத்து சிவானந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் கட்டுரை அவருடைய படைப்புலகில், குறிப்பாக குறுநாவல்களில் உள்ள பொது அம்சங்களை அடையாளம் காண்கிறது. “அதாவது,, காமம் சார்ந்த பொதுவான சமூக ஒழுக்க விதிகளை மீறும்போது அதில் ஈடுபடும் அனைவருமே பால்பேதமின்றி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். இன்பம் துய்த்தபின் வந்து கவிழ்ந்து கொள்ளும் இக்குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள இயல்பாக இருவருமே மற்றவர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருதிக்கொள்வதால் சுய இரக்கத்தின் மூலம் ஆறுதல் கொள்ள முயல்கின்றனர்.,” என்று மோகனரங்கனின் பார்வைக்கு வலு சேர்க்கிறார்.

காலங்காலமாக இலக்கிய உலகில் நிகழ்ந்துவரும் தால்ஸ்தாயா? தாஸ்தாவேஸ்கியா? யார் சிறந்தவர் எனும் விவாதத்திலிருந்து தனது கட்டுரையைத் துவங்குகிறார் ராஜ சுந்தர்ராஜன். அவ்வினாவிற்கு தாஸ்தாவேஸ்கியிலிருந்து தால்ஸ்தாயை நோக்கிய தன் நகர்விற்கு சு.வேணுகோபாலின் எழுத்துக்கள் எவ்வாறு காரணமாயின என்பதை விளக்குகிறார்.

  1. வேறொருவரும் இவரைப்போல் எதிர்பாலினரை ஊடறுத்துக் காட்டும் நுணுக்கம் பெற்றிலர்.”

  2. மனித மனத்தின் கீழ்மைகளைப் பற்றி எழுதுவதில் இவர்க்கு இணை இவரேதான்.”

  3. ஆக, சு.வே.யின் எழுத்துகள் மேலோட்டமாகத்தான் சாதாரணமானவை; உட்கிடையில் மிக ஆழமானவை.”

மேற்கூறிய மூன்று புள்ளிகளை தனது கட்டுரையில் உரிய மேற்கோள்களோடு விவாதிக்கும் ராஜ சுந்தர்ராஜனின் கட்டுரை வேணுகோபாலின் படைப்புலகில் புதிய திறப்புகளை அளிக்கவல்லது.

வெண்ணிலை’ தொகுப்பை முன்வைத்து செந்தில்நாதன் எழுதியிருக்கும் கட்டுரையில்வேணுகோபாலின் கதைகள் நேரடியானவை. விவரணைகள் மூலம் கதைக்களனைச் செறிவு படுத்துபவை. விவசாயம் சார்ந்த அவரது கதைகளில் இவை சற்று அதிகமாகவே தெரியும். அந்த விவரணைகளையே படிமங்களாக்கும் ரசவாதம் இயல்பாகவே அவரது கதைகளில் கைகூடி வருகிறது” என்று ராஜ சுந்தர்ராஜனை ஆமோதிக்கிறார். “அவருக்கு முன்னோடியாகச் சொல்ல வேண்டுமென்றால் அசோகமித்திரனைத் தான் சொல்ல வேண்டும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் வரும் கசப்புடன் கூடிய அங்கதத்தை வேணுகோபால் கதைகளில் காண முடிவதில்லை.” என்றும் எழுதுகிறார்.

செந்தில்நாதனைப் போலவே எஸ்.சுரேஷும் வேணுகோபாலை அசொகமித்திரனோடு இணை வைக்கிறார். “கூர்மையான அவதானிப்பு, தனக்கென்றொரு தனிப்பாணியில் அமைந்த நடை, விலகல் தொனி கதைசொல்லல், பாத்திரங்களின் சராசரித்தன்மைஇவை வேணுகோபாலின் எழுத்தை அசோகமித்திரனுடன் ஒப்பிடச் செய்கின்றன. வட்டார வழக்கில் எழுதுகிறார் என்ற மேம்போக்கான வேறுபாடு தவிர ஆழமான வேறொரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. அசோகமித்திரன் எப்போதும் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவர் நிகழ்வுகளைப் பதிவு செய்வதோடு சரி, அது குறித்த தன் பார்வையை வெளிப்படுத்துவது மிக அரிது. ஆனால் வேணுகோபால் சமூக உறவுகளின் சித்தரிப்பில் ஒரு லட்சியவாதியாய் தெரிகிறார்.” என்று அசோகமித்திரனுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை முன்வைத்து எழுதியிருக்கிறார் எஸ். சுரேஷ்.

வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்துகொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம்கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொதுஅறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் என பல்வேறு தளங்களில் மாறிமாறி இயங்கிவந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன.என்று சு.வேணுகோபாலின் சிறுகதைகளை பற்றி பேசும் பாவண்ணனின் கட்டுரையில் அவர் கதையுலகில் விரவி கிடக்கும் விசித்திர மாந்தர்களை அடையாளம் காட்டுகிறார். மிகுந்த ரசனையோடு சில சிறுகதைகளின் வாசிப்பு சாத்தியங்களை கோடிட்டு காட்டுகிறார்.

ஜாராஜகோபாலன் சுவேணுகோபாலைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில் அவருடைய ஒட்டுமொத்த படைப்புகளை கொண்டு அவரை ஏன் தான் ஒரு முதன்மை படைப்பாளியாக கருதுகிறார் என்பதற்கு மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார் – பேசுபொருளைக் கையாளும் விதம், கதாபாத்திரங்கள்,, எழுத்துமுறை என ஒவ்வொன்றையும் விரிவான உதாரணங்களோடு விளக்குகிறார். குறிப்பாக இலக்கியத்தில் காமம் பேசுபொருளாக அடைந்திருக்கும் பரிணாமத்தையும் அதில் சு.வேணுகோபாலின் பங்களிப்பையும் பேசும் இடம் முக்கியமானது. “அவரது கதைமாந்தர்கள் எவருமே தமது திரிபு நிலைக்கு நியாயம் கற்பிப்பதில்லை. அதை வலிந்து மேற்கொள்ளும் பாவனைகளைக் கொண்டிருப்பதில்லை. கதைமாந்தர்கள் முட்செடி உண்ணும் ஒட்டக உவமையை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் சு.வேணுகோபாலது பாத்திரப் படைப்புகளின் வெற்றி,.” எனும் அவதானிப்பை வைக்கிறார் ராஜகோபால

ஆனால் மாயக்கூத்தன் சு.வேணுகோபால் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில்அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது? காமம் மட்டும்தானா? எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள்? ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப்புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன?என்று கேள்வி எழுப்புகிறார்.

வேணு மனிதர்களை நம்புகிறார். அவனுடைய அத்தனை சிடுக்குகளை மீறி அவன் இயல்பாக வாழ்ந்துவிட முடியும் எனும் நன்னம்பிக்கை அவருடைய படைப்புகளில் தென்படுகிறது.” என்று நிலம் எனும் நல்லாள் நாவல் குறித்து நரோபா எழுதியிருக்கும் கட்டுரையில் வேணுகோபால் நிலம் – பெண் எனும் மரபான படிமத்தை நவீன வாழ்க்கைச் சிக்கலுக்கு எப்படி கையாண்டுள்ளார் என்பதை விவரிக்கிறார். பழனி எனும் தனிமனிதனை அலகாகக் கொண்டு சமூக மாற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார், என கூறும் நரோபா நாவல் மீதான விமர்சனத்தையும் பதிவு செய்கிறார்.

லண்டன் பிரபு வேணுகோபாலின் சிறுகதைகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் அவர் காட்டும் உலகின் இருள் அமைதியிழக்க செய்ததை பகிர்கிறார். “மிகச்சில கதைகளில் மட்டுமே வேணுகோபால் யதார்த்த உலகின் கால் தளைகளை அறுத்து சற்றே வானில் எழுகிறார். மனித அற்பத்தனங்களின் சகதியில் ஒரு மலரை முளைக்க வைக்கிறார். அது நம்மில் ஒரு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அதுவும்கூட இல்லாவிட்டால் அவரது உலகம் தாங்கிக் கொள்ளவே முடியாத இடமாக இருந்திருக்கும்.என்று கட்டுரையை முடிக்கிறார்.

வரலாற்றுப் பின்புலத்தில், ஒட்டுமொத்த தரிசனம் (vision) அளிக்கும் நாவல்களைவிட, ஒரு முரணை முன்வைத்து நறுக்கு தெறித்தாற் போன்ற வடிவத்தில் எழுதப்படும் சிறுகதைகளை விட, சு வேணுகோபாலின் படைப்பூக்கம் திறனுடன் வெளிப்படுவது நெடுங்கதை வடிவத்தில்தான் எனச் சொல்லலாம்.” எனச் சொல்லும் ஸ்ரீதர் நாராயாணன், வேணுகோபாலின் படைப்புலகில் ‘நிறைவின்மை’ எப்படியொரு முக்கியமான பொதுச் சரடாக கோர்த்துச் செல்கிறது என்றெழுதுகிறார்.

அரவிந்த் கருணாகரன் வெண்ணிலை தொகுப்பை முன்வைத்து எழுதியிருக்கும் கட்டுரையில் ஐரோப்பிய நவீனத்துவத்திற்\கும் இந்திய நவீனத்துவத்திற்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை வேணுகோபாலைக் கொண்டு அலசுகிறார். “காலத்தின் பிரம்மாண்டத்தின் முன் மிரண்டு நிற்கும் தனியனாக, இச்சைகளின் அலைக்கழிப்புகளால் கைவிடப்பட்ட மிருகமாக அவர் தனது கதைமாந்தர்களைக் காட்டவில்லை. மாறாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மரநிழலில் சேர்த்திவிடத்துடிக்கும், அதற்காக சலிப்பேயில்லாமல் தினசரி ஓடும் ஒருவனில், புதிர்த்தன்மையுடன் “எப்படியோ” குடிகொள்ளும் கூறுகளைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறார். அர்த்தம் இழப்பாலும் அதனால் ஏற்படும் செயலின்மையாலும் ஒருவன் உணரும் இருண்மையுணர்வை அவர் பேச விழையவில்லை. மாறாக செயலூக்கத்தளத்தில் ஒருவன் உணரும் இருண்மையை, அவன் திடீரென எதிர்கொள்ளும் நிர்க்கதியை, அதை மீறிச்செல்ல துடிக்கும்போது அடையும் எழுச்சியையும் சரிவையும் சொல்லவே முற்படுகிறார்.”

ஆட்டம் குறுநாவலை முன்வைத்து ரா. கிரிதரன் எழுதியிருக்கும் கட்டுரை, அந்த குறுநாவலை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகுகிறது. “பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பைச் சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.” எனும் கிரியின் கருத்து வேணுகோபாலின் படைப்புலகை பற்றிய புரிதலுக்கு வலு சேர்க்கிறது.

குமரன் கிருஷ்ணனின் கட்டுரை வேணுகோபாலின் மொழியில் ஊற்றாய்ப் பெருகும் கவித்துவத்தை,யும் அது சட்டென தத்துவ விசாரங்களுக்குள் ஆழமாக இறங்கிச் செல்வதையும் அடையாளம் காட்டுகிறது. “இப்படி பெண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சுழலும், சிற்றின்பச் சுழலில் உழலும் உள்ளத்தின் ஊசலாட்டங்களை நம்முன் நிறுத்துவதே வேணுகோபாலின் படைப்புகள். அவரின் சிறுகதை மற்றும் நாவல் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபட்ட அடிப்படைக் கோணங்களை நாம் கண்டடைய முடியும்அவரின் சிறுகதைகள், பெண்களின் பார்வையில், அவர்களையே மையமாக்கி கதை சொல்கின்றன. அவரின் குறுநாவல்களோ ஆணின் மனக்கண்ணாடி வழியே, பெண்ணைப் பேசுகின்றன” என்று புதிய கோணத்தில் வேணுகோபாலின் படைப்புலகைப் பேசும் முக்கிய கட்டுரை இது.

சேதுபதி அருணாசலம் எழுதிய கட்டுரையில்வட்டத்திற்குள்’ மற்றும் ‘மாயக்கல்’ கதைகளை பற்றி விரிவாக பேசுகிறார். ‘வட்டத்திற்குள்’ ஒரு பெண் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறாள் என்பதை விவரிக்கிறது. வேணு எழுதிய ‘மாயக்கல்’ என்ற மாய யதார்த்த கதை. பிற மாய யதார்த்த கதைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை விவரிக்கிறார். இரண்டு கதைகளையும் ஆஸ்திரேலியாவில் தான் கண்டுணர்ந்த யதார்த்தத்துடன் பொருத்திப் பார்த்து எழுதியிருப்பது வேணுகோபாலின் படைப்புலகத்தில் அவருடைய அவதானிப்புகள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

பால்கனிகள், இழைகள் ஆகிய இரு குறுநாவல்களை முன்வைத்து கடலூர் சீனு எழுதிய கட்டுரையில் கதையின் நுட்பமான இடங்களை அதன் சமூக பின்னணிகளுடன் பொருத்திப் பார்த்து மதிப்பிடுகிறார். தோப்பிலின் கதையையும் ஜெயமோகனின் வணங்கான் கதையையும் இழைகளுடன் ஒப்பிட்டு எழுதுகிறார். பால்கனிகளின் கிட்ணாவை யாதார்த்தவாதச் சித்தரிப்பின் உச்சமாகவும் ஜெயமோகன் சித்தரிக்கும் சிகண்டினியை காவிய உச்சமாகவும் ஒப்பிடும் இடமும் முக்கியமானது.

ஒரு துவக்க வாசகனாக வேணுகோபாலைத் தான் கண்டடைந்ததையும் அவரை வாசித்தடைந்த இன்பத்தையும் அகிலன் தன்னுடைய கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். ஒரு துவக்க வாசகரையும் தேர்ந்த எழுத்தாளரையும் கதையின் ஒரே தருணங்கள் சென்று தைப்பதை கவனிக்க முடிகிறது.

இந்த இதழில் பேயோனின் கவிதையொன்றும் இடம்பெற்றிருக்கிறது.

பாவண்ணன், ஸ்ரீரங்கம் மோகனரங்கன், ராஜ சுந்தர்ராஜன் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பதாகை போன்ற இணைய சிற்றிதழில் தங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொண்டது பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அரவிந்த் கருணாகரன், செந்தில்நாதன், கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன், குமரன் கிருஷ்ணன், சேதுபதி அருணாச்சலம், நரோபா, மாயக்கூத்தன் எஸ்.சுரேஷ், கடலூர் சீனு, ராஜகோபால், சிவானந்தம் நீலகண்டன், பாஸ்டன் பாலா, லண்டன் பிரபு, அகிலன் என பலரும் இணையத்தில் தொடர்ந்து எழுதி கவனம் பெற்றவர்கள். மொத்தம் பதினெட்டு கட்டுரைகளும் விரிவான நேர்காணலும் உள்ள இந்த இதழ் வேணுகோபாலின் படைப்புலகை அணுக்கமாய் புரிந்துகொள்ள உதவுகிறது. விமர்சனங்கள், பார்வைகள், நேர்காணலில் வேணுகோபாலின் பதில்கள் முயங்கி ஒரு முழுமையை அளிப்பதாக தோன்றியது. இந்த இதழில் ‘நுண்வெளி கிரகணங்கள்’ பற்றி ஒரு கட்டுரைகூட இடம்பெறவில்லை என்பது ஒரு சிறிய குறையாக எஞ்சுகிறது. நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் வந்தபோது வெறும் புகழ் பாடி வந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த இதழில் மாயக்கூத்தன், எஸ்.சுரேஷ், ரா.கிரிதரன், நரோபா ஆகியவர்களின் கட்டுரையில் வெவ்வேறு அளவிலான விவாதத்திற்குரிய விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. ஓரளவு இந்த விமர்சனங்களுக்கான மறுதரப்பை பிறரின் கட்டுரைகளும் வேணுவின் நேர்காணலும் அளிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பதாகை சு.வேணுகோபால் காலாண்டு சிறப்பிதழ் நம் காலத்தின் முக்கிய படைப்பாளி ஒருவரின் படைப்புலகை நுட்பமாக அதன் ஆழ அகலங்களை பதிவு செய்கிறது. பங்களிப்பளித்த சக பதாகை நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு இனிய நற்செய்தியுடன் இந்த அறிமுக குறிப்பை நிறைவு செய்கிறேன். அடுத்த பதாகை காலாண்டு இதழ், டிசம்பர் மாதம் நண்பர் ரா.கிரிதரனின் பொறுப்பில், எழுத்தாளர் பாவண்ணன் சிறப்பிதழாக வெளிவரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறோம்.

பதாகைக்காக, சுனில் கிருஷ்ணன்